மல்லிகை ஜீவாவின் ( 1927 – 2021 ) வாழ்வில் சுவாரசியமான பக்கங்கள் - அங்கம் - 06 ஜெயகாந்தனும் மல்லிகை ஜீவாவும் முருகபூபதி


ல்லிகையில்  ஜீவா  1970 களில்  எழுதிய " ஒரு  படைப்பாளியைப்பற்றி இன்னொரு  சிருஷ்டியாளனின்  பார்வை " - என்ற  தொடர் விமர்சனக்கட்டுரை   காரசாரமாக  நீடித்து  ஓய்ந்தது.

அவர் அக்காலப்பகுதியில் ஒவ்வொரு மாதமும் மல்லிகையை வெளியிட்டு, யாழ்ப்பாணத்தில் விநியோகித்துவிட்டு கொழும்புக்கு  ரயிலேறிவிடுவார்.

அவரது ஒன்றுவிட்ட சகோதரர்  இராசதுரை எமது நீர்கொழும்பூரில் ரோயல் சிகையலங்கார நிலையம்  நடத்திக்கொண்டிருந்தார். அதற்குப்பின்புற ஒழுங்கையில்


இராசதுரை குடும்பத்துடன் வசித்தார்.

ஜீவா நீர்கொழும்புக்கு வந்தால்,  மாலைவேளையில் அவரை அழைத்துக்கொண்டு கடற்கரைக்கு வந்துவிடுவோம்.

அச்சந்திப்பில் , அடுத்த மாதம் ஜெயகாந்தன் பற்றி அவர் எழுதவிருக்கும் விடயங்களை எம்மிடம் சொல்வார்.

அவருடன் வாதம் செய்வோம்.  அவரும் விட்டுக்கொடாமல் தனது தரப்பு வாதங்களை சொல்வார்.

உன்னைப்போல் ஒருவன், இனிப்பும் கரிப்பும், வாழ்க்கை அழைக்கிறது முதலான அடிமட்ட  - மத்தியதர வர்க்க மக்களினது கதைகளையும்  சென்னையில் விளிம்பு நிலையில் வாழும் மக்களதும் வாழ்வை சித்திரித்த கதைகளையும் எழுதிவந்த ஜெயகாந்தன், ஆனந்தவிகடனில் மாதாந்தம் முத்திரைக்கதைகள் மகுடத்தில் 500 ரூபா சன்மானத்துடன் எழுதத்தொடங்கியதும்,  பாரிசுக்குப்போ முதலான மேல்வர்க்க மக்களின் கதைகளை எழுதத் தொடங்கிவிட்டார் என்றும், கம்யூனிஸ்ட் கட்சியின் பாசறையில் வளர்ந்த ஜெயகாந்தன், திடீரென,  “ தான் எந்தக்கட்சிக்கும் தாலி கட்டிக்கொள்ளவில்லை  “ என்று அதிரடியாக பிரகடனப்படுத்தியதும்தான் ஜீவாவுக்கு வந்திருந்த தார்மீகக்  கோபம்.


எனது மாமா மகள், தேவசேனா அந்தத் தொடருக்கு  தேவி என்ற புனைபெயரில் எதிர்வினையாற்றி எழுதியிருந்தார்.  தேவி என்ற பெயரையும், மல்லிகை இதழின் முகப்பில் அவ்விதழில் எழுதியவர்களின் பெயர்பட்டியலில்  ஜீவா பதிவிட்டார்.    

தேவியின் எதிர்வினைக்கு மாற்றுக்கருத்தாக  ஜீவாவின் வாதங்களை ஆதரித்து,  யாழ். போதனா ஆஸ்பத்திரியில் மருத்துவராக பணியாற்றிய ராஜம் தேவராஜன் அடுத்த இதழில் எழுதினார்.

தேவி பின்னாளில் ஜெர்மனிக்கும் ராஜம் லண்டனுக்கும் புலம்பெயர்ந்து சென்றுவிட்டனர்.

1984  இல்  ஜெயகாந்தனின்    மற்றும்  ஒரு  நாவல்  ஜய  ஜய  சங்கர வெளியானது.   அந்த  நாவலும்  வாதப்பிரதிவாதங்களை


  எழுப்பியது. மீண்டும்   ஜீவா  அந்த  நாவலுக்கு  எதிர்வினையாற்றி  எழுதினார். ஜீவா , வெளியூர்  பயணங்கள், கட்சிப்பணிகளுக்கு   மத்தியிலும்  நிறைய  வாசித்தார்.    அத்துடன் ஜே,கே.யின்  எந்த  நூலையும்  அவர்  தவறவிடவில்லை.

ஜே.கே. பற்றி   மற்றவர்கள்  எழுதும்  குறிப்புகளையும்  தேடி   எடுத்து படித்துவிடுவார்.

வீரகேசரியில்  ஜெயகாந்தன்  பற்றிய  எனது  குறிப்பொன்றில் "முரண்பாடுகளின்  மொத்த  உருவமாக   தற்பொழுது  ஜெயகாந்தன் திகழுகின்றார் "  என்று  ஒரு  வரி  எழுதிவிட்டேன்.   அதனை யாழ்ப்பாணத்திலிருந்து   படித்து  விட்டு - மீண்டும்  ஒரு  தடவை கொழும்பு   வந்தசமயம்,                              '' பார்த்தீரா...  இப்பொழுதாவது உங்களுக்கெல்லாம்   புரிகிறதா...? இதனைத்தானே... நான்  அன்றே சொன்னேன்..."  - என்று  வெடிச்சிரிப்புடன்  ஜீவா   சொன்னார்.

ஆயினும்  - அவருக்கு  ஜே.கே.  மீதிருந்த  அன்பும்  அக்கறையும் குறையவே  இல்லை.  தான்  அவரை  விமர்சிப்பது  உரிமையுடன்தான் - தமிழக   எழுத்தாளர்கள்   அம்மாமி  கதைகளை எழுதிக்கொண்டிருந்தபொழுது    அடிநிலை 


மக்களின்  வாழ்வை வெளியுலகிற்கு    தமது  இலக்கியப்படைப்புகள்  மூலம் உரத்துச்சொன்னவர்.

நவீன  தமிழ்  இலக்கிய  வளர்ச்சியை   புதுமைப்பித்தனுக்கு  பின்னர் சரியான    திசையில்  முன்னெடுத்தவர்.   தடுமாறி  திசை மாறிச்செல்கிறாரோ...?    என்ற  கோபம்தான்  அந்தத்தொடரைத்  தான்  எழுதியதற்கும்   காரணம்  என்றார்.

ஆயினும்  - எந்த  விமர்சனங்களும்  ஜெயகாந்தனை   பாதிக்கவில்லை. 1984   இற்குப்பின்னரும்  ஜே.கே.   நிறைய  எழுதினார்.   ஆனால் , சிறுகதைகள் -  நாவல்கள்  அல்ல.   பெரும்பாலும்  கட்டுரைகளே எழுதினார்.

ஜெயகாந்தனின்  - அந்தரங்கம்  புனிதமானது,   போர்வைமௌனம்  ஒரு  பாஷைரிஷி  மூலம்,  ஆடும்  நாற்காலிகள்  ஆடுகின்றனசில நேரங்களில்  சில  மனிதர்கள்,   ஒரு  நடிகை  நாடகம்  பார்க்கிறாள், சமூகம்   என்பது  நான்குபேர்ஒரு  மனிதன்  ஒரு  வீடு  ஒரு  உலகம் என்பன   அவரின்  சிந்தனையில்  ஏற்பட்ட  மாற்றங்களை   சித்திரித்த படைப்புகள்.

ஜெயகாந்தன்  ஒருவகையில்  தீர்க்கதரிசி.   அவர்  எழுதியிருப்பதுபோல்  காலங்கள்  மாறுகிறது.   மனிதர்களும்  சிலநேரங்களில்   ஒருவிதமாகவும்  அதே   விடயத்தினை   பிறிதொரு சந்தர்ப்பத்தில்   வேறுவிதமாகவும்  சிந்திக்கிறார்கள்.  ஆனால் -  அதனை   சந்தர்ப்பவாதம்    என்றும்  உலகம்  சொல்கிறது.  உலகம் என்பது   என்ன...சமூகம்  என்பது  என்ன...? இந்தக்கேள்விகளுக்கெல்லாம்  தர்க்கமான  பதில்களை  தமது படைப்புகளிலும்    அதற்கு  மேலும்  செறிவேற்றுவதற்கு  நீண்ட முன்னுரைகளையும்  அவர்  தந்தார்.

இன்று Living together  பற்றியெல்லாம்   கதைகள்  தமிழில் வருகின்றன.    மணிரத்தினத்தின்  படமும்  2015  இல்  வெளியாகிறது. ஆனால் -  ஜெயகாந்தன்  இற்றைக்கு  நாற்பது   வருடங்களுக்கு   முன்னரே அத்தகைய  கதைகளை  எழுதியிருப்பவர்.

ஒருதடவை  மல்லிகை  ஜீவா  தமிழ்  நாடு  செல்லவிருந்தார். செல்வதற்கு  முன்னர்  நீர்கொழும்பு  வந்து  என்னுடன் கலந்துரையாடியபொழுது , தமிழ்நாட்டில்  இந்த  முறை   பயணத்தில் தான்  யார்  யாரை  சந்திக்கவேண்டும்  என்று  கலந்தாலோசித்தார்.

ஒரு  காகிதத்தில்  பலரதும்  பெயர்களை   நினைவுபடுத்தி  எழுதினேன்.  அதில்  முதலாவதாக  எழுதிய  பெயர்    ஜெயகாந்தன்.

ஜீவா  தாம்  எழுதிய  சிறுகதைகள்  -  கட்டுரைகள்  மற்றும் அவரது நேர்காணல்களின் தொகுப்பு, தனது  சோவியத் பயணம், வாழ்க்கைச்சரிதம்  முதலானவற்றையும்  தூண்டில்  கேள்வி - பதில் என்பனவற்றையும்  மல்லிகைப்பந்தலினால்  நூலுருவாக வெளியிட்டிருப்பவர்.   சில  நூல்களை  தமிழ்நாடு  நியுசெஞ்சுரி புக்ஹவுஸ் (NCBH)  வெளியிட்டிருக்கிறது.     இந்த  NCBH  ஜெயகாந்தன் நூல்கள்  சிலவற்றையும்  இலங்கையில்  தெணியான்திக்குவல்லை கமால்   முதலான  முற்போக்கு  எழுத்தாளர்களின்  நூல்களையும் வெளியிட்டிருக்கிறது.

இந்த  நிறுவனம்  மாஸ்கோ   முன்னேற்றப்பதிப்பகத்தில்  பணியாற்றிய கலாநிதி  விதாலி ஃபூர்ணிக்காவிற்கும்  ஜெயகாந்தனுக்கும்  இடையில் நடந்த  நீண்ட  உரையாடலையும்  நட்பில்  பூத்த  மலர்கள்  என்ற தலைப்பில்  வெளியிட்டது.  அதனை  எழுதியவர்  ஜெயகாந்தன்.

தமது  நூல்கள்  பலவற்றை  வரவாக்கிய  மல்லிகை  ஜீவா  பல மாதங்கள்  தமது  மல்லிகையில்   எழுதிய  ஒரு படைப்பாளியைப்பற்றி  இன்னொரு  சிருஷ்டியாளனின்  பார்வை  என்ற தொடர்   விமர்சனக்கட்டுரையை  மாத்திரம்  நூல்  வடிவில் வெளியிடவே   இல்லை !   அதற்கான  தேவையில்லாமல்  ஜே.கே. -  ஜீவா   நட்புறவு  மீண்டும்  துளிர்த்தது.

அந்தப்பயணத்தில்  ஜீவா  தமிழகத்தில்  நான் பட்டியலிட்டுக்கொடுத்தவர்களில்   பலரையும்  சந்தித்து  திரும்பியதும் கொழும்பில்    நடத்தப்பட்ட   மல்லிகைப்பந்தல்  சந்திப்பில்  ஜீவா  நான்  அவரிடம்  எழுதி  தந்துவிட்ட  அந்தபட்டியல்  காகிதத்தை   தமது பொக்கட்டிலிருந்து  காண்பித்தார்.

அது  சற்று  கசங்கி  பல  மடிப்புகளுடன்  இருந்தது.  அந்தப்பயணத்தில் கருத்து  வேற்றுமைகளை  மறந்து  ஜீவாவும்  ஜெயகாந்தனும்  மனம் விட்டுப்பேசியிருக்கின்றனர்.   தமது  காரில்  ஜீவாவை  வீட்டுக்கு அழைத்து   ஜெயகாந்தன்  விருந்தும்  கொடுத்து  உபசரித்தார்.

சரஸ்வதி – தாமரை இதழ்களில் ஜெயகாந்தனும் – ஜீவாவும் எழுதிய காலத்திலிருந்தே நல்ல நண்பர்கள்.

ஜெயகாந்தன், ஜீவாவை மகாபலிபுரத்திற்கும் அழைத்துச்சென்று, ஜீவாவுக்கு தோளில் போர்த்தும் சால்வையும் வாங்கிக்கொடுத்தார்.

அச்சமயம் அந்தச்  சால்வையை இருவரும் இணைந்து நின்று போர்த்திக்கொண்டு போஸ் கொடுத்து எடுத்த படத்தை, யாழ்ப்பாணம் மல்லிகை காரியாலயத்தின் சுவரில் ஜீவா மாட்டிவைத்திருந்தார்.

ஜெயகாந்தனை பல தடவை இலங்கைக்கு அழைப்பதற்கு ஜீவா முயன்றார்.  சோவியத் நாடு, அமெரிக்காவெல்லாம் சென்றுள்ள ஜெயகாந்தன் இலங்கை வரவில்லை என்ற ஏமாற்றம் ஜீவாவுக்கு தொடர்ந்திருந்தது.

ஜீவாவின் கனவாக  நீண்ட காலம் திகழ்ந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டிற்கும்  2011 இல் ஜெயகாந்தனை அழைத்தோம்.  2008 ஆம் ஆண்டு அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்குட்பட்டிருந்தபோது சென்று பார்த்தபோதும்,  இலங்கைக்கு ஒரு தடவை வருமாறு அழைத்தேன்.  உங்கள் ஜீவாவுக்காகவாவது வாருங்கள் என்றேன்.

 “ தான் வந்தால், அது தனக்கும் பிரச்சினை, உங்களுக்கும் பிரச்சினை, எனது வாய் ஏதாவது சொல்லும்... “ என்று சிம்மக்குரலில் சொல்லிச்சிரித்தார்.

பின்னர் குறிப்பிட்ட மாநாட்டில் கனடா மூர்த்தி இயக்கித்தயாரித்த உலகப்பொது மனிதன் ஜெயகாந்தன் ஆவணப்படத்தை காண்பித்தோம்.

அன்று இரவு, அந்த ஆவணப்படத்தை இறுதிவரையில் இருந்து பார்த்துவிட்டுச்சென்றார் ஜீவா.

ஜீவாவின் சாலையின் திருப்பம் சிறுகதைத் தொகுதிக்கு ஜெயகாந்தன் முன்னுரை எழுதினார்.

அதில் ஜெயகாந்தன்,   “ எழுத்து ஒரு தொழிலோ பிழைப்போ அல்ல. நமக்கு அது யோகம். அந்த யோகமே நமது ஜீவிதம். நண்பர் டொமினிக்ஜீவாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.. “ என்று எழுதியிருந்தார்.

ஜெயகாந்தன் 2015 ஏப்ரில் மாதம் மறைந்தவேளையில் ஜீவா  ஆழ்ந்த வேதனையுற்றார்.

பின்னர், ஜீவா படிப்படியாக பழைய நினைவுகளை மறக்கத்தொடங்கினார்.

( தொடரும் )

 

 

 

 

No comments: