.
தனது ஒப்பற்ற நடிப்பாற்றலால் தமிழ் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்தவர் சாவித்திரி. சிவாஜிக்கு கிடைத்த நடிகர் திலகம் என்ற பட்டத்தை போல் நடிகையர் திலகம் என்ற பட்டத்தை சுவீகரித்துக் கொண்டவர் இவர். பல வெற்றி படங்களில் நடித்த சாவித்திரி 1971 ஆம் ஆண்டு பிராப்தம் என்ற படத்தை இயக்கி அதில் நாயகியாக நடிக்க தீர்மானித்தார். தெலுங்கில் வெளிவந்து வெற்றி பெற்ற முகாமனசுலு என்ற படத்தை தமிழில் சிவாஜியின் நடிப்பில் தயாரிக்க தொடங்கினார். சாவித்திரி இதற்குமுன் தயாரித்து இயக்கிய குழந்தை உள்ளம் படத்தில் ஜெமினிஜையும் சவுகார் ஜானகியை யும் நடிக்க வைத்தார். ஆனால் இம்முறை ஜெமினியை தவிர்த்து சிவாஜியின் நடிப்பில் படத்தை உருவாக்க முனைந்தார். படத்தின் கதை தமிழில் எடுபடாது என்று ஜெமினி கூறிய ஆலோசனையை அவர் செவிமடுக்கவில்லை.
படத்தின் கதாநாயகி ஒரு கல்லூரி மாணவி இந்த வேடத்திற்கு நீங்கள் பொருந்த மாட்டீர்கள் என்று படத்துக்கு வசனம் எழுத வந்த மா லட்சுமணன் கூற படத்தில் இருந்து அவரை நீக்கிவிட்டு ஆரூர்தாசை வசனம் எழுத அமர்த்தினார் சாவித்திரி .
ஜமீன்தார் மகளான ராதா பட போட்டியான கண்ணனின் படகில் தினமும் கல்லூரி சென்று வருகிறாள். கண்ணன் மீது ராதாவிற்கு காதல் உருவாகிறது . ஆனால் அவளுடன் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவனை கல்யாணம் செய்யும் படியான சூழ்நிலை ராதாவுக்கு ஏற்படுகின்றது. ஆனால் குறுகிய காலத்துக்குள் ராதா விதவையாகி மீண்டும் கிராமத்திற்கு வருகிறாள். அவள் நிலை கண்டு கண்ணன் வேதனைப்படுகிறான். ஆனால் ஊரார் கண்ணன் ராதாவை தொடர்புபடுத்தி கதை பேசுகிறார்கள்.
இப்படி அமைந்த படத்தின் கதையில் சாவித்திரி உணர்ச்சிகரமான பாத்திரமாக மாறி நடித்திருந்தார். ஆனால் கல்லூரி மாணவி வேடம் அவருக்கு பொருந்தவில்லை அத்துடன் ஸ்ரீகாந்த் அவளுக்கு கணவனாக வந்ததையும் ரசிகர்களால் சகிக்க முடியவில்லை. படத்தில் இவர்களுடன் ரங்கராவ் , நம்பியார், சந்திரகலா, நாகேஷ் சி கே சரஸ்வதி ஆகியோரும் நடித்திருந்தனர். சந்திரகலாவின் துடிப்பான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. நம்பியாரின் வில்லத்தனத்திற்கு துணைபோபவராக நாகேஷ் வருகிறார்.
படத்தில் மறக்க முடியாத அம்சம் பாடல்கள்தான் கண்ணதாசன் எம் எஸ் விஸ் வநாதன் கூட்டணியில் உருவான சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து, தாலாட்டு பாடி தாயாக வேண்டும் ஆகிய பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தன. ராதாவிற்கு கண்ணன் மேல் ஏற்பட்ட மானசீக காதல் அவர்கள் இறந்து மறு பிறப்பு எடுத்து இணைவதில் முழுமை பெறுகிறது.
மகாபாரதத்தில் கூறப்படும் ராதா கண்ணன் உறவை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதையும் உருவாக்கப்பட்டது என்றும் கருதலாம். ஆனாலும் பிராப்தம் படம் ஏற்படுத்திய தோல்வி சாவித்திரி என்ற மகா நதியை நிலைகுலைய வைத்தது. அவரின் பிராப்தம் அவ்வளவுதான்.
No comments:
Post a Comment