பெண்மையின் பெருமையை கண்ணெனப் போற்றுவோம் !

 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா

 

 

மங்கையராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திடல் வேண்டும்."   மண்மகிழப் பெண் பெண்மகிழ வேண்டும் . பெண்ணைத் தெய்வம் என்கிறோம். மண்ணை  பூமித்தாய் என்கிறோம். ஓடிவரும் நதிகளுக் கெல்லாம் பெண்ணின் பெயரையே சூட்டி நிற்கிறோம்.பிறந்த நாட்டைத் தாய் நாடு என்கிறோம்.  பேசும் மொழியைத் தாய் மொழி என்கிறோம். பெண்ணின் பெயரைப் பெரிதும் மதித்து இவற்றை யெல்லாம் செய்கின்ற சமூகமானது பெண்மையை எப்படிப் பார்க் கிறது அந்தப் பெண்மைக்கு எந்தளவு உயர்வினைக் கொடுக்கிறது அந்தப் பெண்மையின் நிலைதான் என்ன இவையெல்லாம் கேள்விகளாய் எழுந்து நிற்கின்றன ! 

  உடல் அளவில் உறுதி மிக்கவனாக ஆண் விளங்கினாலும் மன வளவில் உறுதி மிக்கவளாகப் பெண்ணே விளங்குகிறாள். இதனா ல்த்தான் ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்லப்படுகிறது. அவள் - தாயாகதாரமாக சகோதரமாகமகளாகதோழியாகக் கூட அமைந்து விடலாம். வீட்டின் அமைதியும் ஆனந்தமும் வெளியில் வியாபித்து சமூகத்தையே சாந்திக்கு ஆட்படுத்தும் ஆற்றல் நிச்சயம் பெண் மையின் கைகளிலேதான் தங்கியிருக்கிறது. அந்த அளவுக்கு பெண்மை என்பது வாழ்க்கையின் பெரு வெளிச்சம் எனலாம். அந்தப் பெரு வெளிச்சத்தை அளித்து நிற்கும் பெண்ணை பெண்மையைப் போற்றும் தினமாகத்தான் சர்வதேச மகளிர் தினம் " முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது எனலாம்.

  பெண்களைப் பற்றிப் பெருமையாய் பேசும் சமூகத்தில் பெண்களின் ஆரம்ப கால நிலைமைகள் எப்படி அமைந்திருந்தன பெண்களுக்கு இந்தச் சமூகம் குறிப்பாக ஆணினம் எந்தளவுக்கு சுதந்திரத்தை வழங்கி வந்திருக்கிறது ?

இவையெல்லாம் வரலாறாகி நீண்டு நிற்கிறது என்பதுதான் இதற்குப் பொருத்தமான விடை எனலாம்.

 தடைகள் பலவற்றைத் தகர்த்தெறிந்துதனித்துணிவுடன் களத்தில் இறங்கி, ஆணுக்குச் சமமான நிலை பெண்களுக்கும் உண்டு - பெண் களுக்கும் இருக்க வேண்டும் என்று போராடிய பெண்களின் போராட்டம் வெற்றியைத் தொட்ட நாளே " பெண்கள் தினமாக " இன்று உலகம் முழுவதும் பரவி நிற்கிறது எனலாம். இவ்வாறான தினம் கொண்டாட்டம் அல்ல ! போராடிப் பெற்ற தினம் என்பதே மிகவும் பொருத்தம் உடையதெனலாம்.!

  " பெண் நலம் ஓம்பப்படாத இடத்தில் வேறு எவ்வித நலனும் நிலவுவது அரிது. ஒரு நாட்டு நலன் அந்நாட்டுப் பெண்மக்கள் நிலைமையைப் பொறுத்தே நிற்கும் " என்னும் திரு. வி. கவின் கூற்று யாவரும் மனமிருத்த வேண்டியதே.

  இன்று " சர்வதேச மகளிர் தினம் " உலகெங்கும் வரவேற்புப் பெற்று பெண்களின் பெருமை விதந்து பேசப்படுகின்ற தென்றால் அதற்கு வித்தாக விளங்கியவர் 18 ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் ஒரு கிராமத்தில் பிறந்த கிளாரா ஜெட்கின் என்னும் பெண்மணியாவார். இவர் இளம் வயது முதலே பெண்களின் உரிமைபெண்களின் நலன்யாவற்றிலும் மிகுந்த அக்கறை கொண்டவராகவே இருந்தார் எனலாம். பெண் தொழிலாளர்களின் உரிமையைபிரச்சினைகளைமனமிருத்தி - உலகெலாம் ஒலிக்கும்படி செய்தமையால் - பெண்களின் இயக்கங்களுக்கும் அவர்களின் செயற்பாடுகளுக்கும் பெரும் உந்ந்துதலை அளித்தது எனலாம்.

  பெண்கள் பற்றிய உரிமைப் போராட்டங்கள் என்னும் வகையில் 1789 இல் பாரீஸில் சமத்துவத்துவத்துக்காக பெண்கள் எழுந்தனர். பெண்கள் தொடர்பான வேலை நேரங்கள் பெண்களின் வாக்குரிமை பெண் அடிமை, விடுதலைஎன்னும் கோஷங்களுடன் பேரெழுச்சியாய் அப்போராட்டம் வெடித்தது. போராட்டத்தின் முடிவில் பெண்களின் கோரிக்கைக்கு பிரான்ஸ் அரசு ஒப்புதல் வழங்கியது. வழங்கிய அந்த நாள் மார்ச் 8 - 1848 ஆகும்.இந்தத் திகதியும் மாதமும் " மகளிர்க்கு உரிய தினம் " என்னும் நிலைக்கு இட்டுச் செல்ல ஏதுவாக அமைந்தது எனலாம்.

  பிரான்சில் பெண்களின் எழுச்சிபோல் 1857 இல் அமெரிக்காவில் நியூயோர்க்கிலும் பெண்களின் உரிமைக்குரல் எழுப்பப்பட்டது. பெண்கள் ஒருமித்துப் போராடினால்த்தான் அவர்களுக்கான உரிமைகள் கிடைக்கும் என்னும் எண்ணம் பரந்து விரிந்தது.

  " சர்வதேச மகளிர் தினத்துக்கு " வித்திட்ட - கிளாரா ஜெட்கின் தலைமையில் 1919 இல் ஹேகனில் அனைத்துலாகப் பெண்களுக்கான மாநாடு கூடியது. இம்மாநாட்டின் தொடர்பாக       சர்வதேச மகளிர் அமைப்பு என்பது உருவாக்கப்பட்டது. ஜேர்மனி ஆஸ்திரியாடென்மார்க்குடன் சில ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பலர் இந்த அமைப்பின் சார்பில் 1911 இல் மார்ச்சு மாதம் 19 ஆந் திகதி முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் " கொண்டாடி னார்கள். பெண்கள் பல நாடுகளிலிருந்து கலந்து கொண்ட இவ்வரலாற்று வேளையில்தான் - பெண்களுக்கான வாக்குரிமை யினை அளிப்பதற்கு மன்னன் லூயிஸின் இணக்கம் தெரிவிக்கப் பட்டது. இது இடம் பெற்றது மார்ச் மாதம் ஆந் திகதியேயாகும். பெண்களின் ஒத்துழைப்பால் இவையனைத்தும் நிகழ்ந்த அந்த நாளை " சர்வதேச மகளிர் தினமாக " ஆண்டு தோறும் கொண்டாடும் தினமாகத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

  1917 ஆம் ஆண்டு மார்ச் ஆம் திகதி ரஷ்சியாவில் சென்பீட்டர்ஸ் நகரில் ஒரு போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தை அடுத்து 1921 மார்ச் ஆம் திகதி " சர்வதேச மகளிர் தினமாக " பிரகட னப்படுத்தப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபை 1975 ஆம் ஆண்டினை " சர்வதேச மகளிர் ஆண்டாக " அறிவித்தது. அதனைத் தொடர்ந்து 1977 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் " சர்வதேச மகளிர் தினத்தை "  மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

  பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டன. அதனால் துணிந்த பெண்கள் முழு வீச்சுடன் முனவந்து போராடிப் பெண்களுக்கான பல உரிமைகளை பெற்றெடுத்தார்கள். ஆனாலும் இன்னும்தான் பெண் களுக்கான பிரச்சினைகள் தொடர்ந்த படியேதான் தொடர் கதையாய் தொடர்கிறது எனலாம்.

  மனித வாழ்விலே பெண்ணின் பங்கு மிக மிக இன்றியமையாதது எனலாம். இதனை எவருமே மறுத்துவிட முடியாது. ஆனால் அப்படிப்பட்ட பெண்களை  பெண்கள் " என்னும் தோற்றத்தையும் அவர்களது உடலையும் வைத்துக் கொண்டு அரங்கேறும் அவலங்கள் சொல்லமுடியாதன.

பெண்களுக்கு வாக்குரிமை எதற்கு பெண்களுக்கு பேசும் உரிமை எதற்கு பெண்களுக்கு வேலைபார்க்கும் உரிமை எதற்குபெண் களுக்கு வீட்டை விட்டு வெளியில் செல்லும் உரிமை எதற்கு பெண்கள் என்றால் திருமணம் செய்ய உதவும் ஒரு மனித உருவம். பிள்ளைகளைப் பெற்றுக் கொடுக்கும் ஒரு இயந்திரம். ஆணுக்கு இன்பத்தை அளிக்கும் ஒரு நுகர்வுப் பொருள்.இப்படியெல்லாம் எண்ணி பெண்ணினத்தை வதைத்த வரலாறு மறைக்க முடியாத வரலாறாகும்.அவற்றை யெல்லாம் உடைத்தெறிந்து போராடி பெண்கள் வந்து நிற்கும் நிலையினை இன்று உலகெங்கும் காணு கிறோம்.ஆனாலும் பெண்களுக்கான அச்சம் என்னும் நிலைமட்டும் அகலவே இல்லை எனலாம்.

    பட்டங்கள் ஆள்வதும்சட்டங்கள் ஆள்வதும் பாரினில் பெண்கள் பெற்று நிற்கிறார்கள் என்பதும் மறுப்பதற்கில்லை. நாட்டின் ஜனாதி பதியாகபிரதம மந்திரியாகஉயர்நீதித்துறையின் தலைவராகஅரச பதவிகளில் உயர் நிலையில் இருப்பவர்களாக தொழில் முனை பவர்களாகபல்கலைக்கழக துணை வேந்தர்களாக கல்லூரி முதல் வர்களாகபத்திரிகைகளின் பிரதம ஆசியர்களாக இன்று உலகம் முழுவதும் பெண்கள்  மிளிர்ந்து நிற்கிறார்கள் எனலாம். மருத்துவம் தொழில் நுட்பம்கலைகள் என்று பெண்களின் ஆளுமை பல்கிப் பெருகி நிற்பதையும் காணுகிறோம்.

  ஆனாலும் பெண்கள் என்னும் படைப்பால் அவர்களை நோக்கும் விதமும்,அவர்களை வதைக்கும் விதமும் சமூகத்தை விட்டு அகலவே இல்லை என்றே எண்ண முடிகிறது.

 

  பெண்களைப் பொறுத்தவரை சட்டரீதியாகவும்சமூக ரீதியாகவும் எல்லோரையும் போல சமூகநீதி வழங்கப்படவேண்டும்.ஆணும் ,பெண்ணும் சமமென்று பேசப்படுகிறதே தவிர அவர்களது நடை முறை வாழ்வில் கிடைக்காது இருபதால் கிடைத்திடச் செய்திடல் அவசியமாகும்.பெண்கள் பொருளாதார ரீதியாகவும்இன சமூகரீதி யாகவும் பாதிக்கப்படும் நிலையினை மாற்றிட முயலுதல் அனை வரதும் தார்மீகக் கடமையாகும்.பெண்களின் பிரச்சினைகளை அணுகவும் அவற்றை அகற்றிடவும் ஆற்றல் மிக்க அதிகாரிகள் நியமிக்கப்படுதல் அவசியமாகும். காவல்துறையில் கூட பெண்களின் நிலை பரிதாபமாகவே காணப்படுகிறது.

காவல் துறையில் உயர்பதவியில் இருக்கும் பெண்களுக்கே தக்க பாதுகாப்பு இல்லாதிருக்கிறது. மேலதிகாரிகளால் பாலியல் கொடு மைகளுக்கு ஆளாகும் நிலை இன்றும் காணப்படுகிறது. அதுபோன்று ஏனைய உயர்பதவிகளில் இருக்கும் பெண்களுக்கும் - அவர்கள் பெண்கள் என்ற காரணத்தாலேயே அவர்களும் பல மன உழச்சல் களுக்கு ஆளாவதும் - சிலர் மனமுடைந்து தற்கொலை முயற்சிக்கே சென்று விடுவதும் - ஏன் .. தற்கொலையே செய்துவிடுவதையும் காணமுடிகிறது. இவை அனைத்துமே சமூகத்தைவிட்டுக் களையப்பட வேண்டியனவாகும்.

 

  " மாதர் தம்மை இழிவு செய்யும்

    மடமையைக் கொளுத்து வோம்

    வைய வாழ்வு தன்னில் எந்த

    வகையினும் நமக்குள்ளே

    ஆண்களோடு பெண்களும்

    சரிநிகர் சமானமாக

    வாழ்வம் இந்த நாட்டிலே " 

அச்சமும் நாணமும் நாய்களுக்கு வேண்டுமாம் கற்பு நிலை யென்றால் இரு சாராருக்கும் பொதுவாக்குவோம் "

 

என்று முழக்கமிட்டுப் பெண்ணுரிமை பேசி நின்றான் புரட்சிக்கவி பாரதி. பாரதி வீர முழக்கத்தைப் படிப்பதோடு நின்று விடக் கூடாது. அதனைக் கருத்தில் இருத்தி யாவரும் செயலாக்குதலே மிகவும்  அவசியமானதாகும்.  தாயாய் ,  தமைக்கையாய்தங்கையாய் மனைவியாய்மகளாய்மருமகளாய்பேத்தியாய்வாழ்வில் இணைந்திருக்கும் பெண்ணை - பெண்மையினைக் காப்பது அனைவரதும் தலையாய பொறுப்பு அல்லவா ?

  பெண்ணால் நலன் அடையும் நாங்கள் பெண்களைக் காத்திடுதல் கட்டயமான கடன் அன்றோ ! பெண்ணைத் தூற்றுவதும் பெண்ணை இழிவு செய்வதும்பெண்ணை மனமுடையச் செய்வதும் பெண்ணை அடிமை என்று நினைப்பதும்பெண்ணைப் போகப்பொருள் என்றே எண்ணுவதும் பொருத்தமுடையதா ! அனைவரும் சிந்திப்போம் ! மகளிர் தினம் என்பது ஒரு நாளில் மேடை போட்டு  சொற்பொழி வுகள் பொழிந்து நிற்பதல்ல ! வாழ்வின் துணையாக இணையாக இலங்கிடும் பெண்ணை பெண்மையைக் காப்பதுதான் நம் அனை வரதும் தலையாய கடமையாகும்.

 அவர்களுடைய உரிமைகள் பேணப்பட வேண்டும். ஏனெனில் உலகெங்கும் சிறந்த பெண்களே உள்ளனர். ஆனால் அவர்களு க்கான அழகான வாழ்க்கை கிடைத்திருக்கிறதா என்பதே கேள்வியாகி நிற்கிறது எனலாம் ! .

No comments: