தமிழ்நாடு என்ற பெயரை சூட்டிய அறிஞர் அண்ணாத்துரை,
இனி எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றார்.
பின்னாளில் அவரது அரசியல் வாரிசு கலைஞர் கருணாநிதி அனைத்து பல்லவன் பஸ்களிலும் திருக்குறளை பதிவுசெய்தார்.
அதற்கெல்லாம் முன்னார் கல்லக்குடி என்ற இடத்தின் பெயரை டல்மியாபுரம் என மாற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கலைஞர் ரயில் மறியல் போராட்டம்கூட நடத்தினார்.
அவர் ஓடாமல் தரித்து நின்ற ரயில் முன்னால்தான் அமர்ந்தார் என்று ஒரு குண்டைத் தூக்கிப்போட்டார் கவியரசு கண்ணதாசன். இந்த அரிய தகவல் கவியரசரின் வனவாசம் சுயசரிதை நூலிலும் பதிவாகியிருக்கிறது.
இது பற்றி ஒரு சந்தர்ப்பத்தில் முதல்வர் ஜெயலலிதாவும் தமிழக
சட்டசபையில் கிண்டலாக நினைவுபடுத்தியதையடுத்து, குறிப்பிட்ட வனவாசம் பிரதிகளை மேலும் அச்சிட வேண்டிய தேவை கண்ணதாசன் பதிப்பகத்திற்கு உருவாகியது.
இவ்வாறு எதற்கும் தமிழை முன்னிலைப்படுத்திய தி. மு. கழகம் தமிழக மக்களிடமிருந்தும் ஊடகங்களிடமிருந்தும் சரியான நல்ல தமிழை எதிர்பார்க்க முடியாது போய்விட்டது. சமகால தமிழக தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் – தொகுப்பாளினிகளுக்கு இது சமர்ப்பணம்.
இலங்கையில் சிங்கள மக்கள் பெரும்பான்மையினத்தவர்களாக இருந்தபோதிலும், நல்ல தமிழ் பேசப்பட்டது. எழுதப்பட்டது.
தமிழகத்தில் டாக்டர் பட்டம் பற்றி பேசப்பட்டபோது, இலங்கையில் கலாநிதி பட்டம் என்று சொல்லப்பட்டது.
தமிழகத்தில் தர்ணா – ஹர்த்தால் எனச்சொல்லப்பட்டபோது, இலங்கையில் சத்தியாக்கிரகம் என்று பேசப்பட்டது.
இந்தப்போராட்டங்களில் தரையில் அமர்ந்துதான் மக்கள் குரல் எழுப்புவார்கள். மௌனப்போராட்டம் என்றால் வாயில் கறுப்புத்துணி அணிந்து தரையில் அமர்ந்து அமைதி காப்பார்கள்.
இந்தியாவில் அகில இந்திய காங்கிரஸ் மேடைகளிலும் உண்ணா விரதப்போராட்டங்களின்போதும் தலைவர்கள் தரையில் அமர்ந்திருப்பதை பார்த்திருப்பீர்கள்.
அதுபோன்று தமிழக அரசியல் தலைவர்களையும் தரையில் பார்த்திருப்பீர்கள். இவ்வாறு தரையில் அமர்ந்த கலைஞரும் மக்கள் திலகமும் அரியாசனத்திற்கு வந்தபின்னர் எதிரும் புதிருமானார்கள். கவியரசர் இவர்களுக்கு மத்தியிலிருந்து எழுத்தில் சித்து விளையாட்டுக்காண்பித்தார்.
அங்கு தரையில் அமர்ந்து போராடுவதை தர்ணா என்கிறார்கள். இது வடசொல்.
சத்தியாக்கிரகத்தை ஹர்த்தால் என்பார்கள். இதுவும் வடசொல்தான் !
இந்தப்பதிவில் இந்தத் தரையில் அமர்தல்பற்றி பேசவேண்டி நேர்ந்தமைக்கு, எனது வாழ்நாளில் முதல் தடவையாக சென்னையில் 1984 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் தீபம் இதழ் அலுவலகத்தில் நாம் தரையில் அமர்ந்து இலக்கியம் பேசியது பற்றி சொல்வதற்கான முன்னோட்டம்தான் காரணம்.
அன்றையதினம் நண்பர் காவலூர் ஜெகநாதனின் ஏற்பாட்டில்
அங்கு எனக்கு ஒரு வரவேற்புக்கூட்டம் நடந்தது.
தீபம் அலுவலகத்தின் தரையில் ஒரு நீளமான கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. இலக்கிய விமர்சகர் தி. க. சிவசங்கரன் ( தி. க.சி ) நடுநாயகமாக அமர்ந்திருந்தார். அவரது கரத்தில் எனது முதலாவது கதைத் தொகுதி சுமையின் பங்காளிகள் நூல்.
சுவரோடு சாய்ந்து அமர்ந்தவர்கள், அக்காலப்பகுதியிலேயே மிகுந்த கவனத்திற்குள்ளாகியிருந்த இலக்கியவாதிகள் அசோகமித்திரன், ராஜம் கிருஷ்ணன், தொ. மு. சி .ரகுநாதன், ஜெயந்தன், சா. கந்தசாமி, சோ. சிவபாத சுந்தரம், சிட்டி சுந்தரராஜன். இவர்களுடன் ஈழத்து எழுத்தாளர்கள் மு. கனகராசன், க. நவம், கணபதி கணேசன், மற்றும் காவலூர் ஜெகநாதனும் நானும்.
தி. க. சி. எப்போதும் இளம் தலைமுறை படைப்பாளிகளின் படைப்புகளை படித்து ஊக்கமளிப்பவர். தமிழக
சிற்றிதழ்களில் இளம் எழுத்தாளர்களின் படைப்புகளை கண்ணுற்றவுடன், அவற்றை படித்துவிட்டு தனது ரசனைக்குறிப்புகளை தபாலட்டையில் எழுதி அனுப்பிவிடுவார்.
இதனால், சில மோதவி எழுத்தாளர்கள் அவரை அஞ்சலட்டை எழுத்தாளர் என்றும் கிண்டலாக வர்ணித்தார்கள். தி. க.சி மட்டுமல்ல வல்லிக்கண்ணனும் அத்தகைய இயல்புகளுடனேயே இறுதிவரையில் வாழ்ந்து மறைந்தவர்தான். வல்லிக்கண்ணன் எமது ஈழத்து எழுத்தாளர்கள் சிலருக்கு எழுதிய கடிதங்களை நான் முன்னர் பார்த்திருக்கின்றேன்.
அன்றைய தினம் விமர்சகர் தி.க. சி, என்னையும் ஒரு பொருட்டாக மதித்து, எனது முதல் கதைத் தொகுப்பிலிருந்த கடலை அண்டி வாழ்ந்த மக்கள் பற்றிய கதைகளை சிலாகித்துப்பேசினார்.
ராஜம் கிருஷ்ணனும் மீனவ மக்களைப்பற்றி அலைவாய்க்கரையில் என்ற நாவலை ஏற்கனவே எழுதியிருந்தார். அவர் மச்சம் மாமிசம் சாப்பிடாத பிராமணர் சமூகத்தைச்சேர்ந்தவர். அவர் கள ஆய்வு செய்தே தனது நாவல்களை எழுதியிருப்பவர்.
எனது சுமையின் பங்காளிகள் 1975 இல் வௌியானதையடுத்து,
நண்பர் பத்மநாப அய்யர், அதில் சில பிரதிகள் எடுத்துச்சென்று தமிழக எழுத்தாளர்களிடம் கொடுத்திருக்கிறார்.
ஆராய்ச்சி என்ற இலக்கிய விமர்சன காலாண்டிதழை நடத்தியவரான பேராசிரியர் நா. வானமாமலை, எனது கதைகளையும் அலைவாய்க்கரையில் நாவலையும் ஒப்பிட்டு மல்லிகையில் சிறிய வாசகர் கடிதக்குறிப்பும் எழுதியிருந்தார்.
அது எனக்கு வசிட்டர் வாயால் விசுவாமித்திரருக்கு கிடைத்த பிரம்மரிஷி புகழாரம் போன்றிருந்தது. அந்த மல்லிகைக்குறிப்பில், அவர் அந்தத் தொகுதி பற்றி தமிழக தாமரை இதழிலும் எழுதவிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், எனக்கு அந்தத் தாமரை இதழ் படிக்கக் கிடைக்கவில்லை.
தி.க.சி. எனது கதைகள் பற்றிச்சொல்லச்சொல்ல தரையில் அமர்ந்திருந்த அனைவரும் கேட்டுக்கொண்டிருந்தனர். எனது ஏற்புரை வந்தபோது, “ அத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள தரையும் தாரகையும் சிறுகதை, இங்கிருக்கும் நண்பர் மு. கனகராசன் ஆசிரியர் பொறுப்பிலிருந்த காலப்பகுதியில் வெளியான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் புதுயுகம் பத்திரிகையில் வெளியானது என்ற தகவலையும் மறக்காமல் சொன்னேன்.
அந்தச் சந்திப்பிற்கு முன்னரே அசோகமித்திரனை யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் 1976 இல் நடந்த தமிழ் நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கில் சந்தித்திருக்கின்றேன். வளாகத்தலைவர் பேராசிரியர் கைலாசபதியின் பிரத்தியேக அறையில், மதிய இடைவேளையின்போது பேட்டிகண்டு மல்லிகையிலும் எழுதியிருந்தேன்.
ராஜம்கிருஷ்ணனும் ரகுநாதனும் 1983 தொடக்கத்தில் பாரதி நூற்றாண்டு நிகழ்வுகள் நடந்தபோது பேராசிரியர் எஸ்.
ராமகிருஷ்ணனுடன் இலங்கை வந்திருந்தார்கள். இவர்கள் மூவருடனும் இலங்கையில் பல பாகங்களுக்கும் சென்றிருக்கின்றேன். விமான நிலையத்தில் வரவேற்றும் பின்னர் வழியனுப்பியும் வைத்திருக்கின்றேன்.
சோ. சிவபாதசுந்தரம் இலங்கையில் வடபுலத்தில் வெளியான ஈழகேசரி பத்திரிகையில் ஆசிரியராகப் பணியாற்றியவர். இலங்கை வானொலியிலும் அவர் குறிப்பிடத்தகுந்த இடத்தில் இருந்தவர். லண்டன் பி.பி.சி. தமிழ் நிகழ்ச்சிக்கு தமிழோசை என்ற பெயரை சூட்டியவர். இன்றும் அதே பெயரில்தான் அந்தச்சேவை அழைக்கப்படுகிறது.
இவ்வாறு இலக்கியத்திலும் ஊடகங்களிலும் பல சாதனைகளை புரிந்தவர்கள் மத்தியில் நான் அன்று சிறு துரும்பாக அமர்ந்திருந்தேன்.
அவர்கள் இளம் தலைமுறை ஈழத்து படைப்பாளியை நேரில் வந்து பார்த்தது மட்டுமன்றி, இலங்கை நிலவரங்களையும் கேட்டறிந்தனர்.
நான் வீரகேசரியில் அக்காலப்பகுதியில் ஒப்புநோக்காளராக இருந்தமையால், ஏராளமான செய்திகள் எனது கண்களை கடந்தும் சென்றிருந்தன.
1983 கலவரம் எங்கிருந்து தொடங்கியது முதல், வெலிக்கடை படுகொலை மற்றும் அவற்றுக்கெல்லாம் ஊற்றுவாயாகவிருந்த திருநெல்வேலி பரமேஸ்வரா சந்தியில் நடந்த இராணுவத்தினர் மீதான கண்ணிவெடித்தாக்குதல், கொழும்பில் கொல்லப்பட்ட முக்கியமான நபர்கள், அகதி முகாம்கள், இடப்பெயர்வு வலிகள் பற்றியெல்லாம் நான் அறிந்தவற்றையும் செய்திகளில் வெளியானவற்றையும் அவர்களுக்குச் சொன்னேன்.
குறிப்பிட்ட பரமேஸ்வராச்சந்தியில் ஒரு சிறிய கடை இருக்கிறது. நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கு நடந்தபோது நான் நண்பர் பேராசிரியர் நுஃமானின் அறையில்தான் தங்கியிருந்தேன். அவர் என்னையும் அசோகமித்திரனையும் அந்தக்கடைக்கு அழைத்துச்சென்று குளிர்பானம் வாங்கித்தந்தார்.
அப்போது கைலாசபதி தனது இரண்டு
பெண்குழந்தைகளையும் தமது மஞ்சள் நிற வொக்ஸ்வேகன் காரில் அழைத்து வந்து தனக்கு சிகரட் வாங்கினார்.
காரிலிருந்த அவரது குழந்தைகள் “ நுஃமான் மாமா “ என்று உரத்து குரல் எழுப்பினர். நானும் அசோகமித்திரனும் அவர்களுக்கு கையசைத்து சிரித்தோம்.
இந்தக்காட்சி இன்றளவும் எனது மனதில் பதிந்திருக்கிறது. அவ்விடத்தில்தான் அந்த தாக்குதல் சம்பவம் நடந்தது என்று நான் சொன்னதும், நண்பர் அசோக மித்திரன் ஒரு கணம் முன்னால் நகர்ந்து வந்துவிட்டு, பெருமூச்சுவிட்டவாறு மீண்டும் சுவரில் சாய்ந்தார்.
அக்காலப்பகுதியில் இலங்கையில் மிகுந்த கவனிப்புக்குள்ளான மூத்த பத்திரிகையாளர் காமினி நவரட்ண ஆங்கிலத்தில் அன்றைய அரசின்
அடாவடித்தனங்ளை ஊடகங்களில் எழுதிக்கொண்டிருந்தார்.
சிங்கள பேரினவாதிகளை அவரது எழுத்துக்கள் கடுப்பேற்றிக்கொண்டிருந்தன.
தமிழில் அரசியல் விமர்சன ஆய்வுகள் எழுதப்பட்டு ஊடகங்களில் வெளிவந்தால், அது அந்த பேரினவாதிகளுக்கு பிரச்சினையே இல்லை. அவற்றை தமிழர்கள்தான் படிப்பார்கள். ஆனால், ஆங்கிலம் வாசிக்கும் சிங்களவர்களிடமும் வெளிநாட்டு தூதரகங்களிடமும் அவை சென்றால், அதன் விளைவு எப்படி இருக்கும்..? என்பது அந்த இனவாதிகளுக்குத் தெரியும்.
அதனால் ஒரு கட்டத்தில் காமினி நவரட்ணாவை, “ நீ… காமினி நவரட்ணாவா..? அல்லது காமினி நவரத்தினமா..? “ என்றும் கிண்டலாகப் பேசினார்கள்.
இந்த தகவல்களையும் அன்றைய சந்திப்பில் அவர்களிடம் விபரித்தேன்.
பின்னாளில் காமினி நவரட்ணா என்ற சிறந்த பத்திரிகையாளர் இயற்கை மரணம் எய்தினார்.
ஆனால், தராக்கி சிவராம், லசந்த விக்கிரமதுங்க ஆகியோர் கொல்லப்பட்டனர். எக்னெலியகொட காணமலாக்கப்பட்டார்.
இக்பால் அத்தாஸ், டீ. பீ. எஸ். ஜெயராஜ் போன்ற மேலும் பல ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டே சென்றனர்.
சிங்கள இனவாதிகளின் அச்சுறுத்தல் மட்டுமல்ல தமிழ்
இயக்கங்களின் அச்சுறுத்தலும் பல தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நேர்ந்துள்ளது. அவ்வாறு உயிர் அச்சம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய பல ஊடகவியலாளர்களின் நீண்ட பட்டியலும் இருக்கிறது.
தீபம் அலுவலகத்தில் நடந்த அந்தச்சந்திப்பையும் எனது எழுத்துலக வாழ்வில் என்றைக்கும் மறக்க முடியாது. அன்று நடந்த சந்திப்பில் கலந்துகொண்டவர்களில் தற்போது எஞ்சியிருப்பவர்கள் நானும் கனடாவில் வதியும் எழுத்தாளர் நவமும் மாத்திரம்தான்.
அச்சந்திப்பில் நான் சந்தித்த அனைத்து இலக்கிய ஆளுமைகள் பற்றியும் ஏற்கனவே தனித்தனியாக அஞ்சலிக்குறிப்பு கட்டுரைகள் எழுதிவிட்டேன்.
இந்தப்பதிவின் மூலம் நான் சொல்லும் செய்திதான் இங்கு முக்கியம். அன்று அந்த மூத்த தலைமுறை எழுத்தாளர்கள்,எவ்வாறு இளம் தலைமுறை படைப்பாளிகளை அரவணைத்து வளர்த்தெடுத்தார்கள். இளம் இரத்தங்களுக்கு ஊட்டச்சத்து வழங்கினார்கள் என்பதுதான் அச்செய்தி.
அந்த ஆளுமைகளிடம் அன்று கற்றதையும் பெற்றதையும்தான் இன்று எனது பணிகளிலும் காண்கிறீர்கள்.
இன்றும் எனக்கு உலகின் எங்காவது ஒரு மூலையிலிருந்து மூத்த – இளம் தலைமுறை படைப்பாளிகள் தங்கள் புதிய வரவுபற்றி தெரிவித்து, மூலப்பிரதியையோ, அல்லது அச்சுப்பிரதியையோ அனுப்புவார்கள்.
முடிந்தவரையில் நேரம் ஒதுக்கி அவற்றைப்படித்துவிட்டு பதிலும், படித்தோம் சொல்கின்றோம் என்ற தொடரும் எழுதிக்கொண்டிருக்கின்றேன்.
இதுவரையில் நூறுக்கும் மேற்பட்ட நூல்கள் பற்றி எனது வாசிப்பு அனுபவம் சார்ந்த மதிப்பீட்டை எழுதியிருக்கின்றேன். எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்திவரும் வாசிப்பு அனுபவப்பகிர்விலும் மெல்பன் வாசகர் வட்டத்தின் சந்திப்புகளிலும் கலந்துகொள்கின்றேன்.
உலகில் எங்கிருந்தாவது சிற்றிதழ்களோ, இலக்கிய நூல்களோ எனது வீட்டு வாசலுக்கு அல்லது எனது கணினிக்கு வந்துகொண்டிருக்கின்றன.
இதுவும் ஒருவகையில் பணிச்சுமைதான். எனினும் இந்தச்சுமையும் சுகமான அனுபவம்தான்.
இவ்வாறு நான் மறைந்த ஆளுமைகள் பற்றியும் படித்த நூல்களை பற்றியும் எழுதிககொண்டிருக்கும்போது, நான்
சிறுகதைகள் எழுதுவதை தவிர்த்துவிட்டேன். அதனால், படைப்பு இலக்கியத்திலிருந்து வெகு தூரம் சென்றுவிட்டேன் என்ற குரல்களும் ஒலிக்கத்தொடங்கின.
இதுபற்றி மெல்பனுக்கு வருகை தந்த தமிழக எழுத்தாளர் எமது அருமை நண்பர் திரு. முத்துக்கிருஷ்ணனிடம் சொன்னேன். அவர் என்னைத்தேடி நான் வசிக்கும் புறநகருக்கே வந்தார்.
“ எவ்வளவு எழுதினோம் என்பது முக்கியமில்லை. எத்தனை எழுத்தாளர்களை – வாசகர்களை உருவாக்கினோம் என்பதுதான் மிக மிக முக்கியம். நண்பரே… சொல்பவர்கள் சொல்லட்டும்…. நீங்கள்தான் உங்கள் எழுத்தையும் இலக்கிய வாழ்வையும் தீர்மானிக்கப்போகிறவர் “ என்றார்.
எழுத்தாளர்கள் அல்லாத தேர்ந்த வாசகர்களை சந்தித்து, அவர்கள் எவ்வாறு வாசகர்களானார்கள், அவர்தம் ரசனை எவ்வாறு மாறிவந்திருக்கிறது என்பதை பதிவுசெய்யும் “வாசகர் முற்றம் “ என்ற தொடரையும் எழுதிவருகின்றேன்.
என்னைத் தொடர்ந்தும் சிறுகதைப்படைப்பாளியாக பார்க்க விரும்புபவர்களையும் எனது இலக்கி நட்பு வட்டத்திலிருந்து விட்டு விடலாகாது அல்லவா..?
அதனால், “ நீங்கள் கேட்டதையும் தருகின்றேன்… “ என்று சொல்லாமல் சொல்லி, எனது கதைத் தொகுப்பின் கதை நூலை அடுத்த மாதம் வெளியிடுகின்றேன்.
இந்நூல் யாழ்ப்பாணம் அல்வாயிலிருந்து வெளிவரும் ஜீவநதி இலக்கிய இதழின் வெளியீடாக வருகின்றது. அதன் ஆசிரியர் எனது அருமை இலக்கிய சகோதரன் கலாமணி பரணீதரன் வெளியிடுகிறார்.
இந்தப்பதிவை நான் எழுதிக்கொண்டிருக்கும்போது, அமெரிக்காவிலிருந்து எனது இலக்கியத்தோழர் , விமர்சகர் கலாநிதி ரவீந்திரன், ஜீவநதி ஆசிரியர் பரணீதரனின் முகநூலில், வெளிவரவுள்ள எனது புதிய கதைத் தொகுதி ( ஏழாவது கதைத் தொகுதி ) கதைத் தொகுப்பின் கதை நூல் வெளிவரவிருக்கும் செய்தி வந்திருப்பதாக அந்த
இணைப்பினை அனுப்பியிருந்தார்.
உடனே அவருக்கு “ யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே “ என்று முகநூல் கணக்கு இல்லாமல் முகவரியை மாத்திரம் வைத்துக்கொண்டு காலத்தை ஓட்டும் நான் பதில் எழுதினேன். அன்று, 37 வருடங்களுக்கு முன்னர் தீபம் அலுவலகத்தில் தரையில் அமர்ந்திருந்தவாறு அந்த ஆளுமைகளால் நான் ஏற்றுக்கொள்ளப்பட்டதை இப்போதும்
நினைத்துப்பார்க்கின்றேன்.
“ கடந்து வந்த பாதையை மறப்போமேயானால் செல்லும் பாதையும் இருட்டாகும் “ என்பது எனது எழுத்துலக வாழ்வின் அரிச்சுவடி.
( தொடரும் )
letchumananm@gmail.com
No comments:
Post a Comment