உலகச் செய்திகள்

2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ட்ரம்ப் திட்டம் 

ஜனநாயக ஆர்வலர்கள் மீது பொலிஸ் குற்றச்சாட்டு பதிவு

மியன்மார் அரசியல் பதற்றம்: ஆசியான் முயற்சி ஸ்தம்பிதம்

நவெல்னி கொலை முயற்சி: ரஷ்ய அதிகாரிகள் மீது அமெரிக்கா புதிய தடை

ஜப்பான் செல்வந்தர் மெசாவா நிலவு பயணத்திற்கு அழைப்பு

ஹொங்கொங் தேர்தல் முறையில் மாற்றம் செய்ய சீனா நடவடிக்கை

இம்ரான் கானுக்கு நெருக்கடி


2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ட்ரம்ப் திட்டம் 

புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்கும் திட்டம் இல்லை என்று குறிப்பிட்டிருக்கும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அது குடியரசு கட்சியினரின் வாக்குகளை உடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின் முதல் முறை பொது மேடையில் உரையாற்றியபோதே ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது பற்றியும் இதன்போது அவர் குறிப்பார்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி, டிரம்பின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். அவரது ‘அமெரிக்காவை முதன்மைப்படுத்தும் கொள்ளை அமெரிக்காவை கடைசி இடத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

ட்ரம்ப் மீது பாராளுமன்றத்தில் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியுற்ற சில வாரங்களிலேயே அவர் இந்த உரையை நிகழ்த்தியுள்ளார்.

“நாம் ஆரம்பித்த இந்த சிறப்பான பயணத்தின் முடிவு வெகுதொலைவில் உள்ளது. புதிய கட்சியை ஆரம்பிப்பதில் விருப்பம் இல்லை. பைடன் நிர்வாகம் மோசமாக இருக்கப்போகிறது என்பது நமக்கு தெரியும். ஆனால், எந்த அளவு மோசமாக இருக்கப்போகிறது என்பதை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. 2024 ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி படுதோல்வியை சந்திக்கும்” என்று அவர் குறிப்பிட்டார்.

ட்ரம்ப் குடியரசுக் கட்சியில் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தும் நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓர்லாண்டில் கன்சர்வேர்டிவ் அரசியல் செயற்பாட்டு மாநாட்டிலேயே அவர் உரையாற்றி இருந்தார்.

எனினும் ட்ரம்ப் மீதான பேஸ்புக் மற்றும் ட்விட்டர் உட்பட சமூக ஊடகங்களின் தடை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. அமெரிக்க பாராளுமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற வன்முறையை துண்டியதாகவே ட்ரம்ப் மீது இந்தத் தடை கொண்டுவரப்பட்டது.

வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறியது தொடக்கம் புளோரிடாவில் இருக்கு தமது கொல்ப் விடுதியில் வசித்து வருகிறார்.  நன்றி தினகரன் 
ஜனநாயக ஆர்வலர்கள் மீது பொலிஸ் குற்றச்சாட்டு பதிவு

ஹொங்கொங் பொலிஸார் ஜனநாயக ஆர்வலர்கள் 47 பேர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர்.

அதிகாரத்தைக் கீழறுக்க முயன்றதாக அவர்கள் மீது, குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஜனநாயக ஆர்வலர்கள் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்.

ஹொங்கொங்கில் உள்ள 50க்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் பொலிஸ் நிலையங்களில் தகவல் தெரிவிக்குமாறு நேற்று உத்தரவிடப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்ச்சைக்குரிய தேசியப் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த மாதம் பெரிய அளவில் நடத்தப்பட்ட சோதனையின்போது அவர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு ஜூலையில், ஹொங்கொங் சட்டமன்றத்துக்கு, சட்ட விரோதமாய்த் தேர்தல் நடத்த முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

ஜனநாயக ஆதரவுக் குழுக்கள் போதுமான இடங்களில் வென்று அதன் மூலம் அரசாங்கத்தை முடக்கத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.    நன்றி தினகரன் 

மியன்மார் அரசியல் பதற்றம்: ஆசியான் முயற்சி ஸ்தம்பிதம்

மியன்மாரில் இராணுவ சதிப் புரட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்ட ங்கள் நேற்றும் இடம்பெற்ற நிலை யில் அவை தணிவதற்கான சமிக்ஞைகள் குறைந்து காணப்படுவதோடு இந்தப் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவரும் அண்டை நாடுகளின் முயற்சியும் ஸ்தம்பித்துள்ளது.

வர்த்தகத் தலைநகரான யங்கோனில் நேற்று கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைப்பதற்கு பாதுகாப்பு படையினர் வானை நோக்கி சூடு நடத்தியுள்ளனர்.

ஆங் சான் சூச்சியின் ஜனநாயக முறையில் தேர்வான அரசுக்கு எதிராக கடந்த பெப்ரவரி 1ஆம் திகதி இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சிக்குப் பின்னர் நீடிக்கும் ஆர்ப்பாட்டங்களில் இதுவரை குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு கடந்த செவ்வாய்க்கிழமையும் பொலிஸார் சூடு நடத்தியுள்ளனர்.

சின் மாநிலத்தில் அனைத்து நகரங்களிலும் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதாக அங்கிருக்கும் செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மறுபுறம் ஆர்ப்பாட்டக்காரர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் கைது நடவடிக்கைகளும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றனர். கடந்த செவ்வாயன்று ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்பவர் ஒருவர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை மியன்மார் தொடர்பில் ஆசியான் நாடுகள் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய கூட்டத்தில் தீர்வு ஒன்றை எட்டுவதில் தோல்வி கண்டுள்ளது. அமைதி காப்பதற்கு அனைத்து உறுப்பு நாடுகளும் அழைப்பு விடுத்தபோதும், ஆங் சான் சூச்சி உட்பட கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் அழைப்பு விடுத்தன.

“சாதகமாக, அமைதியான மற்றும் ஆக்கபூர்வமான வகையில் மியன்மாருக்கு உதவ ஆசியான் தயாராக உள்ளது என்பதை நாம் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று ஆசியான் அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மறுபுறம் மியன்மார் அரச ஊடகம் வெளியிட்ட செய்தியில், ஆசியான் கூட்டத்தில் பங்கேற்ற இராணுவம் நியமித்த வெளியுறவு அமைச்சர், “பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுப்பட்டார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் நோக்கம் பற்றி அந்த செய்தியில் எதுவும் கூறப்படவில்லை.   நன்றி தினகரன் 

நவெல்னி கொலை முயற்சி: ரஷ்ய அதிகாரிகள் மீது அமெரிக்கா புதிய தடை

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவெல்னி மீது நஞ்சூட்டப்பட்ட விவகாரம் தொடர்பில் அந்நாட்டின் மூத்த அதிகாரிகள் மீது அமெரிக்கா தடைகளை கொண்டுவந்துள்ளது.

ரஷ்யாவின் உளவுப் பிரிவு உயர் அதிகாரி மற்றும் மேலும் ஆறுவர் இதன்போது இலக்கு வைக்கப்பட்டிருப்பதோடு இதேபோன்ற நடவடிக்கையில் ஐரோப்பிய ஒன்றியமும் ஒருங்கிணைந்து செயற்பட்டுள்ளது.

நவெல்னி மரணத்தில் இருந்து உயிர் தப்பிய கடந்த ஆண்டு நடத்தப்பட்ட நச்சு இரசாயனத் தாக்குதலின் பின்னணியில் ரஷ்ய அரசு இருப்பது புலன் விசாரணையில் உறுதியாகி உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை விமர்சிப்பவராக நவெல்னி இருந்து வருகிறார்.

அவர் மீது நஞ்சூட்டப்பட்டதில் தமக்கு தொடர்பு இல்லை என்று ரஷ்யா மறுத்துள்ளது. சைபீரியாவில் விமானம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தபோதே நவெல்னி நஞ்சூட்டப்பட்டதோடு அவர் ஜெர்மனியில் சிகிச்சை பெற்று உயிர் தப்பினார்.

நாடு திரும்பிய அவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது சிறை அனுபவித்து வருகிறார்.

இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் நோவிச்சொக் நச்சு இரசாயனம் சோவியட் ஒன்றிய காலத்தில் ஆய்வுகூடத்தில் தயாரிக்கப்பட்டதாகும்.

இந்நிலையில் ஏழு மூத்த அதிகாரிகள் மற்றும் இரசாயன மற்றும் உயிரியல் உற்பத்திகளை மேற்கொள்ளும் 14 நிறுவனங்கள் தடைக்கு உள்ளாகியுள்ளன.

இந்தத் தடையின் கீழ் இந்த அதிகாரிகளின் அமெரிக்காவில் உள்ள சொத்துகள் முடக்கப்படுகின்றன.

அதில் ரஷ்யாவின் பிரதான உளவு நிறுவனமான எப்.எஸ்.பியின் தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ், அதேபோன்று பிரதிப் பாதுகாப்பு அமைச்சர்களான அலெக்சி கிரிவொருச்கோ மற்றும் பவேல் பொபோ ஆகியோரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தில் ரஷ்யா மீது கொண்டுவரப்பட்ட முதல் தடையாக இது உள்ளது. புட்டின் தொடர்பில் அமெரிக்கக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை விடவும் கடும் நிலைப்பாட்டை பைடன் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 

ஜப்பான் செல்வந்தர் மெசாவா நிலவு பயணத்திற்கு அழைப்பு

எலோன் மாஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிலவுப் பயணத்தில் இணைவதற்கு ஜப்பான் செல்வந்தரான யுசாகு மெசாவா பொதுமக்களில் எட்டுப் பேருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

“அனைத்து வகையான பின்புலத்தையும் கொண்டவர்களை இணைத்துக் கொள்ள நான் விரும்புகிறேன்” என்று டவிட்டரில் வீடியோ வழியாக குறிப்பிட்டிருக்கும் அவர், அது தொடர்பில் விண்ணப்பிப்பதற்கான விபரத்தையும் இணைத்துள்ளார்.

இந்த பயணத்திற்கான ஒட்டுமொத்த செலவையும் தாம் பார்த்துக்கொள்வதாகவும் பயணத்திற்கு முன்வருவோர் இலவசமாக பயணத்தை மேற்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

டியர்மூன் என்ற இந்தப் பயணத் திட்டம் 2023 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ளது.

ஜப்பானில் ஆடை அலங்கார தொழிலதிபரும் கலைப் பொருட்களை சேகரிப்பவருமான மெசாவா ஆரம்பத்தில் இந்தப் பயணத்திற்கு கலைஞர்களை சேர்த்துக்கொள்வதற்கு திட்டமிட்டபோதும், தற்போது அது உலகெங்கும் உள்ள மக்களுக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

ஸ்பேஸ்எக்ஸ் மூலம் நிலவை சுற்றிவந்த முதலாவது தனியார் பயணியாக மெசாவா 2018 ஆம் ஆண்டு பதிவானார்.

பணத்தை வாரி வழங்கும் பழக்கத்தைக் கொண்டுள்ள மேசாவா ட்விட்டரில் மிக அதிக ரசிகர்களைக் கொண்ட ஜப்பானியராக உள்ளார்.

கடந்த ஆண்டு காதலியைத் தேடும் தம் முயற்சியை ஆவணப்படமாக எடுக்க அவர் முயன்றார். பின்னர் மனமாற்றத்தினால் அதிலிருந்து விலகினார்.   நன்றி தினகரன் 
ஹொங்கொங் தேர்தல் முறையில் மாற்றம் செய்ய சீனா நடவடிக்கை

சீனாவின் மிகப்பெரிய அரசியல் கூட்டத்தில் 'தேசப்பற்றை' உறுதிப்படுத்தும் வகையில் ஹொங்கொங்கின் தேர்தல் முறையை மாற்றியமைக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹொங்கொங் மீதான பிடியை இறுக்கும் நடவடிக்கைகளை அமுல்படுத்தி இருக்கும் நிலையிலேயே அந்த சீர்திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது.

ஒருவாரம் நீடிக்கும் சீனாவின் தேசிய மக்கள் கொங்கிரஸ் கூட்டத்தின்போதே இது பற்றிய வரைவு ஒன்று பற்றி பேசப்படவுள்ளது.

இந்த கூட்டத்திற்காக ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் பீஜிங்கில் ஒன்றுகூடியுள்ளனர்.

ஹொங்கொங் விவகாரம் தவிர, மத்திய அரசின் பொருளாதார வளர்ச்சி இலக்கு மற்றும் சுற்றுச்சூழல் கொள்கைகளுக்கு ஒப்புதல் பெறப்படவுள்ளது.

ஹொங்கொங்கில் தேர்தல் குழுவை எவ்வாறு அமைப்பது மற்றும் அந்த நகரின் சட்ட சபைக்கு புதிய அதிகாரங்களை வழங்குவது பற்றி இந்தக் கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தேசிய மக்கள் கொங்கிரஸ் உப தலைவர் வங் சென் நேற்று அறிவித்தார்.

சீன ஆதரவாளர்களைக் கொண்ட தேர்தல் குழு ஹொங்கொங் சட்ட மன்றத்திற்கு பெரும்பாலான உறுப்பினர்களை பரிந்துரைக்கும் அதிகாரத்தை பெற்றுள்ளது. இந்நிலையில் சட்ட மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு மேலதிகமான உறுப்பினர்கள் இந்த தேர்தல் குழுவினால் பரிந்துரைக்கப்படலாம் என்று சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.    நன்றி தினகரன் 

இம்ரான் கானுக்கு நெருக்கடி

பாகிஸ்தான் செனட் தேர்தலில் பிரதமர் இம்ரான் கானின் ஆளும் கட்சி முக்கிய ஆசனம் ஒன்றை தோற்றிருக்கும் நிலையில் அவர் பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் 96 ஆசனங்கள் கொண்ட மேலவையில் 48 இடங்களுக்கு கடந்த புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் நாட்டின் மாகாண சட்டமன்றங்கள் மற்றும் பாராளுமன்ற கீழவை உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இதில் இம்ரான் கானின் தஹ்ரீக்கே இன்சாப் கட்சியின் தற்போதைய நிதி அமைச்சர் அப்துல் ஹபீஸ் செய்க் தோல்வி அடைந்திருப்பதாக உத்தியோகபூர்வமற்ற முடிவுகள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் யூசுப் ராசா கிலானி 169–164 என்ற வாக்குகளால் செய்க்கை தோற்கடித்துள்ளார். இந்தத் தோல்வி ஆளும் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பாராளுமன்றத்தில் தமது பெரும்பான்மையை உறுதி செய்வதற்கு இம்ரான் கான் மற்றும் அவரது கட்சியினர் நம்பிக்கை வாக்கெடுப்பு ஒன்றை நடத்த ஏகமனதாக தீர்மானம் எடுத்ததாக வெளியுறவு அமைச்சர் ஷாங் மஹ்மூத் குறைசி தெரிவித்துள்ளார்   நன்றி தினகரன் 

No comments: