அஞ்சலிக்குறிப்பு: பாரதி சொற்பயிற்சி மன்றம் நடத்தியவர் பாரதி நினைவு நூற்றாண்டில் மறைவு ! கொழும்பு சிலம்புச்செல்வர் ம. பொ. சி. மன்றத்தின் நிறுவனர் த. மணி விடைபெற்றார். முருகபூபதி


ஏற்கனவே “   சமகாலம் அஞ்சலிக்குறிப்புகள் எழுதும் காலம்   “ என்று ஒரு பதிவில் எழுதியிருந்தேன்.  இந்தக்கொரோனோ காலத்தில் இந்தத் துயர்பகிரும் காலமும் இணைந்துவருகிறது.

கொழும்பில் ஆறு தசாப்தங்களுக்கு முன்பே பாரதி சொற்பயிற்சி மன்றம், மற்றும் இலங்கை ம. பொ. சி. மன்றம் முதலானவற்றை உருவாக்கி தமிழ்ப்பணியாற்றிவந்த தமிழ் மொழி, கலை இலக்கிய உணர்வாளர் ,  சொற்பொழிவாளர் த. மணி அவர்கள் அண்மையில் மறைந்துவிட்டார் என்ற செய்தி என்னை வந்தடைந்தபோது,  அவர் பற்றிய பல பசுமையான நினைவுகள் மனதில் சஞ்சரிக்கத் தொடங்கின.

அவரை நான் முதல் முதலில் சந்திக்கும்போது எனக்கு வயது


பதினைந்து.  அப்போது எனது மாமா முறையானவரும் நீர்கொழும்பில் சாந்தி அச்சகம் நடத்தியவருமான அ. மயில்வாகனன் அவர்கள் அண்ணி என்ற கலை, இலக்கிய மாத இதழை வெளியிட்டார்.

இதன் முதல் இதழின் வெளியீட்டு விழா எங்கள் ஊர் இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் மட்டக்களப்பு நாடாளுமன்ற பிரதிநிதி சொல்லின் செல்வர் செல்லையா இராசதுரை அவர்களின் தலைமையில் நடந்தது.

இவ்விழாவில்தான் மணி அவர்களும்  உரையாற்றியதை முதல் முதலில்  கேட்டேன். மண்டபம் நிறைந்த அந்தச்சபையில், அவர் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அவர் கொழும்பில் பாரதி சொற்பயிற்சி மன்றம், சிலம்புச்செல்வர் ம.பொ. சி. மன்றம் ஆகியனவற்றின் ஸ்தாபகர் என சொல்லப்பட்டது.

அன்று வெளியிடப்பட்ட அண்ணி முதல் இதழிலும் அவர் ம.பொ.சி. யைப்பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.

அதன் ஆசிரியர் மயில்வாகனன் மாமா, எங்கள் ஊரில் திராவிடக்கழகத்தின் பகுத்தறிவு கருத்துக்களை பரப்பிவந்தவர்.

அண்ணி இதழையும் தமிழ் நாட்டில் கலைஞர் மு. கருணாநிதி ஆசிரியராக இருந்து வெளியிட்ட மாத இதழ் முத்தாரம் போன்று நடத்தினார்.

அதன் ஆசிரியர் குழுவில் எங்கள் ஊரைச்சேர்ந்த நீர்கொழும்பூர் முத்துலிங்கம், மு. பஷீர், ஓட்டுமடத்தான் என்ற புனைபெயரில் எழுதிய  நாகராஜன் ஆகியோர் அங்கம் வகித்தனர்.


முத்துலிங்கம்,  கௌமாறன் என்ற புனைபெயரில் இலங்கை வரலாற்றை சித்திரிக்கும் ஒரு தொடர்கதையையும் அண்ணி இதழில் எழுதத் தொடங்கியிருந்தார்.

நாகராஜன் முற்போக்கு எழுத்தாளர் இளங்கீரனை நேரில் சந்தித்து,  ஒரு நேர்காணல் கட்டுரையும் எழுதினார். இளங்கீரன் இடதுசாரி என்பதனால், அந்த நேர்காணல் பதிவான பக்கங்கள் சிவப்பு நிறத்தில் வரவேண்டும் என்று ஆசிரியரை கட்டாயப்படுத்தினார்.

அதனையெல்லாம் எனது அந்த மாணவப்பருவத்தில் பார்த்து ரசித்தேன்.

பின்னாளில் நானும் இலக்கியப்பிரவேசம் செய்தபோது, மணி, முத்துலிங்கம், பஷீர் ஆகியோர் நடத்தும் இலக்கிய சந்திப்புகளுக்கும் சென்றேன்.

மணி அவர்கள் மிகவும் மென்மையாக பேசுவார்.  அவரது நாவிலிருந்து  தேமதுரத் தமிழ்ச்சொற்கள் இனிமையாக வந்து விழும்.  அதனால்தான்  செந்தமிழ்நாட்டைப்பற்றி  சொல்லும்போது, இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே என்று பாரதியாரும் சொன்னாரோ…?

தமிழின் இனிமையை நான் முதல் முதலில் மணி அவர்களின் உரைகளில்தான்  அந்த இளம் பருவத்தில் கேட்டு ரசித்தேன்.

கொழும்பில் அவர் நடத்திய பாரதி சொற்பயிற்சி மன்றம்,  வார விடுமுறை நாட்களில் ஜிந்துப்பிட்டி, கொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை , முதலான பிரதேசங்களில் வாழ்ந்த தமிழ் மாணவர்களை அழைத்து பேச்சுப்பயிற்சியை வழங்கியது.

கொழும்பு விவேகானந்த சபை உட்பட சில தமிழ் அமைப்புகள்


அக்காலப்பகுதியில் நடத்திய நாவன்மைப்போட்டிகளுக்கு பல மாணவர்களை தயார்படுத்தி அனுப்பும் சமூகப்பணியையும் மேற்கொண்டவர் மணி அவர்கள்.

இலக்கண சுத்தமாகப்பேசுவதற்கு அவர் பழக்கினார். சிலம்புச்செல்வர் ம. பொ. சி. அவர்களிடத்தில் மிகுந்த அபிமானம் கொண்டிருந்தார். அக்காலப்பகுதியில் ம.பொ. சிவஞானம்  தமிழரசுக்கழகத்தின் தலைவராகவும் மேலவை உறுப்பினராகவும் இருந்தார்.

அவரை இலங்கைக்கு அழைத்து கொழும்பில் சில கூட்டங்களிலும் பேசவைத்தவர் மணி. சிலம்புச்செல்வர் பற்றிய பல செய்திகளை எனக்கு சொல்லித்தந்தவரும் மணி தான்.

 மணி அவர்கள் பற்றி இந்த அஞ்சலிப்பகிர்வில்  ம.பொ. சியின் வாழ்வையும் பணிகளையும், சாதனைகளையும் பற்றிய காணொளியையும்  பாருங்கள்.

மணி அவர்கள்தான் எனக்கு ம.பொ.சி.யின் படைப்புகளை அறிமுகப்படுத்தியவர். அச்சமயத்தில் நான் பாடசாலை மாணவன்.   அதன்பிறகுதான் ம.பொ.சி எழுதிய இந்திய சுதந்திரப்போராட்ட வீரர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரப்பிள்ளை ஆகியோர் பற்றிய நூல்களை படித்தேன்.

எனக்கு வாசிப்பு ஆர்வத்தை ஊட்டியவர்களில் மணி அவர்களும் குறிப்பிடத்தகுந்தவர். என்னிடம் சகோதர வாஞ்சையுடன் மிகவும் நேசமாக உறவாடினார். 

இலங்கை செல்லும் சந்தர்ப்பங்களில்  மணி, மு. பஷீர், நீர்கொழும்பூர் முத்துலிங்கம் ஆகியோரையும் நான் சந்திக்கத் தவறுவதில்லை.

எமது இல்லத்தில் அல்லது நண்பர்கள் இல்லத்தில் சந்தித்து இலக்கிய கலந்துரையாடல்களில் ஈடுபடுவோம். மணி அவர்களுக்கு,  கு. ப.ரா. வின் எழுத்துக்கள் மிகவும் பிடித்தமானது.   மென்மையான மனித


உணர்வுகளை கு. ப.ரா . எவ்வாறு தனது சிறுகதைகளில் சித்திரித்துள்ளார் என்பதை சோர்வு தட்டாமல் பேசிக்கொண்டே இருப்பார்.

1997 ஆம் ஆண்டு நான்    இலக்கியப்பிரவேசம் செய்து 25 வருடம் நிறைவடைந்திருந்தது.  அதனை முன்னிட்டு மெல்பனில் கவிஞர் அம்பி, எஸ். பொ. அண்ணாவியார் இளையபத்மநாதன், ஓவியர் செல்லத்துரை அய்யா ஆகியோரை பாராட்டி விருது வழங்கும் நிகழ்வை நடத்திவிட்டு, இலங்கை சென்றேன்.

என்னை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்திய மல்லிகை ஜீவா அவர்களையும் எங்கள் ஊருக்கு அழைத்து பாராட்டி விருது வழங்கும் விழாவை ஏற்பாடு செய்தேன்.  அந்த நிகழ்வுக்கு கொழும்பிலிருந்து வந்து உரையாற்றி ஜீவாவை வாழ்த்திப்பேசியவர்களின் மணி அவர்களும் ஒருவர்.

அந்த விழாவில் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன், மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தலைவர் தெளிவத்தை ஜோசப்,  துரைவி பதிப்பகத்தின் நிறுவனர் துரை. விஸ்வநாதன், தினக்குரல் ஆசிரியராகவிருந்த ஆ. சிவநேசச்செல்வன், மற்றும் அதன் செய்தி ஆசிரியராகவிருந்த எனது நண்பர் வீரகத்தி தனபாலசிங்கம், இலக்கிய ஆர்வலர்கள் தங்கவடிவேல் மாஸ்டர் , மாணிக்கவாசகர்,  வீரகேசரி துணை ஆசிரியர் சூரியகுமாரி பஞ்சநாதன், நவமணி ஆசிரியர் சிவலிங்கம், நீர்கொழும்பூர் முத்துலிங்கம், மு. பஷீர், மேமன்கவி, ரூபவாகினி கூட்டுத்தாபன தமிழ்ச்சேவை பணிப்பாளர் வன்னியகுலம் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திலிருந்து இளையதம்பி தயானந்தா, தினகரன் ஆசிரியர் ராஜ ஶ்ரீகாந்தன், ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.  இவர்களுடன் மணி அவர்களும் உரையாற்றினார். எமது மாமா அ. மயில்வாகனன் அவர்களே அந்த நிகழ்ச்சிக்கும் தலைமை தாங்கினார்.

1966 இல் அவரது அண்ணி இதழுடன் தொடங்கிய மணி அவர்களுடனான சகோதர வாஞ்சை மிக்க உறவு 1997 வரை மாத்திரம் அல்ல,  அதன்பின்னரும் தொடர்ந்தது.

இந்தப்பதிவில் இடம்பெற்ற சிலர் என்னை விட்டுப்பிரிந்துவிட்டனர். அவர்களின் நினைவுகளை தொடர்ந்தும் சுமந்துகொண்டிருக்கும்போது, மணி அவர்களும் விடைபெற்றுவிட்டார் என்ற செய்தி வந்துள்ளது.

மணி அவர்கள் ஒரு கலைக்களஞ்சியம்.  தமிழர் வரலாறு பற்றியும்  தமிழுக்கு தொண்டாற்றியவர்கள் பற்றியும் துல்லியமான தகவல்களுடன் பேசும் ஆற்றல் மிக்கவர்.

  ஏன் நீங்கள் நூல்கள் எழுதவில்லை..? “ என்று பலதடவைகள் அவரிடம் கேட்டிருக்கின்றேன்.

  பேசுவது வேறு,  எழுதுவது வேறு.  நான் பேச்சாளன் மாத்திரமே.  அந்த எல்லைக்குள் நிற்கின்றேன். நீங்கள் எழுத்தாளர். தொடர்ந்து எழுதுங்கள். “  என்று வாழ்த்துவார்.

பாரதி சொற்பயிற்சி மன்றத்தை இலங்கைத்  தலைநகரில் உருவாக்கி இளம் தலைமுறையினரை  சிறந்த பேச்சாளர்களாக்கிய இந்த அபூர்வமான மனிதர் மணி அவர்கள்,  இந்த பாரதி நினைவு நூற்றாண்டு வேளையில் எம்மிடமிருந்து விடைபெற்றுவிட்டார்.

மணி அவர்கள் தனக்கு முன்னே  மேல் உலகம் சென்ற பாரதி, வ. உ.சி, சிலம்புச்செல்வர்  உட்பட இதர இலக்கியவாதிகளுடன் அங்கே உரையாடிக்கொண்டிருப்பார் என்ற குருட்டு நம்பிக்கையுடன் அவரின் நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கின்றேன்.

---0---

 

 

No comments: