'ஆறாம் நிலம்' திரைக்காவியம் கொண்டாடப்பட வேண்டியது - சீமான் வாழ்த்துச் செய்தி25/09/2021 ஈழ நிலத்தின் வலியை மொழியெடுத்து திரையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் “ஆறாம் நிலம்” திரைக்காவியம் பெரும் வெற்றியடைய வேண்டுமென வாழ்த்தி, உலகெங்கும் வாழும் தமிழ்ச்சொந்தங்கள் இத்திரைப்படத்தைக் கொண்டாட வேண்டுமென தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'ஐ.பி.சி. தமிழ் தயாரிப்பில், தம்பி ஆனந்த ரமணனின் நேர்த்தியான இயக்கத்தில் வெளி வந்துள்ள ‘ஆறாம் நிலம்’ திரைப்படத்தைப் பார்த்தேன்.

ஈழ மண்ணில் சிங்கள இனவெறி அரசால் நிகழ்த்தப்பட்ட பாரிய இனப்படுகொலைக்குப் பிறகு, ஆறாத ரணமாய் தமிழர்களின் வாழ்வில் தொக்கி நிற்கும் கொடும் வலிகளையும், ஈழச்சொந்தங்களின் கடினமான வாழ்க்கைப்போராட்டங்களையும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி காட்சிப்படுத்தியிருக்கிறார் தம்பி ஆனந்த ரமணன்.

தமிழீழ விடுதலைப்புலிகள் நாடுகேட்டுப் போராடினார்கள் என்பதே மேலோட்டமான பார்வை. அவர்கள் நாடுகேட்டுப் போராடவில்லை, தாங்கள் அடைந்து நிர்வகித்து வந்த தமிழீழ சோசலிச நாட்டுக்கு சர்வதேச அங்கீகாரத்தைக் கேட்டுத்தான் போராடினார்கள் என்பதே பேருண்மையாகும். அந்நாட்டுக்கான எல்லையைக் காக்கவே புலிகள் களத்தில் நின்றார்கள்.

இவ்வாறு தன்னில் தாங்கி நிற்கும் தன்னிறைவான ஒரு நாட்டைக் கட்டியெழுப்பி உலகத்தின் சொர்க்கத்தை தமிழீழ மண்ணில் படைத்திருந்தார் தலைவர் பிரபாகரன் அவர்கள். அத்தகைய உன்னதத் திருநாடு அரச பயங்கரவாதத்தின் மூலம் அழித்தொழிக்கப்பட்டு, தமிழர்கள் தாய் நிலத்திலேயே அடிமையாக வாழ்கிற இழிநிலை உலகில் எந்த இனத்திற்கும் நடந்திரக்கூடாப் பெருங்கொடுமையாகும்.

தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட பேரவலத்தையும், தமிழர்களுக்கு விளைந்திட்டப் பெருந்துயரத்தையும் இத்திரைப்படத்தின் வாயிலாக உலகுக்குச் சொல்லியிருக்கிறார் தம்பி ஆனந்த ரமணன்.

போர்ச்சூழலில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், உறவுகள் மீண்டும் வருவார்கள் என ஏங்கித் தவிப்பது, அவர்களுக்காகக் காத்திருப்பது, பச்சிளம்பிள்ளைகள் தன் தந்தையரது வருகையை எதிர்நோக்குவது, 12 ஆண்டுகளைக் கடந்த பிறகும் அவர்களைத் தேடும் முயற்சியில் தாங்கள் கடுமையாக உழைத்துச் சேமித்த பணத்தைப் பெருமளவு செலவழித்துத் தேடி அலைவதிலுமுள்ள வலியை எனக் காண்பவரது உள்ளங்களுக்கு எளிதாக உணர்வுகளைக் கடத்துகிறது இத்திரைப்படம்.

வாழ்வாதாரம் முற்றாக அழிக்கப்பட்டப்பிறகு மீள்வாழ்வுக்கும், துயர்துடைப்பிற்கும் வழியின்றி வறுமையின் பிடியில் உழலும் தமிழர்களின் பொருளாதாரச்சூழலையும், அதனால் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களின் ஊடாகப் பின்னப்பட்ட கதைக்களத்தின் மூலம் இந்த உலகத்திற்கு உணர்த்த விழைந்த உண்மையை சமரசமின்றி எடுத்துரைத்துள்ள இத்திரைப்படம் கொண்டாடத்தக்கது.

மக்களின் வலியை அப்படியே திரைமொழியில் பதிவுசெய்து, அந்த உணர்வை மக்களுக்குக் கடத்துவது ஒரு பேராற்றல். அதனைத் திறம்படக் கையாண்டிருக்கும் இத்திரைப்படத்தின் இயக்குநருக்கு எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும்!

இத்திரைப்படம் மிகச்சிறந்த படைப்பாக வெளிவர ஊக்கம் தந்து உதவிய தயாரிப்பாளர், இயல்பாக நடித்துள்ள திரைக்கலைஞர்கள், உண்மைக்கு மிகாத காட்சிகளைக் கண்முன்னே நிறுத்தியிருக்கும் ஒளிப்பதிவு, காட்சியமைப்புகளில் இழையோடும் வலியை உணரவைக்கும் வகையில் அமைந்துள்ள இசை எனப் படத்தின் வெற்றிக்கு உழைத்திட்ட அனைத்து கலைஞர்களுக்கும் எனது உள்ளம் நிறைந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவிக்கிறேன்' - என்றுள்ளது.  

நன்றி   

No comments: