தண்டனை (கன்பரா யோகன்)

நீண்ட கார் வரிசையில் மூன்று மணி நேரமாகக் காத்திருந்து அலுத்துப் போய்  மூன்று நாலு வாட்ஸ் அப்  சாட் குழுக்களின் குறுஞ்செய்திகளை போய்  பார்த்து விட்டு நேரத்தை போக்க என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான் கதிர்.

பிறகு பேஸ் புக்கில்  போய் வித்தியாசம் கண்டுபிடி என்று போட்டிருந்த நூறு நாய்குட்டிப் படங்களில் வாலில்லாத ஒன்றைக் கண்டு பிடித்து விட்டான்., பிள்ளைகளின் திருமணத்தில்  வேட்டி சால்வையோடு போஸ் கொடுத்துக் கொண்டிருந்த இரண்டொரு நண்பர்களின் வீடியோக்களுக்கு வாழ்த்து செய்தி அனுப்பியாயிற்று.  தமிழில் வாழ்த்துக்கள் என்று எழுதினால் இலக்கணப் பிழை என்று யாரோ சொல்லிவிட்டதால் (அதுவும் பேஸ் புக்கில்தான்) ஒவ்வொரு முறையும் வாழ்த்துகள் என்று திருத்தி அனுப்ப வேண்டியிருந்தது.

இனி நேரத்தைப் போக்க வழியில்லை.

 வளைந்து வளைந்து செல்லும் கார் வரிசை மெல்ல மெல்ல நகர்ந்தது.  காரில் உட்கார்ந்த படியே  கோவிட்  பரிசோதனை செய்யும் சாவடி  அது. முன்பு அந்த மைதானம்  பல விளையாட்டுப் போட்டிகளும்  கண்காட்சிகளையும்  கண்டிருந்தது. இப்போது கோவிட்  சோதனைக்காக பாம்பு போல வளைந்து நிற்கும் நீண்ட கார் வரிசைகள்  இரவு பகலாக மைதானத்தை நிறைக்கின்றன. 

 ஒருவாறு  இரண்டு கார்களுக்கு முன்னால் பரிசோதிக்கும் பெண்கள் இருவரைக் காணும் கட்டத்துக்கு வந்ததும் அப்பாடா என்று நீண்ட பெருமூச்சை - அதையும் அணிந்திருந்த மாஸ்க்கினூடாக விட வேண்டியிருந்தது.

 அந்த மாஸ்க் வாங்குவற்காக முதல் நாள் கெமிஸ்ட்டுக்குப் போயிருந்தான். கதிர் எப்போதும் கண்ணாடி அணிபவனாதலால் ஒரு மாஸ்க்கைப் போட்டுப் பரீட்சித்துப் பார்க்க கண்ணாடியெங்கும் மூச்சின் புகை படிந்து பார்வையை மறைத்தது. கவுண்டரில் பணத்தை செலுத்த வந்தபோது கண்ணாடியில் புகை படிகிறதென்று முறைப்பாடு செய்து பார்த்தான் கதிர். எந்தக் கடைக்குப் போனாலும்  இப்படி ஏதாவது சொல்வது கதிரின் வழக்கம்.  ‘அப்படியானால் மூச்சு விடுவதை நிறுத்திவிட்டு’ என்றான் கெமிஸ்ட். கதிர் பிறகு வாயைத் திறக்கவில்லை.

 சூரியன் தலைக்குமேல் வந்து காரினுள்ளே கடும் வெக்கை அடித்தது. இப்போது ஒரு படியாக கதிரின் முறை வந்ததும் பரிசோதிக்கும் பெண்ணருகே காரை செலுத்தினான். காரின் கண்ணாடி யன்னலை திறக்க சொல்லியதுடன் நாக்கை ஆவென்று நீட்டச் சொல்லி சைகையில் காட்டினாள் அந்தப் பெண்.   கதிருக்கு நெஞ்சு  திக்கென்றது, அதே நேரம் காலில் சுரீரென்றும் வலித்தது போலிருந்தது. ஆனால் ஒருவாறு அதை சமாளித்துக் கொண்டு பிசிஆர் சோதனை முடித்து  காரை வெளியே எடுத்துக் கொண்டு  வீட்டை நோக்கி காரை செலுத்த தொடங்கினான்.

 

செல்லத்துரை ஹெட் மாஸ்டராக பதவி ஏற்ற அன்றே  பாடசாலை மண்டபத்தில்  முன்னாள் ஹெட் மாஸ்டராகவிருந்த  கணபதிப்பிள்ளைக்கும் பிரியாவிடை நடந்தது. மேடையில் காலுக்கு மேல் கால் போட்டிருந்த செல்லத்துரையின் முகத்தை பார்த்து விட்டு  பார்த்தால் கொதியன் போலிருக்கிறான் என்றான் அருமை.  

கதிர் என்றழைக்கப்படும் கதிர்காமநாதன் மூன்றாம் வகுப்பில்  சீவரத்தினம் என்ற சீவலுடனும், அருமைநாயகம் என்ற அருமையுடனும் அப்போது கூட்டாளியாக இருந்தான்.   மூவரும் எப்போ பிரியாவிடை முடியும் என்று அந்த மதிய நேரத்தில் தவித்துக் கொண்டிருந்தார்கள்.  

 ஏனென்றால் மூவரும் மதிய இடைவேளை மணியடித்ததும் மைதானம்  என்று இப்போது கற்பனை பண்ணக்கூடிய அந்த சிறிய புழுதித் தரையில் விளையாடிக் கொண்டிருக்கும் மற்றைய சிறுவர்களுக்குத் தெரியாமல் நழுவி தெருவுக்குப்  போய் விடுவது வழக்கம்.

வருஷா வருஷம் நாவல்ப்பழ சீசன், இலந்தைப்பழ சீசன் அல்லது வேறு ஏதாவது பழ சீசன்தான் வந்து விடுகிறதே?  சும்மா இருக்க  முடியுமா?

 மூவரிலும் மெல்லியவன் அருமை. ஓடலி நல்லையா வீட்டடி ஒழுங்கையால் போக வரும் திடலிலிருந்த நாவல்  மரத்தில் நல்ல பழங்கள் ஏனோ உச்சியிலிருந்த சிறிய கொப்புகளிலேயே  பழுத்திருந்தன.

எனவே அருமைக்குதான் ஏறி உலுப்பும் வேலை வாய்த்தது.

அவதி அவதியாக விழுந்ததை வாய்க்குள் போட்டுக்கொண்டிருந்த சீவலை உச்சியிலிருந்து அருமை,

“டே எனக்கும் வை விழுங்கி முடித்து விடாதே”

என்று அதட்டினாலும் சீவல் நிறுத்தமாட்டான்.

 தின்றது போக கொஞ்சத்தை கதிர் தனது காற்சட்டைப் பொக்கட்டுக்குள் அருமைக்காக போட்டு வைத்தது ஒருநாள் அவனுக்குத்தான் உலை வைத்தது. காற்சட்டையில் நாவல் பழக் கறையைக் கண்ட கணபதிப்பிள்ளை கட்டைக் கம்பை எடுத்து கதிரின் கையை நீட்ட வைத்து  சட சடவென்று பொழிந்து தள்ளிவிட்டார்.

 ஹெட் மாஸ்டர் கணபதிப்பிள்ளையிடம் அடி வாங்கிய நாளிலிருந்தே நாவல் பழங்களை மரத்தடியிலேயே சாப்பிட்டு விட்டு வருவது என்று மூவரும் தீர்மானித்திருந்தனர்.

 பள்ளிக்கூடத்தில் அப்போது இரண்டு கட்டடங்கள் மட்டுமே இருந்தன. கிடுகு வேய்ந்த கூரை கொண்ட சிறிய கட்டடத்தில் அரிவரி, முதலாம் வகுப்புகள் நடந்தன. பெரிய கட்டடத்தில் இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான நாலு வகுப்புகளும், கட்டடத்தின் முடிவில் ஒரு திரைச்சீலை இல்லாத மேடையும் இருந்தது. அதிலேதான் கணபதிப்பிள்ளையின் பிரியாவிடை நடந்தது.

 கணபதிப்பிள்ளையின் தலை வழுக்கையாக இருந்தது ஆனால் புதிய ஹெட் மாஸ்டர் செல்லத்துரை ஒரு பாகவதர் போல தலை முடி வளர்த்திருந்தார். சுருட்டு புகைத்தார்.

செல்லத்துரை வந்ததும் பள்ளியில் கட்டுப்பாடுகளை இறுக்கினார். காலை மணியடித்ததுமே பள்ளியில் வாசல் மரப் படலை சங்கிலியால் வளைத்துப் பூட்டு போடப்பட்டது. பிந்தி வந்தது வெளியில் நின்றவர்களை சேர்த்துப் பிடித்துக் கொண்டு வந்து பிரம்படிக்கு பின்னரே வகுப்புக்கு அனுமதித்தார்.

பிரம்படி காலில் விழுந்தது என்று அதை வாங்கியவர்கள் பேசிக் கொண்டார்கள்.

 படலையை பூட்டினாலென்ன?  தொடர்ந்தும் பள்ளிக் கட்டட அரைச்சுவரைத் தாண்டி குதித்து  பக்கத்துக்கு வளவு எதிர்வீரசிங்கத்தாரின் வேலிப் பொட்டுக்குள்ளால் புகுந்து அவரின் நாய் நித்திரை கொள்ளும் மதிய நேரத்தில் அவர் படலை வழியாகவே மும்மூர்த்திகள் மூவரும் ரோட்டுக்கு வருவதை எவராலும் தடுக்க முடியவில்லை.

 ஆனால் இது நீண்ட காலம் நீடிக்கவில்லை. மூவரும் செல்லத்துரையிடம் மாட்டிக்கொண்டனர்.

அது நாவல் பழக் காலம். மதியம் வழமை போல மரத்தடிக்குப் போய் விஷயத்தை முடித்துக் கொண்டு பூனைகள் போல் பள்ளிக்குள் நுழைந்து விட்டனர் மூவரும்.

நாவல் பழத்தின் ஒரு சிறப்பு அது நாக்கை ஊதா நிறத்திலும், சொண்டை கருப்பு நிறத்திலும் மாற்றி விடுவதுதான்.

 அன்றைக்கு மூன்றாம் வகுப்புக்கு தமிழ் படிப்பிக்க வந்த செல்லத்துரை கதிரின் சொண்டு கருத்துக் கிடந்ததைக் கண்டு கொண்டார்.  

‘என்னடா  சுருட்டு குடிப்பவன் வாய் போல கிடக்கு  முன்னுக்கு வா’

என்று கூப்பிட்டு  நாக்கை நீட்ட வைத்ததும் நாவல் பழக் கறையை காட்டிக் கொடுத்தது கதிரின் நாவு.

 நாவல்பழம் பிடுங்க போனவர்களைக் கண்டு பிடிக்க செல்லத்துரை வகுப்பிலிருந்த இருபத்தெட்டுப் பேரையும்  வரிசையாக வந்து நாக்கை நீட்ட வைத்து  சோதனையிட்டார். 

 கதிருக்கும் மற்றைய இருவருக்கும் காலில் சுளீரெனப் பிரம்படி விழுந்தது.

 அன்று காலில் சுரீரென்று விழுந்த அடி யாரும் நாக்கை நீட்டச் சொல்லும் போதெல்லாம் காலில்  மீண்டும் விழுவது போல் உணர்வதை கதிர்காமநாதனால் தவிர்க்க முடிவதில்லை.

 

 

 

No comments: