சுண்டங்காய் மான்மியம் - சம்பவம் (9) கே.எஸ்.சுதாகர்


ஊரில் சரிவான பள்ளமான காணிகளுக்கு கிராக்கி அதிகமில்லை. இங்கே அவற்றுக்குத்தான் மவுசு அதிகம். வியூ பார்க்கலாமாம். மஞ்சு அப்படிப்பட்டதொரு காணியை வாங்கி அழகானதொரு வீடு கட்டினாள். முன்புறத்தை சமதரையாக்கி பூக்கண்டுகள் வைத்தாள். பின்புறம் தாயார் தேவாவின் இராச்சியம். ஜன்னலிற்குள்ளால் எட்டிப் பறிக்கக்கூடியமாதிரி கறிவேப்பிலைக்கண்டுகளும், சரிவுகளில் சுண்டங்காய் முதற்கொண்டு பூசணிக்காய் வரை பயிரிட்டிருந்தார் அவர்.

சனிக்கிழமை அதிகாலை. முன்புறத்தில் சாடிகளுக்குள் கள்ளி மரங்களை நட்டு, அதற்குள் பவளக்கற்களைப் போட்டபடி நின்றிருந்தாள் மஞ்சு.

எதிர்வீட்டில் வாட்டசாட்டமான இளைஞன் ஒருவன், தன்னுடைய ரெஸ்லா காரைத் துடைத்துக் கொண்டிருந்தான்.

வீட்டிற்கு வரும் உறவினர் நண்பர்களுக்கு, எல்லா மரக்கறிகளைப் பற்றியும் விலாவாரியாக வகுப்பு எடுக்கும் தேவா, சுண்டங்காய் பற்றி மூச்சு விடமாட்டார். ஏனென்றால் சுண்டங்காய் உடலிலுள்ள கிருகிகளைக் கொல்லுமாம்; கொழுப்பைக் கரைக்குமாம்; ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துமாம்; நீரிழிவுநோயிற்கும் நல்லதாம். ஆராவது சுண்டங்காயோ அல்லது மரமோ கேட்டால், வாயைச் சுழித்துக்கொண்டு கையை விரிப்பார். எல்லாச் சுண்டங்காய்களையும் தானே சாப்பிட்டு, இந்த உலகில் நீடூழிகாலம் தானே வாழவேண்டும் என்பது அவர் பெருவிருப்பு.

வீட்டிற்கு முன்னால் பெருவெடிப்பு நிகழ்ந்ததுமாப் போல் ஒரு சத்தம் கேட்டது. மஞ்சு பதுங்கியபடி ஒளிந்து நின்று பார்த்தாள். ரெஸ்லா கார் மீது இன்னொரு கார் மோதி நின்றது. ரெஸ்லாக் காரைத் துடைத்துக் கொண்டிருந்த இளைஞன் தனது காரைச் சுற்றிச்சுற்றி ஓட, வந்தவன் கலைத்துக் கலைத்து அவனை வாளால் வெட்டினான். வயிற்றுக்குள்ளிருந்து குடல் வெளியே வர, அதையும் தூக்கிப் பிடித்துக்கொண்டு வீட்டிற்குள் ஓடினான் அவன்.

சுண்டங்காய் மரத்தில் கையை வைக்கப்போன தேவா, சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு மரங்களையும் முறித்துக்கொண்டு சரிவு நிலம் வழியே சுருண்டார்.

நெஞ்சம் பதறக் கத்திக்கொண்டு உள்ளே வந்த மஞ்சு, அம்மாவைக் காணாது திகைத்தாள். வேலியோரம் முனகும் சத்தம் கேட்டது. மூன்று சுண்டங்காய் மரங்களை வேரோடு முறித்துக்கொண்டு, வீட்டை வியூ பார்த்தபடி விழுந்து கிடந்தார் தேவா. ஒரு காலைக் காணவில்லை. பின்வீட்டு நாயின் சத்தம் கேட்டபோதுதான், அது அடுத்த வளவிற்குள் இருப்பது தெரிந்தது.

முன்வீட்டில் அம்புலன்ஸ் வந்து இளைஞனை ஏற்றிக்கொண்டு போனபின்னர், அங்கே விடுப்புப் பார்க்க வந்தவர்களைக் கெஞ்சி மன்றாடி தேவாவை சரிவு வழியே தூக்கி வந்து காரில் ஏற்றினார்கள். தேவாவிற்கு பின்வீட்டு நாய் கடித்த காயமும், அவர்கள்வீட்டு வேலியோரம் கிடந்த பிசுங்கான் வெட்டிய காயமும் இருந்தன. தவிர உடலெல்லாம் முள்ளம்பன்றி சிலிர்த்தாற்போல் ஏகப்பட்ட சுண்டங்காய்மர முள்ளுகள். அவருக்கு நீரிழிவுநோய் இருந்ததால் வைத்தியசாலைக்கு உடனே விரைந்தார்கள்.

முன்வீட்டுக்காரன் ஒருகிழமையில் வீடு வந்து சேர்ந்துவிட்டான். தேவா வைத்தியசாலையில் ஒருமாதம்வரை தங்கவேண்டியிருந்தது.

வந்ததும், “என்னடி பிள்ளை... குடலைத் தூக்கிப் பிடிச்சுக்கொண்டு ஓடினான் எண்டாய்... அவன் இப்ப குதியங்குத்த எக்சசைஸ் செய்யுறான்” என்றார் தேவா.

“அம்மா... உங்களுக்கு நீரிழிவு ரைப் வண் அம்மா... உங்களுக்குக் காயம் வந்தா லேசிலை மாறாதம்மா.. இந்தச் சுண்டைக்காய் விஷயம் கூட உங்களுக்குத் தெரியேல்லையே!”

சுண்டங்காய் என்றவுடன் தேவாவிற்கு வீட்டின் பின்புறம் போகக் கால்கள் துறுதுறுத்தன. “சுண்டங்காய் வருத்தங்களுக்கு திறமான சாமான் தான். ஆனா மரத்தின்ரை முள்ளு நரகத்தின்ரை முள்ளு” மனதிற்குள் புறுபுறுத்தார்.

“ஒரு வருஷத்துக்குக் கவனமா இருக்கவேணும் எண்டு டொக்ரர் சொல்லியிருக்கிறார். இல்லாட்டிக் கால் கழட்ட வேண்டி வருமாம்” என்றாள் மஞ்சு.

°

நன்றி: வெற்றிமணி

No comments: