“இன்று இரவு விசேட பூசை. உங்கள் கணவன்மாரையும் கூட்டிக்கொண்டு குடும்பமாக வாருங்கள்.”
வீடு
வீடாகக் கதவைத்தட்டி சொல்லிக்கொண்டு வந்தாள் கனகா. அவள், ஒன்பது யுனிட்டுகள் கொண்ட
அந்தக் குடிமனையில் புதிதாக வந்தவள். ஏற்கனவே ஏழு தமிழ்க்குடும்பங்கள் அங்கு இருந்தன.
இருந்த வெள்ளைக்காரக் குடும்பங்களில், ஒரு குடும்பம் காலி செய்யவே, கனகாவும் பாலாவும்
அந்த வீட்டிற்கு வந்தார்கள்.
ஏற்கனவே இருந்தவர்கள் படித்துப் பட்டம் பெற்றவர்கள். பாலா ஒரு மெக்கானிக். அவனையும் மனைவியையும் ஒருவரும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. உதயத்திற்கு முன்னர் வேலைக்குப் புறப்பட்டு, இருள் கவிந்தபின்னர் வீட்டுக்கு வருவான் பாலா. சனிக்கிழமையிலும் போய்விடுவான். கனகாவுக்கு வீட்டில் இருக்கப் போரடிக்கும். ஒவ்வொரு வீடாகத் தரிசனம் கொடுப்பாள். வீட்டில் இருப்பவர்களும் சிலவேளைகளில் கதைப்பார்கள்; பலவேளைகளில் ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்கள்.
கனகா,
வெள்ளி இரவுகளில் வீட்டில் பூஜை செய்து வந்தாள். அதற்கு எல்லாரையும் வரும்படி சொல்வாள்.
பெண்களும் சின்னஞ்சிறுசுகளும் வருவார்கள். ஆண்கள் ஒருவரும் வருவதில்லை. அவர்களுக்கு
வேலைக் களைப்பு. ’வீட்டிலே பூஜை செய்தால் போச்சுது!’ என்பது அவர்கள் கருத்து. கனகாவிற்கு
தங்களைப் புறக்கணிக்கின்றார்கள் என்ற தவிப்பு. அதற்காக அவள் செய்த உபாயந்தான் இநத `விசேட
பூசை’.
`சுவாமியின்
கோபத்துக்கு ஆளாகப் போகின்றீர்கள்’ என மனைவிமார் துருப்பைப் போட, ஒவ்வொருவராக வரத்
தொடங்கினார்கள். பூசை ஆரம்பமானது. பாலா மணி கிலுக்க, கனகா தனது சமஸ்கிருத மந்திரங்களை
எடுத்துவிட்டாள். வந்திருக்கும் எல்லோரையும் முழுசிப் பார்ப்பதும், பின்னர் சுவாமியை
தொடர்பாடல் கொள்வதாகவும் இருந்தாள். பூக்களைத் தூவினாள், தீபம் காட்டினாள். கணவைப்
பார்த்து `டுர்.. டுர்..’ எனக் கார் கிழம்பும் ஓசையாகச் சத்தமிட்டாள். கனகாவுக்கு உரு
வரப்போகின்றது என்பதை உணர்ந்த பாலா, தங்குதடையின்றித் தேவாரங்கள் வர பாடத் தொடங்கினான்.
தலையை முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் வேகவேகமாக ஆட்டி, பிசுக்கான தலைமயிரை விளாசி
எறிந்தாள் கனகா.
“டேய்...”
- அது கடவுளின் வார்த்தை.
வந்தவர்கள்
ஆளை ஆள் பார்த்தார்கள். விழிகள் பயக்குறியுடன் பக்தி வெறி கொண்ட பெண்சிங்கத்தைப் பார்க்கின்றன.
“பூசைக்கு
வராமல் ஒழிப்பியளேடா?”
திரும்பத்திரும்ப
அதையே கேட்டபடி மூர்ச்சையாகிவிட்டாள் கனகா. பாலா எல்லோருக்கும் பிரசாதம் குடுத்துவிட்டு,
கனகாவுக்கு நீர் தெளிக்க, சொல்லி வைத்தால் போல் அவள் எழும்பினாள்.
எல்லோரையும்
சுழட்டுப் பார்வை பார்த்துவிட்டு, சுவாமிக்கான படையலை எடுத்தாள். சுவாமியின் கோபம்
இன்னும் தீரவில்லை. படையலைக் குழைத்து உருண்டை ஆக்கினாள். உருண்டையைக் கையில் தூக்கி,
எறிந்து விளையாடினாள். விரல்களினிடையே சாறு வழிந்து பாத்திரத்தினுள் ஒழுகியது. அப்படியே
தூக்கி ஒரு எறி. வாயிற்குள் விழுந்தது போக, மீதி பாத்திரத்திற்குள்ளும் வெளியிலுமாக
சிதறி விழுகின்றது. இரண்டுபக்கக் கடைவாயிலிருந்தும் திரவம் வழிய, ஓணான் போல நாக்கை
நீட்டிச் சுழலவிட்டு வழித்து உள்ளே தள்ளினாள். குழைத்துக் குழைத்து எல்லோருக்கும் குழையலாக
நீட்டுகின்றாள்.
“உம்...
சாப்பிடுங்கள்!”
கடவுளின்
பிரசாதம்... அவர் வாயிலிருந்து விழுந்த எச்சில்பண்டம்... என்ன செய்வது..?
வந்தவர்கள்
கோவில் பிரசாதத்தை மருந்து போல விழுங்கினார்கள். விழுந்தடித்துகொண்டு வேகமாக விடைபெற்றார்கள்.
எல்லாரும்
போய்ச் சேர்ந்ததும், “எப்பிடி என்ரை விளையாட்டு...!” என கனகா கணவனிடம் கேட்டாள்.
°
No comments:
Post a Comment