நனவிடை தோய்தல் : அழிந்த கோலங்கள் கிறிஸ்டி நல்லரெத்தினம் - மெல்பன்


பாண்டிருப்பு ஸ்ரீ திரெளபதி அம்மன் கோயில் அருகில்தான் எங்கள் வீடு. வைகாசியில்தான் கோயில் திருவிழா. இங்கு தீ மிதிப்பு அதி விஷேசம். இலங்கையிலேயே மிக நீளமான தீ மிதிப்பு திடல் இதுதானாம்!

பதினெட்டு  நாட்கள் நடைபெற்ற பாரதப்போரைக்
குறிக்கும் வகையில் பதினெட்டு நாட்கள் திருவிழா நடைபெறும்.

ஆலய வருடாந்த மஹோற்சவம் மாலை கடல் குளித்தலுடன் தொடங்கி திருக்கதவு திறத்தலுடன் முறையாக ஆரம்பமாகும்.
கோவிலடி மட்டுமல்ல அதைச் சுற்றியுள்ள வீடுகளிலும் - அவை தென்னை ஓலை குடிலாய்  இருந்தாலும் - ஒரு மாத வாடகைக்கு சிறு வர்த்தகர்கள் குடியேறி தேன்குழல், 'சறுபத்து', பலகாரம் என பல வகை பண்டங்கள்  தயாரித்து கோவிலடியில் கடை விரிக்க ஆயத்தமாவார்கள். வடக்கில் இருந்து வரும் வர்த்தகர்களால் தோலகட்டி  நெல்லி ரசம் காய்ச்சி போத்தலில் அடைத்து விற்பதும் ஆரம்பமாகும்.


பொலன்னறுவையில் இருந்து அலுமினியப் பாத்திரங்கள் விற்பனை

செய்வோரும் இரண்டு மூன்று லொறிகளில் வந்து கடை நிரப்புவார். அவர்கள் சந்தைப்படுத்தும் இரு கொழுக்கிகள் வைத்த பாரிய செப்பு கிடாரங்கள் வேறு எங்குதான் கிடைக்குமாம்? அவற்றில் ஒன்றை சுமப்பதற்கே இருவர் தேவை!


ஐம்பது பேர்களுக்கு அதில் சோறாக்க முடியும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அந்நாட்களில் நெல் வயலில் 'சூடடிக்கும்'  போது இரவு சாப்பாட்டிற்கு போடியாரின் வீட்டில் சமையலுக்கு சோறு இக்கிடாரங்களிலேயே தயார் செய்யப்படும். கறி சமைக்கும் பெரிய 'தாச்சிகளையும்'  இவர்களிடம் வாங்கலாம்.

அவர்கள் பேரினத்தை சேர்ந்தவர்களானாலும் அவர்களுக்கும் இங்கு இடமுண்டு. பேரினவாதம் எனும் சொல்லே ஜனனிக்காத நாட்கள் அவை! 1965 ஆம் ஆண்டல்லவா?
மசூர் மெளலானா கல்முனையில் தமிழரசுக்கட்சி வேட்பாளராய் தேர்தலில்  நின்ற காலங்கள்!

கடைகள் மட்டுமல்ல...... கலைகளுக்கும் இங்கு இடமுண்டு!
விடிய விடிய நடைபெறும் நாட்டுக் கூத்தும் சூரன் போரும் இங்கு பிரபலம்.
இறுதி மூன்று தினங்களும் முறையே அருச்சுனன் பாசுபதம் பெறுதல் மற்றும் தீமிதிப்பு என்பன நடந்து கோவில் திருவிழா முடிவுக்கு வரும்.



தீ மிதிப்பிற்கு லொறி லொறியாக மரங்கள் வந்து இறங்கும். அத்தனையும் 'நேத்திக்கடனுக்காய்' பக்தர்கள் கொடுத்தவை. மூன்று நாட்களுக்கு முன்பே மரங்கள் விறகுகளாகி தீ மிதிப்பிற்கான ஏரித்தல் தொடங்கி விடும்.  தீயின் அகோரம் தாங்காமல் குடத்தில் நீர் நிரம்பி தலையில் உற்றி உடல் நனைத்து எரியும் தீக்கு அருகில் சென்று பாரிய மரக்கட்டைகளை குழிக்குள் எறியும் காட்சி மனதை விட்டு அகலாதது.

சரி, சொல்லவந்தது இதுவல்லவே.

கதாநாயகர்களை அறிமுகம் செய்வோமா?


கறல் பிடித்த சைக்கிளின் பின்னால் கரியரில் கட்டிய "சன்லைட் " மரப்பெட்டி, அதில் தொங்கும் தராசு. பெட்டிக்குள் விதவிதமாய் விழி பிதுங்க மினுங்கும் மீன்கள். மூலையில் மீன் செதிலில் தோய்ந்த முதிரை மரக்கட்டை துண்டொன்றும் கூரான 'அருவாக் கத்தி'யும்.

எம் நாயகர்கள் இருவரும் இஸ்லாமியர்கள்.  இவர்கள் உண்மைப்

பெயர்கள் ஊராருக்கும் தெரியாது..... அதை அறிந்து கொள்ளும் ஆவலும் அவர்களுக்கு கிடையாது. 'மீன்காறனின்'  ரிஷிமூலம் தேடுவானேன் என்ற அலட்சியம் வேறு.  இவர்களில் வயதில் மூத்தவர்தான் "பெரும் தொண்டை ". குழிவிழுந்த கண்கள், குறும்தாடி, காலம் கலப்பை போட்டு உழுத முகச்சுருக்கங்கள். மற்றவருக்கு வாலிபமுறுக்கும் மஸ்தான உடலும் சொந்தம். சிரித்தால் அவர் தங்கப் பல் ஒன்று மின்னி மறையும். நீங்கள் நினைத்தது சரிதான். பெயர் : "தங்கப் பல்லன்" .

பெரும் தொண்டையின் கூவல் நாலு ஒழுங்கை தாண்டி கேட்கும். அவருக்கு ஊரார் பெயர் வைத்த ரகசியம் இதுதான்.
" சுறா, அறுக்குளா, பாரை, கீரி, கணவா....." என பட்டியல் நீளும்.
சரி, சுறா எல்லாம் விற்றாகிவிட்டது என வைத்துக்கொள்ளுங்கள். இவர் கூவலில் அதுவும் வந்து குந்திக் கொள்ளும். இல்லாததையும் இருப்பதாய் காட்டுவதுதானே விளம்பரம்!

ஊர் வம்புகள் பேசி, பல கிசு கிசுக்கள் பகிர்ந்து இவர்கள் ஊர் வலம் வருவதே ஒரு அழகுதான். ஆனால் இருவருக்கும் ஒரு புரிந்துணர்தல்: ஒரே நேரத்தில் ஒரே ஒழுங்கையை இருவரும் ஆக்கிரமிப்பதில்லை. அப்படி ஒரு "பிசினஸ்" புரிந்துணர்வு.

ஒழுங்கைகளுக்குள் நுழையும் முன் சந்தியில் வைத்து மீன்களை மீள அடுக்கி சாராயப்போத்தலில் இருக்கும் தண்ணிரை மீன்கள் மேல்  தெளித்து பின்னர் மிகக் கவனமாய் பொட்டலமாய் கட்டி வைத்திருக்கும்  ஈர கடல் மண்ணை மெதுவாய் மீள்கள் மேல் தூவி அவற்றை 'உயிர்ப்பிக்கும்' அலுவல்கள் நடந்தேறும்.
இது மீன்களின் நிறை உயர்த்தும் யுக்தி என்று கனகம் அக்காவுக்கு தெரியும். "மண்ண வளிச்சிப் போட்டு நிறுத்தாத்தான் வாங்குவன்"  என அடம் பிடிப்பவர்களுள் அவளும் ஒருத்தி.


தங்கப் பல்லன் கொஞ்சம் குளப்படி. புரிகிறதா?

வேலிச் சண்டை வேளைகளில் இவரின் பெயரும் வீதிக்கு வரும். "அடியே, நீ தங்கப்பல்லனேடா....... " என்பாள் சண்டைக்கோழி ஒருத்தி. கூடி வேடிக்கை பார்த்த கூட்டம் தெருச்சண்டை நாற்றமெடுப்பதை உணர்ந்து குழந்தைகளை இழுத்துக் கொண்டு வீட்டினுள் மறைவார்கள். புதுமைப்பித்தன் சொன்ன 'பொன்னகரம்'  இதுதானோ?

தங்கப் பல்லனுக்கும் இந்தச் சேதி எட்டியிருக்கும். எனவே சில வாரங்களுக்கு அந்த ஒழுங்கையை தவிர்ப்பார். அப்போது முழு பிசினசும் பெரும்தொண்டைக்குத் தான்.

மாலையில் ஊர்க் கதை பகிரும் வேளையில் இவர்கள் பெயர்களும் அடிபடும். "இண்டைக்கு பெரும் தொண்டையிற்ற வாங்கின கீரி சோக்கா இருந்தது " என்பாள் சீனியம்மா. " எண்ட சுறா பச்சத் தண்ணி மாதிரி " என அங்கலாய்ப்பாள் சிவகுமாரி.

சமுதாய வீதியிலே சருகாய் உலர்ந்து மறைந்த இந்த மனிதர்கள் மீண்டும் தோன்றுவாரோ?

இனங்கள் சாதியாலும் சமயங்களாலும் பிரிந்து கிடக்கும் இந் நாட்களில் இவர்கள் போட்ட கோலங்கள் அழிந்து மறைந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லையே!


-----0---

No comments: