பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் ! அவதானி

“ பேய் அரசு செய்தால் பிணம் தின்னும்  சாத்திரங்கள் !  “


இது இற்றைக்கு நூறு வருடங்களுக்கு முன்னர் மறைந்தாலும்  இறவாப்புகழுடன் வாழும் மகாகவி பாரதி, தான் எழுதிய பாஞ்சாலி சபதம் காவியத்தில், அவளது துகிலுறியும் படலம் வரும்போது எழுதப்பட்ட அர்த்தமுள்ள வரிகள்.

இன்றும் இந்த வரிகள் பொருந்தத்தக்கதாக பேய் அரசுகள் இயங்குகின்றன.

அதிகாரத்திலிருப்பவர்கள்   சொற்படிதான்  சட்ட அறிஞர்களும்  நீதித்துறையும் நடக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுவிட்டது.

மரண தண்டனைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு. 

நீதிமன்றத்தால் குற்றவாளியாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிருந்தவரை  மீட்டு,  பொது மன்னிப்பு


வழங்கி , சிறை மீண்ட செம்மலாக குறிப்பிட்ட நபர் வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக நியமனமாகியுள்ளார்.

தென்மராட்சியில் சில மனித உயிர்களை கொன்றழித்து மலசலகூடக்குழியில் போட்டு மூடி வெளியுலகத்தின் கண்களை மறைத்த  இராணுவ அதிகாரியை சட்டத்தின் முன்னிலையில் நிறுத்தியபோதும்,  மரண தண்டனைதான் விதிக்கப்பட்டது. குறிப்பிட்ட நபரும் சமகால குடும்ப ஆட்சியில் பொது மன்னிப்பில் வெளியே வந்துவிட்டார்.

அவருக்கும் நிறுத்திவைக்கப்பட்ட அரசகொடுப்பனவுகள் அனைத்தும் கிடைத்திருக்கும் !.

அதே சமயம் பல அப்பாவித்தமிழ் – சிங்கள – முஸ்லிம் அரசியல் கைதிகள் இன்னமும் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் சிறைச்சாலைகள் மறு சீரமைப்புக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் ஒருவர் மதுபோதையில் தனது சகாக்களையும் அழைத்துக்கொண்டு இரண்டு சிறைச்சாலைகளுக்குள் அத்துமீறி பிரவேசித்து தனது கைத்துப்பாக்கியை காண்பித்து தமிழ் கைதிகளை முழந்தாளிட வைத்து வெருட்டியிருக்கிறார்.

சிறைக்காவலர்கள் தடுத்தமையால், அங்கு துப்பாக்கிப்பிரயோகம் நடக்கவில்லை. அவ்வாறு நடந்திருந்தாலும், இலங்கை அதிபர் அந்த குற்றவாளிக்கு பொது மன்னிப்பு வழங்கியிருப்பார்.

ஏற்கனவே இரண்டு முக்கிய நபர்கள் கொலைக்குற்றத்தின் பேரில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்து, சமகால அதிபரினால் பொது மன்னிப்பின் கீழ் வெளியே வந்து அனைத்து செளகரியங்களையும் அனுபவித்துவருகின்றனர்.


இந்தத் தவறான முன்னுதாரணங்கள்தான், பொறுப்பு  வாய்ந்த பதவிக்காக மக்களினால் வாக்குகள் மூலம்  தெரிவாகி நாடாளுமன்றம் சென்று இராஜாங்க அமைச்சராகவும் பதவியேற்றிருந்த ஒருவருக்கு அசட்டுத்தனமான தைரியத்தை வழங்கியிருக்கிறது.

தம்மிடம் அதிகாரம் இருந்தால், எதனையும் செய்யலாம் என்ற நிலைக்கு ஆட்சியின் பங்குதாரர்கள் மாறிவிடும்போது,  மகா கவி பாரதி சொன்ன கூற்றுத்தான்  நினைவுக்கு வருகிறது.

இற்றைக்கு 38 வருடங்களுக்கு முன்னர் 1983 ஆம் ஆண்டு கொழும்பு வெலிக்கடை சிறையில் அடுத்தடுத்து நடந்த தாக்குதல் சம்பவங்களில் கொல்லப்பட்ட அரசியல் கைதிகள் தொடர்பான ஆவணம் இன்றளவும் பேசப்படுகிறது.  கறுப்பு ஜூலை வரும் ஒவ்வொரு ஆண்டும் அந்த கொடூரச்சம்பவம்  ஊடகங்களில் பேசப்படுகிறது.

அந்த அனுபவம் எத்தகையது என்பது பற்றி, இன்றைய அரசில் அங்கம் வகிக்கும் மாண்பு மிகு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் நன்கு தெரியும்.

ஒரு இராஜாங்க அமைச்சர் கைத்துப்பாக்கியுடன் சிறைச்சாலை


வளாகத்துள் நூழைந்து,  அங்கிருக்கும் தமிழ்க்கைதிகளின் தலையில் அதனை வைத்து அச்சுறுத்தும் அளவுக்கு சென்றிருக்கிறார்.

அந்தக்கணப்பொழுதில் குறிப்பிட்ட கைதிகளின் மன நிலை எவ்வாறிருந்திருக்கும் என்பதை அறியதவர் அல்ல, இன்றைய தமிழ் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

விசாரணையின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்கவேண்டும் என்ற குரல் வெளியே தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கிறது.

மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச மாநாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. அதற்கு ஆட்சியின் அதிபரும் சென்றுவருகிறார். இந்தப்பின்னணியில் அவரது அரசின் இராஜாங்க அமைச்சரான லொகான் ரத்வத்தையின் அராஜக செயற்பாட்டுக்கு அரச தரப்பு வருத்தம்  தெரிவித்து இந்த பிரச்சினையிலிருந்து கடந்து செல்லப்பார்க்கிறது.

சிறைச்சாலைக்குள் போதை வஸ்து எடுத்துச்செல்லப்படுவது எத்தகைய பாரிய குற்றமோ, அவ்வாறே தனிநபர் ஒருவர் துப்பாக்கியுடன் அங்கே பிரவேசிப்பதுமாகும்.

இதற்கு என்ன தண்டனை..? அவரது இராஜாங்க  அமைச்சர் பதவியை பறிப்பது மாத்திரம் தானா..? அவ்வாறெனில் அது ஒருவகையில் கண்துடைப்பு முயற்சிதான் !

குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினரை நீதியின் முன்னால் நிறுத்தி தகுந்த தண்டனை பெற்றுக்கொடுக்கவேண்டியது அரசின் கடமை. அத்துடன் அன்னாரை  நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்குவதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுக்கத்தக்கதாக நாடாளுமன்றத்தின்  நடவடிக்கைகள் சார்ந்த சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவரப்படல்வேண்டும்.

இதுவரையில் குறிப்பிட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு எதிராக எவரும் வழக்குத்தாக்கல் செய்ய முன்வரவில்லை !  அதற்கான காரணமும் தெரியவில்லை.

இன்று சிறைச்சாலைக்குள் தனது கைத்துப்பாக்கியுடன் சென்றிருப்பவர், நாளை ஒரு நாள் நாடாளுமன்றத்திற்குள்ளும் அதனை எடுத்துவரமாட்டார் என்பது என்ன நிச்சயம்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, தற்பொழுது சிறைவாசம் அனுபவித்து வருகிறார். அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறாயின் புனர்வாழ்வுக்காக சிறைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அரசு என்ன செய்திருக்கவேண்டும்..? சிறைச்சாலைகள்  தொடர்பாக அமைச்சுப்பதவிகளுக்கு வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தேசியப்பட்டியில் ஊடாக தெரிவாகின்றவர்களுக்கும்  ஒரு காலகட்டத்தில் இந்தியா திகார் சிறைச்சாலை அதிகாரியாக பதவியிலிருந்த கிரண்பேடியின் நான் துணிந்தவள் என்ற  வாழ்க்கைச்சரித நூலை பாட நூலாக்கவேண்டும்.

இந்த நூல் ஆங்கிலமொழியிலும் கிடைக்கிறது.  நாடாளுமன்ற நூல் நிலையத்தில் இதுபோன்ற நூல்கள் இடம்பெற்று, காலத்துக்கு காலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சிகளை சபாநாயகரே முன்னின்று நடத்தவேண்டும்.

ஒருவர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி வரும் பட்சத்தில், அவர்களின் கல்வி, அறிவு சமூக விழுமியம் சார்ந்த  பண்பாட்டு  தகுதிகள் தொடர்பாக நேர்முகத்தேர்வு நடத்தும் வகையில் சட்டங்கள் வரையப்படல் வேண்டும்.

நல்லதோர் சமுதாயத்தை உருவாக்கும் பெரும் பொறுப்பு, மக்களிடம் மாத்திரம் தங்கியிருப்பதில்லை. அரசினை நடத்திவரும் ஆட்சியாளர்களுக்கும்  அமைச்சர் பிரதானிகளுக்கும் இருத்தல் வேண்டும்.

இல்லையேல் பேய்களின் அரசாட்சியாகிவிடும். நீதி சாத்திர நூல்களை பிணம் தின்னும் காலம் கனிந்துவிடும் !

---0---

 

 

 

No comments: