" வளர் காதல் இன்பம் " குறு நாவல் - வாசகனின் பார்வை !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ....
 மெல்பேண் ... அவுஸ்திரேலியா 


 அவுஸ்திரேலியாவில் சிறுகதை, குறுநாவலில், முத்திரை பதித்தவர்தான்


பொறியியல் பட்டதாரியான கே.எஸ். சுதாகர் அவர்கள். ஒருவரியை எழுதினாலும் ஓராயிரம் வரிகளை எழுதினாலும் வாசிப்பவர் மனதில் பதியும் வண்ணம் எழுதுகின்ற எழுத்து ஆழுமை மிக்கவர்தான் சுதாகர் அவர்கள். அவர்களின் கைவண்ணத்தில் " வளர் காதல் இன்பம் " என்னும் குறு நாவல் நூலுருப்பெற்று தற்போது சென்னையில் இடம் பெறும் புத்தகக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கிறது. 

  ஈழத்தவர் , குறிப்பாக பொறியியலாளராக இருக்கின்றவர் அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னரும் தமிழையும், எழுதுவதையும் , விடாமல் தொடருகிறார் என்னும் பொழுது அவரைக் கட்டாயம் பாராட்டி வாழ்த்தியே ஆகவேண்டும்.

  " வளர் காதல் இன்பம் " குறு நாவல் முழுக்க முழுக்க அவுஸ்திரேலிய நாட்டில் நடைபெறும் கதையாய் வளர்கிறது.கதையின் கருவில் கற்பனை என்பதைவிட - சுதாகர் அவர்களின் நட்பு வட்டாரத்தில் நடந்த சம்பவம் போலும் ஒரு தோற்றமே தென்படுகிறது எனலாம்.இந்தக் குறுநாவலை குறுநாவல் என்று பெயர் சூட்டி இருந்தாலும் இது வளரும் நிலையினைப் பார்க்கும் பொழுது ஒரு முழுநாவலின் வடிவமாய் தெரிகிறது என்றும் எண்ண வைக்கிறது.

 சுதாகரின் எழுத்து விறு விறுப்பாகப் பல இடங்களில் அமைந்தாலும் சண்டையும் அதன் பின் ஏற்படும் சமாதானமும் திரும்பத்திரும்ப வருவது வாசிப்பவர்களுக்குச் சற்று அலுப்பை ஏற்படுத்தி விடலாமோ என்று கருதக் கூடியதாக இருக்கிறது.

 தொழில் நுட்பக் கல்லூரியில் தொடங்கும் கதையின் ஆரம்பம் - தமிழ்ச் சினிமாக் காட்சியினை மனதில் எழப்பண்ணுகிறது போல் தெரிகிறது. பெரும்பாலான சம்பவங்கள் - மது குடிப்பது,வாக்குவாதம் முற்றுவதுவீட்டுப் பொருட்கள் வீசி உடைக்கப்படுவது பொலிஸ் வருவது மீண்டும் சமாதானம் ஏற்படுவது பெற்றார் மத்தியஸ்த்தம் வகிப்பது நண்பர்கள் புத்தி சொல்லுவது தப்பான அவிப்பிராயங்களின் வருகை பெண்ணின் தாயாரின் வில்லத்தனம் யாவும் புதுமை அல்ல. ஆனால் அவையாவும் இக்குறு நாவலில் நிறைந்தே காணப்படுகிறது. குறு நாவல் என்பதை விடுத்து " வளர் காதல் இன்பம் என்னும் படைப்புக்கு முழு நாவல் என்பதே மிகவும் பொருத்தம் எனலாம். அந்த அளவுக்கு கதையின் நீட்சி வளர்ந்து கொண்டே செல்கிறது.

  ரிஜிஸ்தார் காரியாலயத்தில் மாலை மாற்றித் திருமணம் செய்யும் அளவுக்கு இறுக்கமாய் இருந்த காதல் பெற்று வளர்த்த பெற்றாரைஉடன் பிறந்த பிறப்புக்களைக் கைவிட்டு ஓடிப்போகும் காதல் உடைந்துகலைந்து போகும் பொழுது உண்மைக்காதல் இப்படி இருக்குமா என்னும் கேள்வியை எழப்பண்ணுகிறது எனலாம். 

  குமுறல்களுக்கு இடையில் - கொஞ்சலினால் குழந்தை கருவில் வந்து விடுகிறது.சுவிங்கம் போல இழுபறிப்படும் கதாநாயகன் கதா நாயகியை பிணைக்கும் பிணைப்பாய் முற்றிலும் அறுந்துவிடாமல் செய்திடும் ஒட்டும் பசையாய் பிள்ளையினை மையப்படுத்திய சுதாகரைப் பாராட்டவே வேண்டும்.உடைந்தவர்கள் ஒட்டுவார்களா என்று குறுநாவலை வாசிப்பவர்கள் மனதில் தோன்றும் தருணம் அவர்களுக்கு ஏமாற்றம் கொடுக்காமல் அங்கே பிள்ளையினைக் கொண்டுவந்து கதையில் நிறுத்திய உத்தி அருமைதான் ! 

 " வளர் " என்னும் சொற் பிரயோகம் மிகவும் கருத்துச் செறிந்ததாகும். வளர் என்னும் பொழுது அங்கே எக்காலம் என்பதை விட முக்காலமும் பிரதி பலிக்கின்றதையே வெளிப்படுத்தி நிற்கிறது எனலாம். வளர் காதல் என்னும் பொழுது - வளரும் காதல்வளர்கின்ற காதல் வளர்ந்த காதல் என்னும் கருத்துக்கள் பொதிந்து இருக்கிறது என்பதை அறிந்துதான் சுதாகர் காதல் இன்பத்தை எங்களிடம் ஒப்படைத்தாரோ என்று எண்ணத் தோன்று கிறது. 

  " சாயினையை நல்லாக வளக்க வேண்டும். அவளுக்கு நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும் " சிந்துவின் கண்களில் நீர்த்துளிகள் ஓரம் கட்டின. குனிந்து துடைத்துக் கொண்டபோது அவள் கழுத்திலே தொங்கிய சங்கிலி மேகலாவின் கவனத்தை ஈர்த்தது.

 " உன்ரை சங்கிலியிலை இருக்கிற பென்ரன் நல்ல வடிவா இருக்கு. தா ஒருக்கால் பார்ப்போம். "

 சங்கிலையக் கழற்றி கைக்குள் பொத்தியவாறு " தரமாட்டேன் " என அடம் பிடித்தாள் சிந்து.

 " அன்ரி ... அதுக்குள்ளை அப்பாவின்ரை படம் இருக்கு " சொல்லியவாறே அவர்கள் இருந்த  செற்றிக்கும் சுவருக்குமிடையே ஒளிந்திருந்த சாயினி திடீரென்று எழுந்து கொண்டாள்.

  " வ:ளர் காதல் இன்பம் " என்பதன் அர்த்தம் இங்கே வெளிச்சமாய் ஜொலிக்கிறது அல்லவா ?இதுதான் கே.எஸ். சுதாகர் என்னும் எழுத்து ஆளுமையின் சிறப்பு எனலாம். 

 விசாகனின் செயல்களால் சிந்தனைகளால் வெறுப்பு வந்தாலும் சிந்துவின் மனதில் ஆரம்பத்தில் அரும்பிய காதல் - இடையில் வாடி வதங்கிக் கசங்கினாலும் - முறியாமல் தொடருவதுதான் " வளர் காதல் இன்பம் " குறுநாவலின் வெற்றி எனலாம்.

  





No comments: