வணக்கமும் வாழ்த்தும்……..!!

             


பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்பிரபஞ்சத்தையும் உயிர்களையும் படைத்தளித்த முழுமுதற்கடவுளாம் சிவபெருமானையும் உங்கள் குலதெய்வங்களையம்  வணங்கும்போது…..

 

மெய்யெல்லாம் விதிர்விதிர்க்க நெஞ்சம்தான் கசிந்துருக

கைதானுன்  தலைவைத்துக் கண்களில்நீர் ததும்பிடவே

பொய்தவிர்த்துப் புலனடக்கி பெய்வளையாள் கரந்தசிவன்

மெய்யான கடவுளவர் விரைகழல்கள் வணங்கிடுவீர்!

 

கலைகளைக் கற்பித்த குருவை வணங்கும்பொழுது…….

 

கலைகள்பல தெரிவித்துக் கடிந்துரைத்துப் பலகாலம்

கருணையொடு  கற்கவைத்த கனம்மிகுநற் குருவைநீர்

நிலையுணர்ந்து கைகளையும் நெற்றிக்கு நேர்வைத்து

நிறைந்தமனத் துடனேநீர் வணங்கிவரத் தெரிந்திடுவீர்!

 

 

 

 

உறவினர்கள் - நண்பர்கள் - விருந்தினர்களை ---

 

பரந்தமனத் துடன்நீவிர் பார்த்ததுமே உறவினரைப்

பாசமிகு நண்பர்களைப் பண்பான விருந்தினரைக்

கரமிரண்டை நெஞ்சிற்கு நேராக வைத்துநீவிர்

கருத்திருத்தி வணங்கிடுதல் சிறந்ததென்று தெரிந்திடுவீர்!

 

அன்புப் பெற்றோரை வணங்குவது……

 

பத்துமாதம் சுமந்திருந்து பெற்றெடுத்துப் பால்ஊட்டிப்

பகலிரவாய் விழித்திருந்து வளர்த்தெடுத்த தாய்தனையும்

வித்தையெலாம் கற்கவைத்து விளங்கவைத்த தந்தையையும்

விழுந்தவர்தம் பாதங்களில் தலைபணித்து வணங்கிடுவீர்!

 

வரமிருந்து பெற்றெடுத்த வாஞ்சைமிகு பெற்றோரை

வணங்கும்போ தெப்பொழுதும் மகிழ்ச்சியொடு முகமலர்ந்து

சிரங்குனிந்துன் முகத்துக்கு நேராகக் கைகுவித்துச்

சிந்தைநிறை அன்பையுன் விழிசிந்த வணங்கிடுவீர்!

 

 எவரை வணங்கினாலும் சிரம் தாழ்த்தி வணங்குவது சிறப்பு!

 

பாடறிந் தொழுகுதல் பண்பெனப் படும்’என்னும்

பண்டைய தமிழர்தம் கூற்றினை நினைந்திடுவீர்!

தேடியோடிப் படித்தவற்றைச் செயல்வடிவிற் காட்டிடுவீர்!

சிரந்தாழ்த்திப் பணிந்தெவரையும் வணங்கிடுதல் சிறப்பன்றோ?

 

 

வாழ்த்துவது….

வாழ்த்திநிற்க அகவைநிலை வரம்பெல்லை போடுமென்று

வழக்கமதாயச் சொல்வதெல்லாம் காதோரம் கேட்கிறதே!

வாழ்த்துவதால் கெடுதலில்லை! மாசற்ற மனம்போதும்!

வாழ்த்திநிற்க ஒருவருக்கும் வயதுதடை போடாதே!

 

வாழ்த்துவதால் புரிந்துணர்வு சிறந்திடவே ஒற்றுமையை

வளர்த்தினிய மனங்களிடை தூயஅன்பை நிறைத்துவிடும்!

வாழ்த்துவதால் வாழ்த்தும்மனம் அமைதிபெறும்! வாழ்த்தப்படும்

மனங்களிலே தெய்வீகம் மலருமென்று வாழ்த்திடுவீர்!

 

முக்கிய குறிப்பு -

தடுத்த நிலையிலே அதாவது உருவ நிலையிலே சிவனும் விநாயகக் கடவுளும் முருகப் பெருமானும் வீரபத்திரக் கடவுளம் வணங்குபவர்களின் ஆன்ம முதிர்ச்சிக்குத் தகுந்தாற்போல வேறாகத் தோன்றினாலும் சொரூபநிலையிலே எல்லாம் சிவனின் அருள்வடிவங்களே! அதேபோன்று பராசத்தி இலக்குமி சரசுவதி துர்க்கை அம்மன் ஆகிய தெய்வ வடிவங்கள் சிவனின் சக்தி வெளிப்பாடுகளே.  சிவன்

உயிர்களுடன் அத்துவிதம்பெற்று ஒன்றாய் வேறாய் உடனாய் நிற்றல் அவனது பொது இலக்கணமாகிறது. சிவசத்தாய் நிற்பது சிறப்பு இலக்கணமாகிறது. 

                        வாழ்க வளமுடன்”

                          

        

No comments: