உலகச் செய்திகள்

மியன்மாரில் இதுவரை இல்லாத அளவில் பாரிய ஆர்ப்பாட்டங்கள்

மியன்மாரின் அரசியல் பதற்றத்தை தணிக்க அண்டை நாடுகள் முயற்சி

ஊடக சட்டத்தை மாற்ற ஒப்புதல்; ஆஸி. செய்தி தளங்கள் மீதான தடையை தளர்த்துகிறது பேஸ்புக்

உலக கொரோனா தொற்று 111 மில்லியனைத் தொட்டது

டிரம்பின் கிரீன் கார்ட் தடையை திரும்பப் பெற்றார் ஜோ பைடன்


மியன்மாரில் இதுவரை இல்லாத அளவில் பாரிய ஆர்ப்பாட்டங்கள்

மியன்மாரில் இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக நேற்று நாடு தழுவிய வேலை நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டதோடு இதுவரை இல்லாத பாரிய ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றுள்ளன.

தலைநகர் நைபிடோவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை கலைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். இந்த வன்முறைகளில் உயிரிழப்புகள் ஏற்படக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இராணுவம் ஆட்சியை கைப்பற்றி மூன்று வாரங்கள் எட்டியபோதும் அங்கு தொடரும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஒத்துழையாமை போராட்டங்களை தடுப்பதற்கு இராணுவத்தால் முடியாமல்போயுள்ளது.

பெப்ரவரி 1ஆம் திகதி இடம்பெற்ற ஆட்சிக்கவிழ்ப்பை கைவிடும்படியும் கைது செய்யப்பட்டிருக்கும் ஆங் சான் சூச்சி மற்றும் ஜனநாயக முறையில் தேர்வான அரசின் மூத்த உறுப்பினர்களை விடுவிக்கும்படியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று சீனா எல்லையின் வடக்கு குன்று பகுதி தொடக்கம் மத்திய பிராந்தியமான இரவாடி நதி டெல்டா பகுதி மற்றும் தெற்கில் பன்ஹடில் வரை நரகங்கள் மற்றும் சிறு நகரங்கள் எங்கும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

தலைநகரில் இராணுவத் தலைமையத்திற்கு அருகில் கோசம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களை கலைக்க பொலிஸ் தண்ணீர் பீச்சியடிக்கும் டிரக் வண்டி மற்றும் பல்வேறு வாகனங்கள் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் துரத்திப் பிடிக்க முயல்வதும் அதில் பதிவாகியுள்ளது.

“நாம் அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோதும் அவர்கள் எம்மை துரத்திப் பிடித்து கைது செய்கின்றனர்” என்று பெண் ஒருவர் பதிவிட்ட வீடியோ ஒன்று பேஸ்புக்கில் உள்ளது.

இந்த ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் இதுவரை மூன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மண்டலேய் நகரில் கடந்த சனிக்கிழமை இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதோடு அதற்கு முன் இளம் பெண் ஒருவர் தலையில் துப்பாக்கிக் காயம் ஏற்பட்ட நிலையில் உயிரிழந்தார். அந்தப் பெண்ணின் இறுதி ஊர்வலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதோடு. அதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று திரண்ட நிலையில் பிரதான நகரான யங்கோனில் நேற்று பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு இருந்தனர்.  

இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவும் பல மேற்குலக நாடுகளும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.  நன்றி தினகரன் 

 
மியன்மாரின் அரசியல் பதற்றத்தை தணிக்க அண்டை நாடுகள் முயற்சி

மியன்மாரில் இராணுவ சதிப்புரட்சியை அடுத்து ஏற்பட்டிருக்கும் அரசியல் பதற்றத்தை தணிக்கும் முயற்சியை அண்டை நாடுகள் தீவிரப்படுத்தி உள்ளன.

இது பற்றி பேச்சுவார்த்தை நடத்த மியன்மாரின் இராணுவம் நியமித்த வெளியுறவு அமைச்சர் வுன்னா மவுங் லிவின் தாய்லாந்து சென்று திரும்பியுள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சம்மேளனம் மூலம் முன்னெடுக்கப்படும் இராஜதந்திர முயற்சிகளை அடுத்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக லிவின் தாய்லாந்து சென்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.   

எனினும் கடந்த பெப்ரவரி முதலாம் திகதி இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக மியன்மாரில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இதில் சக ஆசியான் உறுப்பு நாட்டின் பிரச்சினையை தீர்ப்பதில் இந்தோனேசியா முன்னின்று செயற்படுகிறது. எனினும் இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர் நேற்று மியன்மார் பயணிக்க இருந்த நிலையில் அந்தப் பயணம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இராணுவம் நியாயமான தேர்தலை நடத்துவதாக வாக்களித்திருக்கும் நிலையில் அது தொடர்பில் கண்காணிக்க ஆசியான் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை அனுப்ப இந்தோனேசியா பரிந்துரைத்துள்ளது.

புதிய தேர்தலை நடத்துவதற்கான காலம் குறித்த விபரத்தை மியன்மார் இராணுவம் வெளியிடாத நிலையில் அங்கு ஓர் ஆண்டு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மியன்மாரில் ஜனநாயக முறையில் தெரிவான ஆங் சான் சூச்சி மற்றும் தலைவர்களை விடுவிக்கக் கோரியும் இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராகவும் இந்த வாரம் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. இராணுவத்தின் எச்சரிக்கையையும் மீறியே மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்த இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக மேற்குல நாடுகளின் அழுத்தம் அதிகரித்துள்ளது. மியன்மார் மீது தடைகளை கொண்டுவருவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது. நன்றி தினகரன் 


ஊடக சட்டத்தை மாற்ற ஒப்புதல்; ஆஸி. செய்தி தளங்கள் மீதான தடையை தளர்த்துகிறது பேஸ்புக்

ஊடக சட்டத்தை மாற்ற ஒப்புதல்; ஆஸி. செய்தி தளங்கள் மீதான தடையை தளர்த்துகிறது பேஸ்புக்-Australia Newspaper-Facebook Release Media Ban

சர்ச்சைக்குரிய ஊடகச் சட்டத்தை மாற்ற அவுஸ்திரேலியா ஒப்புக்கொண்டதால், செய்திப் பக்கங்கள் மீதான தடை விரைவில் நீக்கப்படும் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமூக ஊடகத் தளங்களில் செய்திகள் இடம்பெற செய்தி நிறுவனங்களுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற புதிய சட்டம் தொடர்பில் இரு தரப்புகளும் இணக்கம் கண்டுள்ளதாக பேஸ்புக் தெரிவித்தது.

புதிய மாற்றங்களால், பொது அக்கறைக்குரிய செய்தித்துறையில் முதலீடு அதிகரிக்கலாம், வரும் நாட்களில் அவுஸ்திரேலியர்களுக்கு பேஸ்புக்கில் செய்திப் பக்கங்கள் மீண்டும் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த வாரம் பேஸ்புக் நிறுவனம் அவுஸ்திரேலியாவில் செய்திப் பக்கங்கள் உட்பட மற்ற சில பக்கங்களையும் தடை செய்தது.

செய்திகளுக்காகக் கட்டணம் செலுத்துவது குறித்து உள்ளூர் ஊடகங்களுடன் ஏதேனும் ஒரு வழியில் இணக்கம் கண்டால் பேஸ்புக், கூகுள் போன்ற நிறுவனங்களின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது.

முதலில் சேவைகளை மீட்டுக்கொள்வதாகக் கூறிய கூகுள் நிறுவனம், தன் நிலைப்பாட்டை மாற்றி நியுஸ் கோர்ப், நைன் என்டர்டெய்ன்மன்ட் போன்ற ஊடகத் தளங்களுடன் மில்லியன் டொலர் மதிப்பில் ஒப்பந்தம் செய்துள்ளது.  நன்றி தினகரன் 


உலக கொரோனா தொற்று 111 மில்லியனைத் தொட்டது

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 111 மில்லியனைத் தாண்டியுள்ளது. நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2.5 மில்லியனை நெருங்கியுள்ளது.

ஐந்தில் ஒரு பங்கு மரணங்கள் அமெரிக்காவில் நேர்ந்தன. உலகிலேயே மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் உயிரிழப்பு எண்ணிக்கை 500,000ஐ நெருங்கியுள்ளது.

எனினும், கடந்த இரண்டு வாரங்களாக அங்கு புதிதாய்ப் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை 44 வீதம் குறைந்ததாக நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இதன்படி உயிரிழப்பு எண்ணிக்கை 35 வீதம் குறைந்துள்ளது.

பாதுகாப்பு இடைவெளி, முகக்கவசம் அணிவது போன்ற நடவடிக்கைகளுடன், அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட தடுப்பூசி போடும் பணிகளும் அதற்குக் காரணமாகக் கருதப்படுகின்றன.

அமெரிக்க மக்கள் தொகையில் 13 வீதத்தினருக்கு தற்போது ஒருமுறையாவது தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

உலக அளவில் 100க்கும் அதிகமான நாடுகள் மற்றும் ஆட்புலங்களில் சுமார் 200 மில்லியன் கொரோனா தடுப்பு மருந்துகள் போடப்பட்டுள்ளன.

இதில் உலக மக்கள் தொகையில் வெறுமனே 10 வீதமாக இருக்கும் ஜி7 நாடுகளில் 45 வீதமான தடுப்பு மருந்து பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி தினகரன் 


டிரம்பின் கிரீன் கார்ட் தடையை திரும்பப் பெற்றார் ஜோ பைடன்

கிரீன் கார்ட் வழங்குவதற்கான அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கொண்டு வந்த தடையை பதவியில் உள்ள ஜனாதிபதி ஜோ பைடன் அகற்றியுள்ளார்.

இந்தத் தடை அமெரிக்காவுக்கான பல சட்டபூர்வ குடியேறிகளை தடுப்பதாக உள்ளது என்று வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் தொழில் சந்தையை பாதுகாக்கவெனக் கூறி 2020 இறுதி வரை கிரீன் கார்ட் வழங்குவதை நிறுத்த டிரம்ப் நிர்வாகம் உத்திரவிட்டிருந்தது.

எனினும் இது அமெரிக்க பிரஜைகள் மற்றும் சட்டபூர்வமான நிரந்தர குடியிருப்பாளர்களின் குறிப்பிட்ட குடும்ப உறுப்பினர்கள் தமது குடும்பங்களுடன் இணைவதை தடுப்பது உட்பட அமெரிக்காவுக்கு பாதகமாக உள்ளது என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

“உலகெங்கும் உள்ள திறமைகளை பயன்படுத்தும் அமெரிக்காவின் தொழில்துறைக்கும் இது பாதகமாக உள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 20 ஆம் திகதி ஜனாதிபதியாக பதவி ஏற்றது தொடக்கம் டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளை மீளப்பெறும் நடவடிக்கைகளில் ஜோ பைடன் ஈடுபட்டு வருகிறார். அவர் பதவி ஏற்ற முதல் தினத்திலேயே 13 முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் மீது டிரம்ப் விதித்த பயணக் கட்டுப்பாட்டை நீக்கினார். அதேபோன்று அமெரிக்கா மற்றும் மெக்சிகோ எல்லையில் மேற்கொள்ளப்பட்ட எல்லைச் சுவர் நிர்மாணத்தையும் நிறுத்தினார்.       நன்றி தினகரன் 
No comments: