என்றும் என்னவள் - தேவகி கருணாகரன்

 .



னது நண்பன் பாலுவின் தாயார் சாமுண்டீஸ்வரி காலமாகிவிட்டார், என்றும் அவரது ஈமக் கிரியைகள் சிட்னியின் மக்குவாரி பார்க் கிரிமட்டோரியத்தில் உள்ள மக்னோலியா சப்பலில் வரும் சனிக்கிழமை அன்று காலை பத்து மணிக்கு நடைபெறும், எனத் தமிழ் சமூக வானொலியில் அறிவித்ததைக் கேட்டேன்.

என் நண்பனின் தாயார் ஆகையால் என் அனுதாபத்தை தெரிவிக்க முப்பது கிலோ மீட்டர் தூரத்திலிருந்த கிரிமட்டோரியத்திற்கு காரில் புறப்பட்டேன். சிட்னியின் இளவேனிற் கால சூரிய ஒளியில் அந்தக் காலைப் பொழுது பிரகாசமாகவிருந்தது.  போய் இறங்கியதும், மண்டப வாசலிலிருந்த பார்வையாளர் குறிப்பேட்டில் கையொப்பம் வைத்துவிட்டு, அங்கு நின்ற நண்பன் பாலுவிடம் கை கொடுத்து அவன் தோளை அழுத்தி அனுதாபங்களைத் தெரிவித்துவிட்டு உள்ளே சென்றேன்.

ஆறு வெள்ளி நிற கைபிடிகள் பளபளக்க விலையுயர்ந்த தேக்கு மர பெட்டியில் வளர்த்தியிருந்த சாமுண்டீஸ்வரி அம்மையாரின், கால் மாட்டில் நின்று அவர் ஆத்மா சாந்தியடையட்டும் என வேண்டிக் கொண்டேன். இதற்குமுன் அவரை நான் பார்த்ததில்லை. தக தக வென்ற அவருடைய வெள்ளைநிற முகத்திற்குப் பூச்சும், உதட்டில் லேசான லிப்ஸ்டிக்கும் பூசி, சுமங்கலியாகப் போகும் அவருக்கு நெற்றியில் குங்குமப் பொட்டும் இட்டு, தலையில் பூவும் வைத்திருந்தனர். வைரத் தோடும், வைர ஒற்றைக் கல் மூக்குத்தியும் முகத்தை அலங்கரிக்க, கழுத்தில் வைர அட்டியலும் தாலியுடனும் முதிர்ந்த அழகியாகக் காட்சியளித்தார். இந்த வயதில் இப்படி என்றால் இளமையில் எவ்வளவு அழகாகவிருந்திருப்பார்?



பாலுவின் தகப்பனார் சோமசுந்தரத்தை முன்னர் சந்தித்திருக்கிறேன். முன் வரிசையில், தலை நடுவில் வழுக்கையும் சுற்றிவர தூய வெள்ளை முடியுடனும் பக்கத்தில் ஒரு வாக்கர்  வண்டியோடு அமர்ந்திருந்தவரின் அருகே சென்று கையைப் பிடித்து என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தேன், அவர் கைகள் சில்லிட்டிருந்த. ”வரா தம்பி! மை லைஃப்ஸ் சன்ஷைன் ஹஸ் லெஃப்ட் மி!” குரலில் நடுக்கம்.வர் வார்த்தைகள் என் நெஞ்சைப் பிசைந்தது. என்ன சொல்வதென்று தெரியாது அவர் தோளை மெதுவாகத் தடவி விட்டு, மூன்றாம் வரிசையில் என் நெருங்கிய நண்பன் சுமந்திரனின் பக்கத்திலிருந்த சீட்டில் அமர்ந்து கொண்டேன்.


சுண்ணம் இடிக்கும் கிரியைகள் முடிந்தபின் உறவுக்காரர் வாய்க்கரிசி போட்டு, பூவும் போட்டு, வழியனுப்ப முன், வழக்கம் போல் காலமானவருக்கு நினைஞ்சலி நடந்தது. முதலில் பதின்ம வயது பெண் ஒருவர் எழுந்து வந்து ஒலிபெருக்கி முன்னால் நின்று,

    என் பெயர் சுந்தரி நான் அம்மம்மாவின் ஒரே பேத்தி. அம்மம்மா எங்களை விட்டுப் பிரிந்தது எங்கள் எல்லோருக்கும் கவலை. ஆனால் என் பாட்டாவுக்குத் தான் தாங்கமுடியாத துக்கம். அவர் தனது வாழ்க்கைத் துணைவியை இழந்து தவிக்கிறார், எழுந்து நின்று பேசக் கூடிய நிலையில் அவர் இல்லை. ம்மம்மாவின் கடைசி யாத்திரைக்கு வழியனுப்ப அவர் தன் நடுங்கும் கரங்களால் எழுதியதை இங்கு தருகிறேன்” என்றவள், ஐ பாடில் இருந்த நினைஞ்சலியை வாசித்தாள்.


        என் அருமைச் சாமுவை வழியனுப்ப வந்த எல்லோருக்கும் என் அன்பு வணக்கங்கள். என் சாமுவை குழந்தைப் பருவத்திலிருந்து  பார்த்துப் பார்த்து வளர்ந்து வந்தவன் நான். விடலைப் பருவம் வரவும் சாமுவின் மேல் இருந்த பாசம் காதலாக மாறியது. சாமு என் மாமாவின் மகள், என் மச்சாள். நான் பட்டம் பெற்று வேலையானதும் சாமுவைக் கல்யாணம் கட்ட விரும்பி என் ஆசையை என் பெற்றோரிடம் சொன்னேன். அவர்களும் மாமா மாமியிடம் என் விருப்பத்தைச் சொல்ல அவர்களும் சந்தோசமாகச் சம்மதித்தார்கள்.

           ஆயிரத்து தொளாயிரத்து அறுபதில் எங்கள் திருமணம் நடந்த கையோடு கொழும்பில் வேலை கிடைத்து. இருவரும் சந்தோசமாக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்குச் சென்று குடும்பம் நடத்தத் தொடங்கினோம். இரண்டு வருடத்திற்குள் எங்கள் மகன் பாலு பிறந்தான். அந்தக் கால கட்டத்தில் ஒரு நாள் என் சாமு தன் மனதில் இருந்த எதிர்காலக் கனவுகளைப் பற்றி என்னிடம் சொன்னாள். பள்ளிப் படிப்பு முடித்ததும் பி.எஸ்.சி டிக்கிரி செய்து வேலைக்குப்  போக வேண்டும் என ஆசைப்பட்டேன். இதுதான் என் விருப்பமாக இருந்தது ஆனால் என் பெற்றோர் என்னை உங்களுக்குத் திருமணம் செய்துவைத்து விட்டார்கள். எனக்கு இதில் விருப்பமா, சம்மதமா எனக் கேட்கவில்லை, அவர்களுக்குக்  கேட்கத் தோன்றவுமில்லை, எனக்கு மறுக்கத் துணிவும் வரவில்லை. பிள்ளைகளைப் பெற்று அவர்களைப் பராமரித்துக் கொண்டு மட்டும் இருக்காமல் நானும் உழைத்து குடும்ப நலத்திற்குப் பங்களிக்க விரும்புகிறேன். எனக்கென்று ஒரு தனித்தன்மை இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்றாள், என் சாமு.


    அறுபது வருடங்களுக்கு முன், நான் சாமுவை மணந்த போது எம் கலாச்சாரத்தின்படி பெற்றோர் தான் எமக்கு ற்ற துணையைத் தேர்ந்து எடுப்பார்கள். பெண்களை மேற்படிப்புக்கு அனுப்பயோசிப்பதில்லை, காரணம் பெண்கள் வேலைக்குப் போகும் வழக்கம் இல்லை. பெண்களின்  மனதில் தங்கள் எதிர்காலத்தைப் பற்றிப் பல எதிர்பார்ப்புகள் கனவுகள் இருந்தும் வெளியே சொல்லத் தயங்கினார்கள்.  

.

     நானும் கூட சாமுவை மணக்க முன் அவள் விருப்பங்களைக் கேட்டிருக்கலாம் தான். அவள் என் மச்சாள் என் உரிமையோடு காதலித்து மணந்தேன்.  அவளுக்கும் அபிலாசைகள், தனிக் கருத்துக்கள் இருக்கும் எனச் சிந்திக்கவுமில்லை, அறிய எத்தனிக்கவுமில்லை என்ற  குற்ற உணர்ச்சி என்னை வருத்தியது.  இனியாவது அவளது ஆசைகளைப் பூர்த்தி செய்வோம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் பி. எஸ். சி செய்ய அனுப்பினேன். என் சாமு கெட்டிக்காரி, பட்டம் பெற்றதும் கொழும்பிலிருந்த அமெரிக்க நிறுவனம் ஒன்றில் அவளுக்கு வேலையும் கிடைத்தது. அந்தக் காலகட்டத்தில் தான் எங்களுக்கு என் சாமுவைப் போல் ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது.  இருவருக்கும் இரட்டிப்பு சந்தோசம். அமெரிக்க நிறுனத்தில் வேலையில் இருந்த போது சாமுவின் வேலைத் திறமையைக் கண்டு, இரண்டு வருசத்திற்கு அமெரிக்காவில் உள்ள தங்கள் தலைமைக் காரியாலயத்தில் போய் வேலை செய்யும்படி கேட்டார்கள். சாமுவும் ஆசைப்பட்டாள். எந்த மறுப்பும் சொல்லாமல் அனுப்பிவைத்தேன்.”

இந்த இடத்திலே கண்களில் மல்கிய நீரை, சுந்தரி ரிசுவினால்   துடைத்துவிட்டுத் தொடர்ந்து வாசித்தாள்.


       அமெரிக்காவிற்குப் போன என் சாமு பல வருடங்களாகவே திரும்பி வரவில்லை. என்னைத் தேடி சாமு வருவா என்ற நம்பிக்கையில் பொறுமையோடு காத்திருந்தேன். அவளோடு வாழ்ந்த இனிமையான வாழ்க்கை நினைவுகள் மனதுக்குள் பொக்கிஷமாக புதைந்திருந்தது. அந்த நினைவுகள் எனக்குப் புத்துணர்ச்சியைக் கொடுத்தன. முழு ஈடுபாட்டோடு  வேலைக்கும் போய் எங்கள் பிள்ளைகளான பாலுவையும் சாவித்திரியையும்  நல்லபடியா வளர்த்தேன்.


 இருபத்தைந்து வருடங்களுக்குப் பின் சாமுவும் நானும் இங்கு சிட்னியில் சந்தித்தோம். மண்ணுக்குள் விதை போல் எங்களுக்குள் புதைந்திருந்த ஆழமான அன்பு, பொங்கி எழ நாங்கள் இருவரும் ஒன்று சேர்ந்து இன்பம் நிறைந்த வாழ்வு வாழ்ந்தோம். ஆனால் இன்று சாமு என்னை விட்டு, இந்த உலகத்தை விட்டே போய்விட்டாள். இனி நான் யாருக்காகக் காத்திருப்பது? யாருக்காவது வாழ்வது? குட்பாய் மை சன்ஷைன். வில் மீட் யு சூன்,” என்று அந்த பெண் சுந்தரி வாசித்து முடித்தாள்.


மண்டபத்தில் சிலர் மூக்கை உறிஞ்சும் ஒலியை விட அங்கு ஒரே நிசப்தம் நிலவியது. நீர் தளும்பி நின்ற என் கண்களைத் துடைத்துக் கொண்டேன்.


சோமசுந்தரத்தின் மகன் பாலுவோ, மகள் சாவித்திரியோ தாயாரினது கடைசி யாத்திரைக்கு வழியனுப் உரை எதுவும் வழங்காதது எனக்கு ஒரே புதிராகவிருந்தது. வழமை போல் கடைசி வழியனுப்பல்கள்  முடிந்ததும், பெட்டியைத் தகனக் குகைக்குள் தள்ளியபின் திரை மூடியது. முன் வரிசையில் அமர்ந்திருந்தவர்கள் முதலில் வெளியேறவும் பின் வரிசையில் உள்ளவர்கள் ஒழுங்காக வெளியேறினார்கள்.


 என் நண்பன் சுமந்திரன், பாலுவின் நெருங்கிய சொந்தக்காரன். அவன் பஸ்சில் வந்திருந்தால் என் காரில் ஏற்றிக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டேன். எப்பிங் ரோட்டில் அறுபது கிலோ மைல் வேகத்தில் ஓட்டிக் கொண்டு,

”பாலுவோ அல்லது தங்கை சாவித்திரியோ தாயை வழியனுப்பமுன் ஏதாவது சொல்லியிருக்கலாமே?” எனக் கேட்டேன்.

வரா உனக்கு விசயமே தெரியாது போல?” என்றான் சுமந்திரன்

      ”பாலு என் நண்பன் மட்டும் தான். அவனுடய குடும்ப விசயங்கள் எனக்குத் தெரியாது. மண்டபத்திலே வாசித்த சோமசுந்தர அங்கிளின்ட பேச்சிலே அவர் தன் மனைவியை  எவ்வளவு ஆழமாக நேசித்தார் எனத் தெரிகிறது.

     ஓம், ஆனால் அவர் அதில் சொல்லாமல் விட்ட கதைகள், இருக்கே”

     அப்படியோ?”

     அமெரிக்கா போன அவர் மனைவியுடன், காலம் போகப் போக அவர்களுக்குள் தொடர்புகள் குறையத் தொடங்கியது.  மூன்று வருசத்திற்கு பின் தனக்கு அமெரிக்கா பிடித்துக் கொண்டது, திரும்பி வர விருப்பமில்லை விவாகரத்து வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

     என்ன? பெத்த பிள்ளைகளைப் பற்றிக் கவலைப்படவில்லையா!” என

ஸ்டியரிங் வீலை பிடித்தபடி, சுமந்திரன் பக்கம் திரும்பிக் கேட்டேன்.

     ஓம் வரா, சோமசுந்திரத்தின் பெற்றோர் தடுத்தும், அவர் கேட்கவில்லை. சாமு தன் விருப்பப்படி வாழட்டும் என்று சொல்லி விவாகரத்திற்குச் சம்மதித்து விட்டார்.” 

உடனே எனக்கு ’நெஞ்சிலே ஓர் ஆலயம்’ படத்திலே வந்த ’எங்கிருந்தாலும் வாழ்க’ என்ற பாட்டுத்தான் நினைவுக்கு வந்தது.                    

     விவாகரத்துக்குப் பின் அவர் புது மாப்பிள்ளை தானே?. இன்னுமொரு கல்யாணம் செய்தாரா?”  எனக்கேட்டேன்.

     வரா! சோமா அங்கிளுக்கு ஒரே ஒரு மனைவி தான். அது சாமுண்டீஸ்வரி! அமெரிக்காவிலே  அவ ஒரு வெள்ளை அமெரிக்கனை மணந்து தன் பெயரையும் சாண்ட்ரா என மாற்றியிருப்பதாக பலர் அங்கிளிடமும் அவரது குடும்பத்தாரிடமும்  சொல்லியிருக்கிறார்கள். ஆனால் சோமா அங்கிள் அதை நம்பவுமில்லை பொருட்படுத்தவுமில்லை. அவரைப் போல ஒரு அதிசயப் பிறவியை என் அனுபவத்திலே பார்த்ததுமில்லை கேள்விப்பட்டதுமில்லை. 1988 இல் சோமசுந்தர அங்கிள் சிட்னிக்குக் குடிபெயர்ந்தார். அவரது பிள்ளைகள் பாலுவும் சாவித்திரியும் மேற்படிப்புப் படித்து வேலையாகி கல்யாணமும் கட்டிவிட்டார்கள். அங்கிள் பேரப்பிள்ளைகளையும் கண்டுவிட்டார்.

”ஆண்கள் மனைவியை கைவிட்டிட்டு  சந்தோசமாகத் திரிந்துவிட்டு  திரும்பி வருவார்கள், மனைவிமாரும் அவரை ஏற்றுக் கொள்வார்கள் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் அங்கிள் தன்னிடம் விவாகரத்து எடுத்த  மனைவிக்காக காத்திருந்து ஒன்று சேர்ந்திருக்கிறார். இதை சுயநலமில்லா காதல் என்று சொல்லாமா?” என்றேன்.

    ”அப்படித்தான் எடுத்துக்கொள்ள வேணும். கிட்டத்தட்ட இருபது வருசத்திற்கு முன், சோமா அங்கிளிண்ட முன்னாள் மனைவி சாமுவை சிட்னியில் ஒரு ஷொப்பிங் கொம்ப்லெக்சில் கண்டு திகைத்துப்போனேன். அவவும் என்னை அடையாளம் கண்டு என்னுடன் வந்து கதைத்தார். சோமா அங்கிள் சுகமாயிருக்கிறாரா? பாலுவும் சாவித்திரியும் எப்படியிருக்கிறார்கள்? எனக் கேட்டார். எனக்குத்தெரிந்ததைச் சொல்லிவிட்டு, ஆன்டி நீங்கள் எப்படி இங்கே? எப்படி இருக்கிறீர்கள் எனக் கேட்டேன்.  சிநேகிதியின் மகளின்ட கல்யாணத்திற்கு வந்திருக்கிறேன், என்ர சுகம் பரவாயில்லை, ஆனால் எனக்கென்று உறவுகளோ அன்புகாட்டுபவர்களோ இல்லாமல் தனித்துப் போய் இருக்கிறேன், என்றவரின் கண்கள் கலங்கின. அவவுடைய டெலிபோன் நம்பரை கேட்டு எழுதிக் கொண்டேன்.


      சாமு ஆன்டியை சந்தித்தையும் அவர் கண்கலங்கியதையும் சொல்லி டெலிபோன் நம்பரையும் சோமா அங்கிளிடம் குடுத்தேன்.  அதற்கு ஆறு மாத்திற்குப் பின் ஒரு நாள், பாலு, எனக்கு டெலிபோன் பண்ணி, அப்பா தன் முன்னாள் மனைவியோடு சேர்ந்து வாழப்போறாராம். என்றான். உன் அம்மாவைத் தானே சொல்லுறாய் என்று கேட்டதற்கு, இல்லை, என் அப்பாவின் எக்ஸ்! என்றான்.  அப்பாவின் கல்யாணப் போட்டோவில் அவவை பார்த்திருக்கிறேனே ஒழிய உயிரோடு பார்த்தது நினைவில் இல்லை. அவர் மேல் எங்களுக்கு  எந்தவிதப் பற்றோ பாசமோ இல்லை.  எங்களைப் பாலூட்டி சீராட்டி, விதம்விதமான உணவு சமைத்து ஊட்டிவிட்டு, சுகமில்லாத போது இரவு நித்திரை முழித்துப் பாசத்தைக் கொட்டி வளர்த்தது என் அப்பா தான். அவர் தான் எங்களுக்கு அப்பாவும், அம்மாவுமாக இருந்தவர்.  தாய்ப் பாசத்திற்காக நாங்கள் ஏங்கியபோது தன் சுய நலம், சுகம், இன்பத்திற்காக எங்களை தவிக்க விட்டிட்டு போனவவை வெறுக்கிறோம். சின்ன வயதிலிருந்து அம்மா என்ற உறவே இல்லாமல் வளர்ந்ததால் அம்மா என்ற வார்த்தை பிடிக்காத வார்த்தை ஆகிவிட்டது. அவவை வேற்று மனுசியாகத்தான் பார்க்கிறோம். ஆகையால் ஒரே வீட்டில் வாழ்வது சங்கடமாக இருக்கும். எனவே அப்பாவையும் அவர் மனைவியையும், அப்பாவுக்கு வசதியாவேறு ஒரு வீடு வாங்கி அதில் தங்ககவைக்கலாம் என முடிவெடுத்திருக்கிறோம் என்று பாலு சொன்னான்.

தந்தை மேல் உள்ள பாசத்தால் தான் பாலுவும் சாவித்திரியும் ஓடி ஓடி இந்த மரணச் சடங்குகளை  த்தினார்கள்.  ஆனால் அவர்கள் மனதில் தங்களைப் பெற்ற தாய் போய்விட்டா என்ற வருத்தமேயில்லை. அதனால் தான் அவர்கள் அங்கு பேசவில்லை. அப்படிப் பேசச் சொல்லிக் கேட்டிருந்தால் தங்கள் வெறுப்பைத்தான் அங்கே கொட்டியிருப்பார்கள்.

     சுமந்திரன் நீ சொன்னமாதிரி சோமசுந்தர அங்கிள் ஒரு அதிசயப் பிறவிதான், என் மனதில் அவர் கோபுரமாக உயர்ந்து நிற்கிறார்.” என்றேன்.


Virakesari, Sri Lankan paper இல் வெளிவந்தது 

 



No comments: