பெண்கள் தின கவிதை 08.03 2021 பெண்கள் தினம்

.


தைப் பொங்கல் ஒரு தினம் தான்
தமிழ் வருடப் பிறப்பும் ஒரு தினம்தான்
பக்ரீத் பண்டிகையும் ஒரு தினம் தான்
பிறந்த நாள் கொண்டாட்டமும் ஒரு தினம் தான்
ஒற்றைத் தினமென்பதால்
ஓய்ந்து போகுமோ மகளிர் சக்தி.....

வாழ்த்தும் மனம்
பாராட்டும் குணம்
தோள் கொடுக்கும் தோழமை
எங்கேயெனத் தேடாதே
அன்புக்கு அடிபணி
ஆணவம் தகர்த்தெறி
தடைகளைப் புறம் தள்ளு
தலை நிமிர்ந்து நீ செல்லு
ஏரல் எழுத் தென்றாலும்
தடம் பதித்து முன்னேறு.....

பின்னிருந்து வழி காட்டும்
உள்ளிருந்து திறம் காட்டும்
பெண்ணினத்தின் மேன்மையை

முன்னிறுத்தும் வழி தேடு.....


ராஜ்குமார் 

நன்றி 

https://eluthu.com/




சவத்திலிருந்து ஜனனம்..
பிரசவம் !
ஒரு உயிரை பெற்றெடுக்க தன் உயிரை பணயம் வைத்து மரணம் வரை சென்று திரும்பும் அவள்...!

பெற்றெடுத்த குழந்தைக்கு தன் ரத்தத்தையே உணவாக மாற்றி பரிமாறும் அவள்..!

மகன்களின் தேசத்தில் முடிசூடா அரசியாக கொண்டாடப்படும் தாயான அவள்.
**********************
என்றோ ஓர் உயிரை
உலகிற்கு கொண்டுவர
மாதந்தோறும் உதிரத்தின் ஒரு பங்கை இழந்து பழகும் அவள்.

உயிர் போகும் வலி
வலியை கூட மெதுவாய் தான் சொல்ல வேண்டும்
ரகசியம்..!
3 நாள் சொந்த வீட்டிலே
அன்னிய நாட்டு உளவாளி போல் உலவ வேண்டும்.
ஆண்கள் இல்லாத கடை தேடிப்போய்
அங்கு ஒரு பஞ்சை 6 கிலோ பேப்பர் சுத்தி வாங்க வேண்டும்.
சமூகத்தின் பார்வையில் இது
அசிங்கம்- இயற்கையாய் நிகழும் ஒரு நிகழ்வின் மீது..
அருவருப்பு- மனிதர்கள் நாம் தோன்றக் காரணமாயிருந்த சுழற்சியின் மீது..
தீட்டு -ம்ஹம்..பெண் தெய்வங்களும் இங்கே கண்ணீர் வடிக்கின்றனர்.
***********
சகோதரி..
சண்டையிடும்போது குட்டிபிசாசு அவள்.
சங்கட பொழுதுகளில் தோள் கொடுக்கும் தோழி அவள்.
அம்மா அருகில் இல்லாத பொழுதுகளில் தாயாக மாறும் அதே அவள்.
ஆண்களின் எண்ண ஓட்டத்தில் தோழியா?தாயா? என வியந்து பார்க்கப்படும் தேவதையான சகோதரி அவள்.
*********************
தோழி..
இருள் சூழ்ந்த உலகில்
ஊடுருவி ஒளிபரப்பும்
ஒற்றை ஒளித்துகள் அவள்.

கண்ணாடி குடுவைக்குள் சிறையிடப்பட்டு எரியும் விளக்கை அணையாமல் காக்கும் ஆக்சிஜன் அவள்.

பெரும்பாலான ஆண்களுக்கு
பெண்களின் உலகத்தையும் காதலையும் கற்றுத்தரும் அவள்.

காலங்கள் பல கடந்தும்
குட்டி போட்ட மயிலிறகாய்
அவன்களின் நெஞ்சுக்குள் பசுமையான நினைவுகளால்
பத்திரப் படுத்தப்பட்ட தோழியான அவள்.
*************************"
காதல்..
பார்த்த உடனே காதல் வயப்பட அளவெடுத்த படைக்கப்பட்ட அவள்.

காதல் செய்ய மறுத்து முகத்தில் ஆசிட் அடிபட்ட அவள்.

காதலும் காதலின் நிமித்தமாய் காற்றில் கற்பூரமாய்
காலத்தை கரைக்கும் அவள்‌.

காதல் கொண்டு காலக்கடலில்
தானும் நீந்தி அவனையும் கைகோர்த்து கரை சேர்க்கும் அவள்.
*****************
வெளிப்படையாய் அனைவரிடமும் பேசி அடிக்கடி சிரிக்கும் அவள்.
அக்கதாபாத்திரத்தை ஆணாய் இருந்தால் பிளேபாய் என்பார்கள்.
இவளை பிளேகேர்ள் இல்லை இல்லை
"ஐட்டம்" என்று சற்றும் யோசிக்காமல் அழைக்கப்படும் அவள்.
***************
வீதியில் கடந்து செல்லும் ஆண்களால்
அழகில்லை என்று கலாய்க்கப்படும் அவள்.
ஐந்து நிமிட பேருந்து காத்திருப்பில் அங்கம் அங்கமாய் வர்ணிக்கப்படும் அவள்‌.
******************
5 ந்தோ 50-ந்தோ
வயது வித்தியாசமின்றி
மனித மிருகங்களால் வேட்டையாடப்படும் அவள்.
******************
திருமணத்திற்கான
குறைந்த பட்ச தகுதிக்காக
டிகிரி படிக்கும் அவள்.
********************
படித்து முடித்துவிட்டு திருமணத்திற்குப் பிறகு அடுப்பு ஊதாமல்
கேஸிலே இரவு பகலாக சமைப்பதும்.. கிரைண்டரில் மாவு அரைப்பதுமாக காலத்தை கடத்தும்
நடுத்தரவர்க்கத்து மனைவியான அவள்.
***********************
தாடி இருந்தால் முத்தமிட மாட்டேன் என்று சொல்லிச் சென்ற பெண்கள் மத்தியில்
தாடி விலக்கி முத்தமிடும்
தந்தைக்கும் பேரன்பிற்குரிய மகளான அவள்.
********************
கட்டுப்பாடு என்ற பெயரில்
சில தடைக்கற்கள்
தினம் வாழும் வாழ்வில் 'நான் எங்கே' என துரத்தும் கேள்வி?
எப்போது முகம் மறைக்கும் முகமூடிகள் கண்ணாடி பார்க்கும் போது மட்டுமே புலப்படும் சுயமுகம்.
நிழலைக் கூட நம்பாமல் ஆராயும் வீடுகள்.
வாழ்க்கை பற்றிய அத்தனை கனவுகளையும் தூங்கி எழுந்தவுடன் தொலைத்துவிட வேண்டும் என எண்ணும் சுற்றம்.
இத்தனை கடந்தும்
அனுதினமும் போராடி
படித்து
உழைத்து
எட்டமுடியா சில உயரங்களை அடைந்து அண்ணாந்து பார்க்க வைத்த பார்க்க வைக்கும் வைத்த அவர்(ள்)கள்.
***********************
மீசைகளே
இதில் சொல்லப்பட்ட
சொல்லப்படாத அவள்(ர்)களுக்கும் உங்கள் வாழ்த்துக்களை பகிருங்கள்..

தினங்களை கொண்டாடாமல் தினம் தினம் அவர்களைக் கொண்டாட முயற்சி செய்யுங்கள்..
//மகளிர் தின வாழ்த்துக்கள்//
- அரவிந்த் ரகு.

No comments: