வையமெலாம் வணங்கும்படி வாழ்ந்துவிட்டார் காந்திமகான் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா 


சத்தியத்தை கையெடுத்தார்

சமத்துவத்தின் வழிநடந்தார்
சித்தமெலாம் சமூகத்தை
தினமெண்ணி அவரிருந்தார்
உத்தமராய் வாழுதற்கு
உழைத்திட்டார் காந்திமகான்
உலகமெலாம் மகாத்மாவாய்
உயர்ந்திட்டார் காந்திமகான்  !

ஈரமுடை நெஞ்சுடையார்
வீரமுடன் நடைபோட்டார்
தூரநோக்குப் பார்வையுடன்
தொடக்கிட்டார் பணியனைத்தும்
கோரமுகம் கிழித்தெறிந்தார்
கொதித்தவரை குளிர்வித்தார்
பாரதத்தாய் மனமகிழும்
பாதையிலே யவர்சென்றாரே !

பட்டமவர்  பெற்றிருந்தார்
பதவிகளை யவர்வெறுத்தார்
கிட்டவரும் ஆசைகளை
வெட்டியே யவரெறிந்தார்
கொட்டமுடன் வந்தவரை
குழந்தையென  மாற்றினார்
குவலயமே போற்றுதற்கு
குறியானார் காந்திமகான் !

தேர்ந்தெடுத்த  பாதையிலே
தெளிவாக அவரிருந்தார்

தெய்வமதை மனமிருத்தி
தினமுமவர் செயற்பட்டார் 
அகிம்சையெனும் ஆயுதத்தை
அவரெடுத்தார் கைகளிலே
ஆணவத்தார் அடிபணிந்தார்
அகிலமெலாம் விழித்ததுவே !

உண்ணாமை என்பதனை
உணர்வுடனே உளங்கொண்டார்
கண்ணாக சுதந்திரத்தை
கண்டாரே காந்திமகான் 
கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தமொன்றை நடத்தினார்
காந்திமகான் பாதையென
காட்டிவிட்டார் உலகினுக்கே  !

வரலாற்றை எழுதியவர்
வரலாறாய் ஆகிவிட்டார் 
வசதிபல தேடிவந்தும்
வாழ்வாக்க விரும்பவில்லை
வழிகாட்ட  அவர்நினைந்தார்
வழிகாட்டி யாகிவிட்டார்
வையமெலாம் வணங்கும்படி
வாழ்ந்துவிட்டார் காந்திமகான் 


No comments: