'நெடுமரங்களாய் வாழ்தல்' ஆழியாள் கவிதைகள் - கன்பரா யோகன்


கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் வெளிவந்த 'நெடுமரங்களாய் வாழ்தல்' என்னும் ஆழியாள் (மதுபாஷினி)  எழுதி வெளியிட்ட  கவிதைத் தொகுப்பினை

வாசிக்க கிடைத்தனால் ஏற்பட்ட எனது அனுபவத்தை பகிர்ந்து கொள்ள இங்கே முயல்கிறேன்.

 

இந்த தொகுப்பில் 25 கவிதைகளைத்  தொகுத்திருக்கிறார்.  இவற்றுள் சில ஏற்கனவே சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன.

 

‘எனக்குத் தெரிந்தவர்கள்' என்ற தலைப்பிலான கவிதை மனதின் இருமை நிலைகளை, சாதாரண நானும், என்னுள்ளே ஒளிந்துள்ள  மற்றைய  நானும் கொண்டுள்ள பட்டும் படாத உறவை சுவாரஷ்யமாக சொல்கிறது. அந்த ‘நான்’ -க்கு சாதாரண ‘நான்’ சுவாரஷ்யமற்ற பேர்வழியாய்த் தெரியும் முரண் நகையுடன் முடிகிறது கவிதை. 

 

'பின்னைய வாசிப்பு' இத் தொகுப்பில்  இன்னொரு குறிப்பிடத்தக்க கவிதை. காரிய-காரணத்  தொடர்பை  சில அரசியல், வரலாற்று நிகழ்வுகளுடன் கோர்த்து சொல்லப்பட்ட து, குறிப்பாக இந்த வரிகள் ;

 

'நந்திக்கடலில் பின்னால்

அணுவாயுத வல்லரசுகளின்

சதுரங்கப் பலகை அலைகளில்

ஆடிக் கொண்டு கிடக்கிறது'

 

இதை கற்பனையில் காட்சிப்படுத்தினால் இந்தப் படிமத்தின் செறிவு  இன்னும் ஒரு படி கூடுகிறது.

 

முகப்பு அட்டையில் உள்ள புகைப்படத்திற்கும், உள்ளே அதே பெயரிலுள்ள கவிதைக்கும் (தொகுப்பின் தலைப்பும் அதுவே) இடையிலான இணைப்பை புரிந்து கொள்ள எனக்கு கவிதையின் மீள் வாசிப்பு அவசியமானது.

அந்த  புகைப்படமும் அதன் வடிவமைப்பும் என்னை முதலில் ஈர்த்தது. எரிந்து  போன மரங்களிலிருந்து துளிர்த்தெழும் இளங்குருத்துக்கள்.

சுற்றிலும் நிகழும் தன்னை மீறிய  மாற்றங்களை அமைதியாக  பார்த்திருக்கும் நெடுமரங்கள்

 

"வித விதமான வெயிற் பூக்களை

அள்ளிச் செல்வோர் இல்லை"

………..

" சில் வண்டுகளின்

அபார இசை விருந்துக்கோ

கூட்டங்களும், பாராட்டுக்களும்

பதக்கங்களும் இல்லை"

 

என்ற ஆதங்கம் தொனிக்கும் வரிகள். 

 

தொகுப்பிலுள்ள முதலாவது கவிதை 'உப்பு',  இயற்கை நிகழ்த்தும் இடையறாத நிகழ்வுகளுக்கிடையிலுள்ள நிச்சயத்தை சொல்லி முடிவில் போர் மீதுள்ள வெறுப்பை நிச்சயமாக எந்த தாயும் எக்காலத்திலும் கொண்டிருப்பாள்  என்பதை அழுத்திச் சொல்கிறது கவிதையின் கடைசி வரி.

 

இந்த தொகுப்பிலுள்ள சில கவிதைகள் நேரடியாக, யதார்த்த நிகழ்வுகளை குறும்புடன் சொல்ல விழைந்தவை.  

 

'வேலை நாள் அன்றைக்கு குளிர் உதிராக் கான்பெரா ' என்ற கவிதை,  வழியெங்கும் காட்சிகளும், நிறங்களும், மனிதர்களும் வேலைக்கு செல்லும் ஒரு வித அவசர அவசரத்தில் சொல்லப்படுவது போல ஆனால் செறிவாக சொல்லப்பட்டு கடைசியில் வேலைக்கு வந்து அப்பாடா என்று கதிரையில் அமர்ந்ததும்,

 

"இனி

காலக்குடுவைக்குள்

7.35 மணி நேரம்

பொல பொலவென்று    

மண்ணாய்"

 

என்று முடித்தபோது இந்த திருப்பத்தை எவரும் எதிர் பார்த்திரார்.

 

'ஃப்ளூ'   என்ற கவிதையின் பிரதான பாத்திரமே ஃப்ளூ காய்ச்சல் அல்லது ஃப்ளூ நுண் கிருமிதான். இதையும் மிக குறும்புத்தனத்துடன், சுவாரஷ்யமான நடையில் சொல்லிச் செல்வது ஒரு விறு விறுப்பைத் தருகிறது.  அதுவும் இந்த கோவிட் காலத்துக்கு இன்னும் பொருத்தமாகி விட்டிருக்கிறது.       

முன்னர் சொன்ன 'வேலை நாள்' பற்றிய கவிதையோடு  தொடுத்துப் பார்க்கக் கூடிய வேறு இரண்டு கவிதைகள் 'சும்மா இருப்பவள்' மற்றும் 'நேரம் எப்படிப் போகிறது' ஆகியவை நேரடியான நடையில் எழுதப்பட்டவை.

 

நேரடியாக சொல்லாமல் உட் கருத்தொன்றினை வைத்து சொல்லப்பட்ட கவிதைகள் வேறு சில இருக்கின்றன.

அவற்றுள்

'களையெடுப்பிற்குப் பின் மறக்கக் கூடாதவை' குறிப்பிடத்தக்கது.   அதை ஏன் அவர் களையெடுப்புக்கு முன் என்று போடாமல் விட்டார்  என்று யூகிக்க வைக்கும் இந்த தலைப்பு. இதில் முடிவில்  சில வரிகள்

 

“களைகளைத் தேடுபவர்கள்

செடிகளிடையே பாருங்கள்

களைகளின் வாழ்வு

செடிகளின் வேரில்”

 

என்று வருகின்றன.

 

கொடுங்கனவு ஒன்றிலும், கடந்த காலத்திலும், நிகழ் காலத்திலும் உழலும் மன ஊடாட்டங்களை 'தூக்கம்'

என்ற கவிதையில்

" நான் எந்தப் பக்கம் ஓட ?"  கேள்வியுடன் முடிக்கிறார்.

 

இன்னும் சற்று கூர்மையான வாசிப்பை கோரி நிற்பவை சில கவிதைகள் .

'சுவரேறிக் குதிக்கும் கோபம்' , 'தீவுகளை பற்றி உசாவுதல் ' இந்த வகைக்குள் வரக்கூடும். என்னால் உடனடியாக அறுதியிட்டுக் கூற முடியாத கருப்பொருள் கொண்டதென அவற்றை  வகைப்படுத்தினேன்.

 

கவிதைகளின் ஒற்றைப்படையான முடிவுறாத தன்மையும், அவற்றை பூடகமாக சொல்வதிலும் கூட  கவிதையின் அழகியல் இருப்பது போல எனக்கு தெரிகிறது. வெவ்வேறு அர்த்தங்களை தேடித் செல்ல வைக்கும் உந்துதலையும் இது அளிக்கிறது.

நவீன கவிதைகளை புரிந்து கொள்ளவும், உள் அர்த்தங்களை அறிந்து கொள்ளவும் தொடர்ச்சியான கவிதை வாசிப்புப் பயிற்சி எனக்கில்லாவிடினும் இக்கவிதைகளை வாசித்ததிலிருந்து இவை பற்றிய அவசியம் எனக்குத் தெரிகிறது.

 

ஆழியாள் கவிதைகள் பொதுவாகவே ஆழமான அர்த்தம் பொருந்தியவையும், மீள் வாசிப்பின் மூலம் புதிய கோணங்களில் சிந்திக்க வைக்கும் ஆற்றலும் கொண்டவை. இந்த கவிதைத்தொகுப்பு அவரது நான்காவது தொகுப்பு. ஏற்கனவே அவரது  'உரத்துப் பேச', 'துவிதம்', 'கருநாவு', 'பூவுலகைக் கற்றலும், கேட்டலும்' ஆகிய தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன.

 

அவரது இந்த தொகுப்புக்கு வாழ்த்துக்கள் சொல்வதில் மகிழ்கிறேன்.

 


 

 

                       'நெடுமரங்களாய் வாழ்தல்'

                            வெளியீடு:

                            அணங்கு பெண்ணியப் பதிப்பகம்

                            3, முருகன் கோயில் தெரு,

                            வில்லியனூர்புதுச்சேரி 605110.

                            விலை: ரூ.70

                            தொடர்புக்கு: 9599329181

No comments: