உலகச் செய்திகள்

 ரயில் மோதல்; இறப்பு எண்ணிக்கை 50 ஆக உயர்வு

92 வறிய நாடுகளுக்காக 50 கோடி பைஸர் ஊசிகள்; அமெரிக்கா நன்கொடையாக வழங்கும்

இஸ்ரேலிய ஏவுகணை தாக்குதலை முறியடித்துள்ளதாக சிரியா அறிவிப்பு

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் அடுத்த மாதம் விண்வெளிக்கு பயணம்

வெளிப்படைத்தன்மையுடன் இருக்க சீனாவுக்கு அமெரிக்கா அழுத்தம்

உலகின் பிற நாடுகளுக்கு நூறு கோடி தடுப்பூசிகளை ஜி-7 நாடுகள் அளிக்கும்

தீங்கு செய்தால் வலுவான பதிலடி

டெல்டா வகை கொவிட் தொற்று; ஐரோப்பா கண்டம் முழுவதும் பரவும் அபாயம்!


 ரயில் மோதல்; இறப்பு எண்ணிக்கை 50 ஆக உயர்வு

கராச்சியில் இருந்து சர்கோதா நகருக்கு பயணித்த மில்லட் எக்ஸ்பிரஸ் ரயிலும், ராவல்பிண்டி நகரில் இருந்து கராச்சி நோக்கி சர் சையத் எக்ஸ்பிரஸ் ரயிலும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 2 ரயில்களில் இருந்தும் மொத்தம் 14 பெட்டிகள் கவிழ்ந்தன. இதில் 6 பெட்டிகள் முற்றிலுமாக உருக்குலைந்து போயின. அந்த பெட்டிகளில் இருந்த பயணிகள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கி நசுங்கினர்.

இந்த ரயில் விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் பொலிசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீவிர மீட்பு பணியில் இறங்கினர். உள்ளூர் மக்களும் அவர்களுடன் கைகோர்த்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ரயில் பெட்டிகள் உருக்குலைந்து கிடப்பதையும் அங்கு மீட்பு பணிகள் நடைபெற்றதையும் படத்தில் காணலாம்.

எனினும் இந்த கோர விபத்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்த நிலையில் தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. அவர்களது உடலை மீட்புக்குழுவினர் மீட்டனர்.

மேலும் இந்த விபத்தில் 100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. இதனிடையே ரயில் விபத்தில் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சை பெறும் ஆஸ்பத்திரிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தடம்புரண்ட ரயில் பெட்டிகளின் இடிபாடுகளுக்குள் இன்னும் பல பயணிகள் சிக்கியிருப்பதாகவும், அவர்களை மீட்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே இந்த ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் ‘‘கோட்கியில் பயங்கர ரெயில் விபத்தால் கடும் அதிர்ச்சி அடைந்தேன். சம்பவ இடத்துக்கு உடனடியாக சென்று காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவியை உறுதிப்படுத்தவும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவை வழங்கவும் ரயில்வே அமைச்சரை கேட்டுக் கொண்டுள்ளேன். மேலும் ரெயில்வே பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளேன்’’ என தெரிவித்துள்ளார். நன்றி தினகரன் 

  92 வறிய நாடுகளுக்காக 50 கோடி பைஸர் ஊசிகள்; அமெரிக்கா நன்கொடையாக வழங்கும்

வறிய நாடுகளுக்கு விநியோகிப்பதற்காக 50 கோடி கொவிட்19 தடுப்பூசிகளை அமெரிக்கா கொள்வனவு செய்யவுள்ளது. 92 வறிய நாடுகளுக்கு இந்த தடுப்பூசிகள் நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நன்கொடை குறித்து ஜனாதிபதி ஜோ பைடன் அறிவிக்கவுள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இத்திட்டத்துக்காக 50 கோடி (500 மில்லியன்) பைஸர்- பயோ அன்ட்டெக் தடுப்பூசிகளை அமெரிக்கா கொள்வனவு செய்யவுள்ளது. இவற்றில் 20 கோடி தடுப்பூசிகள் இவ்வருட இறுதியில் உலகெங்கும் விநியோகிக்கப்படும் ஏனையவை 2022 ஜூன் மாதம் விநியோகிக்கப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஒரு நாட்டினால் வாங்கப்படும் மற்றும் நன்கொடையாக வழங்கப்படும் மிக அதிக எண்ணிக்கையான தடுப்பூசிகள் இவை எனவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான தடுப்பூசிகளை விநியோகிப்பதில் உலக நாடுகள் தத்தமது பங்களிப்பைச் செய்யுமாறு ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் இதுவரை 64 சதவீதமானோர் குறைந்தபட்சம் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் செல்வநாயகம் - நன்றி தினகரன் 
இஸ்ரேலிய ஏவுகணை தாக்குதலை முறியடித்துள்ளதாக சிரியா அறிவிப்பு

சிரியாவின் வான் பாதுகாப்பு படைகள் நாட்டின் தலைநகர் டமாஸ்கஸுக்கு தெற்கே இஸ்ரேலிய ஏவுகணை தாக்குதலை முறியடித்ததாக சனா என்ற செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலின் இந்த தாக்குதல் லெபனான் வான்வெளியில் இருந்து மேற்கொள்ளப்பட்டதாக அந்த செய்தியில் மேலும் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு சிரிய விமான பாதுகாப்பு படைகள், வான்வழி இலக்குகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி, பல ஏவுகணைகளுக்கு பதில் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனால் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புச் செயலுக்கு சொத்து சேதம் மாத்திரம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த மாதம் 5 ஆம் திகதி சிரியாவின் லடாகியா நகரின் தென்மேற்கே இராணுவ நிலையங்கள் குறிவைத்து இஸ்ரேலிய ஏவுகணை தாக்குதல் இடம்பெற்றது.

இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், ஒரு தாயும் குழந்தையும் உள்ளடங்கலாக ஆறு பேர் காயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 
அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் அடுத்த மாதம் விண்வெளிக்கு பயணம்

விண்வெளி பயணத்தின்போது ஜெப் பெசோஸ் மற்றும் அவரது சகோதரருடன் மேலும் ஒருவர் இணையலாம் என்பதால் அந்த இருக்கைக்கான ஏலத்தை புளூ ஒரிஜின் நிறுவனம் தொடங்கியுள்ளது.

உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான்நிறுவனத்தின் நிறுவனரான ‌ஜெப் பெசோஸ், புளூ ஆரிஜின் என்ற பெயரில் விண்வெளி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். மனிதர்களை விண்வெளிக்கு அழைத்து செல்வதை நோக்கமாக கொண்டு இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் புளூ ஆரிஜின் நிறுவன தயாரிப்பான நியூ ஷெப்பர்ட் பூஸ்டர் விண்கலத்தின் முதலாவது பயணத்தில், தான் தனது சகோதரர் மார்க்குடன் விண்வெளிக்கு செல்ல உள்ளதாக ஜெப் பெசோஸ் அறிவித்துள்ளார். அடுத்த மாதம் (ஜூலை) 20-ம் திகதி அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து நியூ ஷெப்பர்ட் பூஸ்டர் விண்கலத்தை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பயணத்தின்போது ஜெப் பெசோஸ் மற்றும் அவரது சகோதரருடன் மேலும் ஒருவர் இணையலாம் என்பதால் அந்த இருக்கைக்கான ஏலத்தை விட தொடங்கியிருக்கிறது புளூ ஒரிஜின் நிறுவனம்.

இந்த ஏலம் எதிர்வரும் 12-ம் திகதி நிறைவு பெறுகிறது. இந்த நிலையில், 3-வது இருக்கைக்கான ஏலம் தொடங்கியதுமே 143 நாடுகளில் இருந்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஏலம் கேட்டனர். அதில் அதிகபட்சமாக ஒருவர் 2.8 மில்லியன் டொலர் ஏலம் கேட்டது தெரிய வந்துள்ளது.   நன்றி தினகரன் 
வெளிப்படைத்தன்மையுடன் இருக்க சீனாவுக்கு அமெரிக்கா அழுத்தம்

சீனாவில் வூகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. வைரஸ் தற்போது உலகின் பல நாடுகளுக்கும் பரவி இலட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். கோடிக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வூகான் நகரில் உள்ள கடல் உணவு சந்தையில் இருந்து கொரோனா பரவியதாக கருதப்படுகிறது. அதே சமயத்தில், கொரோனா வைரசை சீனா தனது வூகான் பரிசோதனை கூடத்தில் செயற்கையாக உருவாக்கியபோது அங்கிருந்து கசிந்திருக்கலாம் என்று ஒருசாரார் கூறுகின்றனர்.

எனவே, கொரோனா எப்படி தோன்றியது என்பதை அறிய உலக சுகாதார நிறுவனம் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. இக்குழுவினர் கடந்த ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் சீனாவுக்கு சென்று ஆய்வில் ஈடுபட்டனர். சீன விஞ்ஞானிகளுடன் சேர்ந்து விசாரணையில் இறங்கினர். உணவு சந்தை, ஆய்வுக்கூடம் போன்ற இடங்களுக்கும் நேரில் சென்றனர். இதுதொடர்பான உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தரவுகள் விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க சீனாவுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் ஜேக் ஸ்லிவன் வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், கொரோனா வைரஸ் தொடர்பான தரவுகளில் சீனா வெளிப்படைத்தன்மையுடன் இருக்க சர்வதேச நாடுகளின் துணையுடன் நாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம். விசாரணையில் பங்கேற்காமலும், தரவுகளை பகிரமாட்டோம் என சீனா கூறுவதை கேட்டுக்கொண்டு அதை அப்படியே ஏற்றுக்கொண்டு அமைதியாக இருக்கமாட்டோம்' என்றார்.   நன்றி தினகரன் 
உலகின் பிற நாடுகளுக்கு நூறு கோடி தடுப்பூசிகளை ஜி-7 நாடுகள் அளிக்கும்

உலகின் பிற நாடுகளுக்கு நூறு கோடி அளவு தடுப்பூசிகளை ஜி-7 நாடுகள் அளிக்கும் என பிரித்தானியா அறிவித்துள்ளது.

பிரித்தானியாவில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் கூறுகையில், ‘பிரித்தானியா மட்டும் உபரியாக உள்ள சுமார் 10 கோடி அளவுகள் கொரோனா தடுப்பூசியை வழங்கும்.

முதல் 50 இலட்சம் அளவுகள் வரும் செப்டம்பர் மாதத்துக்குள்ளாகவும் மேலும் 2.5 கோடி அளவுகள் ஆண்டு இறுதிக்குள்ளாகவும் வழங்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அமெரிக்கா 50 கோடி அளவு கொரோனா தடுப்பூசிகளை 92 நாடுகளுக்கு நன்கொடையாக அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில், ஐநா ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ள கோவாக்ஸ் திட்டத்தின்கீழ், சுமார் 80 சதவீத தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும், மீதமுள்ளவை இருதரப்பு ரீதியாக பகிர்ந்து அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.    நன்றி தினகரன் 
தீங்கு செய்தால் வலுவான பதிலடி

ஜோ பைடன் ரஷ்யாவுக்கு கடும் எச்சரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது முதல் வெளிநாட்டுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். 8 நாள் ஐரோப்பிய பயணத்தில் முதல் கட்டமாக அவர் நேற்று முன்தினம் இங்கிலாந்து சென்றார்.

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த ஜனவரி 20-ம்திகதி பதவி ஏற்றார். அப்போது அந்த நாட்டை கொரோனா தொற்று ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. இப்போது அந்த தொற்றில் இருந்து அமெரிக்கா மீண்டுவந்து விட்டது.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். 8 நாள் ஐரோப்பிய பயணத்தில் முதல் கட்டமாக அவர் நேற்றுமுன்தினம் இங்கிலாந்து சென்றார். மனைவி ஜில் பைடனுடன் ஏர் போர்ஸ் வன் விமானத்தில் அவர் சபோல்கில் உள்ள அமெரிக்க விமானப்படை தளமான மில்டன்ஹாலில் வந்து தரை இறங்கினார். அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஐரோப்பிய பயணத்தின் இறுதிகட்டமாக சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகருக்கு செல்லும் ஜோ பைடன், அங்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்து பேசுகிறார். பருவநிலை மாற்றம், உக்ரைனில் ரஷ்ய இராணுவ தலையீடு, ரஷ்யாவின் சட்டவிரோத இணைய தள தாக்குதல், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நாவல்னி விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து அவர் புட்டினுடன் விவாதிப்பார் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் சபோல்கில் அமெரிக்க விமானப்படை தளத்தில் அவர் அமெரிக்க படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் பேசினார். அப்போது அவர் ரஷ்யாவை கடுமையாக எச்சரித்தார். அவர் கூறியதாவது:-

ரஷ்ய ஜனாதிபதி புட்டினை சந்திக்கிறபோது ஒரு தெளிவான செய்தியை வழங்கப்போகிறேன். நாம் ரஷ்யாவுடன் மோதலை எதிர்பார்க்கவில்லை. ரஷ்ய அரசானது தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டால் அமெரிக்கா வலுவான பதிலடி கொடுக்கும்.

இங்கிலாந்தில் கார்ன்வாலில் உள்ள கடலோர கிராமமான கார்பிஸ் பேயில் நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கிய ‘ஜி-7’ உச்சி மாநாட்டில் ஜோ பைடன் கலந்து கொண்டார். கொரோனா வைரஸ் தொற்று உலகை ஆட்டிப்படைக்கத்தொடங்கிய பின்னர் உலகத்தலைவர்கள் இந்த மாநாட்டில் முதன்முதலாக நேருக்கு நேராக சந்தித்துப்பேச உள்ளதால் இந்த மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் நடத்துகிற இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், இத்தாலி பிரதமர் மரியோ டிராகி, ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா, ஐரோப்பிய கூட்டமைப்பின் சார்பில் ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் உர்சுலா வான்டெர் லேயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.   நன்றி தினகரன் 

டெல்டா வகை கொவிட் தொற்று; ஐரோப்பா கண்டம் முழுவதும் பரவும் அபாயம்!

இந்தியாவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா வைரஸ் தொற்று ஐரோப்பா கண்டம் முழுவதும் பரவும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இயக்குநர் ஹன்ஸ் குளூஜ் எச்சரித்துள்ளார்.

ஐரோப்பிய பிராந்தியத்தில் பல நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்த தயாராகிவரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இந்தியாவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா தீநுண்மியானது, தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாது என்பதற்கான அறிகுறிகளைக் காட்டியுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்படக்கூடிய மக்கள், குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

கடந்த ஆண்டு இலையுதிர் மற்றும் குளிர் காலமானது அதிக பொது முடக்கங்களுக்கும், உயிரிழப்புகளுக்கும் வழிவகுத்தது. மீண்டும் அந்தத் தவறை நாம் செய்யக் கூடாது. பொதுமக்கள் மிக அத்தியாவசியமான காரணமின்றி பயணம் செய்யக் கூடாது.

ஐரோப்பா கண்டம் முழுவதும் தடுப்பூசி திட்டங்கள் மற்றும் பிற பொது சுகாதார திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும்’ என கூறினார்.   நன்றி தினகரன் 

No comments: