மல்லிகை ஜீவாவின் ( 1927 – 2021 ) வாழ்வில் சுவாரசியமான பக்கங்கள் - அங்கம் - 05 அமைதிப்படை ( ? ) காலத்தில் அகதிக்கோலத்தில் ஜீவா ! கண்ணதாசன் வீட்டில் நிழலும் நிஜமும் ! ! முருகபூபதி



மல்லிகை ஜீவாவின் 60 வயது மணிவிழா 1987 ஆம் ஆண்டு வந்தது.  அக்காலப்பகுதியில் அவரது அந்த பிறந்த தினக்கொண்டாட்டம் யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல சோவியத்தின் தலைநகரம் மாஸ்கோவிலும் நடந்தது.

ஜீவா அங்கே சென்றபோது லுமும்பா பல்கலைக்கழக மாணவர்கள் அவரை அழைத்து கேக்வெட்டி அவரது பிறந்ததினத்தை கொண்டாடினார்கள்.

               அவர் தாயகம் திரும்பியவேளையில்  இலங்கையில் அமைதி ( ? ) காக்க வந்த இந்தியப்படைகள் நிலைகொண்டிருந்தன.  அக்காலப்பகுதியில் நான் அவுஸ்திரேலியாவிலிருந்து செய்திகளை அவதானித்துக்கொண்டிருந்தேன். யாழ்ப்பாணத்தில் புலிகளும் இந்தியப்படைகளும் மோதத்தொடங்கியதால் மக்கள் வீடு வாசல்களை விட்டு அகதிகளாக வெளியேறி நல்லூர் கந்தசாமி கோயிலைச்சுற்றி கிடைத்த இடங்களில் தஞ்சமடைந்தார்கள்.

ஜீவாவும் தனது குடும்பத்தினருடன் நல்லூரில்


அகதிக்கோலத்தில் இருந்தார்.

அவருடைய  நண்பரும் மல்லிகையின்  முகப்பு அட்டையில்  இடம்பெற்ற பல புகைப்படங்களை எடுத்தவரும் யாழ். பேபி போட்டோ என்ற ஸ்ரூடியோவை எளிமையாக நடத்திக்கொண்டிருந்தவருமான இராசரட்ணமும் அந்தப்பக்கமாக வந்துள்ளார்.

தோளில் ஒரு துண்டுசகிதம் எதிர்ப்பட்ட ஜீவாவைக்கண்டதும், இராசரட்ணம் திகைத்தார்.  தான் தஞ்சமடைந்திருந்த ஒரு வீட்டின் விறாந்தாவுக்கு ஜீவாவை அழைத்துச்சென்றார்.

 “ எமது அகதிவாழ்வை நினைவுபடுத்துவதற்கு ஒரு படம் எடுப்போம்   “ என்று ஜீவாவை நிற்கச்சொல்லிவிட்டு, கெமராவை சரிசெய்தார்.

அப்பொழுது அவரது ஆறுவயது பாலகி மோகனா,  “நானும் நானும்  “ என்று துள்ளிக்குதித்தாள். அவள் ஜீவாவுக்கு மிகவும் பிரியமான செல்லக்குழந்தை.

 “ வாம்மா… வா..  “ எனக்கொஞ்சியவாறு  அவளை ஜீவா தூக்கிக்கொண்டார்.

ஒளிப்படக்கலைஞர் இராசரட்ணம் தனது கெமராவை இயக்கினார்.

அந்தக்காட்சியை அருகிலிருந்து பார்த்த ஜீவாவின் மகன் திலீபன் உடனே  “ ஆறும் அறுபதும்  “ என்றான்.

அந்தப்படம்தான், மல்லிகை ஜீவா மணிவிழாக்குழுவினரால் 1988 ஜூன் மாதம் வெளியிடப்பட்ட  மல்லிகை ஜீவா தொகுப்பு நூலின் முப்பில் இடம்பெற்றது.

இந்த நூலை எமது மூத்த எழுத்தாளர்கள் தெணியானும் – டாக்டர் நந்தி சிவஞானசுந்தரமும் தொகுத்திருந்தனர்.

 

நிழலும் நிஜமும்

 


தமிழ்நாட்டில் தி. நகரில் அந்த பிரபலமான இல்லம் சோபையிழந்திருந்தது.  ஒரு காலத்தில் காலைவேளையில் அந்த இல்லத்தின் முன்பாக அடுத்தடுத்து பல கார்கள் வரிசையாக தரித்து நிற்கும்.

அதில் வந்திருப்பவர்கள், திரைப்பட இயக்குநராக – தயாரிப்பாளராக – இசையமைப்பாளராக -  அல்லது இவர்களின் உதவியாளராக யாராவது காத்திருப்பார்கள்.

நானும் மல்லிகைஜீவாவும் அந்த இல்லத்திற்கு சென்றிருந்தவேளையில் அவ்வீட்டின் இல்லத்தரசி மறைந்து அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது.

அந்த ஆண்டு 1990 – மாதம் ஏப்ரில்.

நான் இரண்டு நாட்களுக்கு முன்பே சென்னை சென்றுவிட்டேன்.  ஜீவா இலங்கையிலிருந்து இரண்டு நாட்களில் எனது குடும்பத்தினருடன் சென்னை வந்து சேர்ந்தார்.

விமானநிலையத்தில் அனைவரையும் வரவேற்கச் செல்லுமுன்னர் அந்த பிரபல்யமான இல்லத்தில்தான், பல திரையுலகப்பிரமுகர்களை சந்தித்தேன். அவர்களுக்குள் அரசியல் பிரமுகர்களும் காணப்பட்டனர்.

 “காலங்களில் அவள் வசந்தம்…. “  என்ற பாடலை அந்த வீட்டின் சொந்தக்காரர்  யாரை மனதிலிருத்தி பாடியிருந்தாரோ, அந்த அம்மணி, அவரிடமே சென்றுவிட்டிருந்தார்.

நாம் பார்த்துக்கொண்டிருந்தது அம்மணியின் உயிரற்ற


உடலைத்தான்.

யார் அவர்…? யார் அந்த அம்மணி என்பது இப்போது வாசகர்களுக்கு புரியும் !

தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம், சோகத்துடன் தலையை தொங்கப்போட்டுக்கொண்டு சிகரட்டை ஊதிக்கொண்டிருந்தார்.  கவியரசரின் தம்பியும் உதவியாளருமான கண்மணி சுப்பு பலருக்கும் தகவல் சொல்லிக்கொண்டிருந்தார்.  இயக்குநர் சந்தான பாரதி,  வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.  இயக்குநர் கலைவாணன் கண்ணதாசனும் கவிஞர் முத்துதாசனும் நானும்  ஏற்கனவே அங்கு வந்துவிட்டிருந்தோம்.  விமானநிலையத்திற்கு செல்லவேண்டிய அவசரத்தில் நான் இருந்தேன்.

 “ நீண்ட இடைவெளிக்குப்பின்னர் பிள்ளைகளை பார்க்கப்போகிறீர்கள்,  புறப்படுங்கள்  “ என்று என்னை வழியனுப்பிவைத்தார் காந்தி கண்ணதாசன்.

விமான நிலையத்தில்  கொழும்பிலிருந்து வரும் ஏயார் லங்கா விமானம் சற்று தாமதமாக வந்துசேர்வதற்கு இரவு ஒன்பதுமணியாகிவிட்டது.

 எனது குடும்பத்துடன் ( அம்மா – மனைவி – பிள்ளைகளுடன் ) ஜீவாவும் வந்துசேர்ந்தார்.

சுமார் மூன்றரை வருடங்களின் பின்னர் அனைவரையும் பார்க்கின்றேன்.  வாகனத்தில் தங்கும் விடுதிக்குத் திரும்பும்போது ஜீவாவின் காதில் மெதுவாக,  “ கண்ணதாசன் மனைவி பார்வதி அம்மா இறந்துவிட்டார்கள்  “ எனச்சொல்கிறேன்.

“  இரவாகிவிட்டது.  நீண்ட இடைவெளிக்குப்பின்னர், இப்போதுதான் குடும்பத்தை பார்க்கிறீர்.  இப்போது செல்லவேண்டா


ம். நாளை காலையிலேயே சென்று அஞ்சலி செலுத்துவோம் “  என்றார் ஜீவா.

கண்ணதாசன் மீது ஜீவா மிகுந்த நேசமும் மரியாதையும் வைத்திருந்தவர். கண்ணதாசனுக்கு 1977 ஆம் ஆண்டு ஐம்பது வயது பிறந்த தினம் வந்தபோது ஜனசக்தியில் அறந்தை நாராயணன், கண்ணதாசன் பற்றி எழுதியிருந்த கட்டுரையை மல்லிகையில் மறுபிரசுரம் செய்திருந்தார்.

இலங்கைக்கு கண்ணதான் வருகை தந்த காலத்திலும் சந்தித்தார். தமிழகம் செல்லும் சந்தர்ப்பங்களிலும் சந்தித்தார்.  “ கண்ணதாசன் பழகுவதற்கு எளிமையானவர். அவரிடம் பந்தாக்கள் இல்லை  “  என்றெல்லாம் ஜீவா சொல்லிக்கேட்டிருக்கின்றேன். 

அத்துடன் கண்ணதாசன் பதிப்பகத்தை நடத்திவரும் காந்திகண்ணதாசனையும்  ஜீவா நன்கறிந்தவர்.  அதனால், திருமதி பார்வதி அம்மா கண்ணதாசன் மறைவு பற்றி அவரிடம் சொன்னேன்.

மறுநாள் காலை ஏழுமணிக்கே நானும் ஜீவாவும், கோடம்பாக்கத்தில் அந்த விடுதியில் குடும்பத்தினரை விட்டுவிட்டு, சென்றோம்.

 பார்வதி அம்மாவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு,  காந்தியிடத்திலும் அவரது குடும்பத்தினரிடத்திலும் அனுதாபம் சொல்லிவிட்டு முற்றத்தில் வந்து ஆசனங்களில் அமர்ந்து பத்திரிகைகளை படித்துக்கொண்டிருந்தோம்.

அக்காலை வேளையில் அங்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு.

அப்போது ஒருபெரியவர்  வெள்ளை வேட்டி அரைக்கை சேர்ட் அணிந்து தனது பருத்த சரீரத்தை அசைத்தவாறு வந்துகொண்டிருந்தார்.   யாரோ வர்த்தக பெரும்புள்ளி என


நினைத்துக்கொண்டு நானும் ஜீவாவும் பத்திரிகைகளில் மூழ்கியிருந்தோம்.

 வந்தவர்  தனது மனைவியுடன்  இல்லத்துக்குள் சென்றுவிட்டு சொற்பவேளையில் அவர் மாத்திரம் வெளியே வந்தார்.  காந்திகண்ணதாசன் அவருக்கு அருகில் பேசிக்கொண்டுவந்து அவரை ஆசனத்தில் அமரவைத்தார். அந்த ஆசனத்திற்கு அருகில்தான் நானும் ஜீவாவும் மற்றும் இரண்டு ஆசனங்களில் அமர்ந்திருந்தோம்.

அந்தப்பெரியவரின் கண்கள் சிவந்திருந்தன.  அப்படி சிவந்த கண்களை எங்கோ பார்த்ததுபோன்று ஒரு நினைவு மின்னலாக வந்தது. சிலர் அவருக்கு முன்னால் வந்து வணங்கினார்கள்.

சிலர் எழுந்து நின்றார்கள்.  நான் கூர்ந்து பார்த்தேன்.  அருகில் அமர்ந்திருந்தவர் நடிகர்திலகம் சிவாஜிகணேசன். ஜீவாவுடன் கண்களால் பேசி, சிறிய உதட்டசைவோடு  சொன்னேன்.

அதன்பிறகுதான் நாமிருவரும் அவரைப்பார்த்து புன்னகைத்தோம். பதிலுக்கு அவரிடமிருந்து இறுக்கமான புன்னகைதான் வந்தது.

நாம் முதலிலேயே எழுந்து நின்று மரியாதை செலுத்தியிருக்கவேண்டும் என்று அவர் நினைத்தாரோ தெரியவில்லை. 

பூதவுடலுக்குத்தானே நாம் எழுந்து நின்று மரியாதை செலுத்தவேண்டும் !

அவரது சாரதி அவருக்கு அருகில் தொடர்ந்தும் கால்கடுக்க நின்றுகொண்டிருந்தார்.

அவர் கண்களாலே சாரதிக்கு  சைகை காட்டினார்.  அவரது கண்கள் ஆயிரம் அர்த்தங்களுடன் திரைகளிலும் பேசும்.  அவர் நவரசத்திலகமல்லவா..?

அவரது  சாரதி சென்று இல்லத்தினுள்ளே பெண்களுடன் இருந்த  அவரது மனைவி கமலாவை அழைத்துக்கொண்டு வாசலுக்கு வந்தார். அவர் தனது சரீரத்தை அசைத்தவாறு எழுந்து சென்றார்.

 ஜீவாவும் நானும் பரஸ்பரம் புன்னகைத்துவிட்டு காந்தி கண்ணதாசனிடம் சொல்லிவிட்டு விடைபெற்றோம்.

 “ ஐஸே… யார் வந்தது என்று உமக்கும் தெரியவில்லை, எனக்கும் தெரியவில்லை.  “

 “ அவரை மேக்கப்பில் திரையில்தானே பார்த்திருக்கிறோம். நேரில் எங்கே பார்த்தோம்.  “ என்றேன்.

 “ அவர் தினகரன் விழாவுக்கு வந்தார். தெரியும்.  எங்கட கைலாசபதி தினகரனில் இருந்த காலத்தில் வந்தார். தினகரன் அவருக்கு ஏதோ பட்டமும் கொடுத்தது… அது….. “

“ கலைக்குரிசில். பிறகு பைலட் பிரேம்நாத், மோகனப்புன்னகை படப்பிடிப்புக்கெல்லாம் வந்தார்.  வீரகேசரியில் செய்திகள் படங்கள் வெளியிட்டோம்.  நடிகர்களை சென்று பார்க்கும் ஆர்வம் எனக்கு என்றைக்கும் இல்லை ஜீவா. அதுதான் அவரை நிஜவுருவத்தில் பார்த்தபோது அடையாளம் தெரியவில்லை  “ என்றேன்.

 “ அதுதான் ஐஸே… நிழலும் நிஜமும்  “ என்றார் ஜீவா !.

ஆறும் அறுபதும்

மல்லிகை ஜீவாவின் 60 வயது மணிவிழா 1987 ஆம் ஆண்டு வந்தது.  அக்காலப்பகுதியில் அவரது அந்த பிறந்த தினக்கொண்டாட்டம் யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல சோவியத்தின் தலைநகரம் மாஸ்கோவிலும் நடந்தது.

ஜீவா அங்கே சென்றபோது லுமும்பா பல்கலைக்கழக மாணவர்கள் அவரை அழைத்து கேக்வெட்டி அவரது பிறந்ததினத்தை கொண்டாடினார்கள்.

 தாயகம் திரும்பியவேளையில்  இலங்கையில் அமைதி ( ? ) காக்க வந்த இந்தியப்படைகள் நிலைகொண்டிருந்தன.  அக்காலப்பகுதியில் நான் அவுஸ்திரேலியாவிலிருந்து செய்திகளை அவதானித்துக்கொண்டிருந்தேன். யாழ்ப்பாணத்தில் புலிகளும் இந்தியப்படைகளும் மோதத்தொடங்கியதால் மக்கள் வீடு வாசல்களை விட்டு அகதிகளாக வெளியேறி நல்லூர் கந்தசாமி கோயிலைச்சுற்றி கிடைத்த இடங்களில் தஞ்சமடைந்தார்கள்.

ஜீவாவும் தனது குடும்பத்தினருடன் நல்லூரில் அகதிக்கோலத்தில் இருந்தார்.

அவருடை நண்பரும் மல்லிகையின்  முகப்பு அட்டையில்  இடம்பெற்ற பல புகைப்படங்களை எடுத்தவரும் யாழ். பேபி போட்டோ என்ற ஸ்ரூடியோவை எளிமையாக நடத்திக்கொண்டிருந்தவருமான இராசரட்ணமும் அந்தப்பக்கமாக வந்துள்ளார்.

தோளில் ஒரு துண்டுசகிதம் எதிர்ப்பட்ட ஜீவாவைக்கண்டதும், இராசரட்ணம் திகைத்தார்.  தான் தஞ்சமடைந்திருந்த ஒரு வீட்டின் விறாந்தாவுக்கு ஜீவாவை அழைத்துச்சென்றார்.

எமது அகதிவாழ்வை நினைவுபடுத்துவதற்கு ஒரு படம் எடுப்போம் என்று ஜீவாவை நிற்கச்சொல்லிவிட்டு, கெமராவை சரிசெய்தார்.

அப்பொது அவரது ஆறுவயது பாலகி மோகனா,  “நானும் நானும்  “ என்று துள்ளிக்குதித்தாள். அவள் ஜீவாவுக்கு செல்லக்குழந்தை.

 “ வாம்மா வா..  “ எனக்கொஞ்சி அவளை ஜீவா தூக்கிக்கொண்டார்.

ஒளிப்படக்கலைஞர் இராசரட்ணம் தனது கெமராவை இயக்கினார்.

அந்தக்காட்சியை அருகிலிருந்து பார்த்த ஜீவாவின் மகன் திலீபன் உடனே  “ ஆறும் அறுபதும்  “ என்றான்.

அந்தப்படம்தான், மல்லிகை ஜீவா மணிவிழாக்குழுவினரால் 1988 ஜூன் மாதம் வெளியிட்ட மல்லிகை ஜீவா தொகுப்பு நூலின் முப்பில் இடம்பெற்றது.

இந்த நூலை எமது மூத்த எழுத்தாளர்கள் தெணியானும் – டாக்டர் நந்தி சிவஞானசுந்தரமும் தொகுத்திருந்தனர்.    ( தொடரும் )

No comments: