கண்ணீரால் சேர்ந்து கடலாக மாறிடுமாம்
மண்ணிலே செய்திட்ட மாண்பு.
நற்பிள்ளை நானிலத்தில் நன்றெனவே தாம்வளர்த்துக்
கற்பித்தார் காலமுங் கண்டாரே-தற்பெருமை
இல்லாத பாலாண்ணா ஈசனிடம் சென்றாரோ
நில்லா நினைவில் நிலைத்து.
புன்சிரிப்பால் கவர்ந்த சீலர்
பூவுலகில் வாழ்ந்த தெய்வம்
அன்பினையே தந்த தேகம்
அடைந்தாராம் தெய்வத் தாளோ?
நன்னெறியால் நின்றார் நாளும்
நயம்படவே பேசும் அன்பர்
இன்புறவோ இறைதாள் சென்றார்
இதயத்தால் கலங்கு கின்றோம்
பண்பான மனைவி ஹேமா
பாரினிலே பாசங் கொண்டு
கண்போலே குழந்தை மூன்று
கல்வியினால் கரையைக் காட்டி
மண்போற்ற வாழ்ந்த வள்ளல்
மறைந்தாரோ பாலா மாமா
விண்ணோரின் இடத்தைச் சேர்ந்தார்
விதியாலே விரைந்தார் தானோ
உள்ளத்தால் உயர்த்த நேசன்
உலகத்தார் போற்ற வாழ்ந்தார்
அள்ளித்தான் கொடுத்தார் அன்பு
அறிவினையே நன்றாய்ப் பெற்றார்
தள்ளித்தான் யமனும் செல்லத்
தரணியிலே பாலா மாமா
கள்ளமிலா வாழ்வார் என்று
கனவாகித் தவிக்கும் நாளே.
-அவுஸ்திரேலியா சிவாச்சார்ய ஒன்றியத்தின் சார்பாக-
கவிமாமணி பா.இந்திரக்குருக்கள்
No comments:
Post a Comment