எழுத்தும் வாழ்க்கையும் – அங்கம் 60 இரவல் புடவையில் கொய்யகம் வைத்தல் ! வெற்றிகரமான தொழில் அதிபர் ஞானமும் மிட்சூய் சீமெந்து ஆலையும் ! ! முருகபூபதி


வீரகேசரி ஆசிரிய பீடத்தில் இணைந்ததும்,  இரண்டாம் பக்கத்திற்கு கட்டுரைகள் எழுதினேன்.  அப்போது அந்தப்பக்கத்தை கவனித்தவர்   Feature editor திருமதி பற்றீஷிய ஆரோக்கியநாதர். 

இவர்தான் பதார்த்த குணா என்ற புனைபெயரில் வாரவெளியீட்டில் சமையல் குறிப்புகள் எழுதிவந்தவர்.

அவ்வப்போது எனது மேசையருகில் வந்து, இரண்டாம் பக்கத்திற்கு ஆக்கம் கேட்பார். இவர் என்னிடம் மட்டுமல்ல, அங்கு துணை ஆசிரியர்களாக பணியாற்றிய சுபாஷ் சந்திரபோஸ், அன்னலட்சுமி இராஜதுரை ஆகியோரிடமும் கேட்பார்.

நண்பர் வீரகத்தி தனபாலசிங்கம் என்னையடுத்து ஆசிரிய பீடத்திற்கு வந்த பின்னர், அவரும் குறிப்பிட்ட இரண்டாம் பக்கத்தில் அரசியல் பத்தி எழுத்துக்களை எழுதிவந்தார்.  பின்னாளில் அவர்


சிறந்த அரசியல் ஆய்வாளராகவே மிளிர்ந்தார்.

1983 இல்  யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் விடுதலைப்புலிகளின் கண்ணி வெடித்தாக்குதலில் இராணுவத்தினர் கொல்லப்பட்டதையடுத்து,  இலங்கையில் தமிழர்களின் எதிர்காலம் மட்டுமல்ல,  இலங்கை மீது கண்வைத்திருந்த சர்வதேச நாடுகளின் பூகோள அரசியலும் எந்தத் திசையில் செல்லப்போகிறது ?  என்ற யோசனையும் ஆசிரிய பீடத்திலிருந்து குறிப்பிட்ட இரண்டாம் பக்கத்திற்கு கட்டுரைகள் எழுதிக்கொடுக்கும் வேளையில் வந்தது.

மித்திரனில் மர்மத்தொடர் கதைகளை புனைபெயரிலும் வீரகேசரி வார வெளியீட்டில் ரஸஞானி என்ற பெயரில் இலக்கியப்பலகணி என்ற  பத்தியும், பிரதம ஆசிரியர் ஆ. சிவநேசச்செல்வன் கேட்டவாறு அவர் எனக்குச் சூட்டிய ரிஷ்ய சிருங்கர் என்ற புனைபெயரில் கலை,  சினிமா, நாடகம்  சார்ந்த  விமர்சனக் கட்டுரைகளையும்  எழுதினேன்.

ஆனால், வீரகேசரி இரண்டாம் பக்கத்தில் லெ. முருகபூபதி என்ற பெயரிலேயே எழுதிவந்தேன்.

இந்தப்பெயரில் அங்கு ஒரு புளக்கும் தயாராகியிருந்தது. அது பக்க வடிவமைப்பாளரின் கவனத்தில் இருந்தது.  வாரம் ஒரு தடவை அரைப்பக்கம் வரக்கூடியதாக எழுதுவேன்.

1983 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எமது இலங்கை முற்போக்கு
எழுத்தாளர் சங்கம் நடத்திய பாரதி நூற்றாண்டு நிகழ்வுகளுக்காக தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்திருந்த, இந்தத்  தொடரில் நான் முன்னர் குறிப்பிட்ட பாரதி இயல் ஆய்வாளரும் தமிழ்நாட்டின் மூத்த இலக்கியவாதியுமான தொ. மு. சி. ரகுநாதனுடன் பயணங்கள் மேற்கொண்டேன். அவர் திரும்பிச்செல்லும் வரையில் அவருக்கு ஒரு செயலாளராகவே இயங்கினேன்.  உறவின் நெருக்கத்தினால், துணிவுடன் அவரிடம் கேள்விகள் கேட்டு தெளிவும் பெறுவேன்.

இருவரும் மட்டக்களப்பு, கல்முனை, யாழ்ப்பாணம்  எங்கும் ரயிலிலும்  தனியார் வாகனங்களிலும் பயணம் மேற்கொண்டோம். எங்கள் நீர்கொழும்பூருக்கும் அவரை அழைத்து வள்ளுவரும் பாரதியும் என்ற தலைப்பில் அவரை பேசவைத்தேன்.

அவருடன் தொடர் பயணங்கள் மேற்கொண்டபோது, அவர் எழுதிய சில நூல்கள் பற்றியும் அவற்றின் உறைபொருள் – மறைபொருள் குறித்தெல்லாம் கேட்டுத்தெரிந்துகொண்டேன். அவர் பழுத்த அறிஞர்.  அரசியல் – சமூகம் – பொருளாதாரம் – கலை – இலக்கியம் பற்றியெல்லாம் அந்தப் பயணங்களில் நான் முடிந்தவரையில் கற்றறிந்தேன்.

 “ அதிதீவிர வாதம் சந்தர்ப்பவாதமாகும்   “ என்ற மேதை லெனினின்  கூற்றையும், கவிஞர் ஷெல்லி சொன்ன சுதந்திரம் – சமத்துவம் –
சகோதரத்துவம் பற்றியும் ரகுநாதன் எனக்கு சொல்லித்தந்து விளக்கினார்.

ரகுநாதன்,  பிரெஞ்சுக்கவிஞர் ஷெல்லியையும்  வங்கக் கவிஞர் தாகூரையும்  பாரதிக்கு ஒப்பிட்டும்  தனித்தனி நூல்கள் எழுதியவர்.

அவர் எனக்கு சிறந்த ஆசான்.  அவரால்  அரசியல், சமூகம் , இலக்கியம் குறித்த தீர்க்கதரிசனத்தை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பதையும் கற்றறிந்தேன்.

வெற்று உணர்ச்சிகளுக்கு ஆட்படாமல், அறிவுபூர்வமாகவும் தெளிவாகவும் முடிவுகளை தீர்மானிக்கவேண்டும் என்று ரகுநாதன் சொன்னார்.

அத்துடன் அவரும் பாரதி இயல் ஆய்வாளராகவும் திகழ்ந்தமையினால், தீர்க்கதரிசனம் பற்றி சில விடயங்களை மனதில் பதியும் வகையில் சொல்லித்தந்தார்.

அவர் தனது கையொப்பத்துடன் தந்த அவர் எழுதிய பாரதியும் ஷெல்லியும் நூல் எனக்கு பல புதிய செய்திகளை சொல்லியிருந்தன.

ரகுநாதன் சாந்தி என்ற இலக்கிய இதழை நடத்தியவர். 
புதுமைப்பித்தனின் நெருங்கிய நண்பர். புதுமைப்பித்தன் வரலாறு எழுதியவர். அந்த நூலையும் நான் கடிதம் எழுதிக்கேட்டிருந்தமையால்
1983 இல் சென்னையிலிருந்து வரும்போது எடுத்துவந்து தந்திருந்தார்.

அவரது சாந்தி இதழில்தான் சுந்தரராமசாமி, ஜெயகாந்தன் ஆகியோரின் ஆரம்பகால படைப்புகள் வெளியாகியிருந்தன.  அவர்  1983 இல் இலங்கை வந்த காலப்பகுதியில் சென்னை தி. நகரிலிருந்த சோவியத்தூதரகத்தின் தகவல் பிரிவில் வெளியான சோவியத் நாடு, மற்றும் சோவியத் வெளியீடுகளின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார்.  பாரதி நூற்றாண்டு காலத்தில்தான் ரகுநாதன் பாரதி : காலமும் கருத்தும் என்ற நூலையும் எழுதினார். அதற்கு இந்திய சாகித்திய அகடமி விருது கிடைத்தது.

ரகுநாதனின்  அறிவுரைகள் மனதிலிருந்தமையால் வீரகேசரி இரண்டாம் பக்கக்கட்டுரைகளை தொடர்ந்து எழுதினேன்.  பிரதம ஆசிரியர் சிவநேசச்செல்வன், மேலிடத்துடன் பேசி, எமது அக்கட்டுரைகளுக்கு இருபது ரூபா சன்மானம் வழங்குவதற்கான ஏற்பாட்டைச்செய்தார்.

மித்திரனில் வெளிவந்த பொருளற்ற விடயங்களுக்கு பதினைந்து ரூபாவும், வீரகேசரியில் வெளியான பொருள் நிறைந்த  ஆக்கங்களுக்கு இருபது ரூபாவும் சன்மானமாக கிடைத்தது.  

குறிப்பிட்ட  இரண்டாம் பக்கத்தில் அக்காலப்பகுதியில்  ( 1984 – 85 – 86
)  நான் எழுதிய கட்டுரைகளின் தலைப்பினைப்பாருங்கள்:

தென்னாபிரிக்க இன ஒதுக்கல் ஆட்சிக்கு எதிரான தடை நடவடிக்கைகள் பயனற்றுப்போகக் காரணம் என்ன..?

வல்லரசுகளும் எதிர்நோக்கும் வேலையில்லாப்பிரச்சினை.

தென்னாபிரிக்காவில் வளர்ந்துவரும்  பதற்றம்: அமைதியின்மையை தடுப்பது எங்கனம்..?

இரண்டாயிரமாவது ஆண்டுக்குள் இளைஞர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படுமா..?

ஐ. நா. சபையின் 35 வருட ஆயுள் மிக்க தீர்மானம் குறித்து இன்னும் அலட்சியமா..?

இயற்கை வளங்கள் இருந்தும் உலகில் பின்தங்கிவிட்ட ஆபிரிக்கக் கண்டம்.

பாசிசத்தை முறியடித்த 40 ஆவது ஆண்டு ! உலக மக்களுக்கு இரண்டாவது யுத்தம்: சோவியத் யூனியனுக்கோ தேச பக்தப்போர் !

இலங்கை மாணவரின் கல்வியை பாதிக்கும் சமகாலக் காரணிகள் !

உலக உணவு தினப்பிரகடனம்: பட்டினியால் வாடும் மக்களுக்கு நம்பிக்கையளிக்கவேண்டும்.


உலக நாடுகள் இராணுவச்செலவீனங்களை குறைப்பதன் மூலம் வளர்முக நாடுகளில் பொருளாதார வளர்ச்சி !

 “ சமாதான ஆண்டு   “ பிரகடனத்தின் பின்னரும் ஆயுத உற்பத்தி அதிகரிப்பும் விநியோகமும்  !

நாட்டைத்  தொடர்ந்தும் பாதிக்கும் மூளைசாலிகள் வெளியேற்றத்தை தடுக்க நடவடிக்கை வேண்டும்.

இந்தத் தலைப்புகளில் நான் அக்காலப்பகுதியில் எழுதிய கட்டுரைகளுக்கு தேவைப்பட்ட ஆதாரக்  குறிப்புகளை கொழும்பில் சோவியத்தூதுவரலாயத்தின் தகவல் பிரிவில் பணியாற்றிய நண்பர் இராஜகுலேந்திரன் தந்து உதவினார்.

அவர் யாதவன் என்ற புனைபெயரில் மல்லிகையில் அவ்வப்போது இலக்கிய குறிப்புகளும் எழுதினார்.  1985 ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த உலக மாணவர் விழாவுக்கு இலங்கையிலிருந்து சென்றவர்களில் எனது பெயரும் இடம்பெறுவதற்கு காரணமாக இருந்தவரும் இவர்தான்.

பிற்காலத்தில் இவர் துறவியாக இந்தியாவில் அரவிந்தர் ஆசிரமத்தில் தஞ்சமடைந்தார் என்பது முரண் நகை.  இந்திய சுதந்திரப்போராட்டத்தில் தொடக்கத்தில் தீவிரமாக இருந்த அரவிந்தரும் ( 1872 – 1950 ) பின்னர் துறவியானவர்தான்.  அவர் பற்றி ரகுநாதன் எழுதிய பாரதியும் புரட்சி இயக்கமும் நூலில் படித்திருக்கின்றேன்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் ( மாஸ்கோ சார்பு ) இணைந்திருந்தவரும் தோழர் வி. பொன்னம்பலத்தின் நெருங்கிய நண்பரும்,  வீடமைப்பு அமைச்சர் பீட்டர் கெனமனினால் யாழ்ப்பாணம் கட்டிடப்பொருட்கள் கூட்டுத்தாபனத்தில் முகாமையாளராக நியமிக்கப்பட்டவருமான  எனது இனிய நண்பர் பரராஜசிங்கமும் பின்னாளில் கனடா சென்று துறவியாகி ஆசிரமம் நடத்தினார்.

இந்தச்சம்பவங்கள் ரகுநாதன் 1983 காலப்பகுதியில் எனக்குச்சொல்லித்தந்த மேதை லெனினின் கூற்றை இப்பொழுதும் நினைவு படுத்துகின்றது.

அதிதீவிரவாதிகள் சந்தர்ப்பவாதியாவார்கள் என்பதை இலங்கையில் 1971 இலும் 1980 இற்குப்பின்னர் வடக்கில் தோன்றிய ஆயுதம் ஏந்திய இயக்கங்களிடமிருந்தும் அவதானிக்க முடிந்தது.

எனவே வீரகேசரியில் சன்மானம் கிடைக்கிறது என்பதற்காக கட்டுரைகள் எழுதாமல், அதன் ஊடாக தீர்க்கதரிசன செய்தியையும் புகுத்தி எழுதவேண்டும் என்று மனதிற்குள் தீர்மானித்துக்கொண்டேன்.

இவ்வாறு இரண்டாம் பக்க சர்வதேச அரசியல் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்த வேளையில்,  வீரகேசரி தொலைபேசி பரிவர்த்தனை விருந்தினர் உபசரிப்பாளராக பணியிலிருந்த சகோதரி திருமதி விசுவநாதனிடத்திலிருந்து இன்டர்கம்மில்  அழைப்பு வந்தது.

    நிருவாக இயக்குநரின் செயலாளராக பணியாற்றிக்கொண்டிருக்கும் அம்மணி ஒருவர் என்னுடன் பேச விரும்புவதாகவும், இணைப்பை கொடுக்கட்டுமா..?    எனவும்கேட்டார்.

அந்த வேண்டுகோள் எனக்கு மிகுந்த ஆச்சரியமாகவிருந்தது.

“ அதனால் என்ன மிஸ்… இணைப்பை கொடுங்கள்  “ என்றேன்.

சில நிமிடங்களில் குறிப்பிட்ட அம்மணி தொடர்புகொண்டார்.  எனது இரண்டாம் பக்க சர்வதேச அரசியல் விவகாரம் சம்பந்தப்பட்ட கட்டுரைகளை தானும் தனது மகளும் படித்து வருவதாவும் சொன்னார்.

 ‘ அடடா…. எனது கட்டுரைகளையும் யார் யாரோ படித்து கருத்துச்சொல்கிறார்களே… ‘ என்று மனதில் புளகாங்கிதம் வந்தது.  அவரது வாழ்த்துக்கு நன்றி தெரிவித்தேன்.

சில செக்கண்டுகளில் அந்த அம்மணி,  “ தனது மகள் ஒரு கல்லூரியில் உயர்தர வகுப்பில் படிப்பதாகவும், மகளுக்கு  உலக சமாதானமும் ஆயுத உற்பத்தியும் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை தேவைப்படுகிறது.  எழுதித்தர முடியுமா..?  உங்கள்  கட்டுரையிலிருந்து மகள் குறிப்புகள் எடுத்துக்கொள்ளுவா…? தயவுசெய்து எழுதித்தாருங்கள்.   “ எனக்கேட்டார். 

பொதுவாக பிள்ளைகள், மாணவர்கள், இளம் தலைமுறையினரின்  வேண்டுகோளை பூர்த்தி செய்வதற்கு நான் எப்போதும் முன்னிற்கும் நபர்.

 “ அதனால் என்ன மிஸ்…?  எழுதித்தருகின்றேன்.  “ எனச்சொன்னேன்.

மறுநாளே அவர் கேட்டவாறு ஒரு கட்டுரையை எழுதி, அலுவலகம் வந்த அந்த காலைவேளையில்,  வரவேற்பு உபசரிப்பு அறைக்குச்சென்று திருமதி விசுவநாதனிடம் சேர்ப்பித்தேன்.

அன்று மதியம் அக்கட்டுரையை பெற்றுக்கொண்ட  அந்த அம்மணியிடமிருந்து  “ மிக்க நன்றி “  என்ற குரல் வந்தது. ஒரு சில  நாட்கள் கடந்தன.

ஒரு நாள் திருமதி விசுவநாதனிடம்,  “ நான் எழுதிக்கொடுத்த கட்டுரை அந்த மாணவிக்கு பயன்பட்டதா…?  அந்த அம்மணி அதன்பிறகு ஏதும் சொன்னார்களா..?      எனக்கேட்டேன்.

 “ பூபதி,  அவர் ஒரு வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார். அவரது கணவர் ஒரு தொழிற்சங்கத்தில் முக்கியஸ்தர்.  அவருக்கு வெளிநாட்டில் ஒரு மாநாடு.  மனைவியும் உடன் சென்றுள்ளார். வந்த பின்னர் கேட்டுச்சொல்கின்றேன்  “ என்றார்.

பின்னர் வீரகேசரியில் என்னைப்போன்று இரண்டாம் பக்கத்தில்  வெளிவிவகார அரசியல் கட்டுரைகள் எழுதும் நண்பர் சுபாஷ் சந்திரபோஸிடம், அந்த அம்மணி கேட்டு நான் கட்டுரை எழுதிக்கொடுத்த தகவலைச் சொன்னேன்.

 “ அப்படியா..? என்னிடமும் கேட்டிருந்தார். நானும் எழுதிக்கொடுத்தேன்.     என்றார்.

எனக்கு யாவும் புரிந்தது. நாம் இருவரும் எழுதிக்கொடுத்த கட்டுரை,  அந்த அம்மணியின் பிள்ளைக்கு அல்ல,  வெளிநாட்டில் நடக்கும் அந்த மாநாட்டில் பேசவிருக்கும் அந்த அம்மணிக்கோ, அல்லது அவருடைய கணவருக்கோதான் பயன்படுகிறது.

நாம் இருவரும் எழுதிய கட்டுரைகள்  அழகாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பேசப்பட்டிருக்கும். 

“ இரவல் புடவையில் கொய்யகம் வைத்தல்  “ என்று சொல்வார்கள்.   அதுபோலத்தான் இதுவும்.

தற்காலத்தில்  Download Journalism  பெருகியிருக்கிறது. எவரும் எதனையும் தரவிறக்கம் செய்து தங்கள் கைச்சரக்கையும் சேர்த்து எழுதிவிடலாம்.  ஆதாரம் எதுவும் பதிவிடத்தேவையில்லை.

வீரகேசரியில் மற்றும் ஒருவர் என்னிடமிருந்த ஒரு தமிழக சிற்றிதழ் தொகுப்பினை படிப்பதற்காக வாங்கினார்.  அதன் சில பக்கங்களை அங்கிருந்த தட்டச்சாளர் தட்டச்சு செய்துகொண்டிருந்தார்.

 “ ஏன்… எனக்கேட்டேன் 

 “ இதில் சில பக்கங்கள்,  உங்களிடமிருந்து பெற்றவருக்கு தேவைப்படுகிறது  “ என்ற பதில் வந்தது.

சில நாட்களில் ஒரு கருத்தரங்கில் குறிப்பிட்ட ஆக்கம் வாசிக்கப்பட்டு அந்த அன்பர் சன்மானம் பெற்றுக்கொண்டார்.

சென்னைக்குச் சென்று வந்து கண்ணதாசன் இல்லத்தில் நான் கற்றதையும் பெற்றதையும் ( திருமதி பார்வதி  கண்ணதாசனை பேட்டி கண்டு  ) எழுதி வீரகேசரியில் எழுதியிருந்தேன்.

அதே கட்டுரை வேறும் சில செய்திகளின் இடைச்செருகலுடன் சிங்கப்பூர் பத்திரிகையில் வெளிவந்திருந்தது.  வரிக்கு வரி  நான் எழுதியவை.

அன்றுதான் இப்படி என்றில்லை. இன்றும் இத்தகைய காட்சிகள் தொடருகின்றன.  அண்மையில் இந்த கொரோனோ காலத்திலும் நடக்கும் மெய்நிகர் அரங்கு ஒன்றில் கனடாவைச் சேர்ந்த ஒரு அன்பர் பற்றிய அறிமுகவுரையை தமிழ்நாட்டைச்சேர்ந்த ஒரு அம்மணி நிகழ்த்தினார்.

அதனைக்கேட்டுக்கொண்டிருந்தபோது, அந்த வசனங்கள்… என்னை நனவிடை தோயவைத்தது.  எங்கேயோ  கேட்ட வசனங்கள்… மீண்டும் மீண்டும் பார்த்த  வசனங்கள்.  

உடனே தேடிப்பார்த்தேன். அந்த அம்மணி பேசிய அனைத்தும் எனது பதிவிலிருந்து அப்படியே உருவப்பட்டிருந்தது.

கலை, இலக்கிய , செய்தி ஊடகத்துறையில் என்னவெல்லாம் நடக்கிறது  பாருங்கள்.

எப்படியோ பிழைத்துக்கொள்ளட்டும் என்று கடந்து செல்லவேண்டியதுதான்.

வீரகேசரி ஆசிரிய பீடத்தில் படிப்படியாக வட – கிழக்கில் இயக்கங்களுக்கும் ஆயுதப்படையினருக்கும் இடையில்  அன்றாடம் நடக்கும்  மோதல்கள் பற்றிய செய்திகளை எழுதும் பணி தரப்பட்டது.

ஒருநாள் காலையில் திருகோணமலை நிருபர் இரத்தினலிங்கம் தொலைபேசி ஊடாக அங்கிருக்கும் மிட்சூய் சீமெந்து அலை குண்டு வைத்து தகர்க்கப்பட்டிருப்பதாக செய்தி சொன்னார். அவர் தந்த குறிப்புகளை வைத்து செய்தியை எழுதி முதலில் மித்திரனுக்கு கொடுத்தேன்.

மயில் தவராஜா, மித்திரன் செய்திகளுக்கு பொறுப்பாகவிருந்தார்.  திருகோணமலை மிட்சூய் சீமெந்து ஆலை ஜப்பான் நிறுவனமொன்றுடன் இணைந்து உருவாக்கப்பட்ட  வீரகேசரி நிருவாகத்தலைவர் – தொழில் அதிபர்  ஞானம் அவர்களது  தொழிற்சாலை. ஞானம்,  இலங்கையில் பெரிய வர்த்தகப்பிரமுகர். அவர் வசம் சில தொழிற்சாலைகள் இருந்தன.  அரசாங்கத்தினதும் உலக வங்கியினதும் ஆசிர்வாதம் அவருக்குண்டு.

திருகோணமலையில்  அன்று  அதிகாலை குண்டு வெடிப்பு நடந்த செய்தியை அங்கிருந்த ஆலை முகாமையாளர், அதன்   உரிமையாளர் ஞானம் அவர்களுக்குத் தெரிவித்துவிட்டார்.

அந்தச்  செய்தியுடன் துயில் எழுந்த  தொழில் அதிபர் ஞானம், அடுத்த சில நிமிடங்களில்  காலைவேளையில் தனது அன்றாட  நடைப்பயிற்சியை ஆசிரியர் சிவநேசச்செல்வனுடன் கடற்கரையில் ஆரம்பித்தார்.

ஒரு ஆயுதம் ஏந்திய தமிழ் இயக்கம் மேற்கொண்ட தாக்குதல் அது.  ஏன் தாக்குகிறோம்..? அதன் பின் விளைவுகள் என்ன..?  அதனால் எத்தனைபேர் வேலை இழப்பர்…? என்பவை தொடர்பாக எந்தவொரு தீர்க்கதரிசனமும் அற்றுத்தான் அக்காலப்பகுதியில் சம்பவங்கள் நடந்தன.

அத்தகைய தாக்குதல்கள் படிப்படியாக சகோதரப் படுகொலைகளாகவும் மாறின.  மானிப்பாய் எம்.பி.                            வி. தருமலிங்கம் – கோப்பாய் எம்.பி. ஆலாலசுந்தரம் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

ரெலோ இயக்கத்துள் உள்முரண்பாடு வெடித்து, பொபி குரூப் – தாஸ் குரூப் என பிளவுபட்டு மோதல் நடந்தது.  யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் நடந்த இம்மோதலில் இடையில் சிக்குண்ட ஒரு மருத்துவ தாதியும் கொல்லப்பட்டார்.

கோப்பாய் கட்டைப்பராயில் ரெலோ இயக்கத்தின் முகாம் புலிகளினால் தாக்கப்பட்டது.  அதன் தலைவர் ஶ்ரீசபாரத்தினமும் கொல்லப்பட்டார்.

இதில் நாம் ஒன்றை கவனிக்கவேண்டும்.  இத்தகைய செயல்களை செய்தவர்கள் சிங்களப்பேரினவாதிகளோ, ஆயுதப்படையினரோ அல்ல.

எல்லாம் அதிதீவிர தமிழ்க்கொழுந்துகளினால் நடந்த கைங்கரியம்தான்.  இந்தச்செய்திகளையும் வீரகேசரியில் எழுதியிருக்கின்றேன்.

இவற்றை எழுதும்போது அதிதீவிரவாதத்தின் கோரமுகம்தான் மனக்கண்ணில் வந்தது. 

எமது வீரகேசரி நிருவாகத்தின் தலைவர் ஞானம், திருகோணமலையில் தனது மிட்சூய் சீமெந்து ஆலை ஒரு தமிழ் விடுதலை ( ?) இயக்கத்தினால் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட செய்தி அறிந்து பதறாமல்,  காலைவேளை காப்பியோ, தேநீரோ அருந்திவிட்டு நடைப்பயிற்சிக்கு அயலில் வசித்த எமது ஆசிரியர் சிவநேசச்செல்வனுடன் புறப்பட்டார். 

கடற்கரைக்காற்று அவரை தழுவிச்சென்றபோது,                                      “ அலுவலகம் சென்றதும் மேலதிக செய்திகளை அறிந்து தனக்கு தொலைபேசியில் சொல்லுமாறும்  “ கேட்டுக்கொண்டார்.

அந்தக் கோடீஸ்வரர், எந்தப்பதற்றமும் அற்று சிவநேசச்செல்வனிடம் அச்சம்பவம் பற்றிச்  சொல்லும் வரையில்  எதுவும் தெரியாத அவர்,  அலுவலகம் வந்த பின்னர்தான்  மேலதிக செய்திகளை என்னிடம் கேட்டு அறிந்துகொண்டார்.

திருகோணமலை நிருபர் இரத்தினலிங்கம் தந்த குறிப்புகளை காண்பித்தேன்.  உடனே அதனைப்படித்துவிட்டு,  ஞானம் அவர்களுடன் பேசினார்.

ஞானம் தன்னுடன் அன்று காலையில் நடைப்பயிற்சிக்கு வந்தபோது எந்தவித பதற்றமும் இன்றி பேசியதாக அவர் என்னிடம் சொன்னபோது, எந்தவொரு பாதிப்பிலும் ஏழைக்கும் பணக்காரர்களுக்கும் உருவாகும் எதிர்வினையின் செறிவு எத்தகைய வேறுபாடுகளையும் கொண்டிருக்கும் என்பதும் புரிந்தது !

அந்தச்  செல்வந்தர் தனது தொழிலகத்தை காப்புறுதி செய்திருப்பார்.

ஏழைகள்,    காப்புறுதி என்றால்…  என்ன…    என்று கேட்பார்கள் !

( தொடரும் )

letchumananm@gmail.com

 

 

 

 

No comments: