சோதனை மேல் சோதனை, போதுமடா சாமி அவதானி



ரத்தால் விழுந்தவரை மாடு ஏறி மிதித்ததாக எமது முன்னோர்கள், ஒரு மூதுரை சொல்லியிருக்கிறார்கள்.

எமது இலங்கையின் சமகால நிலவரங்களை பார்க்கும்போது,  சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்றுதான் பாடத்தோன்றுகிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில்  கண்ணுக்குத் தெரியாத எதிரியாக உடனிருந்து கொல்லும் கொரோனோ வைரஸ் தொற்று அறிமுகமாகியிருந்தாலும்,  இலங்கை அரசு, அதனைகட்டுப்படுத்திவிட்டதாக பெருமை பேசிக்கொண்டிருந்தது.

அந்தவேளையில் நேர்ந்த பொருளாதார வீழ்ச்சியை ஈடுசெய்வதற்காக உக்ரேய்ன் நாட்டிலிருந்து உல்லாசப்பிரயாணிகளை அழைப்பதற்கு அரசு அனுமதியளித்தது.

அவ்வாறு வந்தவர்களும் காவிகளாக வந்து சென்றது பற்றியும்  


வடக்கிற்கு வந்த ஒரு மதபோதகராலும் அந்த வைரஸ் தொற்று பரப்பப்பட்டிருக்கலாம் என்பது பற்றியும் ஊடகங்கள் பேசிக்கொண்டிருந்தன.

மீண்டும் இரண்டாவது அலை இந்த ஆண்டு முதல் வீரியம் கொண்டு பரவத்தொடங்கியதும், இதுவரையில்  ஆயிரத்து ஐநூறு பேருக்கு மேல் அதனால் பலியாகியுள்ளனர்.

தொடக்கத்தில் இத்தொற்றினால் இறப்பவர்களை அடக்கம் செய்வதில் பெரும் சிக்கல்கள் இருந்தன. அந்தச்சிக்கல்களும் அரசியலாகப் பார்க்கப்பட்டன.

பின்னர் சிறுபான்மையினத்தவரான முஸ்லிம்களதும் எதிரணியினரதும் தொடர் அழுத்தங்களினால், அரசு கீழிறங்கி வந்தது.

தற்போது தொடர்ச்சியாக பயணத்தடை நீடிக்கப்பட்டுவருகிறது.

இவ்வளவு சிக்கல்களுக்கும் மத்தியில் எங்கிருந்தோ வந்த ஒரு கப்பல் தீப்பற்றியதால், அதிலிருந்து நச்சுத்தன்மை வெளியேறி, கடல் வாழ் உயிரினங்கள் அநியாயமாக பலியாகத் தொடங்கிவிட்டன.

கடலிலே சுதந்திரமாக நீந்தி வாழ்ந்துகொண்டிருந்த அவை, உயிரற்ற சடலமாக மிதந்து வந்து கரைஒதுங்குகின்றன.

மீன்பிடித்துறையும் இதனால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. சில நாட்கள்,  இது தொடர்பாக மீன்பிடித்துறை அமைச்சரும்,  தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பிரதிநிதி சுமந்திரனும் ஊடகங்களில் பட்டி மன்றம் நடத்திக்கொண்டிருந்தனர்.

வடக்கிற்கு முதல்கட்டமாக வந்த ஐம்பதினாயிரம் கொரோனோ தடுப்பூசி விநியோகத்திற்கு மருத்துவத்துறை சார்ந்தவர்கள்  மாத்திரம்  வந்திருக்கலாம்.  அது அவர்களது வேலை. அதனைச்செய்யுமாறு வலியுறுத்தவேண்டியது, தொகுதி எம். பி.க்களினதும் மாகாண ஆளுநர், அரச அதிபரது கடமை.

வெளிநாடுகளில் அப்படித்தான் நடக்கும்.

ஆனால், எமது நாட்டில் எதனையும் அரசியலாக்கி, அமைச்சர்கள் தோன்றி  “ ஷோ  “ காண்பிக்கின்ற சடங்குகள்தான் காட்சிப்படுத்தப்படுகின்றது.

 அவ்வாறாயின் விதிக்கப்பட்ட பயணத்தடை அமைச்சர் பிரதானிகளுக்கு இல்லையா..?  என்ற  கேள்வியும் எழுகிறது.

அமைச்சர்கள், அரசியல் வாதிகளுக்கு எப்போதுமே ஊடக விளம்பரம்தான் தேவைப்படுகிறது.

சீனா இலவசமாக வழங்கிய தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்குவதற்காக ஏன் இந்த பெரும் எடுப்பு சடங்குகள். அதனையும் ஒரு அரசியல் திருவிழாவாக்கியிருக்கிறார்கள்.

பல வருடங்களுக்கு முன்னர்,   ஒரு சமயம் கொழும்பு துறைமுகத்தில் ஒரு வேலைத்திட்டத்தை ஜப்பானிய அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. அதற்காக ஜப்பானிலிருந்து ஒரு அமைச்சர் வந்திருந்தார்.

அந்த நிகழ்ச்சி நடந்த இடத்தில் ஏராளமான துறைமுகத் தொழிலாளர்களும், துறைமுக அதிகார சபை அதிகாரிகள், மற்றும் பத்திரிகையாளர்கள் பொதுமக்கள் என்று பெருந்தொகையானோர் கூடிவிட்டனர்.

அதனைப்பார்த்த ஜப்பான் அமைச்சருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அங்கிருந்த இலங்கை அமைச்சரிடமும் அவரது அதிகாரிகளிடமும்,  “ ஏன் இவர்கள் எல்லோரும் இங்கே வந்திருக்கிறார்கள்..?  “ எனக்கேட்கிறார்.

அவர்கள் திரு திருவென விழிக்கின்றனர்.

நாம்தானே இந்தத்திட்டம் தொடர்பாக செயல்படுத்த வந்துள்ளோம்.  மற்றவர்கள் எதற்கு…?  அவர்களைச்சென்று, அவரவர் வேலைகளை பார்க்கச்சொல்லுங்கள்.  கடமை முக்கியம்  “ என்று சொல்லியிருக்கிறார்.

இதிலிருந்து எமக்கு ஒரு உண்மை புலப்படும்.

இரண்டாம் உலகப்போரில் பெரும் பாதிப்பை சந்தித்த ஜப்பான் எவ்வாறு துரிதமாக பல துறைகளிலும் முன்னேறியிருக்கிறது என்பது.  அன்று அந்த ஜப்பானிய அமைச்சரின் விழிப்புணர்வுக் கூற்றிலிருந்து எம்மவருக்கு  புரிந்திருக்கவேண்டும்.

சமகாலத்தில்,  “ கொரோனோவுக்கு எதிரான தடுப்பூசிகளை வழங்கும் திட்டத்திலும் உலக சுகாதார ஸ்தாபனம் ( W . H. O ) பரிந்துரைத்துள்ள வழிகாட்டல்களையும் இலங்கை பின்பற்றுவதில்லை.  “  என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அநுருத்த பாதெனிய கவலை தெரிவித்துள்ளதுடன், இதிலும் அரசியல் தலையீடுகள் உள்ளன என்கிறார்.

உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கியுள்ள மூலோபாயங்களை பின்பற்றவேண்டும் எனவும் வலியுறுத்துகிறார்.

இலங்கையில் பதவிக்கு வந்த ஒவ்வொரு அரசுகளும், மக்களுக்கு நேரும் பாதிப்புகளையே அரசியல் ஆதாயமாக பார்க்கும் மனோபாவம் தொடருவது பேராபத்து.

முன்னர் நீடித்த போரையும், அதனை வெற்றிகொண்டதையும் அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்தியவர்கள், பின்னர் 2019 ஏப்ரில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தையும் தற்போது வேகமாக பரவிவரும் கொரோனோ தொற்றையும் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தும் கொடுமையிலிருந்து எங்கள் தேசமும் இங்கு வாழும் மூவின மக்களும் எப்போது முற்றாக விடுபடுவார்கள்…?

இந்தப்பின்னணிகளுடன், இயற்கையும் எமது மக்களை கடுமையாக சோதிக்கின்றது.

அண்மைக்காலங்களில் மழைவீழ்ச்சி அதிகரித்து நதிகளில் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பலர் நிர்க்கதியாகியிருக்கின்றனர்.

அத்துடன் மண் சரிவுகளினால் முழுக்குடும்பங்களும் பலியாகிய சம்பவங்களும் தொடருகின்றன.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் முற்றாக எரிந்துள்ள எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலிலிருந்து கடலுக்குள் விழுந்துள்ளவற்றினால் நேர்ந்துள்ள சுற்றுச்சூழல் பாதிப்பு எத்தகைய பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இப்போது கணிக்கமுடியாது.

எங்கிருந்தோ வந்துள்ள கண்ணுக்குத் தெரியாத கொரோனோ என்ற எதிரியுடன்  மூன்றாம் உலக நாடுகளில் ஒன்றான எமது தேசம் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கும்போது இந்து சமுத்திர கடல் பிராந்தியமும் நஞ்சாக மாறிக்கொண்டிருக்கிறது.

இவை போதாதென்று இயற்கையும் கடுமையாக சோதிக்கின்றது.

மக்களுக்கு நேரும் அனைத்து சோதனைகளையும்  வேதனைகளையும் அரசு தனது அரசியல் ஆதாயத்திற்கு கச்சிதமாக பயன்படுத்திவருகிறது.

ஒன்றின் பின் ஒன்றாக  தொடர்ந்து ஓடிவரும் வைரஸ்கள் ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்திற்கு தயாராகி வருகின்றன.  

சோதனைமேல் சோதனை போதுமடா சாமி.

( நன்றி: யாழ். தீம்புனல் )

---0---

 

 

 

No comments: