ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர் பெப்ரவரி 22ந் திகதி ஆரம்பமாகியுள்ளது. இதற்கு இலங்கை சார்பில் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமை தாங்குகிறார். இலங்கையில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நீடித்த உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 12 வருடங்கள் ஆகின்றன. எனினும் இலங்கை தொடர்பான விவகாரம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வருடா வருடம் பேசப்பட்டு வருகின்றது. தற்போதைய ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர், சிலியைப் பூர்வீகமாகக் கொண்ட மிஷெல் பஷ்லே (Michelle Bachlet), இலங்கை அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடைகள் மற்றும் பயணத்தடைகளை விதிக்க வேண்டுமென்று கூறி கடுமையான அறிக்கை ஒன்றினை சமர்ப்பித்துள்ளார். அதனால் இந்த அமர்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இலங்கையால் கருதப்படுகின்றது.
ஐ.நா. மனித உரிமைப் பேரவையினால் இலங்கைக்கு எதிராக 2015 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் மிக முக்கிய தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது. பிரித்தானியாவின் ஆதரவுடன், அமெரிக்கா 30/1 என்ற தீர்மானத்தை நிறைவேற்றிருந்தது. இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டு யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பில் வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடங்கிய கலப்பு நீதிமன்றமொன்றை அமைத்து விசாரணைகளை நடத்த வேண்டும் என அந்தத் தீர்மானத்தில் விசேடமாகக் கூறப்பட்டிருந்தது.
அத்துடன், காணாமல் போனோரை கண்டறிவதற்கான அலுவலகமொன்றினை நிறுவுதல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குதல் உள்ளிட்ட சரத்துக்களும் அந்த தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தது. மேலும், இராணுவம் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த தீர்மானத்திற்கு முன்னைய இலங்கை ரணில் - மைத்திரி தலைமையிலான அரசாங்கம், இணை அனுசரணை வழங்குவதாக ஒப்புதல் அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
2019 ஆண்டு நவம்பரில், முள்ளிவாய்க்காலில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருகையில் பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றிய கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த வருடம் பெப்ரவரியில், ஐ.நா. மனித உரிமைப்பேரவை 30/1 தீர்மானத்திலிருந்து வாபஸ் பெறுவதாக தற்போதைய இலங்கை அரசு ஐ.நாவிற்கு அறிவித்தது. இந்த வெளியேற்றத்திற்கு வெளிநாட்டு நீதிபதிகள் கொண்ட விசாரணைக்கு உடன்பட முடியாது என்பதே பிரதான காரணமாக அமைந்தது. இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணைக்கு அப்போதைய நல்லாட்சி அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியமை மிகப் பெரிய காட்டிக் கொடுப்பெனவும் அரசு பகிரங்கமாகத் தெரிவித்திருந்தது. 30/1 இலிருந்து விலகியதால், இலங்கைக்கு எதிராக புதிய தீர்மானம் ஒன்று கொண்டு வரப்படவுள்ளது.
கடந்த காலங்களில் 'வானவில்' இலங்கைக்கும் ஐ.நா. மனித உரிமைப்பேரவைக்கும் இடையேயான இழுபறிப்பாடுகள் தொடர்பில் தொடர்ச்சியாகக் கருத்துக்களை வெளியிட்டு வந்துள்ளது. அதேவேளையில் இலங்கையில் நடந்து முடிந்த யுத்தத்தில் இடம்பெற்ற மனித அவலங்களுக்கு இலங்கை அரசு மாத்திரம் பொறுப்பாளியாக இருக்க முடியாது என்பதையும் 'வானவில்' சுட்டிக்காட்டி வந்துள்ளது. மேலும் இந்த மனித உரிமை மீறல்களை இலங்கைக்கு எதிராக மாத்திரம் சுமத்துவதில் மேற்கத்தைய நாடுகள் இலங்கை மீது செலுத்த விளையும் மேலாண்மையும் பிரதான பங்கை வகிக்கின்றது. குறிப்பாக, சீனாவிற்கு நெருக்கமாக இலங்கை நகர்வதைக் குறிவைத்தே 'புதிய தீர்மானம்' என்ற பயமுறுத்தலை 46வது அமர்வில் இலங்கை எதிர்கொள்கின்றது என்பதில் சந்தேகமேயில்லை.
அமெரிக்காவில் நடாத்தப்பெற்ற செப்டம்பர் 11 தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்று கூறி 2001 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவினால் ஆரம்பிக்கப்பட்ட யுத்தம், பின்னர் நேட்டோ நாடுகளின் பங்களிப்புடன் ஈராக், லிபியா, சிரியா, யேமன் என்று 19 வருடங்களாக இன்னமும் தொடர்கின்றது. இதுவரையில் பல இலட்சம் மக்களைக் கொன்று, காயப்படுத்தி, அகதிகளாக்கியும் உள்ள இந்த யுத்தத்தங்களில், வகை தொகையில்லாத மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து நடந்த வண்ணமுள்ளன. இவ்வாறு உலகிலுள்ள முஸ்லீம் மக்களுக்கு எதிராக செயற்பட்டு வரும் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள், இலங்கையில் புலிகளின் பயங்கரவாதத்திற்கு எதிராக நடந்த யுத்தத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களுக்கு விசாரணை வேண்டுமென ஐ.நாவில் கோருவது என்பது எப்படி நியாயமாகும்?
70 வருடங்களுக்கு மேலாக பலஸ்தீன மக்களுக்கும் ஏனைய அரபு மக்களுக்கும் இஸ்ரேல் இழைத்து வரும் அநீதிகளுக்கு எதிராக நூற்றுக்கணக்கான தீர்மானங்கள் ஐ.நா. பொதுச்சபை, பாதுகாப்புச்சபை மற்றும் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் அமெரிக்காவின் பரிபூரண ஆதரவு இருப்பதால், இஸ்ரேல் ஐ.நாவின் தீர்மானங்களை மதித்து நடப்பதில்லை. 2018 இல் இஸ்ரேலின் மனித உரிமை மீறல்களை விமர்சிப்பதை எதிர்த்து, அமெரிக்கா ஐ.நா. மனித உரிமைப் பேரவையிலிருந்து விலகியது. ஜோ பைடனை ஜனாதிபதியாகக் கொண்ட அமெரிக்காவின் புதிய நிர்வாகம் மீண்டும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் பார்வையாளராக இணைய உள்ளது.
2006 – 2009 ஆண்டு காலப்பகுதியிலான இறுதி யுத்தத்தின் போதும், அதற்கு முன்னரும் புலிகளும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார்களென ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் அறிக்கைகளில் கூறப்பட்டுள்ள போதிலும், புலிகளில் எவரை விசாரிப்பது என்பது பற்றி ஐ.நாவிற்கு தெளிவான திட்டங்கள் எதுவும் கிடையாது. புலிகள் முற்றாக அழிந்து விட்டார்கள், எனவே குற்றச்சாட்டுகளை 'சமன்' செய்வது போன்று இரு தரப்பினர் மீதும் சுமத்திவிட்டு, ஒரு தரப்பினரை தண்டிக்கும் தீர்மானத்தின் பின்னால் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டுமென்ற நேர்மையான எண்ணங்கள் இருக்கமுடியாது. மாறாக, மனித உரிமை மீறல்களின் பெயரால் இலங்கை அரசை அடிபணிய வைக்க வேண்டுமென்ற நோக்கம் மாத்திரமே இருக்க முடியும். மனித உரிமைகளை முன்னிறுத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்று பாசாங்கு காட்டும், உலகின் பலமிக்க வல்லரசுகளின் கபடத்தன்மைகளை தமிழ் சமூகம் முற்றாக விளங்கிக் கொண்டால் மாத்திரமே, இலங்கை இந்த நெருக்கடியிலிருந்து தப்ப முடியும்.
‘வானவில்’ ஆசிரிய தலையங்கம், வானவில் இதழ் 122
https://manikkural.files.
No comments:
Post a Comment