இலங்கைச் செய்திகள்

கொரோனா மரணவீதம் திடீரென அதிகரிக்க காரணம் என்ன? 

ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் 20 தமிழர்களை நாடு கடத்தியது ஜேர்மனி

அவுஸ்திரேலியாவிடம் இலங்கை கோரிக்கை

மெல்பேர்ன் கொத்தணி: இலங்கை ஊடாக பயணித்தவர் மூலமே பரவல்

எக்ஸ்பிரஸ் கப்பலின் பிளாஸ்ரிக் பொருட்கள்

வாகன இறக்குமதித் தடையால் கட்டுப்பாடில்லாத விலை அதிகரிப்பு


கொரோனா மரணவீதம் திடீரென அதிகரிக்க காரணம் என்ன? 

சுகாதார மேம்பாட்டு பணிமனை பணிப்பாளர் விளக்கம்

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்களுக்கு காரணம் உடனடி மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளாமையே என சுகாதார மேம்பாட்டு பணிமனையின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ரஞ்சித் பட்டுவாந்துடாவ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 80 சதவீதமானவர்கள் பாரதூரமான அறிகுறிகளை வெளிப்படுத்துவதில்லையென்றும் 20 சதவீதமானவர்களுக்கே அவ்வாறான நிலைமை ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு பாரதூரமான அறிகுறிகளைக் கொண்டுள்ள நோயாளர்களை உடனடியாக அடையாளம் காணவேண்டியது அவசியமென்றும் அவ்வாறு இல்லாத பட்சத்தில், இந்நோயாளர்களை குணப்படுத்துவது சிரமமாகுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, விரைவாக அவர்கள் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 

 




ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் 20 தமிழர்களை நாடு கடத்தியது ஜேர்மனி

- பலவந்தமாக விமானத்தில் ஏற்றி அனுப்பியது

ஜேர்மனி, பிராங்போர்ட் விமான நிலையத்தில் தமிழர்கள் உட்பட பெருந்தொகையானோர் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு மத்தியில் சுமார் 20 தமிழர்கள் நேற்று முன்தினமிரவு பலவந்தமாக தனி விமானமொன்றில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.

அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடு கடத்தப்படுவதற்காக போட்ஸ்ஹைம் நகரில் அமைந்துள்ள தடுப்பு முகாமிலிருந்து இவர்கள் நேற்று முன்தினம் நண்பகல் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் பிராங்போர்ட் கொண்டுவரப்பட்டனர்.

ஜேர்மனியிலிருந்து ஈழத்தமிழ் அகதிகள் நாடுகடத்தப்படுவதை எதிர்த்து மனித உரிமை அமைப்பும் ஏனைய சில அமைப்புகளும் இணைந்து ஜேர்மனியில் போட்ஸ்ஹைம் நகரில் அமைந்துள்ள தடுப்பு முகாமுக்கு எதிரில் கடந்த திங்கள் மாலையிலிருந்து ஒரு தொடர் போராட்டத்தை நடத்தியிருந்தனர்.

இந்தக் கடுமையான போராட்டத்துக்கு மத்தியில் பொலிஸ் பாதுகாப்புடன் வாகனமொன்று தடுப்பு முகாமுக்குள்ளே வந்து அகதிகளை ஏற்றிக் கொண்டு விமான நிலையம் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வாகனத்தைச் செல்ல விடாமல் தடுக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் முயன்ற போதிலும், கடுமையான பொலிஸ் பாதுகாப்புடன் வாகனம் வெளியேறியது.

பிராங்போர்ட் விமான நிலையத்திலும் பெருந்தொகையான தமிழர்களும்,ஜேர்மன் நாட்டவர்கள் சிலரும் இணைந்து எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களே நேற்று முன்தினம் இரவு விஷேட விமானம் ஒன்றின் மூலம் நாடு கடத்தப்பட்டதாக பிராங்போர்ட் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நாடு கடத்தப்படுவதற்காகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் இருவர் விடுதலை செய்யப்பட்டனரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.    நன்றி தினகரன் 




அவுஸ்திரேலியாவிடம் இலங்கை கோரிக்கை

மரைஸ் பெய்னுடன் தினேஷ் குணவர்தன பேச்சு

அவசரப் பயன்பாட்டுக்காக அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு இலங்கை அரசாங்கம் அவுஸ்திரேலியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொவிட்-19 தடுப்பூசி கொள்வனவுக்கு ஏற்கனவே இலங்கை அரசாங்கம் அமெரிக்கா மற்றும் ஜப்பானிடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது,

அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மரைஸ் பெய்னுடன் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கொவிட் -19 தொற்று நோயால் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்வதில் இலங்கைக்கு அவுஸ்திரேலியா அளித்த ஆதரவுக்கு அமைச்சர் தினேஷ் குணவர்தன இதன்போது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா இடையே இருதரப்பு உறவுகள் ஸ்தாபிக்கப்பட்ட 75 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பொருத்தமான திட்டங்களை தொடங்க அமைச்சர்கள் இதன்போது ஒப்புக்கொண்டனர்.

லோரன்ஸ் செல்வநாயகம் - நன்றி தினகரன் 





மெல்பேர்ன் கொத்தணி: இலங்கை ஊடாக பயணித்தவர் மூலமே பரவல்

மெல்பேர்ன் கொத்தணி: இலங்கை ஊடாக பயணித்தவர் மூலமே பரவல்-Melbourne-COVID-Cluster-Begin-From-Transit Person-Via-Sri-Lanka

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் பரவி வரும் கொவிட் புதிய கொத்தணிக்கு, இலங்கையிலிருந்து அந்நாட்டிற்கு சென்றவரால் ஏற்படவில்லையென, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நீர்ப்பீடனம் மற்றும் கல உயிரியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை ஊடாக மெல்பேர்னுக்குச் சென்ற நபர் ஒருவராலேயே இக்கொத்தணி உருவாகியுள்ளதாக, அடையாளம் காணப்பட்டுள்ளதக சுட்டிக் காட்டினார்.

இது தொடர்பாக அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் சுகாதார பிரிவிற்கும் அறிவித்துள்ளதாக, வைத்தியசர் சந்திம ஜீவந்தர மேலும் தெரிவித்தார்.   நன்றி தினகரன் 




எக்ஸ்பிரஸ் கப்பலின் பிளாஸ்ரிக் பொருட்கள்

இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பலிலிருந்து வெளியேறிய ஆபத்தான பொருட்களென சந்தேகிக்கப்படும் சில பிளாஸ்ரிக் பொருட்கள் நேற்று (10) காலை மன்னார் வங்காலை கடற்பரப்பில் கரை ஒதுங்கியதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.  வங்காலை பொலிஸ் நிலைத்திற்கருகிலுள்ள கடற்பரப்பிலேயே மேற்படி சிறிய பிளாஸ்ரிக் உருண்டைகளென சந்தேகிக்கப்படும் பொருட்கள் கரை ஒதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச் சிறிய உருண்டைகள் கடற்கரையோரம் முழுவதிலும் சிதரிக் கிடப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளதுடன் இப் பகுதிக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அதிகாரிகள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் நேரடியாக சென்று கரை ஒதுங்கியுள்ள பிளாஸ்ரிக் பொருட்கள் தொடர்பாக பார்வையிட்டனர். மேலும் அரிப்பு பகுதியிலும் இப் பிளாஸ்ரிக் பொருட்கள் கரை ஒதுங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.   நன்றி தினகரன் 






வாகன இறக்குமதித் தடையால் கட்டுப்பாடில்லாத விலை அதிகரிப்பு

கொரோனா தொற்று பரவல் நிலைமைக்கு மத்தியில், வாகன இறக்குமதிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களின் கார்கள் பலவற்றின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது காணப்படும் பாரிய கேள்விக்கு மத்தியில் நாட்டில் புதிய கார்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரஞ்சிகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,இறக்குமதி தடையால், வாகன கேள்வி மற்றும் நிரம்பல் விகிதத்துக்கு ஏற்ப நாளுக்கு நாள் வாகன விலைகள் அதிகரிக்கின்றன.

வெகன் ஆர் ரக வாகனங்களின் விலை சுமார் 5 இலட்சத்தினால், அதிகரித்துள்ளதுடன், சில ஜீப் ரக வாகனங்களின் விலைகள் 40 முதல் 50 இலட்சம் வரை அதிகரித்துள்ளன.

வெகன் ஆர், டொயோட்டா போன்ற முன்னணி வாகனங்களின் விலைகளே அதிகரித்த வண்ணம் உள்ளன. தற்போது, 75 சதவீதமான வாகன விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

90 சதவீதமான இறக்குமதியாளர்கள் வங்கிகளில் கடன் பெற்றே வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர். எனவே, இறக்குமதிக்கு மீள அனுமதியளிக்கப்படும் வரையில் தமக்கான சலுகைகளை வழங்க வங்கிகள் முன்வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.  நன்றி தினகரன் 



No comments: