இலங்கைச் செய்திகள்

 இலங்கை ஜனாதிபதி அழைத்தால் கலந்துரையாட நான் தயார்

இந்திய வௌியுறவு செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இலங்கை வருகை

கிராமத்துடனான உரையாடலில்' அங்கஜன் இராமநாதன் எம்பி

சட்ட விரிவுரையாளர் கமலா நாகேந்திரா காலமானார்

TNAக்கு பல கோடிகள் வழங்கப்பட்டது உண்மை


இலங்கை ஜனாதிபதி அழைத்தால் கலந்துரையாட நான் தயார்

நோர்வே MPயாக தெரிவான இலங்கைப் பெண் கம்சாயினி

ஜனாதிபதி அழைப்பு விடுத்தால், தாம் அவருடன் கலந்துரையாட தயாராகவிருப்பதாக நோர்வே தொழில்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி அந்நாட்டின் நாடாளுமன்றத்திற்கு தெரிவான இலங்கையை பூர்வீகமாக கொண்ட கம்சாயினி குணரத்னம் தெரிவித்துள்ளார்.

இலங்கையுடனான உறவுகளை புறக்கணிப்பது பொருத்தமானதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.  நோர்வே அரசாங்கத்துடனும் தமது கட்சியிடமும் இலங்கையுடனான தொடர்புகளை பேணுமாறு கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் உள்ளக பிரச்சினைகளுக்கு சர்வதேச அழுத்தங்கள் வரும்வரை காத்திருக்காது இலங்கை அரசாங்கமே தீர்வுகளை காண வேண்டும்.

இலங்கையில் வெளிநாடுகள் முதலீடுகளை மேற்கொண்டு அங்கு தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்.    நன்றி தினகரன் 




இந்திய வௌியுறவு செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இலங்கை வருகை

இந்திய வௌியுறவு செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இலங்கை வருகை-Indian Foreign Secretary Harsh Vardhan Shringla Arrived in Sri Lanka

இந்திய வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ஶ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, 4 நாள் உத்தியோகபூர்வ விஜயம்  மேற்கொண்டு இலங்கை வருகை தந்துள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகேவின் அழைப்பின் பேரில் அவர் இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பல் தரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுமாக அமையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கையின் வெளிவிவகாரச் செயலாளருடனான இருதரப்பு கலந்துரையாடல்களுக்கு மேலதிகமாக, இலங்கை ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சரையும் சந்திக்கவுள்ளார்.

அவர் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில், கண்டி, திருகோணமலை, யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்வாரென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர், ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இலங்கைக்குச் வருவது இதுவே முதல்முறையாகும்.    நன்றி தினகரன் 




கிராமத்துடனான உரையாடலில்' அங்கஜன் இராமநாதன் எம்பி

கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு ஒதுக்கப்படும் ஒதுக்கீடுகளுக்காக முன்னுரிமைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி முன்மொழிவுகளை மேற்கொள்வதற்கான 'கிராமத்துடனான உரையாடல்' மக்கள் சந்திப்பு- யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத்திட்டத்திற்கமைவாக, பிரதமரின் வழிகாட்டுதலில், நிதியமைச்சர் மற்றும் ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்‌ஷவினால் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கும் 03 மில்லியன் ரூபா அபிவிருத்திக்காக ஒதுக்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் யாழ்ப்பாணம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 28 கிராமங்களுக்குமான களவிஜயம் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதனினால் கடந்த 28 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.

இவ்விஜயத்தில், கிராமங்களுக்கான உட்கட்டுமானம், வாழ்வாதாரம், சூழலியல் திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இவ்விஜயத்தில், யாழ்ப்பாண பிரதேச செயலாளர் சாம்பசிவம் சுதர்சன், உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், கிராம சேவையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலக அதிகாரிகள், யாழ்ப்பாணம் தொகுதி இணைப்பாளர்கள் மற்றும் கிராம அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.    நன்றி தினகரன் 



சட்ட விரிவுரையாளர் கமலா நாகேந்திரா காலமானார்

இலங்கை சட்டக்கல்லூரி மற்றும் கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடம் என்பவற்றின் முன்னாள் சட்ட விரிவுரையாளர் கலாநிதி கமலா நாகேந்திரா 30ஆம் திகதி அவுஸ்ரேலியாவில் காலமானார். 

தேச வழமைச் சட்டம் மற்றும் பெண்கள் சிறுவர் உரிமைகள் தொடர்பான சட்டங்கள்,தொழிலாளர் தொடர்புடைய சட்டங்கள்,குடும்பச் சட்டம் என்பவற்றில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற அவர் தேச வழமைச் சட்டத்தில் பெண்களது சொத்துரிமை தொடர்பில் ஆங்கில மொழிமூல நூல் ஒன்றையும் எழுதியுள்ளார்.

யாழ்ப்பாணம் அல்வாயை பிறப்பிடமாக கொண்ட இவர் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவியுமாவார்.    நன்றி தினகரன் 




TNAக்கு பல கோடிகள் வழங்கப்பட்டது உண்மை

பகிரங்கமாக கூறுவதுடன் நிரூபிக்கவும் தயார்

முடிந்தால் வழக்கு போடுங்கள் என்கிறார் M.K.சிவாஜிலிங்கம்

தேர்தல் காலங்களில் கூட்டமைப்புக்கு பல கோடி ரூபாய்கள்- வழங்கப்பட்டதாகவும் அதனை தாம் நிரூபிக்கத் தயாராக உள்ளதாகவும் தமிழ்த்தேசிய கட்சியின் பொது செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.2010, 2015, 2019 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில்களில் தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கு பல கோடி ரூபாக்கள் வழங்கப்பட்டது. மட்டக்களப்பில் 45 இலட்சம் ரூபாய் 11 மாகாணசபை உறுப்பினர்களுக்கும் 3 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது. இது கட்சியின் நிர்வாக செலவுக்காக வழங்கப்பட்டதா அல்லது பிரசாரத்துக்காக வழங்கப்பட்டதா என்பது வழங்கியவருக்கு தான் தெரியும் என அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

பகிரங்கமாகவே சொல்கிறேன் பணம் வழங்கியது உண்மை. முடிந்தால் வழக்கு போடுங்கள். இன்னும் பல விடயங்கள் அம்பலப்படுத்த வேண்டியுள்ளது அதனை நீதிமன்றத்தில் அம்பலப்படுத்துவேன் என தெரிவித்த அவர், ஒட்டுக்குழுக்கள் என்று ரெலோவையும் புளொட்டையும் குற்றஞ்சாட்டுகிறார்.ஆனால் அவர்களுடைய வாக்குகளையும் சேர்த்துத்தான் சுமந்திரன் பாராளுமன்ற உறுப்பினராக வந்தார் என்பதை அவர் உணரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். என்னைப்பற்றி சுமந்திரன் தனியார் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்ததை நான் அவதானித்தேன். வல்வெட்டித்துறை நகரசபை கூட்டமைப்பிடம் இருந்து பறிபோனதற்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் விக்னேஸ்வரன் ஐயாவை துரோகிகள் என்ற அர்த்தத்தில் நான் பேசியதாக சுமந்திரன் கருத்து தெரிவித்திருந்தார்.

நான் விக்னேஸ்வரன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரனை துரோகி என கூறவில்லை. எனது காணொளியை பார்த்தால் நன்கு தெரியும். நகரசபைத் தவிசாளரை தேர்ந்தெடுப்பதிலே அதிருப்தியுற்று சதீஸ் அந்தக் கூட்டத்தை பகிஷ்கரித்திருந்தார். ஆனால் சதீஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட்டாரென்று சுமந்திரன் கூறுகின்றார். கூட்டத்தை பகிஷ்கரித்திருந்த சதீஸ் எவ்வாறு தவிசாளராக போட்டியிட்டிருப்பார். ஊடகப் பேச்சாளர் என்று கூறிக்கொண்டு தெரியாத விடயங்களைப் பற்றி சுமந்திரன் பேசக்கூடாது. தெரியாத விடயங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அப்படியானால் ஏன் சதீஷினுடைய உறுப்புரிமை பறிக்க முடியாமல் போனது. ஜனாதிபதி சட்டத்தரணியால் முடியாமல் போய்விட்டதா? உங்களுடைய கனிஷ்ட சட்டத்தரணிகள் சரியாக செய்யவில்லை என்றால் அதனை செய்விக்க வேண்டியது யார்? இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் இந்த வழக்கில் ஐந்து தடவைக்கு மேல் சுமந்திரன் முன்னிலையாகி 42 மாதங்கள் கடந்தும் இந்த வழக்கு தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

நான் விக்னேஸ்வரன் ஐயாவுக்கு அனுப்பியதாக சுமந்திரன் கூறும் கடிதத்தை அவர் வெளிப்படுத்த வேண்டும். நான் விக்னேஸ்வரன் ஐயாவுக்கு எழுதிய கடிதம் என்பது வல்வெட்டித்துறை நகரசபை வரவு செலவு திட்டம் தொடர்பாக உள்ள பிரச்சினைகளை பற்றியதாகும். அதில் நான் யாரையும் துரோகி என்று கூறவில்லை. நான் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலும் இல்லை, ரெலோவிலும் இல்லை.

நான் குருநாகலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டமை தொடர்பில் சுமந்திரன் கருத்து தெரிவித்திருந்தார். நான் ஜனாதிபதி வேட்பாளராக குருநாகலில் போட்டியிட்டபோது சர்வதேச விசாரணை வேண்டும் என்று கூறி இருந்தேன். அதற்கு ஆதாரமாக வீக்கிலீக்ஸ் வெளியிட்ட பதிவுகள் இருக்கின்றன. இலங்கைக்கான அமெரிக்க தூதராக இருந்த பற்றீசியா அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பிய செய்தி குறிப்பில் சர்வதேச விசாரணையை கோரும் ஒரே ஒரு தமிழன் சிவாஜிலிங்கம் தான் என கூறியிருந்தார் எனவும் அவர் தெரிவித்தார்.    நன்றி தினகரன் 




No comments: