.
புரட்சி நடிகர் எம் ஜி ஆர் இன் நடிப்பில் தொடர்ந்து 16 படங்களை தயாரித்து வெளியிட்டவர் சாண்டோ சின்னப்ப தேவர். சரித்திர படங்களில் மட்டுமன்றி சமூகப் படங்களிலும் எம் ஜி ஆரால் நடிக்க முடியும் என்பதை உறுதி செய்யும் வகையில் இவரது படங்கள் அமைந்தன. அந்த வகையில் தேவர் பிலிம்ஸ் தயாரித்த இரண்டாவது படம்தான் தாய் சொல்லை தட்டாதே.
இதற்கு முன் அவர் தயாரித்த தாய்க்குப்பின் தாரம் படம் வெற்றி கண்ட போதும் அவருக்கும் எம்ஜிஆருக்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டு இருவரும் பிரிந்து இருந்தார்கள். தனது புதிய தயாரிப்பில் ஜெமினி கணேசனை ஒப்பந்தம் செய்து படத்திற்காக சில பாடல்களையும் ஒலிப்பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் தேவரைப் போன்ற நல்லதொரு தயாரிப்பாளரை ஒதுக்குவது தனது தொழிலுக்கு நல்லது அல்ல என்பதை உணர்ந்த எம்ஜிஆர் அவரை நேரில் சந்தித்து தனது நட்பை புதுப்பித்துக் கொண்டார். எம்ஜிஆர் பொன் முட்டையிடும் வாத்து என்பதை உணர்ந்திருந்த தேவரும் அவருடன் மீண்டும் இணைந்து கொண்டார் அதன் விளைவு படத்திலிருந்து ஜெமினி அகற்றப்பட்டு எம்ஜிஆர் ஒப்பந்தமானார்.
கதாநாயகியாக சரோஜாதேவி இணைந்துகொண்டார் . இளமையாகவும் அழகாகவும் தோன்றி ரசிகர்களை தன் வசப்படுத்திக் கொண்டார் அவர். பிரபல வசனகர்த்தாவான ஆரூர்தாஸ் இப்படத்திற்கு தான் முதன்முறையாக எம்ஜிஆருக்கு வசனம் எழுதினார். இதில் இவர் எழுதிய வசனங்கள் எம்ஜிஆரை கவரவே பின்னர் மேலும் பல படங்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்பை எம்ஜிஆர் அவருக்கு வழங்கினார். படத்தில் அவர் எழுதிய விதவையின் முகத்தில் விழிப்பதை பலர் சகுன தடையாக நினைப்பார்கள் ஆனால் நான் தினமும் என் அம்மாவின் முகத்தில் விழிப்பது தான் வெற்றிக்கு மேல் வெற்றி அடைந்து வருகின்றேன் என்ற வசனம் எம்ஜிஆரை மட்டுமன்றி எல்லோரையும் கவர்ந்து இருந்தது.
ஒரு தாய்க்கு இரண்டு மகன்கள் மூத்தவன் கொள்ளைக்காரன் இளையவன் பொலிஸ் அதிகாரி இருவரும் ஒருத்தியையே காதலிக்கிறார்கள். ஆனால் அவளின் தந்தையோ பகலில் பாங்கராகவும் இரவில் கொள்ளைக்காரனாகவும் நடமாடுகின்றான். தாயோ இருதலை கொள்ளியாக தவிக்கிறாள் .
இப்படி அமைந்த கதையில் தாயாக கண்ணாம்பா நடித்திருந்தார். கண்டிப்பு உருக்கம், வேதனை என்று எல்லாவற்றையும் தன் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருந்தார் அவர். அவரின் மூத்த மகனாக அசோகன் நடித்தார் . இப்படத்தில் அவரின் நடிப்பிற்கு கிடைத்த வெற்றி, தொடர்ந்து எம்ஜிஆர் படங்களில் நடிக்க வழிவகுத்தது.
படத்தில் வில்லனாகவும் கதாநாயகியின் தந்தையாகவும் நடித்த எம் ஆர் ராதா தோன்றும் அனைத்து காட்சிகளிலும் முத்திரை பதிக்கத் தவறவில்லை. அவர் பேசும் வசனங்கள் கட்டை குரலில் பேசுவது எல்லாம் ரசிகர்களின் கரகோஷத்தை பெற்றுக்கொடுத்தது.
கண்ணதாசனின் ஏழு பாடல்களையும் சௌந்தரராஜன் சுசீலா பாடி இருந்தார்கள். போயும் போயும் மனிதனுக்கு, சிரித்து சிரித்து என்னை, பூ உறங்குது பொழுதும் உறங்குது, காட்டுக்குள்ளே திருவிழா ஆகிய பாடல்கள் கேவி மகாதேவனின் இசையில் அரை நூற்றாண்டைக் கடந்தும் ஒலிக்கின்றது. குலதெய்வம் ராஜகோபால் ஜெமினி, தேவர் ஆகியோரும் நடித்திருந்தனர். தம்பி திருமுகம் படத்தை இயக்கியிருந்தார்
குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்ட தாய் சொல்லை தட்டாதே நூறு நாட்கள் ஓடி எம்ஜிஆர் தேவர் நட்பிற்கு காரணமாகவும் அமைந்தது அதுமட்டுமின்றி இதில் இடம்பெற்ற எம்ஜிஆர் சரோஜாதேவி ஜோடிக்கு ரசிகர்கள் இடையே ஏற்பட்ட வரவேற்பு அவர்களை மேலும் பல படங்களில் நடிக்க வழிசெய்தது .
No comments:
Post a Comment