பேராசான் பேராசிரியர் கலாநிதி சிவஶ்ரீ கா. கைலாசநாதக் குருக்கள் அவர்களைப்பற்றி நிகழ்த்திய நினைவுரை


பிரம்மஸ்ரீ மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் 



மண்ணைவிட்டு ஆளுமைகள் மறைந்தாலும் அவர்களின் மாண்புகள் என்றுமே மறைவதில்லை. எண்ணி எண்ணிப் பார்க்கும் அளவுக்கு அவர்கள் மண்ணிலே என்னாளும் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள் . அப்படி வாழ்ந்தவர்களைத் தான் " வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள் " என்று வையகம் ஏற்றிப் போற்றி என்றும் நினைவில் நிறுத்தி

வைத்திருக்கிறது எனலாம். அப்படி இருக்கும் ஈழத்து ஆளுமையாக விளங்குவர்தான் நினைவில் நிறைந்திருக்கும் பேராசான் பேராசிரியர் கலாநிதி சிவஶ்ரீ கா. கைலாசநாதக் குருக்கள் ஆவர்.

 குங்குமம் பொட்டு , கொட்டப்பாக்களவு குடுமி , முகத்தில் சாந்தம் , வெள்ளுடை வேந்தர் இப்படிச் சொன்னால் இப்படி நினைத்தால் கண்முன்னே வந்து நிற்பார் பேராசான் குருக்கள் அவர்கள்.

  அமைதியான ஆனால் ஆழமான அழகான ஆங்கிலம் அழகு கொஞ்சும் அன்னைத்தமிழ் அஷ்ஷரம் மாறாத சமஸ்கிருதம் குருக்கள் அவர்களுக்கே உரித்தானதாகும்.

  ஆடம்பரம் நாடுவதில்லை. அலங்காரம் செய்வதும் இல்லை. ஆர்ப்பாட்டம் இல்லா ஆளுமைதான் அவர்.கைலாசபதி கைகூப்பும் கைலாசநாதர் ! சிவத்தம்பி கெளரவிக்கும் சிந்தனையாளர் ! வித்தியின் வணக்கத்துக்குரியவர் ! சிங்களப் பேராசிரியர்களும்


வேட்டிகட்டிய வெள்ளுடை வேந்தரை வணங்கியே நிற்பர் ! சிங்களம் சிறக்கும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் செந்தண்மை பூண்ட அந்தணக் கோலத்தில் பேராசான் விரிவுரையாற்ற வரும் வேளை யாவராலும் கனம் செய்யப்பட்ட கண்ணியவான் ! இஃது தமிழுக்கும் பெருமை ! தமிழருக்கும் பெருமை அல்லவா
 ?

பேராசிரியர் குருக்கள் அவர்களை ஆசாரமிக்க அத்தணர் என்பதா , ஆகமக் கிரியைகளை ஆற்றும் சிவாசாரியப் பெருமகன் என்பதா , ஆன்மீகத்தில் நாட்டமிக்க பெரியவர் என்பதா , தமிழ் , ஆங்கிலம் , இலத்தீன் , பாளி , சமஸ்கிருதம்ஜேர்மன் , பிரெஞ்சு , என பன்மொழி அறிந்த பன்மொழியாளர் என்பதாபல்கலைக்கழகத்தில் உயர்பட்டம் பெற்ற கல்விமான் என்பதா , பல்கலைக்கழகத்தில் பல உயர் பதவிகளை அலங்கரிந்த பெருந்தகை என்பதாயாவராலும் மதிக்கப்பட்ட கண்ணியவான் என்பதா என்னும் எண்ணமே என்மனதில் எழுகின்றது.இப்படி எண்ணுவது என் எண்ணம் மட்டுமல்ல அவரை அறிந்தார்கள் அனைவரதும் எண்ணமுமே இதுவாகும் என்பதும் கட்டாயம் சொல்லியே ஆகவேண்டியது எனலாம்.

  அறிவு என்னும் தேட்டம் அனைத்தையும் திரட்டி எடுத்துக் கொண்டு என்றுமே குன்றாத பெரு மதிப்புடைய கல்விச் செல்வத்தை தனக்குள் வைத்திருக்காது யாவருக்கும் வழங்கும் பெரு நோக்குடையயவராய் அந்தண குலத்து ஒளிவிடும் விளக்காக உயர் பண்பாளராக மிளிர்ந்தவர்தான் பேராசிரியர் கைலாசநாதக் குருக்கள் எனலாம்.

  நாவலர் பெருமான் பிறந்து வளர்ந்து உயர்ந்த -  ஊர்களில் சிறந்த ஊரான - நல்லூரில் சேர் பொன். இராமநாதனின் குருவாகத் திகழ்ந்தவரும் வேதாகம சோதிட விற்பன்னரும் ஆகமக்கிரிகை களை ஆற்றுவதில் ஈடிணையற்றவரு மான சிவஶ்ரீ கார்த்திகேய க்குருக்கள் முனீஸ்வரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஶ்ரீமதி சுந்தராம்பாள் தம்பதிகளுக்கு துர்மதி


வருஷம்
 15/08/1921 ஆம் ஆண்டு பூராட நட்சத்திரத்தில் கைலாசநாதக் குருக்கள் இறை அருளால் பிறந்தார். கைலாசநாதப் பெருமானின் அனுக்கிரகத்தால் பிறந்த படியால்  கைலாசநாதக் குருக்கள் என்னும் பெயரை பெற்றார்கள் சூட்டி மகிழ்ந்தார்கள்.இவருடன் சர்வலோகநாயகி அம்மாள் , இந்திராக்‌ஷி அம்மாள் , இரத்தின கைலாசநாதக் குருக்கள் , பாலா பரமேஸ்வரி சிவஶ்ரீ கார்த்திகேய க்குருக்கள் ஆகியோர் குடும்பத்தின் பிள்ளைச் செல்வங்களாக வந்து பிறந்தார்கள்.

  குருக்கள் அவர்கள் பிறந்த வேளை அவர் வளர்ந்த வேளை பிற்காலத்தில் பெரும் ஆளுமையாக வருவார் என்பதை குருக்களும் எதிர்பார்க்கவில்லை பெற்றவர்களும் எதிர்பார்த்து இருக்கவுமில்லை. சேர் பொன். இராமநாதனின் குருவாகத் தந்தையார் விளங்கியதால் தனது பிள்ளையையும் சிறந்த சட்டத்துறை வல்லுனர் ஆக்க வேண்டும் என்றே கருதி இருந்தாராம். ஆனால் ஆண்டவனின் நினைப்போ வேறு வகையாய் அமைந்தது . ஆண்டவன் நினைப்பும் அனுக்கிரகமும் இணைந்த காரணத்தால் மிகச்சிறந்த ஆளுமை ஈழத்துக்கு வாய்க்கும் வண்ணம் அமைந்தது எனலாம். " நினையாது முன்வந்து நிற்கினும் நிற்கும் எனையாளும் ஈசன் செயல் என்பது " இதைத்தான் போலும்.என்றே எண்ணத் தோன்றுகிறது.

  குருக்கள் அவர்களின் முதற்குருவே அவரது தந்தைதான். அவரிடம் ஐந்து வயதில் பாடங்கேட்கத் தொடங்கினார். தந்தையே எழுத்தறிவித்த இறைவன் ஆனார். ஏழாவது வயதில் அந்தணர்களுக்கு உரிய உபநயனம் , பிரமோப தேசம் ஆகியன முறையாக நடைபெற்றன. சமஸ்கிருத மொழியினைத் தந்தை யாரிடம் கற்கத் தொடங்கி வைதிகக் கல்வியான வேத அத்யயனத்தை வைக்கம் பிரம்மஶ்ரீ க. சிதம்பரநாத சாஸ்திரி களிடமும் , சுன்னாகம் பிரம்மஶ்ரீ பி.வி. சிதம்பரநாத சாஸ்திரி களிடமும் , கோப்பாயில் பிரம்மஶ்ரீ ஶ்ரீநிவாஸ சாஸ்திரிகளிடம் என்று பத்தாண்டுகள் மரபுவழியாக வேதம்மோதும் விசேட பயிற்சியைச் சிறப்பாகப் பெற்றுக் கொண்டார். ஆகமம் சார்ந்த கல்வியை தந்தையாரிடமே பெற்றுக் கொண்டார் குருக்கள் அவர்கள்.

  உரிய முறையிலான பாடசாலை ஆரம்பக்கல்வியை நல்லூர் மங்கையர்கரசி வித்தியாலயத்தில் பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் சேர். பொன். இராமநாதனால் உருவாக்கப்பட்ட பரமேஸ்வராக் கல்லூரியில் பெற்றுக் கொண்டார்.


வியாகரண சிரோமணி பிரம்மஶ்ரீ சீதாராம
  சாஸ்திரிகளிடம்  பாணினீய வியாகரணம் , காவ்யங்கள் , நாடகங்கள் , அலங்கார சாஸ்திரங்கள் , ஆகியவற்றை மரபு வழிக் கல்வி மூலம் கற்றதோடு அமையாது சமஸ்கிருத மொழியில் சிறந்த பாண்டித்தியத்தையும் பெற்றுக் கொண்டார்.

    தனது அறிவுத்தேடலில் பயணப் பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் தந்தையின் கட்டளையினை சிரமேற் கொண்டு தனது பதினெட்டாவது வயதில் முனீஸ்வரம் சிவஶ்ரீ சாம்பசிவக் குருக்கள் கமலாம்பிகை தம்பதிகளின் மகளான பனிரெண்டு வயது நிரம்பிய ஶ்ரீமதி திரிபுர சுந்தரி அம்மாளை வைதிக முறைப்படி 04/02/1940 இல் திருமணம் செய்து கொண்டு இல்லறமாம் நல்லறத்தில் இணைத்துவிட்டார் குருக்கள் அவர்கள்.

திருமணத்தின் முன் தொடங்கிய அறிவுத்தேடல் பயணத்தை பேராவலுடன் தொடர்ந்தார். மற்றவர்களாய் இருந்தால் குடும்பமெனும் சாகரத்துள் மூழ்கியே விடுவார்கள் ! " கருவிலே திருவுடையாராகக் " குருக்கள் பிறந்த காரணத்தால் எதுவுமே அவருக்கு அணை போட்டிட இயலாமற் போயிற்று என்றுதான் எண்ண வேண்டி உள்ளது.

  ஆங்கிலம் , வரலாறு , கணிதம் , தமிழ் , ஆகிய பாடங்களை லண்டன் மெற்றிக் குலேசன் பரீட்சைக்கு எடுத்து 1941 ஆம் ஆண்டில் சித்தி அடைந்தார். அத்துடன் நின்றுவிடாது சமஸ்கிருத மொழியின் இலக்கியச் இலக்கியச் சிறப்பையும் அம்மொழியின் அவசியத்தையும் உணர்ந்து பிற மொழிகளுடன் ஒப்பீட்டடிப் படையில் அறிகின்ற ஆவல் மேலீட்டினினால் ஆங்கிலம்இலத்தீன்தமிழ் , சமஸ்கிருதம்ஆகிய பாடங்களை இலண்டன் இண்டர்மீடியட் பரீட்சையில் எடுத்து 1943 ஆம் ஆண்டில் சித்தியடைந்தார்.

  மகனை சட்ட நிபுணர் ஆக்கிட விரும்பிய தந்தையிடம் தன்மனதில் ஊன்றி விட்ட


சமஸ்கிருத மொழியினைக் கற்றுத் தேர்ந்திடும் விரும்பத்தினைக் குருக்கள் பணிவுடன் வெளிப்ப டுத்தினார். தாயாரும் தந்தையும் குருக்களை விட்டு- இவ்வுலகை விட்டு பிரியும் நிலை ஏற்பட்டதால் குருக்களின் மீது கோவில் பொறுப்பும் குடும்பப் பொறுப்பும் புரோகிதப் பொறுப்பும் ஜோதிடப் பொறுப்பும் சுமையாக வந்து சேர்ந்தது. இப்படி வந்தால் -மற்றவர்கள் படிப்பாவது பள்ளியாவது என்று நினைக்கவே மாட்டார்கள். ஆனால் குருக்கள் படிப்பினையும் அவ்வழி பயணப் படுவதையும் எக்காரணங்களாலும் விட்டு விடவே இல்லை.

குடும்பத்தின் நிலை கருதி தான் கற்ற இலண்டன் கல்வியுடன் மானிப்பாய் இந்துக்கல்லூரியில் தமிழ் ஆசியராகக் கடமை ஆற்றினார்.

  கஷ்டத்தின் மத்தியிலும் கற்றிடும் எண்ணமே மேலோங்கி நின்றதால் உயர்கல்வியைப் பெறுவதற்காக இலங்கையின் முதற் பல்கலைக்கழகமான கொழும்பு இலங்கைப் பல்கலைக்கழகத்தில் 1944 இல் கால்வைத்தார். சமஸ்கிருதம் , தமிழ் , பாளி , கிய பாடங்களை முதலாமாண்டில் எடுத்து 1945 இல் சித்தியடைந்தார். பின்னர் சமஸ்கிருத மொழியைச் சிறப்புப் பாடமாகவும் தமிழை உப பாடமாகவும் கொண்டு சிறப்புக் கலைமாணிப் பட்டத்தினை 1947 இல் பெற்றுக் கொண்டார். அதன் பின் 1949 இல் சமஸ்கிருத மொழியில் முது கலைமாணிப் பட்டத்தையும் பெற்றுத் தன்னை உயர்த்திக் கொண்டார்.1947 ஆம் ஆண்டில் தற்காலிக விரிவுரை யாளராகக் குருக்கள் அவர்கள் கொழும்பு இலங்கை பல்கலை க்கழகத்தில் நியமிக்கப் பட்டார். இலண்டன் பல்கலைக்கழகத் தால் கொழும்புப் பலகலைக்கழகத்துக்கு முதன் முதலாக அனுப்பி வைக்கப்பட்ட ஜேர்மன் நாட்டு  முதற் சமஸ்கிருதப் பேராசியையான பெற்றி ஹைமனிடம் கல்வி கற்ற பெருமையி னைக் குருக்கள் பெற்றுக் கொள்ளுகிறார். 1953 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நிரந்தர சமஸ்கிருத விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார் குருக்கள் அவர்கள்.

  குருக்கள் அவர்களின் கற்றல் தாகம் அடங்கா நிலையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் முகமாக இந்திவாவின் பூனே பலகலைக்கழகம் சென்று புகழ்பூத்த பேராசிரியர் ஆர்.என். தண்டேகரின் வழிகாட்டலில் இதிகாச புராணங்களில் காணப்படும் சைவம் பற்றியும் தென் பாரதத்திலும் இலங்கையி லும் நிகழும் கிரிகைபற்றியும் ஆய்வினை மேற்கொண்டார். அவ்வாய்வினை ஆராய்ந்த பல்கலைக்கழகம் 1960 ஆம் ஆண்டு குருக்கள் அவர்களுக்குக் கலாநிதிப் பட்டத்தைனை வழங்கி பெருமைப்படுத்தியது.

  இந்தோ ஆரிய மொழியில் வல்லுனநராக விளங்கிய பேராசிரியர் சு. கணபதிப்பிள்ளைவைதிக இலக்கியத்திலும் பெளத்த மத தத்துவத்திலும் துறைபோந்தவரும் சமஸ்கிருத மொழிப் பேராசிரியருமான O.H.De.A .விஜய சேகரா ஆகியோர் குருக்களின் ஆராய்ச்சிக்கும் தேடலுக்கும் உறுதுணையாக விளங்கினார்கள்.

    சேர். பொன். இராமநாதன் அவர்களின் கனவாக விளங்கிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பரமேஸ்வராக் கல்லூரியினை அடுத்தளமாகக் கொண்டு 10/06/1974 இல் யாழ்ப்பாண வளாகமாக உருவாக்கப்பட்டபோது மொழிகள் மற்றும் கலாசார கற்கை நெறித்துறையின் பதிற் தலைவராக நியமனம் பெற்றார் குருக்கள் அவர்கள்.

  உலகில் எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் இடம்பெறாத துறைதான் இந்து நாகரிகத்துறையாகும். இதனை உருவாக்கிய பெருமை குருக்கள் அவர்களையே சாரும். அதற்கென்று பாடத்திட்டத்தையும் உருவாக்கியவரும் அவரேயாகிறார். 1975 இல் புதிதாக உருவான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதற் பேராசிரியராகவும் துறையின் தலைவராகவும் கைலாசநாதக் குருக்களே நியமனம் பெறும் பெரும்பேற்றினை பெறுவதற்கு அவரின் ஓயா உழைப்பும் உண்மைத்தன்மையும் ஆண்டவனிடம் கொண்ட அளவிலாப் பக்தியுமே காரணமெனலாம்.

  அவர் உருவாக்கிய துறையூடாக முதல் கலைமாணிப் பட்டதாரி யையும் கலாநிதிப் பட்டதாரியையும் குறுகிய காலத்தில் உருவா க்கிய குருக்களின் ஆளுமை வியக்கத்தக்கதேயாகும். இந்து நாகரிகத்துறையின் பொது சிறப்புக் கலைக் கற்கை நெறிகளோடு - பட்டப்பின் படிப்பின் டிப்ளோமா கற்கை நெறியில் இந்து நாகரிகத்தையும் ஒரு பாடமாகக் கற்பிப்பதற்குரிய பாடத்திட்டதை உருவாக்கியதோடு  நின்றுவிடாமல் இராமநாதன் நுண்கலைக் கழக நுண்கலைத் துறையின் தலைவராகவும் விளங்கி அங்குள்ள கற்கை நெறிகளையும் மேபடுத்தினார்.

  குருக்கள் அவர்களின் அளவில்லா ஆளுமையால் அவரை நாடிப் பல தலைமைப்பதவிகள் வந்து குவிந்தன பல்கலைக்கழகத்தில் எனலாம்.

1977 இல் மனித பண்பியற் பீடாதிபதியாகவும் 1984 இல் பதில் கலைப் பீடாதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். இடைவிடாது படித்தும் பட்டங்கள் பெற்றும் பலரையும் உருவாக்கிய குருக்கள் அவர்கள் தன்னுடைய 39 வருட பல்கலைக்கழகப் பணியிலிருந்து 1986 இல் ஓய்வு பெற்றுக் கொண்டார். ஓய்வு பெற்றாலும் அவரின் சேவை தொடர்ந்து தேவைப் பட்டதால் 1987 தொடக்கம் 1989 ஆம் ஆண்டுவரை ஒப்பந்த அடிப்படியில் தனது பணிகளைப் பல்கலை க்கழகத்தினுக்கு வழங்கி நின்றார்.

  யாழ்பல்கலைக்கழகத்தின் இந்து நாகரிகத்துறை , சமஸ்கிரு தத்துறை , உயர்பட்ட ஆய்வுகளுக்கும் இலங்கையில் இருக்கும் பல்கலைக்கழகங்களின் சமஸ்கிருத மொழிபற்றிய உயர்பட்ட ஆய்வுகளுக்கும் ஆலோசகராகவும் பரீட்சகருமாகவும் குருக்கள் விளங்கினார்கள். அவரின் பல்துறை ஆற்றலை யாவரும் நாடியே நிற்கும் நிலை காணப்பட்டது.

  குருக்கள் அவர்களின் பேராற்றலை வியந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அவரை முதன் முதலாக " வாழ்நாட் பேராசிரியர் " என்னும் தகுதியை வழங்கிய தோடு 04/10/1998 இல் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் முதன்முதலாக

இலக்கிய கலாநிதி " பட்டத்தினையும் வழங்கி யாழ்பல்கலை க்கழகமே பெருமையுற்றது எனலாம்.

 

பேராசான் குருக்களின் பெயர் சொல்லும் நூலாக " வடமொழி இலக்கிய வரலாறு " திகழ்கிறது . இதன் அருமையும் பெருமை யும் கருதி இலங்கை அரசாங்கத்தால் சாகித்திய விருது அளித்துக் கெளரவம் செய்யப்பட்டது.

சமஸ்கிருதம் கற்கும் மாணவர்களுக்கு மட்டுமன்றி இம் மொழியையும் இதன் இலக்கியச் சிறப்பினையும் பற்றி அறிய அவாவும் ஏனையோருக்கும் பயன்படும் வகை அமைதல் சாலச் சிறந்தது என்னும் எண்ணம் உண்டாயிற்று. எனவே மாணவரும்  ஏனையோரும் வாசிக்கும் வண்ணம் இவ்வரலாற்றை உருவாக்க முனைந்தேன் " என்று இந்நூலின் முன்னுரையில் பேராசான் குருக்கள் சுட்டிவதே இப்படைப்பின் முக்கியதத்துவத்தை வெளிக் காட்டி நிற்கிறது எனலாம்.

இந்த நூலுக்கு பொன்னம்பலம் இராமநாதன் மருகரான முன்னாள் தபால் தந்தி ஒலிபரப்புத்துறை அமைச்சரும் சிறந்த கல்விமானும் இராமநாதன் கல்லூரியின் அதிபருமாய் இருந்த திரு சு. நடேசபிள்ளை அவர்களே சிறந்த ஒரு அணிந்துரை வழங்கிச் சிறப்பித்துள்ளார்.

  பன்மொழி அறிஞரும் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து யாவராலும் பாராட்டப்பட்டவரான எஸ்.என். ஶ்ரீ ராமதேசிகன் 1962 இல் சுதேசமித்திரன் பத்திரிகையில் " வடமொழி இலக்கிய வரலாறு " நூலினை விதந்து எழுதியுள்ளார்.

  வீரகேசரி பத்திரிகையில் 1962 இல் " வடமொழி இலக்கிய வரலாறு " மதிப்பு மிக்க பொக்கிஷம் என்று ரஜனி அவர்களால் சுட்டிக்காட்டப் பட்டிருக்கிறது.

ஆன்மீகப் பேச்சாளரும் எழுத்தாளரும் தொழில்திணைக்கழ ஆணையாளரும் விளங்கிய உருப்பிராய் செ. தனபாலசிங்கன் அவர்கள் தினகரன் பத்திரிகையில் பேராசான்  குருக்கள் அவர்களின் " வடமொழி இலக்கிய வரலாறு " நூல்பற்றி - ' பண்டிதரும் பாமரரும் படித்தின்புற சரளமான இனிய நடையில் புதுமைநலமெருகிட்டு , தான் பெற்ற இன்பம் இவ்வையக மெல்லாம் பெறவேண்டும் என்ற பெரு நோக்கால் தமிழுலகுக்கு அளித்துள்ளார். நூலில் தொட்ட தொட்ட இடமெல்லாம் கலை ஞாயிறு கதிர் வீசுகிறது.புலமை உள்ளம் நிழலாடுகிறது. செந்தமிழ் பெருமக்கள் ஒவ்வொருவரும் படித்தின்புற வேண்டிய நூல் ' என்று வியந்து எழுதியிருப்பது நோக்கத்தக்கதாகும்.

  பேராசான் குருக்கள் அவர்களின் ஆராய்ச்சிகளின் பயனாக வந்த இன்னொரு நூல்தான் " சைவத் திருக்கோயிற் கிரியை நெறி " இந்த நூலினை ஆங்கிலத்தில் எழுதி வெளியிடவே பேராசான் ஆசைப்பட்டார். அதுவும் சாதாரணமாக அன்று. பத்துத் தொகுதிகளாய் வெளியிடுவதற்கு ஆசை கொண்டும் செயலாற்றி வந்தார். மிகப் பெரிய அளவில் நூல் அமைந்தால் யார் வாங்கு வார் ? விலையும் கூடிவிடும் ! வாசிப்பவர்களும் அருகி விடு வார்கள் என்னும் எண்ணமெல்லாம் அவர் மனதில் உதித்ததாம். அதனால் 300 பக்கம் அளவில் அதுவும் தமிழிலேயே அளித்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதி இந்நூலினை வழங்கினேன் என்று அவரே முன்னுரையில் தனது மனப்பதிவினை வெளிப் படுத்தி இருக்கிறார். தமிழில் இந்தநூல் வந்தபடியால் அனைத்து சிவாசாரிகர்களும் பாமரமக்களும் " சைவக்கோயிலில் எப்படி யான கிரியைகள் நடை பெறுகின்றன ? அவற்றுக்கான அர்த்தம் தான் என்ன என்பதையெல்லாம் விளங்கவும் மனமிருத்தவும் வாய்ப்புக் கிட்டியது எனலாம்.பலருக்கும் பயனுள்ள நூலாக இந்த நூல் விளங்கிய காரணத்தால்

மூன்றாம் பதிப்பினையும் கண்டு நிற்கிறது என்பது மனங் கொள் ளத் தக்கதாகும்.

தமிழ் மொழி மூலமாக சமஸ்கிருத மொழிப் பயிற்சிக்கென்று ' சமஸ்கிருத இலகு போதம் ' என்னும் நூலினை இரண்டு பகுதிகளாக வெளியிட்டார். ' இந்துப்பண்பாடு - சில சிந்தனைகள் ' 1985 இல் யாழ் பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டது.இவற்றை விட - விஷேஷ திரவ்ய ஹோம மந்திரங்கள் , தீபாராதனை வேத மந்திரங்கள் , வேத மந்திரங்களின் தொகுப்பு , ஶ்ரீ சக்ர பூஜை தொகுப்புசமஸ்கிருத கிரந்தாட்சர லகு போகம் , ஆகிய நூல்களையும் ஆக்கி அளித்திருக்கிறார் பேராசான் குருக்கள் அவர்கள். நூல்களுடன் நின்றமையாது ஆங்கிலத்திலும் தமிழிலும் பலகட்டுரைகளை பத்திரிகைகளுக்கும் மலர்களுக்கும் வழங்கி தன்னாளுமையினை வெளிக்காட்டி நின்றார் பேராசான் குருக்கள்.

 

வட இலங்கை சமஸ்கிருத சங்கம்  17/0//1953 ஆம் ஆண்டில் திருவாளர் சு. நடேசபிள்ளை தலைமையில் திருநெல்வேலியில் அமைந்திருந்த பரமேஸ்வராக் நடைபெற்ற முதலாவது சமஸ்கிருத மாநாட்டில் ' சமஸ்கிருத இலக்கியங்கள் ' பற்றி பேராசான் குருக்கள் ஆற்றிய உரையினைக் கேட்டவர்கள் அத்தனைபேரும் பெருவியப்பெய்தினர் என்பது பதிவாகும்.1960 களில் இலங்கை வானொலியிலும் குருக்கள் சமஸ்கிருத இலக்கியங்கள் பற்றி தொடர் உரை ஆற்றிவந்தார் என்பதும் நோக்கத்தக்கதாகும்.

  1976 இல் சென்னையில் நடைபெற்ற அனைத்துலக இந்து மாநாடு

  1977 இல் பேராசிரியர் ரி.எம்.பி. மகாதேவன் தலைமையில் மலேசியாவில் நடைபெற்ற இந்து மாநாடுகளில் உரையாற்றிய தோடு பல அரங்குகளுக்கு தலைமையும் தாங்கி பெருமைக்கு ஆளானார்.

  இலங்கை கல்வி உயர்கல்வி அமைச்சின் இந்துசமய பாட ஆலோசனைக் குழுவில் 1976 தொடக்கம் 1985 ஆம் ஆண்டுவரை அங்கம் வகித்தார். இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்திலும் அளப்பரும் பணிகள் பலவற்றை பேராசான் குருக்கள் ஆற்றி நின்றார்.

  பேராசான் குருக்கள் அவர்களின் கலை இலக்கிய சேவை களையும் சைவ சமயத்துக்கு இவராற்றிய தொண்டினையும் கெளரவிக்கும் வகையில் 1982 இல் கொழும்பு கலை இலக்கிய பத்திரிகை நண்பர்கள் மணிவிழா எடுத்துச் சிறப்பித்தனர்.

பேராசான் குருக்களின் வேத ஆகம வித்துவத்தை விதந்து இலங்கை அரசாங்க இந்துசமய பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு ' வேதாகம மாமணி ' என்னும் விருதினை வழங்கியது.

சிவநெறிக்கழகமும் அழகப்பா கல்லூரியும் இணைந்து 1991 இல்

சிவாகம ஞான பானு ' என்னும் பட்டத்தை வழங்கி பேராசானின் வித்துவத்தை மெச்சியது.

 

பேராசிரியர் கா. கைலாசநாதக் குருக்கள் இந்தநாட்டின் புகழ் பூத்த ஒரு கல்விமானும் , சமயத் தலைவரும் ஆவார். இந்து தத்துவம் , சமஸ்கிருதம் , ஆகியவற்றிலே துறை தோய்ந்தவர். பன்மொழி ஆற்றல் மிக்கவர்.

  நான் மாணவனாக இருந்த காலம் தொடக்கம் பேராசிரியர் அவர்களை நன்கு அறிவேன்.பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்துறையில் அவர் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணி புரிந்தார். அவரது காலத்தில் சமஸ்கிருதத்துறையில் முன்னணி பேராசிரியர்களான விஜயசேகரதிலகஶ்ரீஜயசூரியபோன்றவர்க ளுடன் இணைந்து செயற்பட்டார். பேராதனைப் பல்கலைக்கழகத் தில் படித்த தமிழ் மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் பெரும் பங்கு வகித்தார். பேராதனையில் அமைந்துள்ள குறிஞ்சிக்குமரன் ஆலய பணிகளில் இந்து சங்கத்துடன் இணைந்து பணிபுரிந்து திருக்கோயில் அமைக்கின்ற காரியங்களுக்குப் பெரும் பங்கா ற்றினார்.

  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இந்துநாகரிகத்துறை பேராசிரியராக நியமிக்கபட்ட  இவர் இந்துக் கற்கை நெறியினை அகில இலங்கை ரீதியாக வளர்த்து எடுப்பதற்கு பாடசாலைகள் , கல்விக்கூடங்கள் , பல்கலைக்கழகம் ஆகியவற்றில் அரும் பணி கள்  ஆற்றியுள்ளார். இவரது பணிகளாலேயே இந்து நாகரிகத் துறை ஒரு கற்கை நெறியாக இன்றும் இருந்து வருகிறது. இந்து நாகரிகத்திலே பல உப பிரிவுகள் அமைய வேண்டும் என்பதே இவரது பெருவிருப்பாகும். இன்று அந்த நோக்கங்களில் ஒன்றாக இந்து தத்துவம் ஒரு ஒரு கற்கை நெறியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இவை மட்டுமன்றி அந்தணச் சிறுவர்களுடைய வேத பாராயண  குருகுல பாரம்பரியங்களை வளர்த்தெடுப்பதற்கும் பேராசிரியர் அவர்கள் அரும்பணிகள் ஆற்றியுள்ளார். " என்று யாழ் பல்கலை க்கழகத்தின் துணைவேந்தராய் இருந்த பேராசிரியர் பொ. பால சுந்தரம்பிள்ளை வியந்து மகிழ்கிறார்.

 

"'சிவாசாரிய சமூகத்துக்கும்இந்து சமயத்துக்கும் , சிறப்பாக கல்விச் சமூகத் துக்குமாக ஆற்றிய பணி மிகப்பெரியது. அப்பெருந்தகையின் வழிகாட்டலில் உருவாகிய மாணவ சமூகம் அளைப்பரியது " யாழ்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராய் இருந்த பேராசிரியர் இரத்தினம் விக்னேஸ்வரன் இவ்வாறு பாராட்டியுள்ளார்.

பல்கலைக்கழகத்தில் உயர் நிலையில் இருந்தாலும் ஆன்மீக த்தை மட்டும் பேராசான் விட்டு விலகியதே இல்லை.  1957 ஆம் ஆண்டு முதல் 1985 ஆம் ஆண்டுவரை அதிகாலையில் இடை யறாது ஶ்ரீ சக்ர பூஜை செய்து வந்ததோடு மானசீகமாக தேவீ மஹாத்மியத்தை பாராயணமும் செய்து வந்தார்.

  மந்திரம் ,கிரியை , பாவனை என்பவற்றைத் தன்னகத்தே கொண்ட  கிரியை என்னும் கலையை நிகழ்த்துவதில் ஈடிணை யற்று விளங்கினார். தன்னுடைய 12 ஆவது வயது முதல் 10 வருடங்களாக தந்தையாரின் சமயக்கிரிகைகளிம் போது பத்ததி வாசித்து சாதகராக விளங்கி இருக்கிறார் பேராசான் குருக்கள் அவர்கள்.

வசந்த  நவராத்திரி காலங்களில் முனீஸ்வரத்தில் 1976 ஆம் ஆண்டு முதலாக சதசண்டி ஹோமத்தையும் நல்லூரில் கமலாம்பிகைக்கு நவராத்திரி காலங்களில் தசசண்டி ஹோமத்தையும் தாந்திரீக முறைப்படி தாமே ஆரம்பித்து பிரதான சிவாசாரியராக இருந்து சிறப்புடன் பக்தி பூர்வமாகச் செய்தார்கள்.

  பலகும்பாவிசேகங்கள் , உற்சவங்கள்யாகங்கள் யாவற்றுக்கும் தலைமை தாங்கி பக்திபூர்வமாக யாவற்றையும் ஆற்றி நாட்டுக்கும் மக்களுக்கும் நலன் பெருக ஆண்டவனைப் பிரார்த்துக் கருமங்களை ஆற்றி நின்றார்கள் பேராசான் அவர்கள்.

  குருத்துவ பாரம்பரியத்தினை உரிய அடித்தளங்களுடன் உருவாக்க எண்ணங் கொண்ட பேராசான் அவர்கள் 60 பது களில் முனீஸ்வரத்தில் ஆரம்பிக்கப்பட்ட  ' விஸ்வ வித்யா பீடத்தில் ' சிவாச்சாரிய மாணவர்களுக்கு சனிஞாயிறு , தினங்களில் கற்பித்து வந்ததோடு தமது வீட்டில் 1980 இல் ஆரம்பிக்கப்பட்ட ஶ்ரீ வித்யா குருகுலத்தில் தாமே காலை மாலை வேளைகளில் வேதமந்திரங்களை அத்யயனம் செய்து வந்தார்கள். இதன் விரிவான நிலை முழுநேர குருகுலமாக 1990 இல் ஏற்பட்ட போதும் நாட்டில் ஏற்பட்ட சூழ்நிலை காரணமாக தடைப்படவே 1990 இல் கொழும்பு சென்று செட்டியார் தெரு முத்துவிநாயகர் ஆலயத்தில் குருகுலம்வேதாகம பாட சாலை என்பவற்றுடன் இணைந்த ' ஶ்ரீ முத்துவிநாயகர் வேதாகம ஆய்வு நிறுவனத்தை ' அமைத்து வகுப்புகளைப் பேராசான் நடத்தி வந்தார்.

  பேராசானின் இல்லறமாம் நல்லறத்தில் வாரிசுகளாக  நன்முத்துக்களாக ஶ்ரீமதி கெளரிபிரம்மஶ்ரீ ஶ்ரீதரன்பிள்ளைச் செல்வங்களாக வந்தமைந்தார்கள் . ஈழத்தில் இருந்த இருந்த ஆளுமை பேராசான் குருக்கள் அவர்கள் 1997 இல் அவுஸ்திரேலிய நாட்டில் குடியுரிமை பெற்று அவுஸ்திரேலிய நாட்டில் காலடி வைத்தார்கள். இங்கு வந்தும் அவரின் ஆன்மீகம் பணிகள் ஓயவே இல்லை.

மெல்பேண் ஶ்ரீ சிவா விஷ்ணு ஆலயத்தின் ஆரம்ப ஆலோசகராகச் செயற்பட்டு உரிய வழிகாட்டுதல்களை வழங்கி செயற்பட்டார்.

 பேராசினின் மேல் பெரு மரியாதை கொண்ட எங்கள் சித்தி பாலம் லக்ஷ்மணன் அமையார் அவரின் வரலாற்றை எழுதும்படி வேண்டி நின்றார். பேராசானும் எழுதத்தொடங்கினார்.... ஆனால்

      இடைவிடாது இயங்கிவந்த பேராளுமையான பேராசான் பேராசிரியர் கைலாசநாதக்குருக்களின் பணிகள் மண்ணுலக்குக்குப் போதும் என்று கருதிய காரணத்தால் போலும் விண்ணுலகில் அவரைப் பணி ஆற்றுவதற்குஆண்டவன் 07/08 2000 அன்று அழைத்துக் கொண்டுவிட்டார்.

    அவரோடு பழகிய ஆண்டுகள் என்னால் மறக்க முடியாத ஆண்டுகள் எனலாம்.நான் யாழ்ப்பாணம் கல்வித்திணைக் களத்தில் உதவிக்கல்வி இயக்குநராய் பணியாற்றிக் கொண்டிருந்தேன். உயர்தர வகுப்பில் இந்து நாகரிகம் கற்பிக்கத் தொடங்கிய காலம் அது. மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழிகாட்டல் வகுப்புகள் , வதிவிடப் பயிற்சிகள் நடத்தும் அவசியம் ஏற்பட்டது. தமிழுக்கும் சமயத்துக்கும் பொறுப்பாக நான் இருந்த காரணத்தால் அதனை நானே ஒழுங்கு செய்தேன். கருத்தரங்கு , பயிற்சி வகுப்பு , வழிகாட்டல்என்று திட்டமிட்டேன். யாழ் இந்து மகளிர் கல்லூரியில் யாவும் ஒழுங்கு செய்தேன்.ஏறக்குறைய இரண்டு வாரங்கள்வரை இந்த நிகழ்வு இடம் பெற்றது. அப்பொழுது எனக்குப் பெரும் பலமாக விளங்கினார் பேராசான் பேராசிரியர் கைலாசநாதக் குருக்கள் அவர்கள்.அவரை அணுகி எனது எண்ணத்தைத் தெரிவித்தவுடன் இன்முககத்துடன் வந்து மிகவும் சிறப்பாக வழிகாட்டுதல்களை வழங்கி பேருதவி புரிந்தார். அவரின் கற்பித்தலும்,அணுகு முறையும்ஆறுதலான உரையாடல்களும் , அறிவின் தெளிவும் , கூர்மையும்என்மனத்துள் ஆழமாகப் பதிந்தே விட்டது.

   கொழும்புத்துறையில் அமைந்திருக்கும் கத்தோலிக்க குருமாரின் செமினரியில் எட்டு ஆண்டுகளுக்கு மேலாக தமிழும் இந்துக் கலாசரமும் , சைவசித்தாந்தமும் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன். நான் கற்பிக்க புறப்படுமுன்னர் பேராசான் அவர்களிடம் ஆசிபெற்றென். அவரின் பல ஆலோசனைகள் எனது கற்பித்தலுக்கு அருந்துணையாக அமைந்திருந்தது.இந்த நேரத்தில் அவற்றை எல்லாம்  எண்ணிப் பார்க்கின்றேன். அவர் போன்ற ஓர் ஆளுமை வருவாரா என்றும் எண்ணி ஏங்குகிறேன்.

  அவரின்  கற்பித்தலும் வழிகாட்டலும் பல மாணவப் பரம்பரையினை உலகெங்கணும் உருவாக்கி இருக்கிறது. அவரின் வாரிசாக பேராசிரியர் கோபாலகிருஷ்ண ஐயர் அவர்கள் இந்துநாகரிகத்துறையினை தளரவிடாமல் செய்தார்.அவரின் வழிகாட்டலில் பேராசிரியர் வேதநாதன் கலாநிதி விக்னேஸ்வரி , கலாநிதி பவநேசன் , எனப் பலர் கிளைபரப்பி யாழ்பல்கலை க்கழகத்தில் பேராசானால் கட்டி வளர்க்கப்பட்ட இந்து நாகரிகப் பீடத்தை மேலும் மேலும் உயர்த்திக்கொண்டே போகிறார்கள். விண்ணிலிருந்து பேராசான் குருக்கள் அவர்கள் தான் நட்ட விதை பெரு விருட்சமாகி சமூகத்துக்குப் பெருந்துணையாகி நிற்பதைப் பார்த்து பெருமிதம் அடைவார் என்றே எண்ணிடத் தோன்றுகிறது.

ஆளுமையாய் விளங்கிய பேராசானின் மாணவர்களினால் " பேராசிரியர் கா. கைலாசநாதக்குருக்கள் ஞாபகார்த்த சபை " என்னும் அமைப்பு நல்லூர் சிவன் கோவிலை அடித்தளமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இச்சபையின் தலைவராக வாழ்நாட் பேராசிரியர் கலாநிதி கோபாலகிருஷ்ண ஐயரும் செயலாளராக பிரம்மஶ்ரீ ச. பத்மநாத சர்மாவும் நியமிக்கப்பட்டனர்.

2001 இல் நல்லூர் சிவன் கோவிலில் யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர்பேராசிரியர் கலாநிதி பொ. பாலசுந்தரம் பிள்ளையால் ஆரம்பிக்கப்பட்ட இச்சபையின் கீழ்  பேராசான் கைலாசநாதக்குருக்கள் ஆய்வு நிறுவனம் , நூல்நிலையம் என்பன சம்பிரதாய பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

  இவ்வாறு அமைக்கப்பட்ட சபையினால்  யாழ்பல்கலைக் கழகத்தில் அமரர் பேராசிரியர் கா. கைலாசநாதக் குருக்கள் நினைவுப் பேருரை நிகழ்த்துவதற் கும் . அங்கு இந்து நாகரிகம் , சமஸ்கிருதம்  இந்து தத்துவம் ஆகிய பாடங் களில் சிறப்புக் கலைத்தேர்வில் திறமைச் சித்தி பெறும் மாணவர்களுக்கு அன்னாரின் நினைவாகப் புலமைப்பரிசில் வழங்குவதற்கு  நிதியினை வழங்கும் ஒழுங்கும் செய்யப்பட்டது.

  பேராசான் குருக்கள் அவர்களது நினைவாகக் காலந்தோறும் நூல் வெளியீடு அந்தணர் கல்வி, சமூக மேம்பாட்டுக்கான பணிகளை இனங்கண்டு செயலாற்றுதல்  சமஸ்கிருதக் கல்லூரி ஆரம்பித்தல் நோக்கங்களைச் செயற்படுத்தவும் இச்சபையால் தீர்மானிக்கப்பட்டது.இச்சபையினால் இதுவரை குருக்கள் அவர்களின் நினைவாக 

1) கைலாசநாதம்  

2) சண்டீயக்ஞபத்ததி

3) என்சரிதம் 

4) கைலாஸநாதாஞ்சலி

5 )யாழ்ப்பாணத்தில் சமஸ்கிருதக் கல்வியை வளர்த்த நிறுவனங்களும் அறிஞர்களும்

6) கீர்த்தனாசதகங்கள் 

7 )தகனசம் ஸ்காரம்  

8) கிரியாகிரமபத்ததி பகுதி 1  

9) இந்துப்பண்பாடு சில சிந்தனைகள்  

 ஆகிய நூல்கள் வெளியீடு செய்யப் பட்டிருக்கின்றன.

 







[ அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் 20-02- 2021 ஆம் திகதி 
  நடத்திய இணையவழி காணொளி அரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை ] 

No comments: