‘றீயன்ஸ் பார்க்’கில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு துர்க்கை அம்மன்; திரு ஊஞ்சல்.

 பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்

படப்பிடிப்பு  நிரஞ்சன் நிரோஷன் 
 

                                                   காப்பு

 

திங்களொடு  நதியரவம்  அணிந்த  சிவனார்

      திருவிழியால்  உமையவளை நோக்கா நிற்கத்

துங்கமிகு  ஓங்காரம்  களிறாய்ப்  பிடியாய்த்

         தோற்றிடவே அவைகூடி உதித்த அருள்மிகு

ஐங்கரத்து  வாரணத்தை  அகத்தி  ருத்தி

         அழகுதமிழ்த்  திருவூஞ்சல்  துர்க்கை  மீது

பங்கமில்லாப்  பதிகமாய்ப்  பாடமுக்  கண்ணன்

           பாதார  விந்தங்கள்  காப்ப  தாமே.

 


                                        நூல்

 

சிற்பரநற்  சிவஞானத்  தூண்கள்  நாட்டிச்

         செம்மைமிகு  நாதவிந்து  விட்டம்  பூட்டிப்

பொற்புமிகு  ஆயகலை  வடங்கள்  கூட்டிப்

         பொருவரிய  ஆறங்கம்  பலகை  மாட்டி

அற்புதமாய்  அமைந்ததமிழ்  ஊஞ்சல்  வைகி

       அடியவர்கள்  மெய்யுருகி  வடந்தொட் டாட்டக்

கற்பகமே  றீயன்ஸ்பார்க்  பதியில்  வாழும்

         காரணியே  சிறீதுர்க்கா  ஆடீர்  ஊஞ்சல்.

 

முத்துவகை  வைரங்கள்  சுத்த  நீலம்           

      முழுப்பவள  மொடுகொம்பு  கோமே  தகஞ்சேர்

சித்திரமார்  ஆபரணம்  மின்னி  ஆட

        திருக்கையில்  செஞ்சூலப்  படையும்  ஆட

தத்துவமுத்  திரைகைக்கொள்  சத்தி  தேவீ

       தண்டமிழால்  இயற்றுமிசை  ஊஞ்சல்  வைகிப்

பத்திரையே  பதுமவல்லி  தித்தி  ஒலிக்கப்

      பார்போற்று  சிறீதுர்க்கா  ஆடீர்  ஊஞ்சல்.

 

ஐந்தொழில்  செய்புலிர்ச்  சிவகாமி  ஆனீர்

        அற்புதஞ்செய்  கடவூர்  அபிராமி  யானீர்

விந்தைமிகு  மதுரை  மீனாட்சியும்  ஆனீர்

        வெட்புமிகு  காஞ்சியிற்  காமாட்சியும்  ஆனீர்

கந்தருவ  ரோரடியர்  கால்கண்டு  வக்கக்

       கலைநிதியே  றீயன்ஸ்பார்க்  பதிய  மர்ந்தீர்

செந்திருவே  சிறீதுர்க்கா  ஆடீர்  ஊஞ்சல்

       சிம்மவாகி  னித்தாயே  ஆடீர்  ஊஞ்சல்

 

சந்தணியும்  மரகதயாழ்  வாணி  மீட்ட

       சாந்தமொடு  மணிமுழவம்  நந்தி  கூட்ட

சுந்தரஞ்சேர்  கந்தருவர்  வரிப்பண்  பாட

                                       சோபையொடு  நான்முகனார் தாளம் போட

வந்தணிசெய் அரம்பையரும் நடன மாட

       வரமருளும்  பொங்கரவன் ஆசி நீட

மந்திரவேதாகமத்தின் வடிவுடை யாளே

       மகிடாசுர மர்த்தனியே  ஆடீர் ஊஞ்சல்.

 

வானூரும் செங்கதிரோன் வட்டம் தாங்க

         மலரமரும்  செந்திருவும் கவரி வீச

தேனூறும் பூமாரி திருமால் பொழிய

        சிவகணங்கள் மறைமந்தி ரங்கள்  ஓத

மானார்செய்  வழிபாட்டை  மகிழ்ந்தே  ஏற்கும்

        மனோன்மணியே  மனோகரியே  ஆடீர்  ஊஞ்சல்

கானாறும் றீயன்ஸ்பார்க் பதியில் வாழும்

        காரணியே சிறீதுர்க்கா ஆடீர் ஊஞ்சல்.               

 

மகிடன்றலை கொய்திட்ட திறனும்..பாடி

        வழுத்திநின்றே சிவநீதி வளர்த்தல் பாடி

அகிலமுய்யக் கம்பைநதிக்  கரைய மர்ந்து

       ஆற்றிநின்ற மாதவத்தின் மகிமை பாடி

சகிப்புடனே நமனையெதிர்த் தன்று தைத்த

        சங்கரியே பாலனுயிர் காத்தல் பாடி

முகிழ்த்துவிரி பவளவிதழ் முறுவல்  புக்க

        மூவுலக  நாயகியே  ஆடீர்  ஊஞ்சல்.

 

மாதவத்துச்  சிவசத்தீ  காளி  தேவீ

          மனவசீகரி  மாதாவே  வரத  வாணீ

ஆதங்கம்  பொங்கிடவே  சும்பன்  விசும்பன்

           அவுணரைஅழித்  திட்டசிவ  சோதி  வடிவே

 மேதகைப  மின்னார்பொன்  வடந்தொட்  டாட்ட

           மீனலோசனி  சத்திதேவீ  ஆடீர்  ஊஞ்சல்

காதலொடு  றீயன்ஸ்பார்க்  பதியில்  வாழும்                                  

          காரணியே  சிறீதுர்க்கா  ஆடீர்  ஊஞ்சல்

 

கந்தகுகன் செந்தமிழ்த்தேன் கான மிசைக்க

         கரடமுகன் வரதகரம் வடந்தொட் டாட்ட

சுந்தரப்பொன் முடியாடக் குழைகள் ஆட

         சோதிமிகு நவரத்ன மாலை ஆட

சிந்தைநிறை  சிறீதுர்க்கா ஆடீர் ஊஞ்சல்

          செம்பொற்சி லம்பலம்ப ஆடீர் ஊஞ்சல்

அந்திவண்ணன் அம்பலத்தில் ஆடல் இயற்ற

         ஆதிபரா சத்திகாளீ ஆடீர் ஊஞ்சல்

 

பவம்அறுக்கும் ஆத்தாளே திரிசூலி  னியே

      பார்வதியே ஒளியருள்பரி  பூரணி  தாயே

உவந்துன்னைத்  தேனூஞ்சல்  ஏற்றக்  கண்டாய்

      ஊக்கமொடு  தைரியமும்  வீரம்  தாராய்

சிவம்பெருக்கும்  ஆத்தாளே  சிம்மவா  கினியே

      சீராரும்  றீயன்ஸ்பார்க்  பதியின்  வாழ்வே

தவம்பெருக்கத்  தளியோங்கத்  தமிழும்  வாழத்

      தண்பதிவாழ்  சிறீதுர்க்கா  ஆடீர்  ஊஞ்சல்.   

 

இறையேத்தும்  செந்தண்மை  அந்தணர்  வாழி!       

       ஏர்பிடிப்போர்  நவநிதியம்  எய்த  வாழி!              

குறைதவிரும்  அடியர்வினை  தீர்த்து  வாழி!         

       குற்றமிலாத்  தவங்கருணை  தானம்  வாழி!             

முறைமருவி  வளர்சைவ  நெறியும்  வாழி!         

       முத்தமிழோ  டெண்ணெண்க  லையும்  வாழி!

கறைதவிரும்  றீயன்ஸ்பார்க்  பதியில்  வாழும்

        காரணியே  சிறீதுர்க்கா  வாழிவாழி!.

 

                         எச்சரீக்கை

 

வருவார்வினை  நீக்குஞ்சிவ  சோதியே  எச்சரீக்கை

      வாமமேமிகு  வரங்களீந்திடு  அம்பிகா  எச்சரீக்கை

அருள்மாமணி  கன்னிநாரணி  ஆரணீ  எச்சரீக்கை

         அன்னபூரணி  தீனதயா  பரியே எச்சரீக்கை

மருவிநின்றடி  யார்களேத்திடு  மாலினீ  எச்சரீக்கை

        மகிடாசுர  மர்த்தனீசிம்ம  வாகினீ  எச்சரீக்கை

உருவார்பரி  பாலினீகா  மசுந்தரீ  எச்சரீக்கை

  ஒளியேபரம்  பொருளேவாம  பாகமே  எச்சரீக்கை.

 

 

பராக்கு

 

சீராருயர்  றீயனஸ்பார்க்  தேவீ  பராக்கு

        செஞ்சூலப்  படையாளே  திருவே  பராக்கு

திருவார்மா  முதலவனின்  செல்வீ  பராக்கு

        தீவினைதீர்த்  தருள்தாசிவ  காமீ  பராக்கு

கருதுங்கலை  தருமங்கள  காளீ  பராக்கு

       கருணைத்திரி  சூலினிகா  மாட்சீ  பராக்கு

உருவாரரு  மருந்தேகுண  நிதியே  பராக்கு

       ஒளியேஉமை  சத்தீசிறீ  துர்க்கா  பராக்கு.

 

 

                                 லாலி

 

அந்திவண்ணன்  அருட்சத்தீ  லாலி  லாலி!

       ஆதிபரா  சத்திகாளீ  லாலி  லாலி!

சிந்தைநிறை  சிவசத்தீ  லாலி  லாலி!

        திரிசூல  நாதரூபீ  லாலி  லாலி!

செந்துவர்வாய்  நிரந்தரியே  லாலி  லாலி!

       சிம்மவாகி னித்தாயே  லாலி  லாலி!

சுந்தரமாய்  றீயன்ஸ்பார்க்  பதிய  மர்ந்த

       சோதீசிறீ  துர்க்கையம்மா  லாலி  லாலி!.

 

                        மங்களம்

 

சங்குசக்கர  தாரிவெங்க  டேசருக்கு  மங்களம்

                              சரசோதி  யோடுமகா  இலக்குமிக்  குமங்களம்

                        திங்களொடு  அரவமணி  சிவனார்க்  குமங்களம்

தேவிவடிவாம்  பிகையின்திரு  வடிக்கு  மங்களம்

                       துங்கமுகச்  செஞ்சடையோன்  ஐங்கரர்க்கு  மங்களம்

                           சோதிவைவேல்  அறுமுகர்க்கும்  தோழியர்க்  குமங்களம்

                       பொங்குமெழில்  றீயன்ஸ்பார்க்  பொற்பதிக்  குமங்களம்

                                    போற்றுசிவ  சத்திதுர்க்கை  அம்மனுக்  குமங்களம்!.

 

மங்களம்செய  மங்களம்!                 

மங்களம்சுப  மங்களம்!                  

மங்களம்  மங்களம்  மங்களம்

 

அருள்மிகு  சிறீதுர்க்கா  திருவூஞ்சல்  பதிகம்  முற்றும்.

 

  -----   இயற்றியவர்

 

 பல்வைத்திய கலாநிதி  பாரதி  இளமுருகனார்    

 

 

 

No comments: