உலகச் செய்திகள்

 ஹரி - மேகனுக்கு 2ஆவது குழந்தை

சிரிய தலைநகரில் இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல்


ஹரி - மேகனுக்கு 2ஆவது குழந்தை

பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதிக்கு 2ஆவது குழந்தை பிறக்கவுள்ளது.

அமெரிக்காவில் வசித்து வரும் பிரிட்டன் இளவரசர் ஹரி–மேகன் தம்பதிக்கு கடந்த 2019இல் முதலில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், காதலர் தினத்தை ஒட்டி ஹரி மடியில் மேகன் படுத்திருக்கும் புகைப்படத்தை அவர்கள் வெளியிட்டிருந்தனர்.

அந்தப் புகைப்படம் மூலம் மேகன் 2ஆவதாக கருவுற்றிருப்பது உறுதியாகியுள்ளது. இந்த செய்தியை அறிந்து இங்கிலாந்து ராணி உட்பட அரச குடும்பம் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது. ‘ஹரி தம்பதிக்கு வாழ்த்துகள்’ என்று லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

ஹரி கடந்த வருடம் மார்ச் மாதம் அரச வாழ்க்கையை விட்டு விலகுவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து தனது மனைவியுடன் இங்கிலாந்து அரண்மனையை விட்டு வெளியேறினார். தற்போது அவர் தனது மனைவி மேகன் மெர்கலுடன் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார்.

நன்றி தினகரன் 

சிரிய தலைநகரில் இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல்

சிரியாவின் வான் பாதுகாப்பு முறை மூலம் தலைநகர் டமஸ்கஸில் இஸ்ரேலின் தாக்குதலை முறியடித்ததாக சிரிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

சிரியாவில் ஈரானின் இலக்குகள் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலின் தொடர்ச்சியாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும் வெளிநாட்டுச் செய்திகளுக்கு பதலளிக்க முடியாது என்று இஸ்ரேல் இராணுவம் இது பற்றி குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்கிய இடங்கள் குறித்த விபரத்தை சிரிய அரச ஊடகம் வெளியிடவில்லை. இஸ்ரேலிய இராணுவ விமானங்கள் கோலன் குன்றுக்கு மேலால் பறந்து தலைநகர முனையில் தாக்குதல் நடத்தியது என்று சிரிய இராணுவத்தின் அறிவிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. “தலைநகர வானுக்கு மேலால் இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதல்களை எமது வான் பாதுகாப்பு முறை தொடர்ந்து முறியடிக்கும்” என்று சிரிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் ஈரானிய ஆதரவு போராளிகள் ஆதிக்கம் செலுத்தும் தலைநகரின் தெற்கில் உள்ள பிரதான இராணுவ தளம் ஒன்றின் மீதே தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக சிரிய இராணுவத்தில் இருந்து வெளியேறிய தரப்பு ஒன்று குறிப்பிட்டுள்ளது.    நன்றி தினகரன் 

No comments: