கற்பகதருவாம் பனையினைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை ஒன்பது ]

   

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா

 

காகிதங்கள் பயன்பாட்டுக்கு வராது இருந்த காலத்திலும் -


பலவகையில் நூல்கள் வெளிவந்திருக்கின்றன. என்ன ஆச்சரியமாய் இருக்கிறதா ! ஆச்சரியப்படவே தேவை இல்லை ! வெளிவந்த பல்துறை சார்ந்த நூல்களுமே கற்பகதருவாம் பனையின் ஓலையில் எழுதப்பட்டே  வந்தி ருக்கின்றன என்பது தான் முக்கியமாகும். எங்களின் எழுத்தறிவினைச் சுமந்த பனை ஓலைச் சுவடிகள் அறிவின் சின்னம் என்பதில் பெருமை அல்லவா ! ஏடு என்றாலே பனைதான்  எல்லோர் கண்முன்னே வந்து நிற்கும்.ஏடு என்ற சொல்லின் வேரே பனை ஓலை அல்லவா !

  பனை ஓலை அரசாங்கத்தின் எழுதுகின்ற பொருளாகப்


பயன்பாட்டில் இருந்திருக்கிறது. காகிதம் பயன்பாட்டுக்கு வரமுன்னர் எழுதுவதற்கு எங்களுக்குக் கைகொடுத்த தெய்வமாய் பனையும் அதன் கொடையான ஓலைகளுமே விளங்கின என்பதை கருத்திருத்தல் மிகவும் அவசியமாகும்,

    பனை ஓலைச் சுவடிகள் பலவற்றை எங்களின் முன்னோர்கள் பலர் தேடிக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இன்றும் ஓலைச்


சுவடிகளைத் தேடும் பணியில் பலர் ஆர்வத்துடன் ஈடுபட்டும் வருகிறார்கள்.பனை ஓலைச் சுவ டிகளைத் தேடி உ.வே.சா என்னும் எங்கள் தமிழ்த் தாத்தா நெடும்பயணம் மேற் கொண்டார் என்பதை யாவரும் அறிவோம். அவரின் வழியில் இன்று பலரும் பயணப்பட்டு பல பனை ஓலை ஏட்டுச் சுவடிகளைப் பல இடங் களிலும் கண்டு தேடிப் பெற்றிருக்கிறார்கள் . ஓலைச் சுவடிகளை வீட்டின் கூரையில் வைத்திருந்திருந்திருக்கிறார்கள். ஓலைச் சுவடிகளைத் தேடிப் போனவர்கள் - வீட்டுக்குரியவர் கூரையில் சொருகி வைக்கப்பட்ட ஓலைச் சுவடிகளை - அவர்களிடமிருந்து பெற்ற வரலாறுகளையும் அறிந்திடக் கூடி யதாக இருக்கிறது.

    கேரள மாநிலத்தில் ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபத்து


ஐந்தாம் ஆண் டு வரையிலும் பத்திரப்பதிவு என்பது ஓலையில்த்தான் அமைந் திரு ந்தது  ." தீட்டு " என்னும் பெயரால் இந்த எழுதப்பட்ட ஆவணங்கள் அழை க்கப் பட்டன.ஓலைச் சுவடிகளைத் தொகுத்து வைத்த தொகுப்பினை " கருணை " என்று பெயரிட்டு அழைத்தனர். ஓலைகளில் எழுதும் எழுத்துக்களை கேர ளத்தில் - கோலெழுத்துகண்ணெழுத்து என்று பெயரிட்டு அழைத்திருக்கி றார்கள்.

  செட்டி நாட்டு வணிகர்கள் தங்களின் கணக்குகளை


எழுதுவதற்கு ஓலைச் சுவடிகளையே பயன்படுத்தி இருக்கிறார்கள்.தம்மபதம் என்னும் பெளத்த நூல் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் ஓலைச் சுவடியிலேயே எழுதப்பட்டிருக்கிறது.

திபெத்து நாட்டில் தமிழ் நாட்டின் ஓலைச்சுவடிகள் பல கிடைத் திருக் கின்றன என்று அறிய முடிகிறது,திருவாங்கூர் பகுதியில் பழைய ஓலைச் சுவடிகள் கிடைக்கப்பெற்றிருக்கிறது." அழகிய பாண்டிபுரம் பெரியவீட்டுச் செட்டியார் ஓலைகள் " என்று இந்தப் பழைய ஓலைச்சுவடிகள் அழைக் கப்படுகின்றன.

  ஓலைச் சுவடிகள் எங்களின் மிகப்பெரிய பொக்கிஷமாகும்.


அந்த ஓலைச் சுவடிகளை அளித்த கற்பக தருவான பனையினை நாங்கள் எக்காலத்தும் மறந்து விடுதல் கூடாது. அப்படி நாங்கள் மறந்து விடுவோ மேயானால் நன்றி என்னும் சொல்லையும் மறந்து விட்டவர்களாகி விடுவோம். மருத் துவம் சோதிடம்சிற்பம் ஓவியம்இலக்கியம்இலக்கணம்கணிதம் நிகண்டுநாட்டர் வழக்காறுகள்வரலாறுசமயம் தத்துவம்என்று பல்கிப் பெருகி நிற்கும் அறிவுக் கருவூலங்கள் அனைத்தையும் பனை ஓலை தன்ன கத்தில் நிறைத்துக் கொண்டது. பனையின் ஓலைகள் எழுதுவதற்கு ஏற்றனவாய் அமைந்ததுவே பெரும் வரப்பிரசாதம் என்றுதான் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

  ஓலைச் சுவடிகளைத் தேடும் முயற்சியில் ஈடுபட்ட


அறிஞர்களால் பல இடங்களில் ஓலைச்சுவடிகள் பல கிடைத்திருக்கின்றன. அந்தவகையில் திருநெல்வேலிப் பகுதியில் பல ஓலைச்சுவடிகளை அவர்கள் கண்டெடு த்திருக்கிறார்கள்.அண்ணாவிமார் வீடுகளில் நாடகச் சுவடிகளைக் கண்டறிந் திருக்கிறார்கள். அங்குள்ள மருத்துவர்கள் மருத்துவம் சம்பந்தமான ஒலை ச்சுவடிகளை வைத்து அதன்படி மருத்துவம் செய்வதையும் கண்டறிந்திருக் கிறார்கள். சோதிடர்கள்குறிசொல்லும் குறவர்கள்வில்லிசைக் கலை ஞர்கள்ஓலைச் சுவடிகளைத் தம்வசம் வைத்திருந்து பாதுகாத்து வருகிறா ர்கள் என்பதையும் ஓலைச்சுவடி தேடிச் சென்ற வல்லுனர்கள் தெரிவிக்கி றார்கள்.


  அதுமட்டுமல்ல ஜமீந்தார்கள்பண்ணையார்கள்வீடுகளிலும் பழைய ஓலைச் சுவடிகள் இருப்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள். கோவில்கள்பலரின் வீடுகளில் உள்ள பூஜை அறைகள் இங்கெல்லாம் ஓலைச் சுவடிகள் இருப்பதையும் கண்டிருக்கிறார்கள்.கேரளப் பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தில் கன்யா குமரிதிருநெல்வேலி இராமநாதபுரம் மதுரை மாவட்டங்களை சேர்ந்த ஓலைச் சுவடிகள் வைக்கப்பட் டிருக்கின்றன.

இச்சுவடிகளில் பெரும்பாலான சுவடிகள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஊர்களி ல்தான் மிகுதியாக
  இருப்பதாக அறிய முடிகிறது.கிராமியத் தெய்வங்கள் பற்றிய கதைப்பாடல்கள்வில்லுப்பாட்டுக் கதைகள்கட்ட பொம்மன் கதைகள் அடங்கிய ஓலைச் சுவடுகள் இருப்பதும் குறிப்பிட த்தக்கதாகும்,

  இலங்கையிலும் பல ஓலைச்சுவடிகள் கிடைத்திருக்கின்றன. அனுராதபுரத்தில் 1110 வருட பழமைவாய்ந்த ஓலைச்சுவடிகளை கண்டறிந்திருக்கிறார்கள்,கேரள மணிகண்டம் என்னும் சோதிடம் பற்றிய ஓலைச் சுவடிகள்அதைவிட - குருநாடி சாத்திரம்அகத்தியர் நாடி சாத்திரம்கிரகச் சக்கர ஞான ஏடுசித்தாரூடம்ஆதித்தன் பலன் என்று சோதிடம் சம்பந்தமான சுவடிகளைக் கண்டறிந்திருக்கிறார்கள்.அகத்தியர் நூறுஅகத்தியர் வாகடம்அகத்தியர் கற்பம்அகத்தியர் உட்கரு சாத்திரம் அகத்தியர் சவுக்காரத் திறவுகோல் என்னும் பெயரில் அமைந்த மருத்துவ ஏடுகளும் கண்டறியப்பட்டிருக்கின்றன.

  தீக்கிரையாக்கப்பட்ட யாழ்ப்பாணத்தின் பழைய நூலகத்தில் ஏறக்குறைய தொண்ணூற்று ஐயாயிரம் ஓலைச்சுவடிகள் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்தன என்பது கவனத்துக்குரியதாகும்அத்தனை ஓலை ச்சுவடிப் பொக்கிஷங்களும் அறிவற்றவர்களின் அசுரத்தனத்தால் அக்கினிக்கு இரையாகி விட்டன என்பதையும் கவலையுடன்தான் மனமிருத்த வேண்டி இருக்கிறது.

  கற்றறிந்த பெரியோர்களின் வழி காட்டலில் இளையவர்கள் பலர் கை கோர்த்து " நூலக நிறுவனம் " என்னும் அமைப்பினூடாக  பழைய ஓலைச் சுவடிகளைத் தேடி - அவற்றைச் சேகரிப்பதோடு தக்க முறையில் சுத்தப்படுத்திப் பத்திரப்படுத்தி யாவரும் அறியும் வகையில் யாழ்ப்பாணத்தில் ஆடிய பாதம் வீதியில் அதற்கான இடத்தைத் தேர்ந்தெடுத்து செயற்பட்டு வருகின்ற பாங்கினை யாவரும் மனமெண்ணி பெருமைப்படுவது மிகவும் அவசியம் என்று கருதுகிறேன். இவர்களின் தேடல்கள் வழியில் பல ஓலைச் சுவடிகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன.ஓலைச்சுவடிகளைத் தேடும் பணியில் ஈடுபட்ட வேளை கந்தபுராண ஓலைச்சுவடிகளை தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோவிலில் கண்டதாகவும் அங்கிருந்து அந்த ஓலைச் சுவடிகளைப் பெற்றுக் கொண்டதாகவும் அறிய முடிகிறது.

   இலங்கையில் சுவடிகளுக்கென்று கி.மு முதலாம் நூற்றாண்டிலேயே நூலகம் இருந்ததை அறிய முடிகிறது.பெளத்த விகாரைகள் ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்கும் இடங்களாக இருந்திருக்கின்றன. ஆரம்பகால நூலகங்கள் இன்று பல்கலைக்கழகங்களில் இருப்பதுபோல சிறப்பாக இருந்திருக்கின்றன என்றும் அறிய முடிகிறது.பதின்மூன்றாம் நூற்றாண்டில்  " சரஸ்வதி மகாலயம் " என்னும் பெயரில் ஒரு நூலகம் யாழ்ப்பாணத்தில் சிறப்பாக இயங்கி இருக்கிறது  என்பதையும் வரலாற்றால் அறிந்து கொள்ளு கிறோம்.இங்கு பல ஓலைச்சுவடிகள் வைக்கப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த நூலகம் அமைந்த இடம் எது என்று அறிய ஆவலாய் இருக்கிறதல்லவா அந்த இடம் தான் நாயன்மார்க்கட்டாகும்.

  இன்னுமொரு சிறந்த சுவடிகள் நூலகமும் யாழ்ப்பாணத்தில் இருந்திருக்கிறது. எங்கு தெரியுமா மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் ஆதீனத்தில்த்தான்.பல துறைகள் சார்ந்த ஓலைச் சுவடிகள் இங்கு இருந்தன என்றும் அறிகின்றோம்.பேராதனைப் பல்கலைக்கழகம் இலங்கையின் புகழ்பூத்த பல்கலைக் கழகமாகும். சுவாமி விபுலானந்த அடிகளாரை தமிழ்த்துறைத் தலைவராய் ,பேராசிரயராய் ,அமர்த்திப் பெருமை கொள்ள வைத்த பல்கலைக்கழகமாகும். இங்கு மிகவும் சிறந்த நூல்நிலையம் அமையப் பெற்றிருக்கிறது.அந்த நூல்நிலையத்தின் அடித்தளத்தில் உள்ள ஒரு தனி அறையில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட பல அரிய ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்பது கருத்திருத்த வேண்டிய செய்தி எனலாம்.

  மட்டக்களப்பு மான்மியம் என்னும் சிறந்த ஒரு நூலை ஆக்கியவர் வித்துவான் எவ்.எக்ஸ்.சி . நடராசன் அவர்கள். அந்த நூலினை ஆக்குவதற்கு அருந்துணையாக அமைந்தன பழைய ஓலைச் சுவடிகளே என்று அவர் தனது நூலின் முன்னுரையில் காட்டுவதும் நோக்கத்தக்கது. கிழக்கு மாகாணத்தில் கண்ணகி அம்மன் வழிபாடு மிகவும் பக்திபூர்வமாக இன்றும் மக்களால்  பேணப்பட்டு வருகிறது. யாழ்ப்பாண மாவட்டத்தைவிட - கிழக்கு இலங்கையில் கண்ணகி வழிபாடு சிறப்பாக இருக்கிறது என்பது குறிப்பிடப் பட வேண்டிய முக்கிய செய்தி எனலாம். வைகாசி மாதத்தில் அம்மனுக்கு பல விசேடங்கள் நடைபெறும் . அதில் ஒன்று " கொம்பு முறித்தல் " என்பதாகும். குளித்திப் பாடல்களும் பக்தியுடன் பாடப்படும் . கண்ணகை அம்மன் கோவில்களில் பெரிய பெட்டகம் இருப்பதைக் கண்டிருக்கிறேன். அந்தப் பெட்டகத்துள் பழைய ஓலைச்சுவடிகள் நிறையவே இருந்ததையும் நான் கண்டிருக்கிறேன். சித்திர புத்திரன் கதையினை ஏடுகளில் வைத்து அந்த ஏடுகள் வைப்பதற்கான பிணைச்சல் வடிவில் அமைந்த பலகையில் வைத்து கோவில்களில் பாடுவதையும் நான் பார்த்திருக்கிறேன். அந்தக் கதைகளையும் அதற்கான விளக்கங் களையும் என்னுடைய இளமைக் காலத்தில் கேட்டும் இருக்கிறேன்.மாந்திரீக ஏடுகள்பில்லி சூனிய ஏடுகள்மருத்துவ ஏடுகள்,சாதகம் எழுதப்பட்ட ஏடுகள்என்று பலவகைப்பட்ட ஓலைச் சுவடிகளை பலரின் வீடுகளில் நான் கண்டிருக்கிறேன். பனங்காடு என்னும் பெயருடைய கிராமத்துக்கு அயல் கிராமத்தில் வாழ்ந்தும் இருக்கிறேன். பனம்பழத்தை  சுவைத்த நினைவுகள் இன்றும் என்மனத்தில் பசுமையாய் இருக்கிறது.பனம்பழம் பற்றிய பகுதி வரும்வேளை அதனைப்பற்றி விவரமாய் பார்ப்போம்.

   ஓலைச்சுவடிகள் பல இன்னும் பலரிடம் முடங்கிப் போய் இருக்கின்றன என்று ஆராய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். அவற்றையெல்லாம் சேகரித்தால் இன்னும் பல அரிய தகவல்களை எல்லாம் அறிந்திடவும் பயன்பெறவும் இயலும் அல்லவா  ! ஹாரிங்டன் என்னும் வெள்ளைக்காரர் மதுரை மாவ ட்டத்தின் ஆட்சியராய் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கடமையாற்றி இருக்கிறார். அவருக்குச் சமையல் செய்தவர் பெயர் கந்தப்பன். அவர் - தான் வேலைபார்த்த அந்த துரையிடம் ஓலைச்சுவடிகள் பற்றி கூறி யிருக்கிறார். கிராமங்களில் உள்ள வீடுகளில் ஓலைச்சுவடிகள் பல இருப்பது வழக்கம். ஆனால் அவர்கள் அதனை வருடத்துக்கு ஒருமுறை தீயில் இட்டு விடுவார்கள். கறையான் அரித்தால் அப்படிச் செய்வார்கள். சில வேளை பயன் அறியாமலும் தீயில் போடுவதும் உண்டு. "தீயில் இட்டு எரித்துவிடு" என்று என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பல ஓலைச் சுவடிகள் இருக்கின்றன என்று கந்தப்பன் சொன்னதும் - துரை அவற்றைப் பெற்று சென்னை மாகாணத்தின் வருவாய்த்துறைக்கு பொறுப்பாய் இருந்த எல்லீஸர் என்பவரிடம் ஒப்படைத்தார். எல்லீஸரிடம் ஒப்படைக்கப்பட்ட ஓலைச்சுவடிகளில் திருக்குறள் ஓலைச்சுவடியும் இருந்திருக்கிறது என்பதுதான். முக்கியமாகும்.எல்லீஸ் என்பவர் தமிழின் மீது கொண்ட காதலால் தமிழைக் கற்று கவிதை எழுதும் அளவுக்கு ஆளுமை உடையவராக விளங்கினார். திருக்குறளை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்திருக்கிறார். தமது காலத்தில் தமிழ்ச்சங்கம் ஒன்றை நிறுவி தமக்குக் கிடைத்த ஓலைச் சுவடிகளை அச்சுவாகனம் ஏற்றினார் என்றும் அறிந்து கொள்ள முடிகிறது.    

  ஓலைச்சுவடிகள் பல பல இடங்களில் இன்னுமே இருந்தாலும் அவற்றை எல்லாம் சேகரித்துப் பாதுகாக்க வேண்டும் என்னும் எண்ணம் இப்பொழுது  மேலோங்கி வருவது நல்லதொரு நிலை என்றுதான் கருதல் வேண்டும். ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்கும் பாங்கில் நூலகங்கள் பல இயங்கிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் - சென்னைப்பல்கலைக்கழக கீழ்த்திசைச் சுவடி நூலகம்உ.வே.சா. நூல் நிலையம்பிரமஞான சபை நூலகம்தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை,உலகத் தமிழாராய்சி நிறுவனம்சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம்ஆசியவியல் ஆய்வு நிறுவனம்,- காஞ்சி புரத்தில் காமகோடி பீடம் ஶ்ரீ சங்கராசாரியார் மடம்பாண்டிச்சேரியில் பிரஞ்சு இந்திய கலைக்கழகம்விருத்தா சலத்தில் குமாரதேவ மடாலயம் ,  தஞ்சையில் - சரஸ்வதி மகால் நூலகம்தமிழ்ப்பல்கலைக்கழகம்தருமபுர ஆதீன மடாலயம் மயிலாடுதுறைஶ்ரீ காசி மடம் திருப்பனந்தாள் திருவாவடுதுறை ஆதீனம் மதுரைத் தமிழ்ச் சங்கம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம்தவத்திரு சாந்தலிங்க அடிகளார் மடம் பேரூர்கலை மகள் கல்வி நிலையம் ஈரோடுகேரளப் பல்கலைக்கழகம் கீழ்த்திசை சுவடி நிலையம் திருவனந்தபுரம்.  கள்ளிக்கோட்டை சர்வகலாசாலை. திருச்சூர் சாகித்திய அகாதமிதிருவேங்கடவன் பல்கலைக்கழகம், ஆந்திரப் பல்கலைக்கழகம்உஸ்மானியாப் பல்கலைக்கழகம்தேசிய நூலகம் கல்கத்தா.

  அரசினரின் கீழ் இயங்கும் சென்னை கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் தான் உலகிலே அதிகமான ஓலைச்சுவடிகள் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றன என்பது மனங்கொள்ளத்தக்கதாகும்.இங்கு இருபத்து ஆறு  இலட்சம் ஓலைச் சுவடிகளைக் கொண்ட எழுபத்து இரண்டாயிரத்து எழுநூற்று நாற்பத்து எட்டு ஓலைச்சுவடிக் கட்டுகள் இருக்கின்றன என்பது முக்கிய மாகும்.

  ஓலைச் சுவடிகள் எங்களின் முதுசொம்மாகும். அதனை நாங்கள் அனைவருமே பாதுகாப்பதற்கும் உரியமுறையில் பேணுவதற்கு இயன்றவரை உதவிடுதல் என்பது மிக மிக அவசியமாகும். கற்பகதருவாம் பனை பற்றி சொல்ல வந்துவிட்டு - ஏடுகளைப் பற்றிய புராணம் பாடுவதாய் எண்ணி விடாதீர்கள். பனையின் ஓலை இல்லை என்றால் ஏடுகள் என்பதே வந்திருக்கவே முடியாது அல்லவா ஓலையில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் அல்லவா எங்கள் முன்னோரின் சிந்தனைகளை எம்மிடம் சேர்த்து நிற்க அருந் துணையாய் அமைந்தது அல்லவா அப்படி அருந்துணையாய் அமைந்தனவே ஓலைச் சுவடிகள். எல்லாவற்றும் பனைதானே காரணம். பனை இல்லையேல் ஓலை வந்திருக்குமா ! ஓலை இல்லையே ஏட்டுச் சுவடிகள்தான் வந்திருக்குமா ! எனவேதான் பனையின் வரலாற்றில் ஓலைச் சுவடிகள் தொடர்பான வரலாறும் கட்டாயம் இணைக்கபடுதல் இன்றியமையாதது அல்லவா !

  விருதுநகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான எஸ்.யோசப் என்பவர் மிகவும் சிறப்பான ஒரு செயலினைச் செய்திருக்கிறார். ஆயிரத்து முன்னூற்று முப்பது குறட்பாக்களையும் பனை ஓலையில் எழுதிச் சாதனை படைத்திருக்கிறார்.ஓலையிலும் எழுதலாமா ? ஓலை எழுதுவதற்கு உகந்ததா என்று எண்ணுகின்ற இக்காலத்தவர்களுக்கு இந்த ஆசிரியரின் சாதனையானது எங்கள் கற்பகதருவாம் பனையின் மகத்துவத்தை வெளிப்படுத்தி நிற்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.காகிதம் பயன்பாட்டில் இருக்கும் வேளையிலும்; பனை ஓலை எழுதுவதற்கு உகந்ததாய் இருக்கிறது என்பதை இவரின் சாதனை காட்டி நிற்கிறது.

 

  "   வெண்பா இருகாலில் கல்லானை வெள்ளோலை

      கண்பார்க்கக் கையால் எழுதானை - பெண்பாவி

      பெற்றாளே பெற்றாள் பிறர்நகைக்கப் பெற்றாள்

      எற்றோமற் றெற்றோமற் றெற்று "

 

No comments: