பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்
‘றீயன்ஸ் பார்க்’கில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு துர்க்கை அம்மன் கோயிலில் 27 - 02 - 2021 புதன்கிழமையன்று மாசி மகம் புனித தீர்த்தத் திருவிழா அம்மனின் திருவருளினால் மிகவும் கோலாகலமாக நடந்தேறியது. ‘கொறோனா’கட்டுப்பாட்டுகளுக்கு மத்தியிலும் அவற்றிற்கு அமையப் பல நூற்றுக் கணக்கான அடியார்கள் தீர்த்தத் திருவிழாவிலே கலந்தமை அம்மன் அருள் எல்லோரையும் ஈர்க்கின்றதென்பது எளிதிற் புலனாகின்றது.
மாசி மகத்தின் மகிமை
மகம் நட்சத்திரம் என்பது துர்க்கைக்கு உரிய சிறந்த நட்சத்திரமாகக் கருதப்படுவதால் மாசி மகம் உலகிலுள்ள எல்லா அம்மன்கோயில்களிலும் முக்கியமாகத் துர்க்கையம்மன் கோயில்களிலும் விசேட தீர்த்தத் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.
சிட்னி – “றீயனஸ் பார்க்”கில் எழுந்தருளியிருக்கும் சிறீ துர்க்கை அம்மன் கோயில் மகோற்சவம் இந்த மாதம் 27ஆம் திகதி சனிக்;கிழமை மிகவுஞ் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தமை அம்மனின் திருவருட் செயலே!. அடியார்களைத் துர்க்கை அம்மன் எவ்வளவு தூரம் ஈர்த்துள்ளாள் என்பதை கோயிலில் நிரம்பிவழியும் பக்தர் கூட்டம் எடுத்துக்காட்டியது. எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சிப் பிரவாகம்!
மாசிமகத் தீர்த்தத்தன்று காலையிலிருந்து கோயில் என்றுமில்லாத அளவிற்குக் களைகட்டத் தொடங்கியிருந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த செயற்கைத் தண்ணீர்த் தொட்டி புனித தீர்த்தத்திற்குத் தயார் நிலையில் காணப்பட்டது. அம்மனின் அருளாற்றலைப் பிரதிபலிக்கும் மெல்லிசைப் பாடல்கள் காற்றோடு கலந்துவந்து செவிக்கின்பம் அளித்துக்கொண்டிருந்தது.
உள்ஊர்க் கலைஞர்களான நாதஸ்வர இசைமணி திரு ராகவன் குழுவினரின் மங்கள இசையுடன் மஞ்சள் நிறப் பட்டுடுத்தப்பெற்ற துர்க்கை அம்மனுக்குப் பூசை ஆரம்பமாகியது. “மும்மை மாமல மூடிய மூவுயிர் செம்மை எய்திச் சிவனடி சேர்த்திட இம்மை அம்மை எழுமையும் காத்தருள்” அம்மை துர்க்கைக்குச் செய்யப்பட்ட பூசையைத் தொடர்ந்து அடியாருக்கு வரதஞ்செய்ய அழகொழுகும் திருக்கோலத்தோடு தீர்த்தமாடப் புறப்பட்ட காட்சி எல்லோரையும் கவர்ந்தது. துர்க்கை அம்மனின் அழகிய தெய்வீகத் தோற்றம் இறைவனின் அன்பு பாசம் போன்ற இனிமையான உணர்வுகளை வெளிப்படுத்தும் உருவகமாகக் காணப்பட்டது. அம்பாளுக்குக் குருக்கள்மார்களின் கைவண்ணத்தில் அமைந்த சாத்துப்படி மிகவும் பிரமாதமாக இருந்தது. முறைப்படி மிகவும் அர்ப்பணிப்பொடு தீர்த்த நிகழ்வைக் கண்டுகளித்த அடியார்களின் கண்கள் பத்;திப் பரவசத்தில் பனித்தனவெனலாம். அடியார்களுக்குச் சிலர் தீர்த்தமாடிய புனித நீரை அள்ளி அள்ளித் தெளிப்பதில் மகிழ்ச்சி கண்டனர். கோயிலைச்சுற்றி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கோயிலுக்குள்ளே முறையாக அம்மனுக்கு அபிடேகம் செய்யப்பட்டது. மறுபடியும் நன்று அணியப்பெற்ற சாத்துப்படி கண்களைக் கவர்ந்தது. பின்னர் நிகழ்த்தப்பட்ட பூசையைத் தொடர்ந்து பஞ்சபுராணத்தை ஓதியதும் பூசை நிறைவுற்றது.
அம்மனின் அடியார்கள் சிறந்த ஒரு தீர்த்தத் திருவிழாவைக் கண்குளிரக் கண்டதுடன் சிறந்த அன்னதானத்திலும் பங்கேற்று நிறைந்த மனதுடன் தங்கள் இல்லங்களுக்குத் திரும்பினர்.
தீர்த்த உற்சவத்தின் தார்ப்பரியம்
இறைவன் உயிர்களுக்கு அருளும்வண்ணம் இயற்றும்
ஐந்தொழில்களின் பாவனைகளாகக் கருதப்படும் திருவிழாக்கள் சைவக் கோயில்களில் தொன்று தொட்டுக் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன அல்லவா? கோயில்களுக்குச் சிறப்பைத் தரும் இத்திருவிழாக்கள் அடியார்களின் அகத்தூய்மையையும் புறத் தூய்மையையும் வளர்த்து இறையுணர்வை ஊட்டுகின்றன. உத்தமமான யாகம் எனப் பொருள்படும் மகோற்சவத்தில் கொடியேற்றமும் அதற்கு முன்னுள்ள கிரிகைகளும் இறைவனின் படைத்தல் தொழிலைப் பாவனையாகக் காட்டுகின்றன. இதை அடுத்துவரும் திருவிழாக்கள் காத்தலையும் தேர்த்திருவிழா அழித்தலையும் சூர்ணோச்சவம் மறைத்தலையும் தீர்த்தோற்சவம் அருளலையும் குறிப்பனவாகும்.
“மன்னுயிர்கள் பேரின்ப வாரிதியிற் படிதலெனப்
பன்னுமொரு பாவனையாம் பத்தாநாள் விழாவன்றே
- ……………………………”
இவ்வாறு தீர்த்தத் திருவிழாவை ‘நிலைபெற்ற உயிர்கள் பேரின்பப் பெருங்கடலில் மூழ்குதல் என்று சொல்லப்படும் ஒரு பாவனையேயாம்’ என்று ஈழத்துச் சிதம்பரபுராணத்தில் புலவர்மணி இளமுருகனார் அவர்கள் குறிப்பிட்டுள்ளதை நினைவுகூருகிறேன். மேலும் திருவிழாக்கள் சாம்பவி தீக்கை எனப்பட்டு வழிபடுவோருக்கு மலநீக்கத்தையும் திருவடிப் பேற்றையும் நல்குமென்று ஆகமங்கள் கூறுகின்றன. எனவே மானிடப் பிறவியின் பயனை அடையத் துணைசெய்யும் திருவிழாக்களின் தத்துவங்களை அறிந்து நல்வழியில் நடப்போமாக!. இளைய சந்ததியினருக்குத் திருவிழாக்களின் தத்துவங்களைத் தெரியப்படுத்துவதுடன் அவர்களை இறை பணியிலும் இறை வழிபாட்டிலும் ஈடுபடச் செய்வதும் சைவப் பெரியோர்களினதும் பெற்றோரினதும் தலையாய கடமை அன்றோ?.
அம்மனின் அடியார்கள் சிறந்த ஒரு தீர்த்தத் திருவிழாவைக் கண்குளிரக் கண்ட நிறைந்த மனதுடன் தங்கள் இல்லங்களுக்குத் திரும்பினர்.
பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்ற பூங்காவனத் திருவிழாவிலேயும் ஆடிப்பூரத் திருவிழாவிலும் மிகவும் சிறப்பாக இசைக்கப்பெற்று வரும் துர்க்கை அம்மன் திரு ஊஞ்சல் பாடல்கள் கேட்போரைப் பரவசத்திலே ஆழ்த்தும் பெற்றியது.
சிட்னியிலே இப்படியான மாபெரும் துர்க்கை அம்மன் கோயிலை நிர்மாணித்து அரும்பாடுபட்டு இறையருள் முன்நிற்க அமைத்தருளிய தெய்வீகச் செயலுக்கு திரு மகேந்திரன் அவர்களுக்குத் தமிழ்ச் சைவ மக்கள் என்றும் கடப்பாடுடையவர்களாக இருத்தல் அவசியம். அவர் நீடூழி நலத்துடன் வாழத் துர்க்கை அம்மனைப் பணிந்தேத்துவோமாக!.
……. பாரதி
No comments:
Post a Comment