மூத்தோர் கடன் - முன்மாதிரியாக நடத்தல்!       …………………..பல் மருத்துவ கலாநிதி பாரதி இளமுருகளார்.
எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் சிந்தைதனில் மலர்கிறது! இமைமூடும் கணத்திலே இதமாகச் செந்நாவிலே பழுக்கிறது! கண்விழிக்கச் செவிப்புலத்தே தேனாகக் கனிகிறது! நொடிப்பொழுதிலே அளப்பிலா இன்பம் அளித்து மெய்சிலிர்க்க வைக்கிறது! அத்துணைச் சிறப்புமிக்கது எமது தமிழ் அல்லவா?. தோற்றிய காலத்தைக் கணக்கிட எவராலும்  முடியவில்லை! தமிழன்னை சூடிய அணிகளைச் சொல்லிட வார்த்தைகள் தோன்றவில்லை! ‘முச்சங்கத (து) அரியணை ஏறி மன்னர் முடிதொட்ட மூவரும் அடிதொட்டுப் போற்றிய தமிழ்’என்று பெருமிதம் கொண்டதொடு சிந்தையிற் தேனமுதூறி – நாவில் தித்தித்துத் தித்தித்துச் செவிவழி ஏறி வந்து கனிந்(து இருள் கீறி – எம்மை வாழ்விக்கும் மொழி ……’ தமிழ் என்று போற்றி மகிழ்ந்தவர் “தங்கத் தாத்தா”. “பழைமைப் புலமைசான்ற தொல்காப்பியம்  தமிழன்னை வீற்றிருக்கும் சிங்காசனம்! சிவம் வளர்க்கும் திருத்தொண்டர் புராணம் திருமுடி! வளமான வாழ்விற்குத் தளம் அமைக்கும் திருக்குறள் நீதி நிலைநாட்டும் செங்கோல்! குண்டலகேசி அவளின்  பொற்றோடு! மெய்ப்பொருள்; விளக்கும் சிவஞானபோதம் நெற்றித்திலகம்! பத்திச்சுவை ததும்பும் நாயன்மார்களின் திருமுறைகள் பொன் ஆரங்கள்! சிந்தாமணியும் சூளாமணியும் தங்கப் பதக்கங்கள்! வளையாபதி கை வளையல்! இராமாயணம் கணையாழி! மணிமேகலை இடையணி மேகலை! சிலப்பதிகாரம் பாதச்சிலம்பு! நாலடியார் வண்ண மிதியடி! ஐந்திலக்கணங்களை விளக்கும் ஒப்பரிய நூல்கள் வித்தாரமணிகள்! இப்படி எத்தனையோ அணிகளால் அலங்கரிக்கப்படடவள் எம்தமிழன்னை” என்று விதந்துரைக்கிறார் தங்கத் தாத்தாவின் ‘நாமகள் புகழ்மாலை” என்றும் நூலிற்கு உரை எழுதிய பண்டிதைமணி பரமேசுவரி இளமுருகனார் அம்மையார். இவ்வண்ணம் பல்வேறு சிறப்புகளுடன்  பொலிவுற்று இலங்கிய எமது செம்மைத்  தமிழ் படிப்படியாக அணியிழந்து - பொலிவிழந்து செந்தமிழ் வளங்;குன்றி - சிற்றிலக்கியக் கதாநாயகர்களின் புதுமையிலக்கியம் என்ற பெயரில் பல மொழிக் கலப்புடன் கொடுந்தமிழ் வழக்கிற் சிக்குண்டு - புனிதத்தன்மை கெட்டு நிற்கும் பரிதாப நிலைமையைக் கண்ணுற்றுச் செந்தமிழ் மக்களே வாரீர் - எங்கள் தெய்வத் தமிழ்மொழிச் சீரினைத் தேரீர் அந்தமில் எம்;மொழி மாதா – படும் அல்லலைத் தீர்க்க அறிவு வராதா? என்று சென்ற நூற்றாண்டிலேயே மனங் குமுறினார் தீர்க்கதரிசியான “தங்கத்தாத்தா”.

வேற்று மொழிதனைக் கற்று எமது மெய்யான முதுசொத்;தை விலைபேசி விற்றுத் தரணிக்கே முதன்முதலில் அறிவுறுத்திய சாற்றமுடியாத தகைமைமிகு தமிழர் பண்பாட்டு விழுமியங்களை நழுவவிட்டு இன்று தமிழையே பேச எழுத வாசிக்க மறக்கும்  நிலையிலே புலம்பெயர் தமிழர் பலரின் நிலைமை வேதனைக்கு உரியதொன்று. ஆம்! அன்னை மொழிதனை நாமோ – வெறுத்;(து) அருவருத்(து) அவமதித்திடல் அழகாமோ? என்று தமிழுக்கு ஏற்பட்ட இன்றைய நிலையை என்றோ ஊகித்து வரகவி பாடினவர் தங்கத்தாத்தா. தமிழிலே பேசுவது வெட்கம்! தமிழ் படித்தால் அது சோறு போடுமா? தொன்றுதொட்டுத் தமிழர் போற்றிய விழுமியங்கள் இன்றைய ‘நாகரிகம் மிக்க நாடுகளிலே’ தேவை தானா? இத்தகைய கேள்விகளைத்தான் இன்றைய பெற்றோர் - மாணவர்கள் பலர் கேட்கிறார்கள். மனிதன் தோன்றியபின் கி.பிக்கு முன்னர் எத் தனையோ ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தலைசிறந்த நாகரிகம் தமிழ்ச் சைவர் கடைப்பிடித்த நாகரிகமன்றோ?.  ஒரு குழந்தை வளருகின்ற பொழுது எத்;தனை மொழிகளையும் இலகுவாகக் கற்கமுடியும் என்பதே விஞ்ஞன ஆராய்ச்சியின் முடிபு. இப்படிப் பல மொழிகள் பயில்வது குழந்தையின் அறிவு வளர்ச்சியைக் கூட்டும் என்பதும் விஞ்ஞனம் கண்ட உண்மையாகும். எனவே பெற்றோர் தாய் மொழியைப் பயிற்;றுவிப்பதிலே தயக்கம் தேவையில்லை. இன்று புலம்பெயர்ந்த தமிழர் பலர் தம் பிள்ளைகளுக்குத் தமிழைக் கற் பிக்காமைக்குப் பல காரணங்கள் கூறித் தம்மை நியாயப்படுத்துகின்றனர். தமிழ் மொழியாம் தாய்மொழி மறந்த பின்னர் அவர்கள் தம்மை எப்படி இனங்காட்டுவார்கள்?.  தமிழ் தெரியாது தலைநிமிர்ந்து தங்களைத் தமிழர் என்று கூறமுடியாதென்பதை இன்று மறந்த நிலையில் உள்ளார்கள். ஆகவே எம் மதிப்பிற்குரிய மூத்தோர் செய்யக்கூடிய மிகவும் இலகுவான கைங்;கரியம் தமது பேரப்பிள்ளைகளுக்கு வீட்டிலே கட்டாயமாகத் தமிழைப் பேசும்படி அன்புக்கட்டளை இடுதலாகும். இன்று இதை ஒவ்வொரு மூத்த குடும்பத் தலைமகனும் செய்யத்தவறினால் தமிழனின் தனித்துவம் மங்கி மங்கி மறைந்துவிடும் என்பதுதான் யதார்த்தம்.

தமிழீழப் போரிலே எத்தனை உயிர்கள் தியாகச் சுடரிலே நீறானார்கள்? எண்ணிப் பாருங்கள். ஏன்? ஏன்?. எத்தனை தானைத் தமிழ்த் தலைவர்கள் தங்கள் உயிர்களைப் பரிதாபமான முறையிலே துடிதுடித்;து நீத்தார்கள்? தமிழ்வாழவேண்டும் தமிழ் நாடு காப்பாற்றப்படவேண்டும் என்பதன்றோ அவர்களின் ஒருமித்த மூச்சாக இருந்தது. புலம்பெயர்ந்த எல்லோரும் பலவித சிறப்புகளுடன் வாழ்கின்றார்கள். அவர்கள் தாய்மொழியைப் புறக்கணிப்பது பெற்;ற தாயை மறப்பது போன்றதொரு செயலாகும் அல்லவா?  உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” என்ற பல கோட்பாடுகள் கொண்டது சைவத்தமிழரின் அன்றைய அன்பு வாழ்க்கை. ஆனால் இன்று இளைய தலைமுறையினரின் தவறான நடத்தைப் பிறழ்வுகள் - தீயபழக்கவழக்கங்கள்  -வாழ்க்கைக்கு உகந்த விழுமியங்களுக்கு மதிப்பபுக் கொடுக்காமை  - தன்னிச்சையாக அவசரமுடிவெடுக்கும் மனப்பான்மை - பிடிவாதக்குணம்  - பெரியோர்;களை மதிக்காமை இப்படிப் பலவித கலாசாரச்; சீரழிவிற்கு மேல்நாட்டு நாகரிக மோகமும் பாலியல் வளர்க்கும் ஊடகங்;களும்; துணையாகின்றன. இளைய தலைமுறையினர் மத்;தியில் கலாசாரச் சீரழிவுகளும் ஒழுக்கப் பிறழ்வுகளும் விரைவாக ஏற்பட்டு வருவதை அவதானிக்கமுடிகிறது அல்லவா?  குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சி அவர்கள் வாழுகின்ற சூழலிலே பெரிதும் தங்கியுள்ளது. அவர்கள் நல்லவர்களாக வளருவார்களோ இல்லையோ என்பது அவர்கள் வளரும் சூலிலும் வளர்க்கப்படும் பெற்;றோர்கள் - மூத்தோர்கள் போன்றவர்களிலுமே பெரும்பாலும் தங்கியுள்ளது என்பதை எவராலும் மறுக்கமுடியாது. எமது இளஞ்சிறார்கள் நல்லதோ கெட்டதோ பன்நாட்டுக் கலாசாரப் பழக்கவழக்கங்களிற் சிக்குண்டு சீரழியாது பாதுகாத்;து வளர்ப்பதுடன் சமுதாயத்திலே மதிப்புடன் சீருஞ்சிறப்புமாக வாழச் செய்வது பெற்;றோர் -

மூத்தோர் - ஆசிரியர்கள் - சமூகத்தலைவர்கள் - மதகுருமார்கள் பெரியோர்கள் போன்றவர்களின் கடமையாகும். இது காலத்தின் கட்டாயம் என்பதை நன்றாக உணர்ந்து அனுபவம் மிகுந்த மூத்தோர்கள் தகுந்த பாதுகாப்பு எடுக்கவேண்டும். “தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்படும்” என்ற வள்ளுவனார் கூற்றின்படி இளந்தலைமுறையினர் எவ்வாறு ஒழுக்கத்தைப் பேணுகிறார்கள் என்பதைக்கொண்டு அவர்களின் மூத்த தலைமுறையினர் எவ்வாறு வாழ்ந்திருக்கிறார்கள் - வாழ்கிறார்கள் என்பதையும் அவர்களின் மனிதநேயம் - பண்பு - ஒழுக்கம் - நடத்தை ஆகியவற்றையும் ஊகித்தறியலாம். ஆகவே மூத்தோரின் தலையாய கடன் என்னவென்றால் இளைஞர்கள் வாழ்வாங்கு வாழ உதாரணமாக - முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுதலேயாகும்;. ஆகவே மூத்;தோராகிய நாம் எமது பாரிய பொறுப்பைக் கவனமாகக் கையாண்டு வருங்காலச் சந்ததியினரை யாவரும் மதிக்கும் வண்ணம் தமிழிற் பேசி மகிழும் சான்றோர்களாக வளர்த்தெடுப்பதிலே கண்ணும் கரு த்;;துமாக இருப்போமெனச் சபதம் எடுப்போமாக! No comments: