அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் எதிர்வரும் 20 ஆம் திகதி நடத்தவுள்ள இணையவழி காணொளி நினைவரங்கு



அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்,  கலை, இலக்கியம், கல்வி,  இதழியல், சமூகம் மற்றும் வானொலி ஊடகத்துறை  சார்ந்து பணியாற்றி,   அவுஸ்திரேலியாவில் முன்னர் மறைந்த தமிழ் ஆளுமைகளை நினைவுகூரும் அரங்கினை எதிர்வரும் 20 ஆம் திகதி  20-06-2021  ) ஞாயிறு – இரவு 7-00 மணிக்கு     ( அவுஸ்திரேலியா – மெல்பன் நேரம் ) இணையவழி காணொளியூடாக நடத்தவிருக்கிறது.

சங்கத்தின்  தலைவர்  மருத்துவர் ( திருமதி ) வஜ்னா ரஃபீக் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியை எழுத்தாளரும், சங்கத்தின் துணை நிதிச்செயலாளருமான               திரு. லெ. முருகபூபதி ஒருங்கிணைத்துள்ளார்.

இந்தத் தொடர் அரங்கின் முதலாவது அங்கம் கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி நடந்தவேளையில்,  ஏற்கனவே அமரத்துவம் எய்திய  எழுத்தாளர்கள்   எஸ். பொன்னுத்துரை , நித்தியகீர்த்தி, காவலூர் இராஜதுரை,  கலாநிதிகள்  வேந்தனார் இளங்கோ,                    ஆ. கந்தையா,  பேராசிரியர்கள்  பொன். பூலோகசிங்கம், கைலாசநாதக் குருக்கள் ஆகியோரின் வாழ்வும் பணிகளும் தொடர்பான நினைவுரைகள் நிகழ்த்தப்பட்டன.

இந்தத் தொடர் அரங்கின் இரண்டாவது அங்கம் எதிர்வரும் 20 ஆம் திகதி  இடம்பெறவுள்ளது. 

இவ்வரங்கில்  ஓவியர் கே.ரி. செல்வத்துரை பற்றி அவரது பேரனும் இசைக்கலைஞருமான திரு. அர்ஜுனன் புவீந்திரன் உரையாற்றுகிறார்.

ஓவியர் செல்வத்துரை இலங்கையிலும்,  புகலிடம்பெற்ற அவுஸ்திரேலியாவிலும் புகழ்பெற்றவர்.  அத்துடன் ஒளிப்படக் கலைஞருமாவார். 

நாம் இன்றும் ஊடகங்களிலும்  தமிழ்ப்பாட நூல்களிலும் காணும் நவாலியூர் சோமசுந்தரப்புலவர், மற்றும் யோகர் சுவாமிகளின் படங்களை அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே தமது  ஒளிப்படக்கருவியால் பதிவுசெய்த  கலைஞருமாவார். அவரது ஓவியக்கண்காட்சிகள் முன்னர் மெல்பனில் நடந்துள்ளன. 

கலைவளன் சிசு. நாகேந்திரன் பற்றிய நினைவுரையை அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நடப்பாண்டு துணைத்தலைவர் திரு. மணியன் சங்கரன் நிகழ்த்துவார்.  சிசு. நாகேந்திரன், இலங்கையில் குத்துவிளக்கு, நிர்மலா முதலான திரைப்படங்களிலும் நடித்தவர். அத்துடன் நாடக, கூத்து கலைஞருமாவார்.    அந்தக்காலத்து யாழ்ப்பாணம், பிறந்த மண்ணும் புகலிடமும்,  தமிழ் – ஆங்கிலம் மொழிமாற்று அகராதி முதலான நூல்களையும் எழுதியவர். இந்த அரங்கை நடத்தும்  சங்கத்தின் தலைவராகவும், காப்பாளராகவும் முன்னர் இயங்கியவர்.

இலங்கையில்  கல்விப்பணிக்கு தமது வாழ்நாளை அர்ப்பணித்தவரும் இந்திய தத்துவ ஞானம் என்ற அரிய நூலை எழுதியவருமான வித்தியாதிபதி கி. இலக்‌ஷ்மண அய்யர், அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னர் மறைந்தவர்.

தமிழ் ஊடகங்களில் எழுத்துப்பிழைகள், கருத்துப்பிழைகள் நேர்ந்துவிடாதிருக்கவேண்டும் என தொடர்ந்து தமது கட்டுரைகள் வாயிலாக வலியுறுத்தி வந்திருப்பவர்.

அவர் மறைந்த பின்னர் வெளியான அவரது கட்டுரைகள் அடங்கிய நூல் சிப்பிக்குள் முத்து அவுஸ்திரேலியாவில் வெளியிடப்பட்டது. அன்னாரைப்பற்றிய நினைவுரையை  யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளரும் தற்போது கனடாவில் வசிப்பவருமான இலக்கிய திறனாய்வாளர் கலாநிதி நா. சுப்பிரமணிய அய்யர் நிகழ்த்துவார்.

இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றியவரும் அவுஸ்திரேலியாவுக்கு முதல் முதலில் புகலிடம்பெற்று வந்த தமிழ் சமூகத்தினரின் ஞானத்தந்தையாக விளங்கியவருமான பேராசிரியர் சி. ஜே. இலியேஸர்,  மெல்பன்               3 E A  வானொலியின் தமிழ் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் இயங்கியவர். அத்துடன் விக்ரோரியா இலங்கைத் தமிழ்ச்சங்கம்,  அவுஸ்திரேலிய தமிழ்ச்சங்கங்களின் சம்மேளனம் ஆகியனவற்றின் ஸ்தாபகத் தலைவராகவும் பணியாற்றியவர்.

அவுஸ்திரேலியாவில் ,  இலங்கைத்தமிழர்களின் உரிமைகள் , நலன்கள் தொடர்பாக நடந்த பல்வேறு மாநாடுகள், கருத்தரங்குகளிலும் பங்கேற்றவர்.

இவர் பற்றிய நினைவுரையை, விக்ரோரியா இலங்கைத் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவரும் சமூகப்பணியாளருமான மருத்துவ கலாநிதி இராஜன் இராசையா நிகழ்த்துவார்.

இலங்கை வானொலி, லண்டன் பி. பி.சி. தமிழோசை முதலானவற்றில் முன்னர் பணியாற்றியவரும், இலங்கை நாடாளுமன்றில் முன்னர் சமகால மொழிபெயர்ப்பாளராக இயங்கியவருமான   ‘ சுந்தா  ‘  சுந்தரலிங்கம், இலங்கை வானொலி கலையகத்தில் சிறந்த நாடகக்கலைஞராகவும் விளம்பர அறிவிப்பாளராகவும்  மிளிர்ந்தவர்.

அப்பல்லோ விண்கலம் சந்திரனில் தரையிறங்கிய வேளையில் அந்த உலகசாதனை பற்றி வானொலிகளில்  விவரணச்சித்திரம் வழங்கி, அன்றைய அமெரிக்க ஜனாதிபதியால் சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டவர்.  அன்று முதல்   “ அப்பல்லோ  “ சுந்தா எனவும் அழைக்கப்பட்டவர்.

சிட்னிக்கு வந்தபின்னரும் வானொலி ஊடகத்துடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர். இவர் தமது வானொலி ஊடக அனுபவம் சார்ந்து எழுதிய மனவோசை நூல் குறிப்பிடத்தகுந்தது.

சுந்தா – சுந்தரலிங்கம் பற்றிய நினைவுரையை சிட்னியில் வதியும் எழுத்தாளரும், ஊடகவியலாளரும் தமிழ் அவுஸ்திரேலியன் இதழின் முன்னாள் ஆசிரியருமான  சட்டத்தரணி கலாநிதி ( திருமதி ) சந்திரிக்கா சுப்பிரமணியம் நிகழ்த்தவுள்ளார்.

புகழ்பெற்ற கட்டிடக்கலைஞரும், குத்துவிளக்கு -  ஈழத்து திரைப்படத்தின் தயாரிப்பாளருமான  வி. எஸ். துரைராஜா, சிறந்த சமூகப்பணியாளருமாவார்.

இலங்கையில் நடந்த தமிழராய்ச்சி மாநாடு மற்றும் தமிழ் அகதிகள் புனர் வாழ்வுக்கழகம் முதலானவற்றின் பணிகளில் பங்கேற்றவர்.

யாழ் . பொது நூலகம் 1981 ஆம் ஆண்டு எரிக்கப்பட்டதன் பின்னர், அதன் புனர் நிர்மாணப்பணிகளுக்காகவும் ஆக்கபூர்வமாக உழைத்தவர்.  யாழ். பொது நூலகம் குறித்த ஆவணப்பதிவொன்றையும் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார்.

அன்னாரைப்பற்றிய நினைவுரையை  அவுஸ்திரேலியத்  தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் உறுப்பினரும், ஆங்கிலத்திலும், தமிழிலும் இலக்கியப்பிரதிகள் எழுதிவருபவருமான திருமதி சகுந்தலா கணநாதன் நிகழ்த்துவார்.

சிட்னியில் தமிழ் நூலகம் அமைப்பதில் பல வருடங்களுக்கு முன்னர் பாடுபட்ட  கலாநிதி வே. இ. பாக்கியநாதன்,  தமிழ் நூலகம்  தொடர்பாக வழிகாட்டும் கைநூலும் எழுதியவர். சிட்னியிலிருந்து வெளியான கலப்பை இதழில் எழுத்தின் கதை என்ற தலைப்பில் கல்லிலிருந்து கணினி வரையில்  தமிழ் எழுத்தின் வரிவடிவத்தில் நேர்ந்த  மாற்றத்தையும் வளர்ச்சியையும்  ஆய்வுக்கண்ணோட்டத்தில் எழுதியவரான   கலாநிதி வே. இ . பாக்கியநாதன் ,  தொடர்ந்தும் பல ஆய்வுக்கட்டுரைகள் எழுதியவர்.

இவர்பற்றி சிட்னியில் வதியும் எழுத்தாளரும் வானொலி ஊடகவியலாளருமான திரு. கானா. பிரபா நினைவுரையாற்றுவார்.

அவுஸ்திரேலியா  மெல்பனில் ஒன்றியத்தமிழர் தோழமை என்ற அமைப்பினை தொடக்கியவரும்,  தமிழ் உலகம் Tamil World ஆகிய பத்திரிகைகளின் நிருவாக ஆசிரியராக விளங்கியவருமான மருத்துவர் பொன். சத்தியநாதன், தீவிர தமிழ்ப்பற்றாளர்.

கணினியில் தமிழ் உருபுகள் தொடர்பாக ஆய்வுகளையும் மேற்கொண்ட சத்தியநாதன், சிறந்த சமூகப்பணியாளராகவும் விளங்கியவர்.

விக்ரோரியா ஈழத்தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவரான சத்தியநாதன் பற்றி திரு.  நவரத்தினம் இளங்கோ உரையாற்றுவார்.

எழுத்தாளரும், சமூகப்பணியாளருமான திருமதி அருண். விஜயராணி,  அவுஸ்திரேலியா தமிழர் ஒன்றியத்தின் வெளியீடான அவுஸ்திரேலியா முரசு இதழின் ஆசிரியராகவும் இயங்கியவர். கன்னிகா தானங்கள் நூலுருவில் வெளிவந்த இவரது முதல் கதைத் தொகுதி. 

அருண். விஜயராணியின் சிறுகதைகள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது சிறுகதைகள், நாடகங்கள், ஒலிச்சித்திரங்கள் என்பனவும் வான் அலைகளில் பரவியுள்ளன.

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஆகியனவற்றிலும் தலைவராக பணியாற்றியவர்.

அருண். விஜயராணி பற்றிய நினைவுரையை மெல்பன் பல்கலைக்கழக மாணவி செல்வி  மோஷிகா பிரேமதாச  நிகழ்த்துவார்.

விக்ரோரியா தமிழ்ச்சங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு முதலானவற்றில் அங்கம் வகித்து பல்வேறு தமிழர் உரிமைப்போராட்டங்களில்  முன்னணி வகித்தவரும் எழுத்தாளருமான சண்முகம் சபேசன் அவர்கள் மெல்பன் 3 C R  வானொலி தமிழ்க்குரலில் கால் நூற்றாண்டு காலம் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் செய்தியாளராகவும் பணியாற்றியவர்.

ஏராளமான அரசியல் விமர்சன ஆய்வுக்கட்டுரைகளை எழுதி  3 C R  வானொலி தமிழ்க்குரலில் ஒலிபரப்பியிருக்கும் சண்முகம்   சபேசனின் பல கட்டுரைகள் ஆங்கிலத்தில் Tamil Nation ஊடகத்திலும் வெளிவந்துள்ளன.

சண்முகம் சபேசன் எழுதியிருக்கும் காற்றில்  தவழ்ந்த சிந்தனைகள் நூல் மெல்பனில் விரைவில் வெளியிடப்படவிருக்கிறது.  

சண்முகம் சபேசன் பற்றிய நினைவுரையை அவரது நீண்டகால  நண்பரும்  சமூகப்பணியாளருமான திரு. என். விவேகானந்தன் நிகழ்த்துவார்.

 இவ்வரங்கில் பேசப்படவிருக்கும் ஆளுமைகளின் குடும்ப உறவுகள், நண்பர்கள், மற்றும் கலை, இலக்கியம், இதழியல், கல்வி, வானொலி, தன்னார்வத்தொண்டு முதலான துறைகளில் ஈடுபடும் அன்பர்கள்,  உயர் வகுப்பில் தமிழையும் ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்கள், மற்றும் தமிழ் ஆசிரியர்களையும் இந்த இணையவழி  நினைவு அரங்கில் இணைந்துகொள்ளுமாறு அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அன்புடன் அழைக்கின்றது.

இணைவழி விபரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.


Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/88334290335?pwd=dlBDWHZDNXRVQVoybXJyVTEzM2g5Zz09

Meeting ID: 883 3429 0335
Passcode: 158352

----0----

மின்னஞ்சல் :  atlas25012016@gmail.com

 இணையத்தளம் :    www.atlasonline.org

 

 

 

 

 

 

 

                                   

   

         

 

No comments: