அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 51 – திருவாரூர் பாரி நாதசுரம் – சரவண பிரபு ராமமூர்த்திதிருவாரூர் தியாகராசரை முசுகுந்த சக்கரவர்த்தி இந்திரனிடமிருந்து பூலோகம் கொண்டு வந்தார் என்பது சைவர்களின் நம்பிக்கை. அவ்வேளையில் தேவலோகத்திலிருந்து பூலோகம் வந்த தியாகராசரின் பத்து அங்கங்களில் ரத்தின சிம்மாசனம், மாயா விதாணம், பொற்கவரி முதலானவற்றில் ஒன்று தான் இந்த பாரி நாதஸ்வரம் என்கிறார் திருவாரூர் கோவிலின் பரம்பரை பாரி நாதசுர இசைக்கலைஞர் திரு பழனியப்பன் அவர்கள். தியாகராசரை கொண்டு வந்து திருவாரூர் கோவிலில் வைத்து வழிபாடுகள் நிகழ்த்திய முசுகுந்த மன்னன் அவருக்கு 18 இசைக்கருவிகள் முழங்க பூசைகள் செய்ய ஏற்பாடு செய்தார். 18 இசைக்கருவிகளில் தலையாயது இந்த பாரி நாதசுரம். இந்த நாதசுரம் தான் எல்லா நாதசுரத்திற்கும் மூலம் என்கிறார்கள் இசை வல்லுனர்கள். திருவாரூர் பாரியில் இருந்து திமிரி தோன்றியது. இது கும்பகோனம் திமிரி என்றும் வழங்கும்.

 

”திருவாரூர் பாரி” தியாகராசருக்கு மட்டுமே இசைக்கப்பட்டது. மற்ற இடங்களில் திமிரி தான் பரவலாக புழங்கி வந்த நாதசுரம். இந்த திமிரியின் அளவை அதிகரித்து அதிகரித்து உருவாக்கப்பட்டதுதான் தற்காலத்தில்


அனைவரும் பயன்படுத்தும் பாரி நாதசுரம். திரு டி.என். ராஜரத்தினம் பிள்ளையும் திரு ரெங்கநாதன் ஆசாரி என்பவரும் சேர்ந்து தயாரித்தது பிற்கால பாரி நாதசுரம். இது ஒரு மத்திம சுருதி நாயனம் ஆகும். இந்த நாதஸ்வரம் புழக்கத்திற்கு வந்து சுமார் 100 வருடங்கள் ஆகிவிட்டன. தற்காலத்தில் உலகெங்கும் பயன்படும் பாரி நாதசுவரம் திருவாரூர் கோவிலுக்குரிய ”பாரி” நாதசுரத்தில் இருந்து முற்றாக வேறுபட்டது. திருவாரூர் பாரி திமிரியை விட சற்று பெரியது.  தற்கால பாரியை விட பாதியளவு உள்ளது. இது ஒண்ணரை சுதி உள்ளது. திருவாரூர் பாரியை இசைப்பது மிகவும் சிரமம். மற்ற நாதசுரத்தை விட நான்கு மடங்கு தம் பிடித்து மூச்சை செலுத்தினால் தான் இதிலிருந்து இசை வெளிவரும்.

 

பாரி நாதசுரத்திற்கு வெண்கல மேல் சு மற்றும் கீழ் அனசு பொருத்தப்பட்டிருக்கும். நடுப்பகுதி ஆச்சா மரத்தில் செய்யப்படும். மேல் அனசும் உலோகத்தால் செய்யப்பட்டு நீண்டு இருப்பது இதன் தனித்துவம். இந்த மாதிரி நாதசுரம் வேறு எங்கும் இல்லை. இதை பிரதி எடுக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியையே தழுவியுள்ளன. இதன் செய்முறை திருவாரூர் தியாகராசரின் திருமேனி எப்படி ரகசியமாக மூடிவைக்கப்பட்டுள்ளதோ அதே போல் இதுவும் ரகசியம் என்கிறார் திரு பழனியப்பன் அவர்கள்.

 

 

 திரு பழனியப்பன் அவர்களின் பாரி நாதசுர பாரம்பரியம் சுமார் 900 வருட பாரம்பரியத்தை உடையது. எழுத்துப்பூர்வ ஆவணங்களில் இருந்து இந்த கோயிலுடன் தொடர்பு கொண்டுள்ளர் இவரின் 22 தலைமுறை முன்னோர்கள். அரிய இந்த பாரி நாதசுரம் திருவாரூர் தியாகராசர் மற்றும் கமலாம்பிகைக்கு மட்டுமே இசைக்கப்படுவது. இவ்விசைக்கருவியை வேறு எங்கும் இசைப்பதில்லை என்று பதவி ஏற்கும் போது கோவிலுக்குள் சத்தியபிரமாணம் செய்து கொள்கிறார்கள். சரபோஜி மன்னர் காலத்தில் இரண்டு தந்த பாரி நாதசுரங்களை இக்கோவில் கலைஞர்களுக்கு அவர் செய்து கொடுத்துள்ளாராம். ஒன்று லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளது.

 

திருவாரூர் கோயிலில் நாதசுர இசைத் தொண்டு செய்பவர்களுக்கு நயினார் அடியார் என்கிமுன்னொட்டு பல வருடங்களாக இக்கோயில் ஆவணங்களிலும், தற்காலத்திலும் புழக்கத்தில் உள்ளது. திருவாரூரின் இந்த பாரி நாதஸ்வர இசை மரபை வைத்து இரண்டு முனைவர் பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அமெரிக்காவை சேர்ந்த ஒருவரும் டென்மார்க்கை சேர்ந்த ஒருவரும் இந்த முனைவர் பட்ட ஆய்வுகளை நிகழ்த்தி உள்ளனர். திருவாரூரில் மட்டுமே நாள்தோறும் இரண்டு நாதசுரங்கள் மற்றும் விழா நாட்களில் நான்கு நாதசுரங்கள் இசைக்கும் வழக்கம் முற்காலத்தில் இருந்தது. இந்த மரபை அடியொற்றி தான் திருப்பாம்புரம் சகோதரர்கள் இருவராக இசைக்கத் துவங்கி பிறகு அம்மரபு  உலகெங்கும் பரவலாகியது.

 

திருவாரூர் கோவிலில் தினப்படி இக்கருவி இசைக்கப்படுகிறது. முத்துசாமி தீட்சிதரின் தந்தை ராமசாமி தீட்சிதர் தான் இக்கோவிலுக்குரிய நாதசுர இசை மரபை வகுத்துள்ளார். அதன்படியே இன்றும் தொடர்கிறது. மாலை பூசையில் மடப்பள்ளியில் இருந்து இறைவனுக்குப் படைக்கும் உணவு வெளிவரும் நேரத்தில் மல்லாரியுடன் துவங்கும் பாரி நாதசுரம், உணவு உள்ளே சென்றவுடன் இரண்டாம் பிராகரத்தில் உள்ள நீலோத்பவாம்பாள் சன்னிதி மண்டபத்தில் தொடரும். பூசை முடியும் வரை பல்வேறு ராகங்களில் கீர்த்தனைகள், பதங்கள், தேவாரம் ஆகியவை இசைத்து நிறுத்தப்படும். இது மட்டுமல்லாமல் பங்குனி பெருவிழாவில் 23 நாட்கள் மல்லாரி, உள்வீதி, வெளிவீதி, 8 கோடிகள் ஆகிய இடங்களில் பல ராகங்களில் பதங்கள், கீர்த்தனைகள், சர்வலகு, வர்ணம், தேவாரம், அம்மன் கீர்த்தனைகள், குறவஞ்சி பாடல்கள் ஆகியவை இசைக்கப்படும். மற்ற இடங்களை போல் சினிமா பாடல்களுக்கு எல்லாம் இங்கே வேலை இல்லை. திருவாரூரின் நெடிய தேர் வீதிகளில் இசைப்பது அத்தனை சுலபம் இல்லை. அதுவும் தவில்காரர்களுக்கு மிகவும் சிரமம். பாரி நாதசுரம் தவில் மற்றும் சுருதி, தாளம் ஆகியவற்றுடன் இசைக்கப்படும். முன்பு விழா நாட்களில் கொடுகொட்டி, தவளசங்கு ஆகியவற்றுடனும் சேர்த்து இசைக்கப்பட்ட்து.  தற்பொழுது இவ்வழக்கம் இல்லை. திருவாரூர் தியாகராசரின் தேர் திருவிழாவில் மட்டுமே கொடுகொட்டியும், பாரி நாதசுரமும் இன்றும் ஒலிக்கின்றன.

 

இவ்வளவு தொன்மையான மரபின் தொடர்ச்சியாக திகழ்கிறார் திரு பழனி அவர்கள். இவருக்கு மூன்று பெண் பிள்ளைகள். பள்ளிக் கல்வியை துவங்க இருக்கும் இவரின் இளைய மகள் ஆதிராஜபிரியாவுக்கு தான் இக்கருவியை இசைக்க கற்பதற்கான அம்சங்கள் இருப்பதாக கூறுகிறார் இவர். விரைவில் திருவாரூர் கோவிலில் பல வருடங்களுக்கு பிறகு இரட்டை பாரி நாதசுரங்கள் முழங்க எமது வாழ்த்துகள்.

 

காணொளி:

https://www.youtube.com/watch?v=wHMlyZrpX-s

 

 

தமிழர்களின் இசைமரபு முன்பு எப்பொழுதும் இல்லாத அளவுக்கு தற்பொழுது இறங்கு முகத்தில் உள்ளது. தமிழர் இசைக்கருவிகளின் பெருமை, தொன்மை ஆகியவற்றை உணர்ந்து அழிவின் விளிம்பில் இருக்கும் இசைக்கருவிகளை மீட்க தமிழர்கள் முயல வேண்டும். சிலர் மீட்டுருவாக்கம் செய்கிறோம் என்று எதையோ செய்து விடுகிறார்கள் ஆனால் இசைக்கத் தெரிவதில்லை. அன்மையில் தொன்மையான குடமுழா இசைக்கருவியை ஒரு அமைப்பு செய்தது. ஆனால் அவர்களுக்கு அதை இசைக்கத் தெரியவில்லை. திருவாரூரில் ஒலித்த குடமுழா இசை கையிலையில் இருப்பது போன்ற ஒரு உணர்வை தரும். ஆனால் மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட குடமுழாவில் சத்தம் மட்டுமே வந்தது, இசை வரவில்லை. ஆக முறையான பயிற்சியும் ஆவணப்படுத்துதலும் அவசியமாகிறது. அங்கும் இங்குமாக இசை ஆர்வலர்களும் பழமை விரும்பிகளும் முயற்சி செய்கிறார்கள். ஆனால் அவர்களின் பொருளாதார சூழல் அதற்கு துணை செய்வதில்லை. ஆகையால் ஆதினங்கள், அரசு , தமிழ் அமைப்புகள், வரலாற்று அமைப்புகள் ஆகியவை இந்தப் பணியை செய்ய வேண்டும். முக்கியமாக தமிழர் இசைப் பள்ளிகளில் ஒரு விருப்பப் பாடமாக வேண்டும். இவையெல்லாம் நடந்தால் தமிழர் இசைக்கருவிகள் எஞ்சும்.

 

கடந்த 51 வாரங்களாக தங்களுடன் தமிழர்களின் பல்வேறு இசைக்கருவி பற்றி பகிர்ந்து கொண்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. எனக்கு இந்த வாய்ப்பை தந்த தமிழ்முரசு ஆஸ்திரேலியா மற்றும் பரிந்துரை செய்த அன்பருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். தேவையான தகவல்கள், புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் ஆகியவற்றை மனமுவந்து அளித்த இசைக்கலைஞர்கள், இசை ஆர்வலர்கள், இசைக்கருவி தயாரிப்பாளர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது நன்றிகள். இத்தொடருக்கு பெரும்பகுதியான தகல்வகள் தந்து உதவிய வரலாற்று ஆய்வாளர் பல்லடம் திரு க பொன்னுசாமி அவர்களுக்கு எனது அன்புகலந்த நன்றிகள். அடுத்து ஒரு புதிய இசைக்கருவி பற்றி தகவல்கள் கிடைத்தால் உங்களுடன் பகிர்கின்றேன். தங்களுடைய கருத்துகள்,குறைகள் ஆகியவற்றை என்னுடன் பகிர “Saravana.ramd at gmail.com” என்கிற மின்னஞ்சலில் என்னைத் தொடர்புகொள்ளலாம். மேலும் இந்த யுடுப் சேனலில் பல தொல் தமிழர் இசைக்கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சப்ஸ்க்ரைப் செய்து கண்டு களியுங்கள். மீண்டும் சந்திப்போம்.

 

https://www.youtube.com/channel/UCT3aAk-evmn_fC7O15XtHew

 

 

-சரவண பிரபு ராமமூர்த்தி

 நன்றி:

1.     நயினார் அடியார் திரு பழனியப்பன் அவர்கள், பரம்பரை பாரி நாதசுர இசைக்கலைஞர், அ/மி தியாகராசர் கோவில், திருவாரூர் 

No comments: