பாரதி தரிசனம் – அங்கம் 03 மகாகவிக்கு எழுதிய பகிரங்க மடலுக்கு ஒரு எதிர்வினை ! மெல்பன் வாசகி சகுந்தலா கணநாதன் கனவில் வந்த பாரதி ! முருகபூபதி



மகாகவி பாரதியின் நினைவு நூற்றாண்டு இம்மாதம் (செப்டெம்பர்)  தொடங்கியதும், அவருக்கு நான்  எழுதிய பகிரங்க மடல் அக்கினிக்குஞ்சு உட்பட வேறும் சில ஊடகங்களில் வெளிவந்தது.

பாரதியாருடன் நீண்ட காலமாக நான் வாழ்ந்துகொண்டிருப்பதனால்,  தினம் தினம்  அவர் மனக்கண்ணில் தோன்றி வியப்பளித்துக்கொண்டே இருக்கிறார்.

முப்பத்தி ஒன்பது வயதிற்குள் அவர் புரிந்த சாதனை அளப்பரியது.  அது அவரால் எவ்வாறு   சாத்தியமானது ? என்ற கேள்வியை தொடர்ச்சியாக பாரதி பக்தர்களிடத்திலும் பாரதி இயல் ஆய்வாளர்களிடத்திலும் கேட்டுவருகின்றேன்.

ஒவ்வொருவரும் பல்வேறு விதமான கருத்துக்களை சொல்லிவருகின்றனர்.

இந்தப்பின்னணிகளுடன் இந்த நினைவு நூற்றாண்டில் பாரதிக்கு ஒரு பகிரங்க மடலை எழுதினேன். 

பாரதி ஏன் சிங்களத்தீவுனுக்கோர் பாலம் அமைப்போம் என்று எழுதினார்..? என்று இன்றும் தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் அவரை விமர்சித்துவருகின்றனர்.

பொறுத்துப்பொறுத்துப்பார்த்துவிட்டு, கடந்த 23 ஆம் திகதி வியாழக்கிழமை தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் மதுரையிலிருந்து இயங்கும் உலகத்தமிழ்ச்சங்கத்தின்  (ஐந்துநாள் தொடர்  கருத்தரங்கில் )   எனது இலங்கையில் பாரதி தலைப்பிலான உரை வந்தபோது விளக்கமளிக்க நேர்ந்தது.

இந்நிலையில் மெல்பன் வாசகியும் தமிழிலும் ஆங்கிலத்திலும் தொடர்ந்தும் இலக்கியப்பிரதிகள் எழுதிவருபவருமான  திருமதி சகுந்தலா கணநாதன் அவர்கள் எனக்கு அனுப்பிய எதிர்வினை மிகவும் சுவாரசியமாக அமைந்திருந்தது.

மெல்பன் கேசி தமிழ் மன்றத்தின் மூத்த பிரஜைகள் அமைப்பின் சார்பாக அதன் தலைவர் திரு. நவரத்தினம் வைத்திலிங்கம் அய்யா அவர்களின் ஏற்பாட்டில் சில மாதங்களுக்கு முன்னர்  மெல்பனில் அந்த  அமைப்பின் ஒன்று கூடலின்போது,  எனது இனிய நண்பர் திரு. சங்கர சுப்பிரமணியன் அவர்கள்,  நான் எழுதி 2019 இல் இலங்கையில் வெளியான எனது இலங்கையில் பாரதி ஆய்வு நூலை அறிமுகப்படுத்தி உரையாற்றினார்.

அந்த நிகழ்வில் குறிப்பிட்ட நூலைப்பெற்றுக்கொண்டு படித்த  இலக்கிய சகோதரி திருமதி சகுந்தலாவும் , அவரது கணவர் திரு. கணநாதனும்  இலங்கையில் பாரதியின் தாக்கம் குறித்த எனது தீவிர தேடலை சிலாகித்தார்கள்.

சில நாட்களுக்கு முன்னர் நாம் வாழும் மெல்பனிலும் சிறிய  நில நடுக்கம் வந்தது. எனது நூலக அறையிலிருந்து எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் 2010 ஆம் ஆண்டு வெளியிட்ட பூமராங் சிறப்பு மலர் புத்தக அடுக்கிலிருந்து நடுங்கிக்கொண்டு தரையில் விழுந்தது.

நானும் நில நடுக்கத்தால் சற்று தள்ளாடிவிட்டேன்.


நூலக அறையில்  நூல்களுக்கு  அருகே கம்பீரமாக படத்திலிருந்த பாரதியார், சிரித்துக்கொண்டு,   “ நானும் வீழ்வேனென நினைத்தாயோ..?  “ எனக்கேட்டதுபோலிருந்தது.

பூமராங்கின் இயல்பு உங்களுக்குத் தெரியும்தானே. அதனை வீசி எறிந்தால், மீண்டும் திரும்பிவரும்.  எமக்கு வந்த நில அதிர்வும் அவ்வாறு திரும்பி வருமோ என்ற கலக்கத்துடன், பாரதி தரிசனம் மூன்றாவது அங்கத்தில் சகுந்தலா கணநாதன் எழுதிய எதிர்வினையை இங்கே பதிவுசெய்கின்றேன்.

 வணக்கம் ஐயா, நீங்கள் மகா கவி பாரதியாருக்கு விடுத்த மடல் வாசித்தேன். உங்கள் நெருடல், உங்கள் கவலை நியாயமானவை எனத் தோன்றுகிறது.

ஆனாலும்,  பாரதியார்  அண்மையில் எனது கனவில் தோன்றினார். சமகாலத்தில்  உலகெங்கும் பாரதி நினைவு நூற்றாண்டு தொடர்பாக மெய்நிகரில் நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருப்பதனாலும், அதில் சிலவற்றில் நானும் இணைந்து உரைகள் கேட்டதனாலும் ,  அவரைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தமையினாலும் போலும் அவர்  எனது கனவில் வந்தார்.

 இந்த இருபத்தோராம் நூற்றாண்டில், அதுவும் இந்தக் கொரோனா தாக்கத்தில் மக்கள் படும் பாட்டை என்னவென்பது என்று  அவர்


கவலையுற்றார்.

மேலும் அவர் உங்களுக்கு ஒரு செய்தி அளிக்குமாறு அடியேனிடம் வேண்டிக்கொண்டார்.  உங்கள் பகிரங்க மடலை அவர் வாசித்துவிட்டார் போலும்.

அவர்காலத்து இந்தியா மாறிப்போய், இந்தியா இப்போது துண்டுதுண்டாகிற்றே என்று மனவருத்தம் அடைந்தார். உத்தர பிரதேஷ், மகாராஷ்ட்ரா, வங்காளம், தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ் நாடு என்று சிதறுண்டு போயிற்றே என்றார். சரி தமிழ் நாடு என்று ஒன்றுள்ளதே என்று மனதைத் தேற்றிக்கொள்வோமென்றால், அங்கும் தமிழன்னையை சிதைக்கிறார்களே என்று அங்கலாய்த்தார்.

அதன் பிறகு,   “ உங்கள் ஊர்க்காரன் ஒருவன்  கொழும்பில் இருந்து


சென்னைக்கு வந்தானாம். சென்னையிலிருந்து மாங்காட்டு அம்மன் கோவிலுக்குச் செல்ல எங்கே   பேருந்து நிலையம்  என்று தயவாய்  ஒருத்தனிடம் கேட்டானாம். 

அவன் தலையைச் சொரிந்து,  பேருந்தா? அது என்ன?  என்றானாம்.

 “ அதோ போகுதே அந்த வாகனம்.  அது தரிக்கும் நிலையத்திற்குத்தான்  பேருந்து நிலையம்.  அந்த  பேருந்து நிலையம் எங்கே?” என்றான் மீண்டும்  அந்த யாழ்ப்பாணத்தான்.

சென்னைக்காரன் பெருத்த சிரிப்புடன்,  ஏய்யா? சுத்த தமில்லே பஸ் ஸ்டாப் எங்கேன்னு கேக்கிறதுதானே? ”  என்றானாம்.

அந்த சுத்தத் தமிழ் பேசிய  யாழ்ப்பாணத்தானின் தந்தை, கொரோனா நோயினால் தாக்குண்டு,   சென்ற வருடம் இங்கு என் இருப்பிடத்துக்கு வந்து சேர்ந்தார்,” என்றார் பாரதியார்.

நான் கண்ட  கனவில் தோன்றி,   தமிழ் நாட்டில் தமிழுக்கு நடக்கிற அலங்கோலத்தை சொல்லி மனவருத்தப்பட்டார்.            வ.  உ சி, மகாத்மா காந்தி எல்லோருமாகச் சேர்ந்து  நாங்கள்  எழுப்பிய  போர் முழக்கம்,   காலதேவனால் மண்ணில் சரிந்து விட்டதோ?” என்று கண் கலங்கினார்.  

தன் கொள்ளுப் பேத்தி மீரா உங்களிடம்  கூறிய விடயத்துக்கு அவரே


அவளுக்காக  பரிந்துரைத்தார். இப்போ ஏதோ  வலை தளத்தில்  தமிழ் சொற்களுக்கு நிகரான ஆங்கிலச் சொற்கள் திடீர் திடீர் என்று தருகிறார்களாம். ஆகவே  நானும் அவற்றில் சிலதைப்  பார்த்தேன். திகைத்தேன். ஆனபோதிலும் என் கொள்ளுப்பேத்தியின் கஷ்டத்துக்கு காரணமும் அவையே என்றும், அவை நியாயமானவையே என்றும் பரிந்து பேசினார்.

அவள் தப்பில்லை. அவள் பெற்றோர் அமெரிக்காவுக்கு  அந்தக் காலத்தில் புலம் பெயர்ந்திருக்கிறார்கள். அவர்கள் தம் குழந்தையுடன் தமிழில் வீட்டில் பேசியிருக்கவேண்டும். தப்பு அவள் பெற்றோரிடம்தான்.  அவளிடம் அல்ல. தன்னால் இயன்றளவு என்னைப்பற்றி ஆங்கிலத்தில் வாசித்து ரசிக்கிறாள். அதுவே எனக்கு நிம்மதி அளிக்கிறது. இதெல்லாம் தமிழர் புலம் பெயர்ந்து வேறு நாடுகளுக்கு சென்ற விளைவு…...ஏதோ ஆங்கிலத்தில் Globalisation -  உலகமயமாக்கல் என்றாங்கள்.

தமிழன் பிழைத்துக்கொள்ள

பிழை mistake error defect flaw

பிழை survive sustain

பிழைத்துக்கொள் survive

நிலைத்து இருத்தல் survival

தமிழ் நிலைத்து இருத்தல்

ஆனால்,  முதல்லே தமிழன் பிழைத்துக்கொள்ள வேண்டியிருக்கு. இதுவே தமிழ் மொழியின் நிலைப்பாடு இன்றைய காலத்தில். எனக்கு தலை சுத்துது. நல்ல வேளை மத யானை இடித்த காரணத்தால் நான் வேளைக்கே இங்கு வந்திட்டேன். இவ்வாறு பாரதியார் கனவில் வந்து எனக்குச் சொன்னார்.

நாட்டுக்கூத்து,  கதாப்பிரசாங்கம் எல்லாம் மலையேறிவிட்டது என்று கடந்த தசாப்தங்களில் பாரதியார்  இருப்பிடம் சேர்ந்த எம் தமிழினத்தவர் ஏற்கனவே  அவருக்கு அறியத்தந்திருக்கிறார்கள் என்று சொல்லியும்  மனவருத்தப்பட்டார். தன்னைத் தேற்றிக்கொண்டு,  மீண்டும் உங்கள் மடல் பற்றிய விடயத்துக்கு வந்தார்.

சகுந்தலா, அந்த முருகபூபதிக்கு  சொல்லு.  அவசரப்பட்டு என்னிடம் வந்திடவேண்டாம் என்று. அவன் தமிழுக்கும் தமிழருக்கும் நிறைய பாடுபடுகிறான். தினமும் தமிழருக்காக  எழுதித் தள்ளுறான். அவன் ஞாபகசக்தியை  என்னென்பது என்று நானே வியக்கின்றேன்.

நான் ஏதோ கவி எழுதினேன் அந்தக் காலத்தில்.  ஆனால்  இவனோ.... ஏதோ ஆங்கிலத்தில் சொல்கிறார்களே  Encyclopaedia என்று. விடயம்  எல்லாம்  தெரிந்த  அகராதி  மாதிரி  அவனது தலைக்குள்ளே  இறைவன் Encyclopaedia  செருகியிருக்கிறார்  என்றுதான்  எனக்குத்  தோன்றுது.  

அவனைப்பற்றி  நிறைய  கவி  பாடவேண்டும்  போன்று தோன்றும்   எனக்கு.  ஆனா,   இங்கே  எல்லாம்  நிசப்தமாயிருக்கு.  என்  குரல்  எனக்கே  கேட்குமோ  என்று  சில  நேரங்களில்  நான்  ஐயுறுவதுண்டு.  அவனுக்கு இப்போதான் எழுபது வயது ஆகியிருக்கு.  அவன் நூறாண்டு காலம் வாழ வேண்டுமென்று  வாழ்த்துகிறேன்  என்று அவனிடம் நான் சொன்னதாக சொல் சகுந்தலா.  

“ அவன் ஒவ்வொரு நாளும் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளுகிறான், ஒவ்வொரு வாரமும் வளர்ந்து வரும் எழுத்தாளரை ஊக்குவிக்கிறான். , மாசத்துக்கு ஒருமுறையாவது யாரோ காலமாகிவிட்டார் என்று நினைவஞ்சலிக்குறிப்பு எழுதுறான்.  நான் மொழி அடிப்படையில் சொன்ன  சிங்களத் தீவிலேயே  தமிழர், இஸ்லாமியர், சிங்களவர் எல்லோரையும் இணைக்க  பாலம் அமைக்கிறான்.

அதுமட்டுமா?  அவன்  எழுபத்தெட்டே பக்கங்களில், நடந்தாய் வாழி களனி கங்கை என்ற  நூலை  எழுதியுள்ள  செய்தியும் அண்மையில்   எனக்கு  கிடைத்துள்ளது.

அந்த நதி போன்று தமிழுக்கு, தமிழருக்கு,  அவன் ஆற்றும் தொண்டு வற்றாது இருக்கவேண்டும் என்று அவனை  வாழ்த்துகிறேன் என்று சொல்லு சகுந்தலா.

 

அந்தப்புத்தகத்தின் முன்னுரையில்   “ மலையிலிருந்து ஊற்றெடுத்து, காடு, நகரம், கடந்து வரும் போது கரையோரத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் சம்பவங்களை கண்டும் காணாமலும் தன்பாட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் எழிலையும் அதன் கரைகள் சொன்ன கதைகளையும் எழுதினேன்.  “   என சொல்லி வைத்துள்ளான்  என்றும் நான் அறிந்தேன். அவனது  படைப்புகளை  தினம் தினம் அக்கினிகுஞ்சுவிலும், வாரா வாரம் தமிழ்முரசிலும் கனடா பதிவுகளிலும் எங்கள் தமிழ்நாட்டின் திண்ணையிலும் கண்டுகளிக்கத் தவறேன். நான் பெருமைப்படுறேன். புதிய எழுத்தாளரை ஊக்குவிக்கிறது  மட்டுமல்ல, அந்தப் பதிவுகளுக்கு ஏற்ற படங்களையும் சொருகி கட்டுரை கதைகளுக்கு மெருகூட்டுறான்.

 

சகுந்தலா,  உனக்கு அவனது இல்லத்தரசியை தெரியுமா..? தெரிந்தால்,   அவனுக்கு திருஷ்டி சுத்தி கழிக்கச் சொல்லு.  நிச்சயமாக என் கண்திருஷ்டி  படாது.  

இதனையெல்லாம் அவனது கனவில் வந்து சொல்லத்தான் முயற்சிக்கின்றேன். முடியவில்லை. இந்தக்காலத்தில் நேரம் காலம் தெரியாமல் உறங்கவேண்டிய நடுச்சாமத்திலும் மெய்நிகரில் தனது கண்களை  மேய்ந்துகொண்டிருக்கிறான்.

உறங்கினால்தானே கனவு வரும்.   

இவ்வளவு விடயங்களையும் பாரதியார் எனது  கனவில் தோன்றி,   தான் சொன்னவற்றை எல்லாம் உங்களிடம் உடனே ஒப்படைச்சிடு சகுந்தலா,”  என்று உரைத்துவிட்டு,    திடீரென்று மறைந்தார். எனக்கு அதற்கப்புறம் தூக்கம் வரலை. ஆகவே அவர்  கனவில் வந்து சொன்னதை உங்களுக்கு தெரிவிக்கிறேன்.

இப்படிக்கு,

அன்புடன்

சகுந்தலா

 ------0-------

No comments: