ஜனாதிபதி கோட்டாபய - பாக். பிரதமர் இம்ரான் கான் இரு தரப்பு பேச்சு
உடல் அடக்க அனுமதிக்கு இம்ரான் கான் நன்றி தெரிவிப்பு
சுகாதார சேவை நியமனங்களுக்கு எதிராக பணிப்புறக்கணிப்பு
சிறிய உலக முடிவு மலைப்பகுதியில் கூடாரங்கள் அமைத்து தங்க தடை
அரச வெசாக் விழாவை இம்முறை யாழ்ப்பாணத்தில் நடத்த தீர்மானம்
ஜனாதிபதி கோட்டாபய - பாக். பிரதமர் இம்ரான் கான் இரு தரப்பு பேச்சு
இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் மற்றும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனான இரு தரப்பு பேச்சுவார்த்தை, ஜனாதிபதி அலுவலகத்தில் தற்போது இடம்பெறுகிறது.
இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நேற்று (23) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் வைத்து சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் பிரதமரின் நிகழ்ச்சிகள்
நேற்று (23)
- பி.ப. 4.15: பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்தில் வரவேற்பு
- பி.ப. 6.00: அலரி மாளிகையில் கலந்துரையாடல்
- பி.ப. 6.30: மணிக்கு கூட்டு ஊடக வெளியீடு
இன்று (24)
- மு.ப. 10.30: ஜனாதிபதியுடன் சந்திப்பு
- மு.ப. 11.30: வர்த்தக, முதலீட்டு மாநாடு - ஷங்ரி லா
- பி.ப. 12.30: சபாநாயகர், விளையாட்டு அமைச்சர் பகல் போசணம்
- பி.ப. 12.30: நாவல கிரிமண்டல வீதியில் உயர்தர விளையாட்டு நிலையம் நிர்மாணம் தொடர்பில் பேச்சுவார்த்தை - ஷங்ரி லா
- பி.ப. 3.00: விமான நிலையத்தில் விடைபெறுவார்
நன்றி தினகரன்
உடல் அடக்க அனுமதிக்கு இம்ரான் கான் நன்றி தெரிவிப்பு
கொவிட்-19 தொற்று காரணமான மரணங்களை அடக்கம் செய்வது தொடர்பில் வழங்கப்பட்ட அனுமதிக்கு நன்றி தெரிவிப்பதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
தனது ட்விற்றர் கணக்கில் இது தொடர்பில் பதிவிட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,
கொவிட்-19 காரணமாக மரணிப்போரின் உடல்களை அடக்கம் செய்வதை அனுமதிக்கும் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டமை தொடர்பில் வரவேற்பதோடு, இலங்கையின் தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்
இதுவரை கொவிட்-19 காரணமாக மரணித்தவர்களின் உடல்கள் தகனம் செய்ய மாத்திரம் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், நேற்றையதினம் (25) உடல்களை நல்லடக்கம் செய்வதற்கான அனுமதியை வழங்கும் உத்தியோகபூர்வ, அதி விசேட வர்த்தமானியை, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி தினகரன்
சுகாதார சேவை நியமனங்களுக்கு எதிராக பணிப்புறக்கணிப்பு
ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் தெரிவு செய்யப்பட்டவர்களை சுகாதார சேவைக்குள் நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா வைத்தியசாலையின் சுகாதாரப்பணி உதவியாளர்கள் நேற்று பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்ததுடன் வவுனியா பொது வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றிலும் ஈடுபட்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்,
முறையற்ற வகையிலேயே குறித்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. இவர்களை விட அனுபவமான பலர், பலவருடங்களாக வைத்தியசாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
இதேவேளை சுகாதாரபணி உதவியாளர்களாக பணிபுரிந்த பலருக்கு நிரந்தர நியமனங்கள் கூட இன்னும் கிடைக்கவில்லை.
தற்போது நியமிக்கப்படவுள்ளவர்களிற்கு அடிப்படை சம்பளம் எங்களை விட அதிகமாக உள்ளது. எனவே இது ஆட்சேர்ப்பு விதிமுறைகளிற்கு எதிரான ஒரு செயற்பாடகவே நாம் பார்க்கின்றோம். எனவே ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் உள்ளீர்க்கப்படும் ஊழியர்கள் சுகாதார துறைக்கு தேவையில்லை. அல்லது அதனை நீதியான முறையில் முன்னெடுக்கவேண்டும் என்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுகாதார ஊழியர்களை புறக்கணிக்காதே, எமது உரிமையை எமக்குவழங்கு, முறையற்ற நியமனம் வேண்டாம், மனஅமைதியுடன் பணிசெய்யவிடு, கடமை ஒழுங்கை சீர்குலைக்காதே போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
இவர்களது பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக வைத்தியசாலையின் நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.
இவர்களது பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக வைத்தியசாலையில் நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.
வவுனியா விசேட, ஓமந்தை விஷேட நிருபர்கள்
நன்றி தினகரன்
சிறிய உலக முடிவு மலைப்பகுதியில் கூடாரங்கள் அமைத்து தங்க தடை
உல்லாச பயணிகளால் வனப்பகுதிக்கு சேதம்
மடுல்சீமைப்பகுதியின் சிறிய உலக முடிவு மலைப்பகுதியிலும், பதுளை – நாராங்கலை மலை உச்சிப் பகுதிகளிலும் உல்லாசப் பயணிகள் செல்வதற்கும், கூடாரங்கள் அமைத்து தங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழுவின் கூட்டம், பதுளை அரச செயலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற போதே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக, இணைப்புக் குழுத் தலைவரும், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுதர்சன தெனிபிட்டிய தெரிவித்தார்.
இணைப்புக் குழுத் தலைவர் சுதர்சன தெனிபிட்டிய ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 'கடந்த 6ஆம் திகதி தினுர விஜயசுதந்தர என்ற ஊடகவியலாளர், சிறிய உலக முடிவைப் பார்க்கச் சென்று, 1200 அடி பள்ளத்தில் விழுந்து பலியானார். இவர் தனது நண்பர்கள் 12 பேருடன் மலை உச்சிக்கு சென்று கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர். கடுங்குளிரான காலநிலையினால், அவர்களுக்கு மலை உச்சியில் இருக்க முடியாமல் கீழிறங்கினர். அவ் வேளையில் 1200 அடி பள்ளத்தாக்கில் தினுர விஜயசுந்தர விழுந்து உயிரிழந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, எடுக்கப்பட்ட முடிவிற்கமைய உல்லாசப் பயணிகள் எவரும், சிறிய உலக முடிவு மலைப்பகுதியில் கூடாரங்கள் அமைத்து தங்கியிருப்பதற்கு பூரண தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இத்தகைய கூடாரங்கள் அமைத்து உல்லாசப் பயணிகள் தங்குவதால், அப்பகுதியெங்கும் சூழலும் மாசடைகின்றன.
அத்துடன், பதுளை – நாராங்கலை மலைப்பகுதிக்கு உல்லாசப் பயணிகள் செல்வதற்கும், கூடாரங்கள் அமைத்து தங்குவதற்கும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. நாராங்கலை மலைப்பகுதியில் 64 வகையிலான மரங்கள், 24 வகையிலான செடி, கொடிகள், 22ற்கு மேற்பட்ட மூலிகை வகைகள் நிறைந்து காணப்படுகின்றன.
இந்நிலையில், உல்லாசப் பயணிகளாக, மலையுச்சிக்கு செல்வோர், வனப் பகுதிக்கு சேதம் விளைவிப்பதுடன், அங்குள்ள அமைதியான சூழலையும் மாசடைய செய்கின்றனர். வரலாற்றுப் பெருமை கொண்ட மலைப்பகுதிகளை பாதுகாக்க வேண்டிய பாரிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது.
அத்துடன், நாராங்கலை மலை உச்சியிலிருந்து 142 நீர் ஊற்றுக்கள் காணப்படுகின்றன.
இந் நீரூற்றுக்களிலிருந்து வெளியேறும் நீர், மொரகொல்ல ஓயா, அம்பகா ஓயா, பதுளை ஓயா, உமா ஓயா ஆகிய ஆறுகளுடன் சங்கமமாகின்றன.
பல்கலைக்கழகப் பேராசிரியர் குழுவினர், சூழலியலாளர்கள் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்து மேற்கண்ட விடயங்கள் தெரிய வந்துள்ளன.
ஊவா மாகாண சுற்றுலா துறை அமைச்சு, உல்லாசப் பயணிகள் சபை ஆகியவற்றின் அனுசரணைகளுடன், இரு மலைப்பகுதிகளையும் பராமரிக்கவும், பாதுகாப்பு அரண்கள் அமைக்கவும், உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், பதுளை மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழுத் தலைவர் சுதர்சன தெனிபிட்டிய தெரிவித்தார்.
பதுளை தினகரன் விசேட நிருபர்
நன்றி தினகரன்
அரச வெசாக் விழாவை இம்முறை யாழ்ப்பாணத்தில் நடத்த தீர்மானம்
யாழ். நாகதீப ரஜ மஹா விகாரையில் நடத்துவதற்கு பிரதமர் அறிவுறுத்தல்
இம்முறை அரச வெசாக் விழாவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு யாழ். நாகதீப ரஜ மஹா விகாரையை மையமாகக் கொண்டு நடத்துவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (25) அலரி மாளிகையில் வைத்து அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதற்கமைய வடக்கு, கிழக்கு மாகாணங்களின் 65 விகாரைகள் மற்றும் 35 அறநெறி பாடசாலைகளை ஒன்றிணைத்து இம்முறை அரச வெசாக் விழாவை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தனவுக்கு அறிவித்துள்ளார்.
பாரம்பரிய வெசாக் விழாவிலிருந்து மாறுபட்டதாக, பிற மதங்களுடன் இணைந்து அரச வெசாக் விழாவை ஏற்பாடு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை இம்முறை அரச வெசாக் விழாவின் விசேட அம்சமாகும். அச்செயற்பாட்டை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழுள்ள இந்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் விவகார திணைக்களங்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும். நன்றி தினகரன்
No comments:
Post a Comment