கவிதையும் திரைப்படப் பாடல்களும் அன்றும் இன்றும் தில்லானா… தில்லானா… கொரோனாவாகியது எங்கனம்…? நூடில்ஸின் வாழ்வுதனை சூது கவ்வும் இடியப்பம் ஓர் நாள் வெல்லும் “ அம்மி கொத்துவதற்கு பொற்கொல்லர் அவசியமில்லை. “ முருகபூபதி


நான் ஒரு புலவனோ, கவிஞனோ அல்ல என்பதை முதலில் சொல்லிவிட்டே இந்த பதிவுக்குள் வருகின்றேன்! 

 

செய்யுள்களை ரசிப்பதற்கு புலவனாகவோ, கவிதைகளைப் பற்றிப் பேசுவதற்கு கவிஞனாகவோ நாம் இருக்கவேண்டிய அவசியம் இல்லை!

 

கவிதையை  நயத்தல் உணர்வுபூர்வமான அறிவுபூர்வமான விடயம். ஒரு காலத்தில் இலக்கியம் கவிதை வடிவிலும் காவிய முறைமையிலும்  தோன்றியது.

 

கால மாற்றங்கள்  மரபுக்கவிதையிலிருந்து வசன கவிதைக்கு


வந்து,  பின்னர் புதுக்கவிதை வடிவம் பெற்று,  தற்காலத்தில் கவிதை என்ற ஒற்றைப்பரிமாண வடிவத்தில்  அழைக்கப்படுகிறது.

 

இருபதாம் நூற்றாண்டு முதல் வெளிவந்துகொண்டிருக்கும் தமிழ்த்திரைப்படங்களில் எவ்வாறு கவிதை செல்வாக்கு செலுத்தியது என்பதையும் நாம் பார்க்கமுடியும்.

 

  1944 ஆம்  ஆண்டில் வெளிவந்த தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ்  படத்தில் இடம்பெற்ற பாடல்களை எழுதிய பாபநாசம் சிவன் அவர்களும் கவிஞர்தான். இவருக்கு முந்திய மகாகவி பாரதியார் வாழ்ந்த காலத்தில்,

தமிழ்த்திரைப்படங்கள் இல்லை. ஆனால், பாரதியின்  கவிதைகள் பல திரையிசைப்பாடல்களாகிவிட்டன.

 

 பாரதி  சிறந்த  சந்தக்கவிஞர். அவரது கவிதை வரிகளில் ஓசை நயமும் பொருள் பொதிந்த எளிமையான சொற்களும்  இழையோடும். சாதாரண மக்களும் புரிந்துகொள்ளத்தக்க கருத்துக்கள் செறிந்திருக்கும்.

 

அதனால் ரசிகர்கள் அவரது கவிதைகள் திரைப்பட பாடல்களாக மாறியவேளையில் அவற்றில் லயித்து நெருங்கிவிட்டார்கள்.

 

இசையமைப்பாளர்கள் பலர் அவரது ஒரே பாடலுக்கு வெவ்வேறு இசைக்கோர்வைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

 


பி.ஆர். பந்துலுவின் கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் ஒலித்த அனைத்துப்பாடல்களும் பாரதியாரின் கவிதைகள்தான். இதற்கு இசையமைத்தவர் ஜி. இராமநாதன்.

 

அதே போன்று பிற்காலத்தில்  ஞான ராஜசேகரனின்  பாரதி படத்தில் ஒலித்த நிற்பதுவே நடப்பதுவே  பறப்பதுவே உட்பட வேறு பாடல் வரிகளும் பாரதியுடையது.   ஒரு நூற்றாண்டுக்கு முன்னர்  அவர் எழுதிய கவிதைகள் அவை.

 

பாபநாசம் சிவன்,  பாரதிதாசன், கே. டி. சந்தானம்,   தஞ்சை ராமையா தாஸ்,   கே. பி. காமாட்சி,   கொத்தமங்கலம் சுப்பு,  கு.மா. பாலசுப்பிரமணியம்,   கு..கிருஷ்ணமூர்த்தி,  கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், வாலி, மருதகாசி, கா. மு.ஷெரீப்,  சுரதா,  வைரமுத்து, மேத்தா, புலமைப்பித்தன்,  முதல்  சமகால திரைப்படப்பாடலாசிரியர்களான பா. விஜய், பழனி பாரதி, ந. முத்துக்குமார் ( இவர் சில வருடங்களுக்கு முன்னர் மறைந்துவிட்டார்)  , தாமரை, தமிழச்சி  சுமதி 


தங்கபாண்டியன்,  சிநேகன், மதன் கார்க்கி உட்பட பலர் தமிழ்த்திரையுலகிலும் வலம் வந்த கவிஞர்கள்தான்.

 

பாரதிதாசனின் கவிதைகளும் திரைப்படப் பாடல்களாயின. அவரது காலத்தில் திரைப்படம் வந்துவிட்டது. புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் -  
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர் முதலானவை அவரது  கவிதைகள்.  திரையில் இக்கவிதைகள் மேலும் புகழ்பெற்றவை. 

 

                                கண்ணதாசன்,   “  கலங்காதிரு மனமே  “  தொடங்கி,   “  கண்ணே கலை மானே  “ வரையில்  ஏராளமான  பாடல்கள் எழுதியவர். இவர்  கவிஞராகவே  அறியப்பட்டவர்.

முத்தையா என்ற இயற்பெயரைக் கொண்டிருந்தவர்,   கண்ணதாசன் என்ற   புனைப்பெயராலேயே பெரிதும் அறியப்பட்டவர்.

எட்டாம் வகுப்பு வரைதான் பள்ளிப் படிப்பு படித்திருந்தாலும்,


அவர் எழுதிய கவிதைகளும் கட்டுரைகளும் புதினங்களும் திரைப்படப் பாடல்களும் ஏராளம். தமிழ் இலக்கியப் புலமை அவரிடம் இயல்பாகவே குடியிருந்தது.

1944 -  1981 ஆண்டுகளுக்கு  இடைப்பட்ட காலத்தில் அவர்  நான்காயிரம் கவிதைகளையும் ஐயாயிரத்திற்கும் அதிகமான திரைப்படப் பாடல்களையும் எழுதியவர்.

புதுக்கவிதை இயக்கம் பெரிதும் வளர்ந்திருக்காத காலகட்டத்தில் எழுதிய கண்ணதாசன் மரபுக் கவிதைகளையே பெரிதும் எழுதிவந்தவர்.

கண்ணதாசனின் சொல்லாட்சிக்கு சான்றாக அமையும் திரைப்படப் பாடல்கள் ஏராளம். சங்ககால தமிழ்


இலக்கியத்தின் கற்பனைச் செறிவும் சொல்லாட்சியும் பாமரனைச் சென்றடையும் வகையில் திரைப்படப் பாடல்களில் அவற்றைப் புகுத்தியவர் கண்ணதாசன்.

முப்பது வருடங்களுக்கும் அதிகமான ஒரு காலகட்டத்தில் தமிழ் திரையுலகின் முதலிடக் கவிஞனாகத் திகழ்ந்தவர் அவர். 

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்,    “ கவிதைகளும் பாடல்களும் இலக்கியமாக இருந்தால் மட்டும்போதும்  அவை மக்களுக்கு நல்வழிப்படுத்தும் வழிகாட்டியாக அமையவேண்டும்.”  என்ற கருத்தின் வழிவந்தவர்


 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், சமுதாய உணர்வு, பகுத்தறிவு, பொதுவுடைமை, சீர்திருத்தம் போன்ற உயரிய நெறிகளை தனது பாடல்களில் எழுதியவர்.

" தான் அமர்ந்திருக்கும் ஆசனத்தில் ஒரு கால் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்தான். "  என்று ஒரு சந்தர்ப்பத்தில் மக்கள் திலகம் எம். ஜீ. ஆர். சொன்னார்.  பகுத்தறிவுக்கொள்கையையும் புரட்சிகரமான சிந்தனைகளையும்  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தனது பாடல்களில் பரப்பினார். அது எம். ஜீ.ஆரின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியது.

நாடோடி மன்னன் திரைப்படத்திற்காக   பட்டுக்கோட்டையார் வரிகளில் ஒலித்த   “ தூங்காதே தம்பி தூங்காதே  “  மிகச்சிறந்த


உதாரணம். பல நல்ல கருத்துக்களை மக்களிடமும் ஆட்சியாளர்களிடமும் விதைத்து.

29 வயதுவரை மட்டுமே வாழ்ந்த அவர்பாட்டெழுதிய ஒன்பது ஆண்டு காலத்தில் இயற்றிய 196 பாடல்களும் இனிமையானவை.

எளிய மக்களுக்காக எளிய நடையிலே பாடல்களை எழுதிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாட்டாளிக் கவிஞன் என்றும்  பெயர் பெற்றவர்.

 

கவிஞர்  வாலி1958 ஆம் ஆண்டுஅழகர் மலைக் கள்ளன்என்ற திரைப்படத்தில் தன்னுடைய முதல் பாடலை எழுதினார். இத்திரைபடத்தில் வாலியின் முதல் பாடலை பி. சுசிலா


  பாடினார்.  பின்னர், தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல பாடல்ளை திரைப்படங்களுக்காக இயற்றினார்.

 

பல சந்தர்ப்பங்களில் இசையமைப்பாளர் தரும் மெட்டுக்களுக்கு  ஏற்ப பொருளற்ற,  குத்தாட்டப்பாடல்களும் எழுதியவர்.

 

 “ கைவசம் பொருளில்லாதபோது பொருள் பொதிந்த பாடல்கள் எழுதியதாகவும், பொருள் குவிந்திருந்த வேளையில் பொருளற்ற பாடல்களை தயாரிப்பாளர் இயக்குநர் இசையமைப்பாளர்களின் வேண்டுகோளினால் எழுதநேர்ந்தது விதிப்பயன் “   என்றும்  மனம் நொந்த கவிஞர்தான் வாலி.

 

ஹரிதாஸின் சாதனை

 

ஹரிதாஸ் 1944 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இளங்கோவன் உரையாடல் எழுத, சுந்தர ராவ் நட்கர்ணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம் பத்து  இலட்சம் ரூபாய் வசூலித்து அன்று சாதனை படைத்தது.

1944 ஆம் ஆண்டு தீபாவளியன்று (16 அக்டோபர்) சென்னை சன் தியேட்டரில் திரையிடப்பட்ட இப்படம் அதே திரையரங்கில் 100 வாரங்கள் தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது. 1946 தீபாவளி


நாள் (22 நவம்பர்) வரை தொடர்ந்து ஓடியது. பிற திரையரங்குகளையும் சேர்த்து மொத்தம் 133 வாரங்கள் ஓடியது  என அறியப்படுகிறது.

 

இந்தப்படத்தில் இருபது  பாடல்கள் இடம்பெற்றன.

மன்மத லீலையை வென்றாருண்டோ - அன்னையும் தந்தையும் தானே பாரில் - கிருஷ்ணா முகுந்தா முராரே என்பன புகழ்பெற்ற பாடல்கள்.  இவற்றின்

பாடலாசிரியர் - பாபநாசம் சிவன்.

 

உத்தம புத்திரன்  1958 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இத்திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர் பின்னாளில் கதை, வசன கர்த்தாவாகவும் தயாரிப்பாளராகவும்  இயக்குநராகவும் பெரும் புகழ்பெற்ற  ஶ்ரீதர்.

சித்ராலயா என்ற தனது நிறுவனத்தின் மூலம் பல படங்களை


எடுத்தவர். கல்யாணப்பரிசு, சுமைதாங்கி, நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சிருக்கும் வரை, நெஞ்சம் மறப்பதில்லை, உட்பட பல  வெற்றிப்படங்கள் தந்தவர். ஊட்டிவரை உறவு, காதலிக்கநேரமில்லை முதலான வெற்றிகரமான படங்களையும் சிவந்தமண் என்ற வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட படங்களும் தந்தவர்.

உத்தமபுத்திரனில் வரும் யாரடி நீ மோகினி  பாடலுக்கு இசையமைத்தவர் ஜி. ராமநாதன். இந்தப்பாடல்காட்சியில் நிறைய வாத்தியக்கருவிகள் பயன்படுத்தப்பட்டதாகவும், இந்தப்பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு நெப்டியூன் ஸ்ரூடியோவில் இரண்டு மூன்று தினங்கள் நடந்ததாகவும் அந்தப்பாடல் காட்சியில் நடிக்கும்போது தனக்கு 102 டிகிரியில் காய்ச்சல் இருந்ததாகவும்  சிவாஜியே ஒரு நேர்காணலில் சொன்னார்.  அன்று வந்த இசைத்தட்டில் இரண்டுபக்கமும் பதிவுசெய்யப்பட்ட சற்று


நீண்ட பாடல். இதனை இயற்றியவர் கு.மா. பாலசுப்பிரமணியம்.

இக்காலப்பகுதியில் ஜெமனி வாசன் தயாரித்த படம்தான் வஞ்சிக்கோட்டை வாலிபன். அதில் இரண்டு பெரிய நட்சத்திரங்களான நாட்டியப்பேரொளி பத்மினியும் வைஜயந்தி மாலாவும் ஆடும் நடனம் முக்கியமானது.  கண்ணும் கண்ணும் கலந்து எனத்தொடங்கும் அந்த பாடல்வரிகளை கொத்தமங்கலம் சுப்பு எழுதியிருந்தார்.

இந்தப் படத்தின்  நடனஆசிரியர் ஹீராலால் என்பவர்தான்  .உத்தமபுத்திரனில் யாரடி மோகினி பாடலுக்கும்


நடனப்பயிற்சி அளித்தவர்இரண்டு பாடல் களும் இன்றும் பேசப்படுகின்றன. கண்ணும் கண்ணும் கலந்து பாடலை இதுவரையில் இரண்டு கோடி  ரசிகர்கள் கேட்டு ரசித்துள்ளதாக அறியப்படுகிறது. 

1967 இல் ஏ.பி. நாகராஜனின் தயாரிப்பு கதை, வசனம் இயக்கத்தில் வந்த வெற்றிப்படம் திருவருட்செல்வர். இதில்  தொடக்கத்தில் வரும் மன்னவன் வந்தானடி பாடல் புகழ்பெற்றது. கவியரசு கண்ணதாசன் அந்தப்பாடலை இயற்றினார் திரை இசைத்திலகம் கே.வி.  மகாதேவன் இசையமைத்தார். இந்தப்பாடலின் முதல் அடிகளாக ஐந்து பல்லவிகளை கவியரசர் எழுதியிருப்பார். இறுதி பல்லவியுடன் பி. சுசீலா


மன்னவன் வந்தானடி எனப்பாடவும் மன்னராக தோன்றும் நடிகர் திலகம் கம்பீரமாக ஒரு நடை நடந்துவருவார்.

இந்தப்பாடாலை பாடுவதற்கு தான் நீண்ட பயிற்சி எடுத்துக்கொண்டதாக  பி. சுசீலா சொல்லியிருக்கிறார். இந்தப்பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு அபிநயம் தொடர்பான சித்திரிப்பில் நேர்ந்த தவறுகளினால்,  பல தடவை மீண்டும் மீண்டும் எடுக்கப்பட்டதாகவும் நடு இரவு வரையில் படப்பிடிப்பு நடந்ததாகவும் பத்மினி சொல்லியிருக்கிறார்.

எனவே ஒரு பாடல் திரையில் ஒலிப்பதற்கு பின்னாலிருக்கும் கடின உழைப்பு பெறுமதியானது.  திரையில் சில நிமிடங்கள்


தோன்றும் காட்சிக்கான பாடல்  தோன்றும் பின்னணியில் பலருடைய உழைப்பு தங்கியிருக்கிறது.

இன்று நாம் டிஜிட்டல் யுகத்தில் வாழ்கின்றோம்.

கடந்த 2018 ஆம் ஆண்டு இறுதியில்  உலகெங்கும் திரைக்கு வந்த சங்கரின் இயக்கத்தில் ஜெயமோகனின் வசனத்தில், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பில்  சூப்பர் ஸ்டார் ரஜனி கந்த் - எமி ஜெக்சன் நடிப்பில் வந்த 2. 0 ( ரூ பொய்ன்ட் சீரோ) திரைப்படத்தின் தொடக்கவிழா 2015 டிசம்பரில்தான் நடந்தது. சுமார் மூன்று ஆண்டுகள் தயாரிப்பிலிருந்த படம்.

இந்தப்படத்தில் வரும் " எந்திரலோகத்து சுந்தரியே " பாடலை இதுவரையில் ஐந்து மில்லியன் ரசிகர்கள் கேட்டுள்ளதாக ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது.

 

இந்தப்பாடலை கவிப்பேராரசு வைரமுத்து -  பொன்மணி தம்பதியருக்கு 1980  இல் பிறந்த  மகன் மதன் கார்க்கி  எழுதியிருந்தார்.

இந்தப்பாடலை  இதுவரையில்   ஆறு மில்லியனுக்கும் மேற்பட்ட  மக்கள் கேட்டுள்ளனர்.

ஆனால், எவ்வளவு காலத்திற்கு இந்தப்பாடல் மக்கள் மனதில் நிற்கும் என்ற கேள்வியும் வருகிறது.

அன்று பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த பாடல்களான மன்மதலீலை, யாரடி நீ மோகினி,   மன்னவன் வந்தானடி ஆகிய தலைப்புகளில் பின்னாளில் திரைப்படங்களும் வந்துவிட்டன.

 

இனிவரும் காலத்தில் எந்திரலோகத்து சுந்தரியே என்ற பெயரில் ஒரு படமும் வெளியாகலாம். காத்திருந்து பார்ப்போம்.

1995 ஆம் ஆண்டில் வெளியான சூப்பர் ஸ்டாரின் முத்து படத்தில் வெளிவந்த தில்லானா தில்லான  என்ற வைரமுத்துவின் பாடலை,  சமகாலத்தில்  அச்சுறுத்தலாக பரவியிருக்கும் வைரஸை எச்சரித்து, கொரோனா… கொரோனா  என்று மாற்றி எழுதி மீம்ஸ்ஸாக்கி வைரலாக பரவச்செய்துள்ளார் நவீன காலத்து கவிஞர் ஒருவர்.

சில வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில்   மெகி நூடில்ஸ்ஸின் விற்பனை தற்காலிகமாக தடைசெய்யப்பட்டதை அறிவீர்கள்.  அதில் கலக்கப்பட்ட ஒருவகை எஸென்ஸில் நச்சுத்தன்மை இருந்தமையால்  தடைசெய்யப்பட்டது.

அச்சமயம் ஒரு புதுக்கவிஞர் எழுதிய கவிதை இதோ:

நூடில்ஸின் வாழ்வுதனை சூது கவ்வும்.

இடியப்பம் ஓர் நாள் வெல்லும்

நல்லவேளை இதனைக்கேட்க பாரதி உலகத்தில் இல்லை.

கவிக்கோ  அப்துல்ரகுமானிடம்,   “ நீங்கள் சிறந்த கவிஞர், ஏன் நீங்கள் திரைப்படங்களுக்கு பாடல் எழுதுவதில்லை ..?  “ என்று கேட்டதற்கு,  அவர் தந்த பதில்:  “  அம்மி கொத்துவதற்கு பொற்கொல்லர்  அவசியமில்லை.  “

அப்துல்ரகுமான் மறைந்த பின்னர் வெளிவந்த பக்ரீத் ( 2019 ) திரைப்படத்தில், அவரது கவிதை,   பாடலாக இடம்பெற்றுள்ளது.

முகநூல் அறிமுகமானதன் பின்னர், ஏராளமான கவிஞர்கள் தமிழ் உலகில் தோன்றிவிட்டனர்.  இவர்கள், முன்னைய காலத்து புலவர்களையும் கவிஞர்களையும் விஞ்சிவிடுவார்களா..?

புதுவெள்ளமாக அடிபட்டுப்போய்விடுவார்களா..?

கொரோனாவுக்கு காலம் பதில் சொல்லும் என்பது போன்று இக்கால மீம்ஸ் உலகில் புதுக்கவிஞர்களுக்கும் காலம் பதில் சொல்லலாம்!

  Kavithayum Thiraipada paadalkalum (1).mp3

( மெல்பன் வானமுதம் வானொலியில் ஒலிபரப்பானது )


letchumananm@gmail.com

 


 

 

 

  

No comments: