உலகச் செய்திகள்

 ஆக்கஸ்: சர்ச்சைக்கு தீர்வுகாண அமெரிக்கா - பிரான்ஸ் முயற்சி

ஆக்கஸ் ஒப்பந்தத்திற்கு வடகொரியா எச்சரிக்கை

இஸ்ரேல் ஏவுகணை பாதுகாப்புக்கு அமெரிக்கா ஒரு பில். டொலர் நிதி

கொரிய போரை தீர்ப்பதற்கு வட கொரியா நிபந்தனைகள்

ஹைட்டி குடியேறிகளை திருப்பி அனுப்பிய அமெரிக்கா ஆக்கஸ்: சர்ச்சைக்கு தீர்வுகாண அமெரிக்கா - பிரான்ஸ் முயற்சி

அவுஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகியவற்றுக்கு இடையிலான ஆக்கஸ் பாதுகாப்பு உடன்படிக்கை குறித்து எழுந்த சர்ச்சைக்குத் தீர்வுகாண, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா முயற்சித்து வருகின்றன.

முன்னதாக, நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டித்தரும்படி, அவுஸ்திரேலியா பிரான்ஸுடன் 66 பில்லியன் டொலர் மதிப்பிலான ஒப்பந்தம் செய்திருந்தது.

அதை இரத்து செய்த அவுஸ்திரேலியா பின்னர் அமெரிக்காவுடனும் பிரிட்டனுடனும் அணுவாற்றல் நீர்மூழ்க்கிக் கப்பல்களை வாங்க ஒப்பந்தம் செய்தது.

ஆக்கஸ் உடன்பாட்டைப் பற்றிய பொது அறிவிப்பு வெளிவருவதற்குச் சில மணி நேரத்திற்கு முன்னரே, அதைப் பற்றி தெரிந்துகொண்டதாக பாரிஸ் கூறியது. இந்த ஒப்பந்தம் முதுகில் குத்தும் செயல் என்று பிரான்ஸ் சாடியது.

இந்நிலையில் அரை மணி நேர தொலைபேசி உரையாடலுக்குப் பின்னர், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மாக்ரோனும் கூட்டு அறிக்கையை வெளியிட்டனர்.

இரு நட்பு நாடுகளுக்கும் இடையே வெளிப்படையான கலந்துரையாடல்கள் இருந்திருந்தால், இந்த விவகாரத்தைச் சிறந்த முறையில் கையாண்டிருக்கலாம் என்று அறிக்கை குறிப்பிட்டது.

இரு தலைவர்களும் அடுத்த மாதம் ஐரோப்பாவில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். பிரான்ஸின் தூதரை வொஷிங்டனுக்குத் திருப்பியனுப்பவும் மாக்ரோன் ஒப்புக்கொண்டுள்ளார். எனினும் திரும்ப அழைத்துக் கொள்ளப்பட்ட அவுஸ்திரேலியாவுக்கான பிரான்ஸ் தூதுவரை திரும்ப அனுப்புவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவின் செயற்பாடுகளின் முக்கியத்துவத்தை ஜோ பைடன் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.    நன்றி தினகரன் 
ஆக்கஸ் ஒப்பந்தத்திற்கு வடகொரியா எச்சரிக்கை

அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் செய்து கொண்டிருக்கும் ஆக்கஸ் என்ற பாதுகாப்பு உடன்பாட்டால் அணு ஆயுதப் போட்டி உருவாகும் என வட கொரியா எச்சரித்துள்ளது.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்புச் சமநிலையை ஆக்கஸ் ஒப்பந்தம் குலைக்கும் என்று வட கொரிய வெளியுறவு அமைச்சு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

கடந்த வாரம் இரண்டு வகையான ஏவுகணைகளை வட கொரியா சோதனை செய்தது. அவற்றில் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் வகையிலான க்ரூஸ் ரக ஏவுகணையும் அடங்கும்.

ஆக்கஸ் உடன்பாட்டின்படி அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கித் தொழில்நுட்பங்களை அமெரிக்காவும் பிரிட்டனும் அவுஸ்திரேலியாவுக்கு வழங்க இருக்கின்றன

அணுவாற்றல் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான உடன்படிக்கை, தனது பாதுகாப்புக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அமைந்தால், தகுந்த பதிலடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வட கொரியா எச்சரித்தது.

இது சீனாவை ஒடுக்குவதற்கான நடவடிக்கை என்று பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகிறார்கள். ஏற்கனவே இந்த உடன்பாட்டுக்கு சீனா கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.   நன்றி தினகரன் 

இஸ்ரேல் ஏவுகணை பாதுகாப்புக்கு அமெரிக்கா ஒரு பில். டொலர் நிதி

America Alloacate 1 billion USD for Israel Rocket Security

இஸ்ரேலின் ஏவுகணை பாதுகாப்பு முறையான அயர்ன் டோம் அமைப்புக்கு மேலதிகமாக ஒரு பில்லியன் டொலரை வழங்குவதற்கு அமெரிக்க பாராளுமன்றத்தில் ஒப்புதல் கிடைத்துள்ளது.

இந்த பாதுகாப்பு முறைக்கு அமெரிக்காவின் ஆதரவை கணிசமான அளவு அதிகரிக்கும் வகையில், கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற வாக்கெடுப்பில் 420 வாக்குகளால் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக ஒன்பது வாக்குகளே கிடைத்தன.

இந்த சட்டமூலம் தற்போது செனட் சபைக்கு அனுப்பப்பட்டிருப்பதோடு அது அங்கு இலகுவாக நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இதற்கு ஒப்புதல் அளித்து ஜனாதிபதி ஜோ பைடன் கையெடுத்திட வேண்டும்.

எனினும் இஸ்ரேல் மீது அமெரிக்கா அளிக்கும் ஆதரவு தொடர்பில் அமெரிக்க பாராளுமன்றத்தில் விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன

2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி பராக் ஒபாமா கையெழுத்திட்ட பத்து ஆண்டு புரிந்துணர்வு உடன்படிக்கை மூலம் இஸ்ரேல் ஆண்டுதோறு 3.8 பில்லியன் டொலர் அமெரிக்க இராணுவ உதவியை பெறுகிறது.

அதில் 500 மில்லியன் ஏவுகணை பாதுகாப்பு முறைக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.      நன்றி தினகரன் 
கொரிய போரை தீர்ப்பதற்கு வட கொரியா நிபந்தனைகள்

தென் கொரியாவுடன் பேச்சு நடத்தி, போரை அதிகாரப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதாக வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன்னின் சகோதரி கிம் யோ-ஜொங் கூறியுள்ளார்.

கொரிய தீபகற்பத்தை இரண்டாகப் பிரித்த கொரியப் போர் 1953 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டாலும், அதிகாரப்பூர்வமாக சண்டை நிறுத்த அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்தப் போர் முடிவுற்றதாக அறிவிக்க வேண்டும் என்ற தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன், சில நாட்களுக்கு முன் அழைப்பு விடுத்திருந்தார்.

அதற்கு அறிக்கை மூலமாகப் பதிலளித்திருக்கும் கிம் யோ-ஜொங், சில நிபந்தனைகளையும் விதித்துள்ளார்.

வட கொரியாவுக்கு எதிரான விரோதக் கொள்கைகளைக் கைவிட வேண்டும், தவறான முன்முடிவுகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பவை உள்ளிட்ட நிபந்தனைகளை அவர் விதித்துள்ளார்.

வட கொரியாவில் கிம் ஜொங் உன்னுக்குப் பின்னர் அவரது சகோதரி கிம் யோ ஜொங் அதிகாரம் மிக்கவராகக் கருதப்படுகிறார்.

“இரட்டை செயற்பாட்டு நடைமுறைகள், தர்க்கரீதியற்ற தப்பெண்ணம், மோசமான பழக்கங்கள் மற்றும் எமது தற்பாதுகாப்பு உரிமைக்கான செயற்பாடுகள் பற்றி தவறு கூறி தமது செயற்பாடுகளை நியாயப்படுத்தும் விரோத நிலைப்பாட்டை (தென் கொரியா) கைவிட வேண்டும்” என்று கிம் யோ ஜொங் குறிப்பிட்டுள்ளார்.

“இவ்வாறான முன்னிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டாலேயே நேருக்கு நேர் அமர்ந்து போரை முடிவுக்குக் கொண்டுவரும் அறிவிப்பை வெளியிட முடியும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மாத ஆரம்பத்தில் வட கொரியா ஏவுகணை சோதனை மேற்கொண்டு சில மணி நேரங்களின் பின் தென் கொரியாவும் தனது முதலாவது நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணையை சோதித்திருந்தது.

தென் கொரியா வருடாந்தம் அமெரிக்காவுடன் இணைந்து மேற்கொள்ளும் போர் பயிற்சியையும் வட கொரியா விமர்சித்து வருகிறது.   நன்றி தினகரன் 
ஹைட்டி குடியேறிகளை திருப்பி அனுப்பிய அமெரிக்கா

கரீபிய நாடான ஹைட்டியில் இருந்து அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி குடியேறியவர்கள், ஹைட்டிக்கு மீண்டும் கொண்டு வந்துவிடப்பட்டனர். போர்ட்டா ப்ரின்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் அவர்களை அழைத்து வந்த ஜெட் விமானம் மீண்டும் கிளம்பியபோது, சிலர் மீண்டும் விமானத்தில் ஏற முயற்சித்தனர். சிலர் அந்த விமானம் மீது தங்கள் காலணிகளை வீசினர்.

டெக்ஸாஸின் எல்லையோர நகரம் ஒன்றில் இருந்து அமெரிக்காவுக்குள் புலம்பெயர்ந்தவர்களை விமானம் மூலம் திருப்பி அனுப்பும் நடவடிக்கையை அமெரிக்கா கடந்த வாரம் ஆரம்பித்தது.

அமெரிக்காவினுள் நுழைய அமெரிக்க - மெக்சிகோ எல்லைப்பகுதி ஒன்றில் சுமார் 13,000 குடியேறிகள் காத்திருக்கின்றனர்.

கொலம்பியா - பனாமா எல்லையிலும் அமெரிக்காவில் குடியேற விரும்பும் பல்லாயிரம் பேர் சிக்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.   நன்றி தினகரன் 
No comments: