வீரகேசரியில் 1977 இல் ஒப்புநோக்காளர் பணி
கிடைத்தபின்னரும், கொழும்பில் தொடர்ந்தும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினதும் எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகத்தினதும் வேலைகளை மேற்கொண்டவாறு, இலங்கை ஆசிரியர் சங்கம், மக்கள் விடுதலை முன்னணி ஆகியனவற்றின் தலைமை அலுவலகங்களுக்கும் சென்று அங்கு தரப்பட்ட பணிகளை செய்துகொடுத்தேன்.
சங்கத்தின் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன், கொழும்பு -07 இல் சேர் ஏர்ணஸ் டீ. சில்வா மாவத்தையில் அமைந்திருந்த சோவியத்தகவல் பிரிவில் பணியாற்றினார்.
இங்கிருந்துதான் சோவியத் நாடு மற்றும் சோசலிஸம்
தத்துவமும் நடைமுறையும் முதலான இதழ்கள் செம்மைப்படுத்தப்பட்டன. அத்துடன் தினமும் செய்திக்குறிப்பேடும் ( News Letter ) இங்கிருந்து வெளியானது.
அந்தத் தகவல் பிரிவு அமைந்த இல்லம் லலிதா ராஜபக்ஷவுக்கு சொந்தமானது. அவரது இல்லம் அதே காணியில் அருகில் அமைந்திருந்தது.
அவர் கலை ஆர்வம் மிக்கவர். அத்துடன் சில சிங்களத்திரைப்படங்களும் தயாரித்தவர். சோவியத் தகவல் பிரிவை சோவியத் மொழியில் நவஸ்தி என்றும் அழைப்பர்.
அந்த இல்லத்தை, நீங்கள் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் இயக்கத்தில் வெளியான மார்டின் விக்கிரமசிங்காவின் கம்பெரலிய திரைப்படத்தின் இறுதிக்காட்சிகளில் பார்க்கலாம்.
லலிதா ராஜபக்ஷ வசித்த இல்லமும் திரைப்படங்களில் இடம்பெற்றுள்ளன.
அருகில்தான் யாழ்ப்பாணம் எம்.பி. யாகவிருந்த சி. எக்ஸ். மார்டினின் பெரிய மாடிவீடும் அமைந்திருந்தது. எனினும் அவ்விடத்திற்குச்செல்லும் சந்தர்ப்பங்களில் அவரை பார்க்கவில்லை.
ஆனால், அந்த இல்லத்திற்கு முன்னால் செல்லும் இன்னர் ஃபிளவர் வீதியில் வசித்த தோழர் பீட்டர் கெனமனை சந்திக்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்திருக்கின்றன. அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் Forward ஆங்கில இதழின் ஆசிரியர் குழுவிலும் அங்கம் வகித்தார்.
சோவியத் தகவல் பிரிவில் பிரேம்ஜி, இராஜகுலேந்திரன், லத்தீஃப், பெரி. சண்முகநாதன், மு. கனகராஜன் மற்றும் சிங்கள தோழர்கள் புண்ணியசேன, சுமித்ரா ரகுபத்த உட்பட வேறும் சிலரும் பணியாற்றினார்கள். திருமதி கமலி பிரேம்ஜி, திருமதி லத்தீப் ஆகியோர் அங்கே தட்டச்சாளர்கள்.
நண்பர் ராஜஶ்ரீகாந்தனும் முத்தையாவும் பின்னாளில் அங்கு பணியாற்ற வந்துசேர்ந்தனர். இருவரும் சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள்.
சுமித்ரா ரகுபத்த , என்னை M P சகோதரயா என்றே அழைப்பார். எனது பெயர் MURUGA POOPATHY என்பதை அவர் சுருக்கமாக அவ்வாறு மாற்றித்தான் அழைப்பார். அவர் சிறந்த சிங்கள எழுத்தாளர். மொழிபெயர்ப்பாளர். ஆளுமை மிக்க சகோதரி. பின்னாளில் அவர் இலங்கை வீடமைப்பு நிர்மாணத்துறை
அமைச்சிலும் உதவி ஆணையாளராக பணியாற்றியபோது, நான் அவுஸ்திரேலியா வந்துவிட்டேன். அவர் அவுஸ்திரேலியா வந்து படித்து கலாநிதிப்பட்டம் பெற்றுக்கொண்டு திரும்பிவிட்டார்.
சில தொலைக்காட்சி நாடகங்களையும் எழுதி இயக்கினார். தனிப்பட்ட வாழ்வில் பல சோதனைகளையும் வேதனைகளையும் சந்தித்தார்.
மல்லிகை, மார்டின் விக்கிரமசிங்காவுக்காக சிறப்பிதழ் வெளியிட்டபோது, சுமித்ரா சிங்களத்தில் எழுதித்தந்த கட்டுரையை நானே மொழிபெயர்த்து ஜீவாவிடம்
சேர்ப்பித்தேன்.
தினமும் வீரகேசரிக்கு பணிக்குச்சென்றாலும், எனக்கு தரப்பட்ட பணிநாட்கள் செவ்வாய் முதல் ஞாயிறு வரையில். திங்கட் கிழமை மாத்திரம் ஓய்வு நாள். ஞாயிற்றுக்கிழமை அரைநாள் வேலை.
சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் சங்கத்தின் ஏற்பாட்டில் இலக்கிய நிகழ்ச்சிகள் நடக்கும். சங்கத்தின் கொழும்புக்கிளையின் செயலாளர் பதவியும் எனக்குத்தரப்பட்டிருந்தது. சங்கம் மாதாந்தம் போயா தினங்களில் கருத்தரங்குகளை நடத்திவந்தது.
சோவியத் தகவல் பிரிவுக்கு திங்கட் கிழமைகளில் சென்று, சங்கத்தின் வேலைகளையும் மாலையில் மலே வீதிக்கு வந்து ஆசிரியர் சங்கத்தின் பணிகளையும் செய்தவாறு, ஞாயிற்றுக்கிழமைகளில் மதியத்திற்கு மேல்
ஆமர்வீதிச்சந்தியில் ஒரு மரஆலை கட்டிடத்தின் மேல்தளத்தில் இயங்கிய மக்கள் விடுதலை முன்னணி தலைமை அலுவலகத்திற்கு சென்று செஞ்சக்தி இதழின் வேலைகளை கவனிப்பேன். மக்கள் விடுதலை முன்னணியின் அச்சகம் களனி கங்கை தீரத்தில் கொகிலவத்தை என்ற ஊரில் அமைந்திருந்தது. சில சந்தர்ப்பங்களில் இங்கும் செல்லநேரிடும்.
இவ்வாறு எனது பெரும்பாலான நேரங்கள் கொழும்புடன் கழிந்தாலும், நேரத்தை கண்டுபிடித்து, எமது ஊரின் இந்து இளைஞர் மன்றம் மற்றும் விஜயரத்தினம் வித்தியாலயத்தின் பழைய மாணவர் மன்றம் ஆகியனவற்றின் சேவைகளிலும் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன்.
இவ்வாறு பம்பரமாகச் சுற்றிக்கொண்டிருந்த என்னை எங்கள் ஊரில் பலர் தங்கள் தேவைகளுக்கும் நன்கு
பயன்படுத்திக்கொண்டனர்.
பத்திரிகைக்கு, வானொலிக்கு மரண அறிவித்தல், பிறந்தநாள் அறிவித்தல் எழுதிக்கொடுத்து வெளிவரச்செய்வது முதல் பொலிஸ் சம்பந்தப்பட்ட விவகாரங்களுக்கும் பலர் என்னை பயன்படுத்தினார்கள்.
அதனால் வீட்டில் எனக்கு விதானையார் என்ற பெயரும் சூட்டப்பட்டது.
“ இந்த சம்பளம் இல்லாத உத்தியோகங்களை என்றைக்கு விடுகிறாயோ, அன்றுதான் நீ உருப்படுவாய் ! “ என்று எனது அம்மா அக்காலப்பகுதியில் எனக்கு நற்சான்றிதழ் தந்துவிட்டார்கள். நான் அந்த உத்தியோகத்தை புலம்பெயர்ந்து வந்தபின்னரும் கைவிடவில்லை.
உருப்பட்டேனா…? என்பதும் தெரியவில்லை. இயல்புகள்தான் ஒருவரின் அடிப்படை அழகு. அந்த அழகு அழியாது அல்லவா..?
மல்லிகை, மார்டின்விக்கிரமசிங்காவுக்காக சிறப்பிதழ் வெளியிடவுள்ள எண்ணத்தை, அச்சமயம் கலாசார திணைக்களத்தில் செயலாளராக பணியிலிருந்த தமிழ் அபிமானி கே. ஜி. அமரதாசவிடம் சொன்னேன்.
அவர் ஒரு கடிதம் தந்து தெகிவளையில் வசித்த மார்டின் விக்கிரமசிங்காவின் மகளிடம் என்னை அனுப்பினார். அங்கே ஒரு அச்சகம் இயங்கிக்கொண்டிருந்தது. ஏற்கனவே வெளியான
மார்டின் விக்கிரமசிங்காவினதும் இதர சிங்கள எழுத்தாளர்களினதும் படைப்புகளின் மொழிபெயர்ப்புகள் இடம்பெற்ற சில மல்லிகை இதழ்களையும் எடுத்துச்சென்று அவரிடம் கொடுத்தேன்.
அதுவரையில் மல்லிகை இதழ் பற்றி அறிந்திருந்த அவர், ஜீவா மேற்கொண்டுவந்திருக்கும் நல்லிணக்க செயற்பாடுகளை அறிந்திருக்கவில்லை.
தாமதிக்காமல் சிறப்பிதழுக்கு விளம்பரமும் தந்து, மல்லிகைக்கு சன்மானமும் தந்தார். அவற்றை ஜீவாவுக்கு சேர்ப்பித்தேன்.
சிறப்பிதழ் வெளியானதும் சில பிரதிகளை அவரிடம் சேர்ப்பித்தேன். கே. ஜி. அமரதாச, என்னை அச்சமயம் இராஜாங்க அமைச்சராகவிருந்த ஆனந்த திஸ் டீ. அல்விஸின் செயலாளர் சரத் அமுனுகமவிடமும் அனுப்பினார். அவருக்கும் மல்லிகை இதழ்களை வழங்கினேன்.
இவ்வாறு மல்லிகையால் அறிமுகமாகி, பலரதும் தொடர்புகளை பேணிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராமல் இலங்கை வானொலி கலையகத்தினுள்ளும் பிரவேசிக்கநேர்ந்தது.
எனது காலடித்தடம் அங்கு பதிவாவதற்கு இலக்கியத்திறனாய்வாளர் கே. எஸ். சிவகுமாரன்தான் காரணம். அவர் அப்போது இலங்கை வானொலியில் செய்தி வாசித்துக்கொண்டிருந்தார்.
கொழும்பில் நடைபெறும் இலக்கியக்கூட்டங்களில் அவரை
சந்திப்பேன். நண்பர்கள் சாந்தன், இமையவன், குப்பிழான் ஐ. சண்முகன், மாவை நித்தியானந்தன், தில்லைக்கூத்தன் ஆகியோர் இணைந்து இயங்கிய கொழும்பு கலை , இலக்கிய நண்பர்கள் அமைப்பு தமிழ்ச்சங்கத்திலும் நண்பர்களது வாடகை இல்லங்களிலும் சந்திப்புகளை நடத்தும்.
வெளியாகும் நூல்கள் பற்றிய வாசிப்பு அனுபவங்கள் இடம்பெறும். ஒரு மூத்த எழுத்தாளரை அழைத்து பேசவைப்பார்கள்.
ஒரு தடவை நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் எழுதி தமிழ்ப்புத்தகாலயம் வெளியீடாக வந்திருந்த காலம்தோறும் நாட்டியக்கலை நூல் பற்றி நண்பர் கே. எஸ். சிவகுமாரன் தனது வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
அவர் என்றைக்குமே தன்னை விமர்சகன் என்று சொல்லிக்கொள்ளவில்லை. தன்னை எதிலும் முன்னிலைப்படுத்தாத அதிர்ந்துபேசத்தெரியாத தன்னடக்கம் மிக்கவர். தமிழ் ஊடகத்துறையில் பத்தி எழுத்துக்கள் குறித்த அறிமுகத்தை தந்தவரும் சிவகுமாரன்தான். ஆங்கில ஊடகங்களில் Columnist என்ற பத்தி எழுத்தாளர்கள்
இயங்குவதுபோன்று, தமிழ் ஊடகங்களிலும் பத்தி எழுத்துக்களின் அவசியத்தை வலியுறுத்தியவர் அவர். தமது எண்பத்தியைந்து வயதில் அண்மைக்காலமாக அவர் சுகவீனமுற்று வீடும் - மருத்துவமனை என்றும் அலைந்துகொண்டிருக்கையில் அவர் பற்றிய அருமையான விரிவான பதிவை நண்பர் மு. நித்தியானந்தன் கனடா காலம் இதழில் எழுதியிருக்கிறார். அதற்கு நித்தி இட்டிருக்கும் தலைப்பு : கே.எஸ். சிவகுமாரன்: ஈழத்து இலக்கியத்தின் தனிப்பெரும் விருட்சம்.
No comments:
Post a Comment