வினை நீக்கி உமை என்றும் வாழ்த்தி நிற்பார்! -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-


அவுஸ்திரேலியக் கம்பன் கழக பணிகளிலெல்லாம் தமை முழுதுமாய்க் கரைத்து நின்ற சுகன்யா, நிஷேவிதா, ப்ரணிதா ஆகியோரின் தந்தையார் கைலாசநாத ஸர்மா பாலசுப்பிரமணியன் அவர்களின் ஆத்ம சாந்திக்காய் அகில இலங்கைக் கம்பன் கழகம் பிரார்த்திக்கிறது.யர் கம்பன் பெருமைதனை உலகிற்கெல்லாம்
  ஓங்கி உயர்ந்(து) உரைத்திட்ட உறவீர்! அன்று
அயர்வதனை அறியாது கம்பன் தொண்டில்
  அகம் நிறைந்து உமைக்கரைத்து பலவும் செய்தீர்
தயவுடனே விருந்திட்டுத் தாய்மை பொங்கத்
 தம்மனத்தால் எமைப் போற்றித்  தாங்கி நின்றீர்
துயர் நிறைந்து நும் தலைவர் பிரிவால் வாடும்
 தூயவரே! உம் துயரில் துணையாய் நின்றோம்

கம்பனவன் கழகமதைக் குடும்பமாக்கிக்
  கண்ணெனவே போற்றித்தான் வாழுகின்றோம்
எம்முடைய ஜெயராமின் பணிகட்கெல்லாம்
 இடம் வலமாம் கரங்களென நின்று நீவீர்
தெம்புடனே செய்த பணி நினைவில் நிற்கும்
 தெளிவுடனே தமிழன்னை பாதம் போற்றும்
உம்முடைய துயர் தீரக் கம்பன் காட்டும்
 உயர் இறையின் திருவடியைப் பணிந்து நின்றோம்

நேற்றிருந்தார் இன்றில்லை என்னும் கூற்று
 நிதம் நிதமும் நடப்பதுதான், நெஞ்சம் தேற்றி
மாற்றிடுவீர்!  உமதுள்ளத் துயரம் தன்னை
 மண் புகழ வாழ்ந்தவராம் உங்கள் தந்தை
நாற்றிசையும் மென்மேலும் பெருமை கொள்ள
  நலம் மிகுந்த உம் வாழ்வால் உறுதி செய்வீர்
வேற்றுலகில் வாழ்ந்தாலும் கடவுள் என்றே

வினை நீக்கி உமை என்றும் வாழ்த்தி நிற்பார். 

No comments: