திருக்குறள் காட்டும் சமூக நல்லிணக்கம் [ 28-02-2021 வள்ளுவர் தினமாகும் ]


மகாதேவஐயர் ஜெயராமசர்மா மேனாள் தமிழ்  மொழிக் கல்வி இயக்குநர் மெல்பேண் .... அவுஸ்திரேலியா                                                                  

  

வள்ளுவத்தின் சிறப்பு

        தமிழிலே தோன்றிய பலநூல்கள் சமூக நல்லிணக்கத்தைப் பற்றிய கருத்துக்களைப் பலவாறு எடுத்துக்காட்டி இருக்கின்றன.அவைகள் கூறும் கருத்துக்கள் முழுமையானதாகவோ எக்காலத்துக்கும் ஏற்றனவாகவோ இருகின்றனவா என்று பார்க்கின்ற பொழுதான் திருக்குறளை நாம் கூர்ந்து பார்க்க வேண்டியுள்ளது.சமூக நல்லிணக்கம்  சம்பந்தமான கருத்துக்களைப் பகர்ந்து நின்ற நூல்களுக்கு மத்தியில் திருக்குறள் பெறுகின்ற இடம் முக்கியத்துவம் மிக்கது எனலாம்.   திருக்குறள் - தான் தோன்றிய காலம் முதல் இன்றளவும் தனித்துவம் மிக்கதாகவே விளங்குகிறது என்பதை எவருமே ஒத்துக் கொள்ளுவார்கள்அந்த அளவுக்கு அதன் அமைப்பும் , அதில் சொல்லப்பட்ட கருத்துக்களும் இருக்கின்றன. மானிடம் செழிக்க, மனித உள்ளங்கள் செழிக்க , உலகமே செழிக்க , மிக உயர்ந்த சிந்தனையின் வெளிப்பாடாகவே திருக்குறள் அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

   பகவத்கீதைதிருக்குரான்பைபிள் என்பவற்றிலும் சமூக நல்லிணக்கத்துக்கு  ஏற்ற கருத்துக்கள் இடம்பெற்றாலும் அவைகள் மதம் சார்ந்து நிற்கின்றன என்னும் நிலையும் காணப்படுகிறது. ஆனால் திருக்குறள் எந்தவிதச் சமயச்சார்பும் கலவாத சமுதாயச் சிந்தனையும் நல்லிணக்கச் சிந்தனையும் மிகுந்த நூலாக இருக்கிறது. கூறப்படும் சிந்தனைகளும்  நல்லிணக்கத்தை  ற்படுத்த கூடியதாகவும் யாராலும் கூறப்படாதனவாகவும்புரட்சிகரமானதாகவும்புதுமையான தாகவும்இருக்கின்றன என்பதும் முக்கியமாகும்.

       ஒருநூல் எழுதப்பட்ட காலத்தில் கூறப்பட்ட கருத்துக்கள் சிலகாலத்துக்கு மட்டுமே பொருந்துவதாகவே பெரும்பாலும் இருக்கும்.சிலவேளை எழுதப்பட்ட காலத்தோடே அக்கருத்துக்களும் வலுவிழந்தும் கூடப்போய்விடலாம். அப்படியான நூல்கள் நிலைத்து நிற்பது என்பது கடினமானதாகவே இருக்கும்.ஆனால் எழுந்த காலம் தொடக்கம் இன்றுவரை ஏன் இன்னும் பலகாலங்களுக்கும் நிலைத்து நிற்கும் அளவுக்குச் சிந்தனைக் கருவூலங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் பெருமையை திருக்குறள் பெற்றிருப்பதால்த்தான் அது வாழும் நூலாகவும் சமூகத்துக்கு ஏற்ற நல்ல கருத்துக்களை வழங்கி நிற்கும் நூலாகவும் விளங்கிறது எனலாம்.

 

சமூக நல்லிணக்கத்தின் அவசியம் என்ன

 

   இனமும் , மதமும்மொழியும்அவசியமா ? இவைகள் மனித சமூகத்துக்கு நன்மையினை பயக்கக் கூடியனவா ? இவைகள் இல்லாவிட்டால் மனித சமூகத்தால் வாழமுடியாமலே போய்விடுமா ? என்னும் கேள்விகளும் எழுகின்றன.இனத்தாலும் மொழியாலும் மதத்தாலும் ஏற்பட்ட மோதல்களும் அதனால் மனித சமூகம் பட்ட வேதனைகளும் , சோதனைகளும்அழிவுகளும் உலகவரலாற்றில் பெரும்பக்கமாகவே இருப்பதை யாவரும் அறிவர்.நூறாண்டுகள் உலகில் இரண்டு மதங்களாலும்இனங்களாலும் நடந்த சிலுவை யுத்தமதை வரலாற்றிலிருந்து அகற்றிடவே இயலாது. ஆனால் இன்றும் இந்த நிலையில் மாற்றம் உண்டா என்றால் சரியான பதிலை தேடித்தான் காணவேண்டி இருக்கிறது.

   மதம்தான் மனித சமூகத்துக்குப் பங்கமாக அமைந்தது என்றால் மொழியும் கூடவே இணைந்து கொள்ளுகின்றது. மொழியினை வெறியாகக் கொண்ட காரணத்தால் இன்னுமே உலகின் பல பகுதிகளிலும் மோதலும்அதனால் பல கோரங்களும் நடைபெற்ற வண்ணமுமே இருப்பதை நாளாந்தம் பார்க்கவே முடிகிறது எனலாம்.

  இனங்கள் தங்களின் தனித்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு மோதல்களை உருவாக்கி அதனால் சமூகத்தின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நிலையினையும் காணமுடிகிறது.

 மனிதன் என்பவன் தனித்து வாழவே முடியாது. அவன் இணைந்துதான் வாழ வேண்டி இருக்கிறது. இணைந்து வாழும்பொழுது அங்கு சமூகம் என்பது உருவாகிறது. அந்தச் சமூகம் என்பது உலகளாவும் பொழுது உலக சமூகமாக விரிவடைகிறது. விரிவடைந்த சமூகங்கள் விரிசல்கள் இல்லாமல் இருப்பதற்கு என்னதான் வழி என்று சிந்திக்கும் வேளையிலே " சமூக நல்லிணக்கம் " என்பதன் அவசியம் அவசியமாகி நிற்கிறதல்லவா !

  இனமும் மதமும் மொழியும்  சமூகத்துக்கு மிகவும் இன்றியமையாதனவாகும். ஆனால் அவைகளே " சமூக நல்லிணக்கத்துக்கு " இடையூறாக அமையும் பொழுதான் ... தேவைதானா என்னும் எண்ணமே தோன்றுகிறது எனலாம். இனமும் மதமும் மொழியும் சமூகத்துக்கு வேண்டியவைதான் . அவைகளால் சாந்தியும்சமாதானமும்சகவாழ்வும்ஒற்றுமையும்விட்டுக் கொடுக்கும் பண்பும்அன்பும்அரவணைப்பும், போட்டியற்ற மனோபாவமும்அறம்பற்றிய எண்ணப்பாடும்ஒழுக்கமுடை அரசியலும்நற்பண்புகள் நிறைந்த தலைமைகளும்நல்ல குடிமக்களும் , தோற்றுவிக்கப்படுமானால் அவைகள் நிச்சயம் சமூகத்துக்கு இன்றியமையாதாகவே இருக்கலாம் அல்லவா ?

  இன்றைய நாளினை எடுத்துப் பார்க்கும் பொழுது " சமூக நல்லிணக்கம் " என்பது மிக மிக அவசியமாய் இருக்கிறது என்பதையே காட்டுகிறது எனலாம்.உலக நாடுகளின் சிந்தனைகளால் அமைதிப் பூங்காக்காங்கள் அமைதியினை தொலைத்தே நிற்கின்றன. சமூக நல்லிணக்கத்துக்காக பல அமைப்புகள் உருவான பொழுதிலும் அவற்றுக் கிடையே கூட நல்லிணக்கத்தை எட்டிவிட முடியாத ஒரு பரிதாப நிலையினையே பார்க்க முடிகிறது. இவ்வேளையில் " சமூக நல்லிணக்கம் " பற்றி சிந்திப்பதும் அதற்காக இயன்றளவில் முயற்சிகள் எடுப்பதும் அனைவரதும் மிகவும் முக்கியமான தார்மீகக் கடமையேயாகும். அந்த வகையில் " சமூக நல்லிணக்கம் " பற்றிய திருக்குறளின் வழிகாட்டலை அனைவருமே மேற்கொள்வது மிகவும் பொருத்தப் பாடுடையதாக இருக்கும் என்று கருதுகின்றேன்.

  திருக்குறளின் வழி காட்டல்

    உலகில் பொதுமறை நூலாகவும்வாழ்வியல் நூலாகவும்அறநெறி நூலாகவும்அன்பு நெறி நூலாகவும்நீதியினை நல்கும் நூலாகவும்ஒழுக்க நெறி நூலாகவும்நல்ல அரசியல் நெறிகளை வழங்கும் நூலாகவும்திருக்குறள் திகழுகின்றது. ஏனைய பல நூல்களில் திருக்குறள் காட்டும் சிந்தனைகள் சில இருந்தாலும் அவையெல்லாம் திருக்குறள் போன்று விளங்கவில்லை என்பதை மனமிருத்துதல் அவசியமாகும்.

  மொழிபற்றிக்கூறவில்லை. இனம் பற்றிக்கூறவில்லை. மதம் பற்றிக் கூறவில்லை. எது தேவையோ அதுவும் சமூகத்துக்கு சமூகநல்லிணக்கத்துக்கு தேவையோ அதைப்பற்றியே திருக்குறள் கூறி நிற்கிறது. திருக்குறள் என்னும் நூல் கற்பனையின் வடிவம் அன்று. நடக்க முடியாத , செய்ய இயலாத , நடைமுறைகளுக்கு ஒவ்வாத சிந்தனைகளைத் தன்னிடத்துக் கொண்டிருக்கவில்லை. முக்காலத்தையும் மனதிற் கொண்டுதான் வள்ளுவப் பெருந்தகை திருக்குறளைத் தந்திருக்கிறார் எனலாம். எனவேதான் உலகினர் யாவரையும் திரும்பிப் பார்க்க வைத்து உலகினர் அனைவரதும் மனங்களிலும் பதியும் பாங்கில் திருக்குறள் இருக்கிறது எனலாம்.

  கடவுள் கொள்கையினை மையமாகக் கொண்டே உலக மதங்கள் அனைத்தும் தமக்குள் போட்டி போட்டு வாதப் பிரதிவாதங்கள் செய்து அதற்கு அரணாக பல நூல்களையும் , இலக்கியக்கியங்களையும்ஆதாரம் ஆக்கி சமூகத்தில் முரண்பாடுகளைத் தோற்றுவித்து நல்லிணக்கத்தை அகற்றிவிட முயற்சிக்கின்றன. ஆனால் உலகமே வியந்து பார்க்கும் திருக்குறள் இதற்கெல்லாம் துணை போகாமல் உலக நலனைக் கருத்திற்கொண்டு கடவுள் பற்றியோ மதம் பற்றியோ கூறாமல் பொதுமையான சிந்தனையினையினை வலுவாக எடுத்துக் கூறி நல்ல ஒரு சமூக நல்லிணக்கத்துக்கு வழிகாட்டி நிற்கிறது எனலாம்.

" எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்

 மெய்ப்பொருள் காண்பது அறிவு "

   

" எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

 மெய்ப்பொருள் காண்பது அறிவு "

  என்று திருக்குறள் -  பகுத்தறிவுத் தளத்தினின்றும் கடவுள் பற்றியும் மதம் பற்றியுமான தனது சிந்தனையினையினை வெளிப்படுத்தி நிற்கிறது. கடவுளைப்பற்றி திருக்குறள் எந்தவொரு பெயரையும் தொட்டுக்காட்ட வில்லை. கடவுளுக்கு என்று எந்த உருவத்தையும் காட்டவும் இல்லை. கடவுள் என்றால் ஒரு சக்தி என்பதுதான் குறளின் வெளிப்பாடாகும். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கடவுளைப்பற்றியோ மதங்களைப் பற்றியோ வள்ளுவர் திருக்குறள் வாயிலாக காட்டடிட வில்லை என்பது நோக்கத் தக்கதாகும். வள்ளுவர் வாழ்ந்த காலமோ இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தியதாகும்.அந்தக் காலத்திலே பல மத நம்பிக்கைகளும்கடவுள் பற்றிய பல கருத்துக்களும் நிலவிய சூழலில் பொதுமையான ஒரு சிந்தனையை முன்வைத்த வள்ளுவம் அப்பொழுதே சமூக நல்லிணக்கத்தை உள்வாங்கியே இருந்திருக்கிறது என்றால் வள்ளுவத்தைவிட  - இக்கால சமூக நல்லிணக்கத்துக்கு உரிய மிகச்சிறந்த வழிகாட்டிகள் இருக்குமா என்பது ஐயத்துக்கிடமான ஒன்று என்றுதான் கருத வேண்டி இருக்கிறது. வள்ளுவத்தின் இந்தக் குறளின் கருத்தே வள்ளுவத்தின் அடிநாதமாகவே அமைகிறது என்று கூட இயம்பிட முடிகிறது எனலாம்.

  மதச் சார்பின்மைக்கு மட்டுமல்லாது இன்று அவசியம் வேண்டப்படும் மனித நேயத்துக்குமே சிறந்த முன்னோடியாக வள்ளுவம் விளங்குகின்றது என்பதும் மனங் கொள்ளத் தக்கதாகும்.மதச் சார்பின்மைதான் சமூக நல்லிணக்கத்துக்கு மிகவும் வேண்டத்தக்கதாக இருக்கிறது எனலாம். மதங்களின் வசமாகிய மனிதர்கள் மனித நேயத்தை தொலைத்து விடுவதால் அவர்கள் வாழும் சமூகத்தில் நல்லிணக்கம் என்பது காணாமலே போய்விடுகிறது. அவர்களுக்கு எல்லாம் வள்ளுவம்தான் நல்ல வழிகாட்டலை வழங்கும் வல்லமை பெற்றதாகும் என்பதுதான் மறுக்க முடியாத உண்மையாகும்.

    சமூக நல்லிணக்கத்துக்கு மதச்சார்பின்மை மிகவும் அவசியமாக இருபதுபோலவே இனம் பற்றிய எண்ணக் கருவிலும் ஒரு பொதுமை இருக்க வேண்டியதும் அவசியமாகின்றது. சமூகம் எனும் பொழுது அது தானாகவே அமைந்துவிட முடியாது. தனிமனிதனிலிருந்து ஆரம்பித்து குழுவாகி, கூட்டமாகி, இனமாகித்தான் சமூகம் என்பது வெளிவருகிறது. இதனால் சமூகத்தில் மாற்றம் வரவேண்டுமானால் முதலில் தனிமனிதனிடம் மாற்றம் வருதல் அவசியமாகிறது. வள்ளுவத்தின் வழியும் கூட அப்படியிருக்கின்றது என்றுதான் கருதவேண்டி இருக்கிறது. தனிமனிதன் தனக்குள் முரண்பாடுகளைக் களைதல் அவசியமும் ஆகின்றது. பிறப்பினால் உயர்வு வருகிறது என்னும் மனப்பாங்கினை எடுத்துவிட வேண்டும் என்பதுதான் வள்ளுவத்தின் வழியாக இருக்கிறது.

" பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் " என்னும் குறளின் குரல் சமூக நல் இணக்கத்தை தனிமனிதனிடமிருந்தே ஆரம்பிக்கிறது எனலாம். பிறப்பில் உயர்வு தாழ்வு இல்லை என்னும் எண்ணம் தனிமனிதனிடம் வேரூன்றி விடுமானால் அந்த எண்ணம் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என்று வள்ளுவம் நம்பியது. இந்த எண்ணம் சமூகத்தில் நிலைபெற்று விடுமானால் இன்று உலகில் இனம் பற்றி எண்ணி மோதுகின்ற நிலை அற்று நல்லதோர் சமூக நல்லிணக்கம் பிறக்க வழி வருமல்லவா ?

  " மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்

    கீழல்லார் கீழல் லவர் "

  " ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்

    எய்துவர் எய்தாப் பழி "

இதனை தனிமனித அறமாகவும் கொள்ளலாம். சமூக அறமாகவும் கொள்ளலாம். உயர்வுக்கும் தாழ்வுக்கும் இதைவிட நல்லுபதேசம் வழங்கிவிட முடியாது என்பது வள்ளுவத்தின் வழி எனலாம். இந்தக் கருத்து மக்களிடம் பதியும் பொழுது இனம்பற்றிய எண்ணக்கருவில் ஒரு சமநிலை தோன்றிட வழி பிறக்கும் அல்லவா ? அப்படிப் பிறப்பதுதானே சமூக நல்லிணக்கத்துக்கு நல்லதோர் உறுதுணையைக் கொடுக்கும் அல்லவா ?

   திருப்தி இல்லாமல் வெறுப்பு ஏற்படுகிறது. நிறைவு இல்லாமல் மகிழ்ச்சி குறைகிறது. மகிழ்ச்சி இல்லாததால் குரோரதம் உருவாகிறது. இது தனி மனிதனிடம் ஆரம்பித்து சமூக மயமாகி பெருவிருட்சமாகி வாழும் சமூகத்தில் ஏன் - உலக சமூகத்திலேயே அமைதியை குலைத்து விடுகிறது. இதனால் சமூக நல்லிணக்கம் என்பது காணாமலே போய்விடுகிறது. இந்த நிலையிலிருந்து சமூகம் விடுபட வேண்டுமென்றால் வள்ளுவம் காட்டும் இந்த வழியினை எடுத்துக் கொள்ளுதல் அவசியமாகும். வையத்திலே வாழ்வாங்கு வாழலாம் வாருங்கள் என்று வள்ளுவம் யாவரையும் தன் பக்கம் அழைத்து நிற்கிறது.

  " வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

    தெய்வத்துள் வைக்கப் படும் "

மனிதன் தன்னிடம் மறைந்துள்ள தேவ குணங்களைத் தேடிக் கண்டறிய வேண்டும். சொர்க்கமோ நரகமோ யாவுமே கண்டறியாத் தூரத்தில் இல்லை. யாவுமே மனத்திலேதான் ஒழிந்து இருக்கிறது. அதனைத் தேடிக் கண்டு பிடித்தால் இந்த உலகத்திலே சொர்க்கத்தையே கண்டுவிடலாம். மகிழ்ச்சிக்கோ திருப்தி இன்மைக்கோ அலைய வேண்டியதே இல்லை. அதற்காக அடுத்தவரையோ அடுத்த சமூகத்தையோ வெறுப்புடனும் ஆக்ரோஷத்துடனும் பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை. வானுலகையும் அங்கு வாழும் வாழ்வினையும் இந்த மண்ணுலகிலேகிலேயே கண்டு கொள்ளமுடியும் என்று வள்ளுவம் உறுதி மொழி பகர்ந்து நிற்கிறது அல்லவா ? இந்த வழியில் வாழ எண்ணிவிடுவோம் ஆனால் அங்கு சமூக நல்லிணக்கம் வருவதில் தடைதான் உண்டோ ? மனிதர்கள் அனைவரையும் தேவராக்கும் தத்துவத்தை இக்குறள் காட்டி நிற்கிறது. தேவரைத்தேடி அலையவே தேவையில்லை என்பதும் இதனூடாக புலப்பட்டு நிற்கிறதல்லவா ? தேவ குணங்கள் மேலோங்கி விட்டால் அங்கு நல்லிணக்கத்துக்கு வழி பிறந்தாகி விட்டது என்றுதானே எண்ண வேண்டும். 

  அன்பினை செலுத்துவதில் அக்கறை இல்லாமல் இருப்பதும் , பழி வாங்கும் எண்ணம் மேலோங்கி இருப்பதும், விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு அருகிக் காணப்படுவதும், நல்ல தலைமைகள் இல்லாமல் இருப்பதும், சமூக நல்லிணக்கம் ஏற்படுவதற்கு தடைக் கற்களாக இருக்கின்றன என்பதை மறந்து விடக்கூடாது. இதனை எல்லாம் தகர்த்து எறியும் பொழுதான் சமூக நல்லிணக்கம் ஏற்பட வழி பிறக்கும்.

   அன்புடமை, இனியவை கூறல்நடுவு நிலைமை, அடக்கமுடைமை, பொறையுடமை, அழுக்காறாமை, வெஃகாமை, வெகுளாமை, வாய்மை, அறிவுடமை, கூடாவொழுக்கம், பண்புடமை, சான்றாண்மை, ன்றெல்லாம் வள்ளுவம் வகுத்து அதன் வழி நடந்தால் சமூகத்தில் நல்லிணக்கம் பிறக்கும் என்று சொல்லி நிற்கிறது.

 " இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண

  நன்னயம் செய்து விடல் "

" அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

  என்பும் உரியர் பிறர்க்கு "

 " சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்

    ஏமப் புணையச் சுடும் "

  " அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

   இழுக்கா இயன்றது அறம் " 

  " மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

  ஆகுல நீர பிற "

சினத்தை தவிர்த்து, நன்னயம் ஓம்பி, அழுக்காற்றை, அவாவினை அகற்றி , அன்பினின் உயர்நிலையினை மனத்திருத்தி, மனத்திலே ஏற்படும் மாசுகளைத் தூக்கி எறிந்து, மனிதர்கள் வாழ்ந்தால் அந்த வாழ்வு சமூகத்தின் நல் வாழ்வுக்கு வழிசமைக்கும் என்று வள்ளுவம் நம்புகின்றது.

   சமூக நல்லிணக்கம் என்பதை தேடி ஓட வேண்டியதில்லை. அதனை யாருமே கொண்டுவந்து தரப்போவதும் இல்லை. மனிதனால் உருவாக்கப்பட்ட சமூகத்தில் மனிதனாலேயே நல்லிணக்கம் ஏற்படுத்தப் படவேண்டும். அப்படி நல்லிணக்கத்தை ஏற்படுத்த திருக்குறள் என்னும் வழிகாட்டி வந்து நிற்கிறது. காலத்துக்கு ஒவ்வாத வற்றைக் காட்டாமல் காலத்துக்கு உகந்தவற்றைக் காட்டி , நடைமுறையில் கடைப் பிடிக்கும் சிந்தனைகளை முன் வைத்தும் நிற்கிறது. சமூக நல்லிணக்கம் இன்றியமையாமல் இருக்கும் இன்றைய காலகட்டத்தில் திருக்குறளின் வழிகாட்டல் என்பது மிகவும் முக்கியத்தும் உடையதாக விளங்குவதால் அதன் வழியில் சென்றால் " சமூக நல்லிணக்கம் " ஏற்படும் என்பதில் ஐயத்துக்கே இடமில்லை என்பதே என்னுடைய மனக்கிடக்கையாகும். 

No comments: