வீரகேசரி வாரவெளியீட்டில் முதலில் இலக்கியச்செய்திகள் என்ற பத்தி எழுத்தினை எழுதுமாறு ஊக்கமளித்த அதன் பொறுப்பாசிரியர் பொன். இராஜகோபால், எனக்கு ரஸஞானி என்ற புனைபெயரைச்சூட்டியபோது, ஒப்புநோக்காளர் பிரிவிலிருந்த சில நண்பர்கள் அதனைக்கேட்டு சிரித்தார்கள்.
அதென்ன ரஸஞானி…? சொதிஞானியும் இருக்கிறாரா..? என்று கேலிசெய்தார்கள் !
மல்லிகையில் கதை, கட்டுரை எழுதிக்கொண்டிருந்தபோது அதற்கு எதிர்வினைகள் வரவில்லை. வெகுஜன ஊடகத்தில் எழுதத்தொடங்கினால், வரும் எதிர்வினைகளையும் எதிர்நோக்கவேண்டும். அதனால்தான் உமக்கு அந்தப்புனைபெயரை சூட்டினேன் என்று இராஜகோபால்
சொன்னார்.
அவர் இலக்கிய மேடைகளுக்கெல்லாம் செல்லமாட்டார். பத்திரிகை ஆசிரியர்கள், திரைப்பட இயக்குநர்களைப்போன்று மறைந்திருக்கவேண்டும் என்பார். அக்காலத்தில் வெளியான தமிழ்த்திரைப்படங்களில் இயக்குநர்கள் ஏ. பிம்சிங், கே. எஸ். கோபாலகிருஷ்ணன், ஶ்ரீதர், கே. விஜயன், கே. மாதவன், எஸ். பி. முத்துராமன் முதலானோரை திரையில் பார்க்கமுடியாது. அவர்களின் பெயர்தான், எழுத்து ஓடும்போது இறுதியில் காண்பிக்கப்படும்.
இராஜகோபால், தனது படத்தையும் எவருக்கும் கொடுக்கமாட்டார். எழுத்தாள நண்பன் காவலூர் ஜெகநாதன், அடிக்கடி தமிழகம் சென்றுவருவார். அவர் ஊடாக பல தமிழக இலக்கிய புதினங்களை பெற்றும் எனது பத்தியில் எழுதினேன். சில மாதங்களில் இலக்கியச்செய்திகள், இலக்கிய பலகணி என பெயர்மாற்றம் பெற்றது.
தினகரன் வாரமஞ்சரியில் நண்பர் எஸ். திருச்செல்வம் அறுவடை என்ற பத்தி எழுத்தையும், சிந்தாமணியில் அதன் ஆசிரியர் எஸ். டி. சிவநாயகம் இலக்கிய மேடை என்ற பத்தி எழுத்தையும் அதே காலப்பகுதியில் எழுதினர்.
ஈழத்து இலக்கிய வாசகர்கள் வார இறுதியில் இந்த மூன்று பத்திரிகைகளையும் கையில் எடுத்தால், முதலில் இந்தப்பத்திகளை படிக்கும் ஆர்வம் மிக்கவர்களாக விளங்கினார்கள்.
எனது இலக்கியப்பலகணியில், மூத்த – இளம்தலைமுறை இலக்கியவாதிகளையும் கலைஞர்களைப் பற்றியும் எழுதினேன். நூல்களின் இலக்கிய இதழ்களின் அறிமுகம், இலக்கிய கூட்டங்களின் செய்திகள், பிரதேசவாரியாக நடக்கும் இலக்கியப்போட்டிகள் முதலான பல தகவல்களை அந்தப்பத்தியில் தொடர்ந்து தொகுத்து எழுதினேன்.
கொழும்பு தமிழ்க்கதைஞர் வட்டத்தில் வ. இராசையா, மாத்தளை கார்த்திகேசு, மா. குலமணி, ஆசிரியர் இராஜதுரை, வேல் அமுதன் ஆகியோர் இணைந்திருந்தனர். இந்த அமைப்பு பத்திரிகைகள், இதழ்களில் வெளிவரும் சிறுகதைகளை தேர்வுசெய்து காலாண்டு ரீதியில் பரிசுகளும் வழங்கிவந்தது.
வேல் அமுதன், எமது வீரகேசரி அலுவலகம் அமைந்த கிரேண்ட் பாஸ் வீதியில், பவர் அன் கம்பனியில் பணியாற்றினார். அந்தக்கம்பனி அதே வளாகத்தில் வழங்கிய குடியிருப்பில் தமது குடும்பத்தினருடன் வசித்தார்.
தினமும் வேலை முடிந்து செல்லும் வழியில் அவரது வீட்டில் சில நிமிடங்கள் தரித்து பேசிவிட்டுச்செல்வேன். இரவுப்பணியின்போது, கிடைக்கும் உணவு இடைவேளையிலும் அங்கே சென்று பேசிக்கொண்டிருப்பேன். வேல் அமுதனும் தமிழ்க்கதைஞர் வட்டத்தின் செய்திகளை தருவார்.
எமது தமிழ் அமைப்புகளுக்குள் வழக்கமாக வரும் பிச்சல் பிடுங்கல் அந்த கதைஞர் வட்டத்துள்ளும் வந்தது. வேல் அமுதனும் குலமணியும் தனி அணியானார்கள். ஏனையோர் தொடர்ந்தும் தகவம் அமைப்பினை நடத்தினர்.
வேல் அமுதனுக்கு மதிமகன் என்று ஒரே மகன். அவனது பெயருடன் அவர் மகவம் என்ற அமைப்பினை உருவாக்கினார்.
இந்த சில்லெடுப்புகள் எனது இலக்கியப்பலகணியில் எதிரொலிக்காதவாறு பார்த்துக்கொண்டேன். ஆனால், தினகரன் வாரமஞ்சரியில் எஸ். திருச்செல்வம் இவர்களின் பிரச்சினைகளை அம்பலப்படுத்தினார். அத்துடன் மேலும் பல
இலக்கிய சர்ச்சைகளுக்கும் தனது அறுவடையில் களம் வழங்கினார்.
எஸ். டி. சிவநாயகம் சிந்தாமணி இலக்கிய பீடத்தில் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தையும் அவ்வப்போது மறைமுகமாக சீண்டினார்.
இந்த அலைப்பறைகளுக்குள் நான் சிக்கிவிடக்கூடாது என்று இராஜகோபால் என்னை வழிநடத்தினார்.
அதனால், ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று ரசிக்கும் சிலர், இலக்கியப்பலகணியை எழுதும் ரஸஞானியின் எழுத்தில் ரஸமும் இல்லை, ஞானமும் இல்லை என்று எனது காதுபடச்சொன்னபோது எனக்குள் சிரித்துக்கொண்டேன்.
இலக்கிய உலகில் சிண்டுமுடியும் வேலைகளை சிலர் கச்சிதமாகவே மேற்கொண்டனர்.
அமைச்சர் செல்லையா இராசதுரை, பிரதேச அபிவிருத்தி தமிழ் மொழி அமுலாக்கல், இந்து கலாசார அமைச்சராக வந்ததும் சாகித்திய மண்டலமும் அவரது பொறுப்பில் வந்தது. ஒரு சில வருடங்கள் நூல்களுக்கு விருது வழங்கும் நிகழ்வுகளும் நடக்கவில்லை. கொழும்பில் நடந்த சில நூல் வெளியீடுகளுக்கு அவர் தலைமை தாங்கவோ அல்லது பிரதம விருந்தினராகவோ அழைக்கப்பட்டார்.
ஒரு இளம் கவிஞரின் கவிதை நூல் வெளியீடு அமைச்சரின் தலைமையில் கோட்டை தப்ரபேன் ஹோட்டலில் நடந்தது. பேச்சாளர்கள் பேசி முடித்ததும் அமைச்சர் நிறைவுரையாக, “ இன்றைய எழுத்தாளர் நாயகன், தமது கவிதை நூலில் நூறு பிரதிகளை நாளையே எனது அமைச்சில் கொண்டுவந்து ஒப்படைத்துவிட்டு, காசோலையை பெற்றுச்செல்லலாம்.. “ என்று சொன்னதும் சபையில் எழுந்த கரகோஷம் சில மணித்துளிகள் நீண்டது.
அந்த எழுத்தாளர் நாயகன், மறுநாள் நூறுபிரதிகள் எடுத்துச்சென்று அமைச்சில் கொடுத்துவிட்டு கால்கடுக்க பல மணிநேரம் நின்றார். அதன்பிறகு பல நாட்கள் அந்த காசோலைக்காக செருப்புத்தேய தேய அலைந்தார். மாதங்கள் வருடமாகியது.
இதுபற்றி எனது இலக்கியப்பலகணியில் எழுதினேன்.
அதே தப்ரபேன் ஹோட்டலில் மற்றும் ஒரு இலக்கியக்கூட்டம் நடந்தபோதும் அமைச்சர்தான் தலைமை தாங்கினார்.
அதில் உரையாற்றிய, கவிஞர் கலைவாதிகலீல் “ அமைச்சருக்கு இரண்டு மனைவிகள். ஒன்று தமிழ் “ என்றார். அன்றும் சபையில் கரகோஷம் அடங்க சில மணித்துளிகள் சென்றன.
இந்தச்செய்தியையும் எழுதினேன். மிகவும் தாமதமாக பிரதேச அமைச்சில் தமிழ் நூல்களுக்கான சாகித்திய விருது வழங்கும் நிகழ்ச்சி, விரல்விட்டு எண்ணத்தக்க சொற்ப ஆட்களுடன நடந்தேறியது. அச்சமயம் தெளிவத்தை ஜோசப்பின் நாமிருக்கும் நாடே சிறுகதைத் தொகுதிக்கு பரிசு கிடைத்தது.
இச்செய்திகள் எனது இலக்கியபலகணியில் வெளியானதும், அமைச்சரின் கவனத்திற்கும் சென்றது. யார் அந்த ரஸஞானி..? என்று அமைச்சர் , தமது அமைச்சின் செய்திகளை எழுதும் வீரகேசரி அலுவலக நிருபரிடம் கேட்டிருக்கிறார். அந்த நிருபர் இராஜகோபாலிடம் கேட்டபோதும், அவர் சொல்லவில்லை.
ஆனால், நான்தான் ரஸஞானி என்பதை ஒரு இக்கட்டான வேளையில் வெளியூரிலிருந்து வந்த ஒருவருக்கு இராஜகோபால் சொல்லநேர்ந்தது.
எனக்கு முன்பின்தெரியாத ஒரு அன்பர் ஒருநாள் காலை வேளையில் வீரகேசரிக்கு வந்து என் முன்னால் தோன்றினார்.
அருகிலிருந்த அறையிலிருந்து ஆசிரியர் இராஜகோபால் அவரை என்னிடம் அனுப்பியிருந்தார். எனக்கு முன்னாலிருந்த ஆசனத்தில் அவரை அமரச்சொன்னேன்.
அவரது கரத்தில் முதல்நாள் ஞாயிற்றுக்கிழமை வெளியான வீரகேசரி வாரவெளியீட்டின் கிழக்கு மாகாணப்பதிப்பு இருந்தது. தான் அன்றுகாலைதான் திருகோணமலையிலிருந்து கொழும்பு வந்ததாகவும், நேரே எமது அலுவலகத்தை தேடிக்கண்டுபிடித்து வந்து சேர்ந்ததாகவும் சொன்னார்.
அவருடைய முகத்தில் சோகத்தின் ரேகைகளும் சோர்வும் தென்பட்டது. அத்துடன் அவரது கண்கள் எதனையோ தேடிவந்திருப்பதையும் உணர்த்தியது. " நீங்கள்தானா ரஸஞானி...? " என்றுதான் அவர் தனது உரையாடலை தொடங்கினார்.
எனக்கு முன்பின்தெரியாத ஒரு இலக்கியவாதியாகத்தான் அவர் இருப்பார். ஏதும் செய்திகொண்டுவந்திருப்பார் என நினைத்து, " ஆம் நான்தான்." என்றேன்.
" அதுதான் உங்கள் பெயரா...? அல்லது புனைபெயரா...? " என்று அடுத்த கேள்வியை தொடுத்தார்.
" எனது பெயரைச்சொல்லி, ரஸஞானி எனது புனைபெயர் என்றேன்.
" அதுமட்டுமா உங்கள் புனைபெயர், மேலும் ஏதும் வைத்திருக்கிறீர்களா...? " என்ற அவரது மற்றும் ஒரு கேள்வி, அவர் என்னை பேட்டி காணவந்துள்ளாரா...? என்ற யோசனைக்குத்தள்ளியது.
" இல்லை.... எனது உறவினர் ஒருவரைப்பற்றி நேற்று வெளியான வீரகேசரியில் எழுதியிருக்கிறீர்கள். அவரை நீங்கள் சென்னையில் பார்த்தீர்களா...? அவரது முகவரியை கேட்டுத்தெரிந்துகொண்டு தொடர்பு கொள்வதற்குத்தான் நேற்று இரவு ரயிலில் புறப்பட்டு வந்தேன்." என்றார்.
நான் அதிர்ச்சியடைந்தேன். நான் எழுதிய செய்தியில் ஏதும் பிரச்சினையோ...? என்ற யோசனையுடன் அவரை உற்றுப்பார்த்தேன். அவர் கையிலிருந்த முதல்நாள் பத்திரிகையை விரித்து அதில் இலக்கியப்பலகணியில் நான் படத்துடன் குறிப்பிட்டிருந்த பல பெயர் மன்னன் , புதுக்கவிதை முன்னோடி, எண் சாத்திர நிபுணர் தருமு சிவராம் பற்றிய மேலதிக தகவல் அறியவந்திருக்கிறார் என்பதை உடனடியாகவே அறியமுடிந்தது.
" அவரது முகத்தில் கவலையின் ரேகைகள் படர்ந்திருந்திருந்தமையால் நானும் என்ன விடயமாக வந்தீர்கள்...?" என்று பதட்டத்துடன் கேட்டேன்.
" இவர் எமது உறவினர். சின்ன வயதில் காணாமல் போனார். பின்னர் இவர் இந்தியாவில் இருப்பதாக சிலர் சொன்னார்கள். ஆனால், இந்தியாவில் எங்கே என்றும் தெரியாது. இவருக்கு எமது குடும்பத்தில் வைத்தபெயர் சிவராம். ஆனால் - அவர் பல பெயர்களில் மறைந்திருந்தமையால் இலக்கிய உலகம் பற்றி எதுவும் தெரியாத எமக்கு சிவராம்தான் இத்தனை பெயர்களில் மறைந்திருந்து எழுதியிருக்கிறார் என்பது நீங்கள் இதில் எழுதியிருக்கும் தகவல்களிலிருந்து தெரிகிறது..." எனச் சொல்லிவிட்டு நீண்ட பெருமூச்சை விட்டார்.
அவர் மீது எனக்கு பரிதாபம் தோன்றியது. என்ன சொல்வது...? என்ற தயக்கமும் வந்தது.
எனது இலக்கியப் பலகணி பத்தி எழுத்தைப்பார்த்துவிட்டு தருமு சிவராமின் எழுத்துக்களினால் ஆகர்சிக்கப்பட்ட எந்தவொரு எழுத்தாளனிடமிருந்தோ, வாசகனிடமிருந்தோ அதுநாள்வரையில் தருமு சிவராம் பற்றி எவரும் என்னிடம் கேட்டதில்லை.
ஆனால், ஒரு இரத்த உறவு இலக்கியப்பிரக்ஞையே இல்லாத ஒருவர் நித்திரைவிழித்து பயணம்செய்து இவ்வளவு தூரம் வந்திருப்பதைப் பார்த்ததும், இலக்கிய உறவுகளுக்கும் குடும்ப இரத்த உறவுகளுக்கும் இடையே நீடிக்கும் பாரிய இடைவெளியை ஆழ்ந்து யோசித்து துணுக்குற்றேன்.
தற்பொழுது இதனை எழுதும்வேளையில் எனது அம்மா எனக்கு அடிக்கடி சொல்லும் அந்த வார்த்தைதான் நினைவுக்கு வருகிறது.
" பறவை என்னதான் உயரத்தில் வட்டமிட்டுப்பறந்தாலும் இறுதியில் ஆகாரத்திற்கு தரைக்குத்தான் வந்து தீரவேண்டும். ஆகாயத்தில் அதற்கு உணவு கிடைக்காது."
" சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிக்கொண்டிருக்கிறது"
இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான தருமு சிவராமின் இந்தக் கவிதை வரிகளும் நினைவுக்கு வருகின்றன. தருமுசிவராமின் வாசகர்கள் அவர் பிறந்த திருகோணமலையில் அவருக்காக சிறப்பிதழும் வெளியிட்டு அவரை நினைவுபடுத்தும் அரங்கையும் சில வருடங்களுக்கு முன்னர் ஒழுங்கு செய்தார்கள். நான் அவுஸ்திரேலியாவில் இருப்பதனால் செல்ல முடியவில்லை.
மட்டக்களப்பில் வெளியாகும் மகுடம் இலக்கிய இதழும் தருமுவுக்காக ஒரு சிறப்பிதழ் வெளியிட்டிருப்பதாக அறிகின்றேன். இதுவரையில் எனக்கு படிக்கக்கிடைக்கவில்லை.
தான் பிறந்த மண்ணுக்கே திரும்பிவராமல் தமிழகத்தின் தரையிலேயே 06 ஜனவரி 1997 இல் அடக்கமாகிப்போன ஆன்மா இன்றைக்கும் பேசப்படும் இலக்கிய ஆளுமை.
பிரமிள், பிரமிள் பானு சந்திரன், அரூப் சிவராம் என்றெல்லாம் எண்சாத்திரப்படி தனது பெயரை அடிக்கடி மாற்றி எழுதியவரின் தலைவிதியை யார் எழுதினார்கள்...? என்று நாம் அவரது இறுதிக்காலத்தை எண்ணி நொந்துகொள்ளமுடியும்.
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் அது முடிவே இல்லாதது என்பதிலிருந்து , சொந்த உறவுகளையெல்லாம் மறந்து அஞ்ஞாதவாசம் சென்றவரின் இரத்த உறவு அன்று என் முன்னே தங்கள் உறவைத்தேடி வந்தபொழுது மனம் கனத்துப்போனது. இலக்கியப்பலகணிக்கு தகவல்களை நான் தேடிப்பெறும்பொழுது பெரும்பாலும் இலக்கிய நண்பர்கள் எனக்கு உதவுவார்கள். அக்காலப்பகுதியில் தமிழகத்திற்கு சென்று திரும்பியிருந்த மல்லிகை ஜீவாவும் கவிஞர் மேமன்கவியும் சென்னையில் பலரையும் சந்தித்தவேளையில் தருமுசிவராமையும் அவர் இருந்த அறைக்குத்தேடிச்சென்று சந்தித்துள்ளனர்.
நான் அவர்கள் சொன்ன தகவல்களிலிருந்து குறிப்புகளை எழுதி ஜீவாவிடம் பெற்ற தருமு சிவராமின் படத்தையும் அந்தப்பத்தியில் பதிவுசெய்திருந்தேன். ஆனால், என்னிடம் தருமு சிவராமின் முகவரி இல்லை. அவருடன் தொடர்புகொள்ளத்தக்க தொலைபேசி எண்களும் இல்லை.
தேடிவந்த அன்பருக்கு யாழ்ப்பாணத்திலிருக்கும் மல்லிகை காரியாலய முகவரி கொடுத்து அங்கு சென்றால் மேலதிக விபரம் கிடைக்கும் என்றேன்.
வந்தவர் முகம் மேலும் வாடிப்போனது. எனது இயலாமையை எண்ணி வெட்கப்பட்டேன். அவர் வணக்கம் தெரிவித்துவிட்டு எழுந்து சென்றார். அவரை வாசல்வரை வந்து விடைகொடுத்து அனுப்பினேன்.
நான் அந்தப்பத்தியில் எழுதாத பல விடயங்கள் இருந்தன. தருமு சிவராமின் அந்தச் சிறிய வாடகை அறையின் சுவர்களிலெல்லாம் எண்கள் எழுதப்பட்டும் - வெட்டி அழிக்கப்பட்டும் நவீன ஓவியச்சுவர்கள் போன்று காட்சி அளித்ததாக நண்பர் மேமன்கவி சொன்னார். அறையின் மூலையில் தரையில் விரிக்கப்பட்டிருந்த பத்திரிகையில் இரண்டு கரட், ஒரு வெங்காயம், சில உருளைக்கிழங்குகள்தான் இருந்தன என்றார் ஜீவா.
அவர் வாழ்ந்த கோலம் பார்த்துவிட்டு இவர்கள் இருவரும் அவர் கையில் சில இந்திய ரூபாய் தாள்களை செருகிவிட்டு விடைபெற்றுள்ளார்கள்.
தான் தற்பொழுது எண்சாத்திரத்தில் தீவிரமாக ஆய்வுகள் மேற்கொண்டிருப்பதாகவும் விரைவில் தான் எழுதப்போகும் எண்சாத்திர நூல் சர்வதேச அளவில் பேசப்படும் என்றும் அவர் சொன்னதாக மல்லிகை ஜீவா என்னிடம் சொன்னபொழுது, உலகிற்கும் மனிதர்களுக்கும் விதியை எழுதி அவர்களின் முன்னேற்றத்திற்கு ஏற்றவாறு எவ்வாறு பெயர்களை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று சொல்லப்புறப்பட்டவரின் வாழ்க்கை விதியை யார்தான் எழுதினார்கள்...?
வழிகாட்டி மரங்கள் நகருவதில்லை என்று இதனைத்தான் சொல்வார்களா....?
அன்று என்னைத்தேடி வந்த திருகோணமலை அன்பர் அடுத்தவாரமே யாழ்ப்பாணம் வந்துவிட்டார். விதிவசத்தால் அவர் அங்கு வருவதற்கு முதல்நாள் ஒரு செய்தி விவகாரம் தொடர்பாக நானும் யாழ்ப்பாணத்தில் நின்றேன். மறுநாள் காலையில் மல்லிகை அலுவலகத்தில் ஜீவாவுடன் உரையாடிக்கொண்டிருக்கும் வேளையில் அந்தத் திருகோணமலை அன்பர் நான் கொழும்பில் எழுதிக்கொடுத்துவிட்ட முகவரியுடனும் வீரகேசரி வாரவெளியீட்டுடனும் தோன்றி என்னை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
தனது முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தனாக அவர் புன்னகை தவழ நின்றார்.
ஜீவாவிடமும் தருமு சிவராமின் சரியான முகவரி கைவசம் இருக்கவில்லை. சென்னையில் யாரோ ஒரு இலக்கிய நண்பரின் வழிகாட்டலுடன் சென்றவர், அந்த இடம் குறித்த சரியான தகவலுடனும் முகவரியுடனும் வரவில்லை என்பது தெரிந்தது.
தருமு சிவராம் அடிக்கடி தனது பெயர்களை மாற்றிக்கொள்வது போன்று தமது இருப்பிடங்களையும் முகவரிகளையும் மாற்றிக்கொள்பவர் என்று சொல்லி தேடி வந்த திருகோணமலை அன்பரை சமாதானப்படுத்தினார்.
வந்தவர் ஏமாற்றத்துடன் திரும்பினார். அவர் பின்னர் தருமு சிவராமை தேடிச்சென்று பார்ப்பதற்கு தமிழகம் சென்றாரா...? என்பது எனக்குத்தெரியாது.
அன்று முழுவதும் தருமு சிவராமின் நினைவுதான் என்னை ஆக்கிரமித்திருந்தது.
( தொடரும் )
No comments:
Post a Comment