அமரர் கலாநிதி கந்தையா வாழ்வும் பணிகளும் அவுஸ்திரேலிய தமிழ் சமூகத்தை ஆவணப்படுத்திய எழுத்தாளர் ! நடேசன் - அவுஸ்திரேலியா


அவுஸ்திரேலியாவில் 13  வருடங்கள் உதயம் இதழை நடத்திவிட்டு நிறுத்திய பின்பு என்னிடம் இருந்த ஒளிப்படங்களைப் பார்த்தபோது அதிக அளவில் இருந்த படங்கள் கலாநிதி கந்தையாவுடையதாகும்.

உதயம் பத்திரிகையை ஆரம்பித்தபோது எனக்கு அறிமுகமானவர்கள் பலர். அவர்களில் ஒருவர் சிட்னியிலிருந்து உதயத்திற்கு அடிக்கடி விடயதானங்களும் ஒளிப்படங்களும் அனுப்பிக்கொண்டிருந்த


கலாநிதி ஆ.கந்தையா.     

     அவர் தனது நிகழ்ச்சியொன்றை அனுப்பி விட்டு அதைபிரசுரிக்கச்  சொன்னபோது மறுத்துவிட்டேன். அந்த விடயம் இந்தியாவில் நடந்தது.  இங்கே அது முக்கியமானது அல்ல என்று மறுத்த போது அடுத்த முறை வேறு நிகழ்ச்சி பற்றிய படத்தை அனுப்புவார்.

அவுஸ்திரேலியாவில் உதயம் அவர் சம்பந்தப்பட்ட பல நிகழ்ச்சிகளை பிரசுரித்தது அவரைப் பொறுத்தமட்டில் சிறந்த களம் என்று கூடச் சொல்லலாம். சிட்னியில் அவருடைய ஏதாவது நூல்களின் வெளியீட்டு விழாக்கள் நடந்தால் அல்லது அவர் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு சமூக நிகழ்வு நடந்தால் நிச்சயமாக அவரிடமிருந்து செய்திக்குறிப்புகளுடன் ஒளிப்படங்களும் தாமதமின்றி உதயம் அலுவலகத்திற்கு வந்துவிடும்.

அனுப்பிவிட்டு மௌனமாக இருக்கமாட்டார். தபாலில் சேர்த்த மறுகணமோ அல்லது மின்னஞ்சல் அனுப்பி அடுத்த நிமிடமோ தொலைபேசி எடுத்து “ அனுப்பியிருக்கிறேன்.  பார்த்துக்கொள்ளுங்கள்” என்று பவ்வியமாக சொல்வார்.

கலாநிதி கந்தையா தொடர்ச்சியாக அயராமல் இயங்கியவர். இலங்கையில் களனி பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத்தலைவராக 1978- 1980 காலப்பகுதியில் பணியாற்றியவர்.

 பொதுநலவாய நாடுகளின் பல்கலைக்கழகங்களின் ஆணையம் மற்றும் யுனெஸ்கோ நிறுவனம் ஆகியனவற்றின் புலமைப்பரிசில்களில் கற்பித்தல் முறைகளை பயின்றவர். இலங்கை கல்விச்சேவை ஆணைக்குழுவில் அங்கம் வகித்தவர். அக்காலப்பகுதியில் பலருக்கு ஆசிரிய நியமனங்களை பெற்றுக்கொடுத்தவர். அதிலும் விமர்சனங்களை சந்தித்தவர். ஆங்கிலத்திலும் தமிழிலும் இதுவரையில் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருப்பவர். அதில் சுமார் இருபது நூல்கள் அவுஸ்திரேலியாவுக்கு அவர் புலம்பெயர்ந்தபின்பு எழுதப்பட்டவை.

கந்தையா அவுஸ்திரேலியாவில் செய்த ஒரு முக்கியமான பணி. கமல்ஹாஸன் நடித்து மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகி கமலுக்கு தேசிய விருது கிடைத்த நாயகன் மற்றும்  பாலச்சந்தரின் தண்ணீர் தண்ணீர்  படங்களுக்கு  ஆங்கில Sub Titles எழுதியவர்தான் கலாநிதி கந்தையா. இந்தப் படங்களை  அவுஸ்திரேலிய தேசிய தொலைக்காட்சி SBS பல தடவைகள் ஒளிபரப்பியிருக்கிறது.

கலாநிதி கந்தையா எழுதியிருக்கும் சில நூல்கள் அவுஸ்திரேலியா பற்றி தமிழில் தெரிந்துகொள்ள ஆசைப்படும் பல வாசகர்களுக்கு சிறந்த ஆவணங்களாகத்திகழுகின்றன. கங்காருநாட்டில் தமிழரும் தமிழும் என்ற நூல் இங்குள்ள தமிழ் சமூக அமைப்புகள் மற்றும் கல்வி சார்ந்த பணிகளை முன்னெடுக்கும் அமைப்புகள், ஊடகங்கள் தொடர்பான விரிவான பதிவுகளைக்கொண்டது..

புலம் பெயர்ந்த பின்பு தனது அயராத இயக்கத்தின் ஊடாக அவுஸ்திரேலிய தமிழ் சமூகத்திற்கு பயனளித்தவர் கந்தையா. அவுஸ்திரேலியாவில் தமிழ் சமூகத்தில் மொழிபெயர்ப்புத்துறையும்  ஆவணப்படுத்தல் பணிகளும் முக்கியமானது. தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இதுவரை 45 நூல்களை எழுதியிருக்கிறார். வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் முதனிலை வகுப்புகளுக்குப் பாடநூலாக இவரின் "மலரும் மணமும்" நூல் அமைந்தது

கந்தையா யாழ்ப்பாணத்தில் தென்மராட்சிப் பிரிவில், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மறவன்புலவு என்ற ஊரில் ஆறுமுகம், சிவகாமி ஆகியோருக்குப் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை மறவன்புலவு சகலகலாவல்லி வித்தியாசாலையிலும், நுணாவில் மகாலக்சுமி வித்தியாசாலையிலும் உயர்கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் (1948-49) பயின்றார். பள்ளிப் படிப்பின் பின்னர் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இணைந்து பயிற்சி பெற்ற ஆசிரியராக வெளியேறினார். 1953 முதல் 1955 வரை கொழும்பு இந்துக் கல்லூரியில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார்.

1956 இல் சென்னை சென்று பச்சையப்பன் கல்லூரியில் முனைவர் மு. வரதராசன் போன்றோரின் வழிகாட்டலில் தமிழ்த் துறையில் பட்டம் பெற்றார். வரதராசனாரின் நெறியில் தந்தையின் பரிசு என்னும் நூலை எழுதியிருக்கிறார். இலண்டன் பல்கலைக்கழகத்தில் 'பக்தி இலக்கியம்' பற்றி ஆய்வு மேற்கொண்டு கலாநிதிப் பட்டம் பெற்றார். கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக கடமையாற்றினார். இலண்டன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையிலும், இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்திலும் சிட்னிப் பல்கலைக்கழகத்திலும் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பித்தார்.

1978-80 ஆம் ஆண்டுகளில் இலங்கை களனிப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார். 1984-85 ஆம் ஆண்டுகளில் பிரித்தானியத் திறந்த பல்கலைக்கழகத்தில் தொலைக்கல்வி பயின்றவர். இலங்கைக் கல்விச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக எட்டு ஆண்டுகள் பணியாற்றினார்.

கலாநிதி கந்தையா புதிதாக வந்து குடியேறிய இலங்கைத் தமிழரைப் பற்றி பல தொகுப்புகளை செய்திருக்கிறார். கல்வி சார்ந்த பணிகளில் மற்றும் மொழிபெயர்ப்புகளிலும் ஆவணங்களை தொகுப்பதிலும் ஈடுபட்டவர். சமூகத்தில் வரலாற்றை தொகுப்பது என்பது பெரிய விடயம். அந்த விடயத்தில் மொத்தமான தமிழ் சமூகமே பின் தங்கியுள்ளது. இலங்கை சிங்கள மக்களிடம் 2500 வருடங்களாக எழுதப்பட்ட சரித்திரம் உண்டு. அதை புத்த பிக்குகள் செய்தார்கள். ஆனால் இந்தியாவிலோ இலங்கையிலோ அப்படியான வரலாறு எழுதப்படவில்லை. ஆனால்,  நாம் எழுதாத வரலாற்றை எடுத்து வைத்து கல்தோன்றி மண் தோன்றாத காலத்துக் குடி மற்றும் ஆண்ட குடி — என நீட்டி முழக்குகிறோம்.

பத்திரிகைகள் சமூகத்தின் நிகழ்வுகளை தொகுக்கின்றன. அத்துடன் எழுத்தில் இருப்பதால் காலத்தால் அழியாதவை. இந்த விடயத்தில் உதயம் விட்டுச் சென்ற வெற்றிடம் அவுஸ்திரேலிய தமிழ் சமூகத்தில் இன்னும் நிரப்பப்படவில்லை. புத்தகங்கள் மூலமாக சமூகத்தை ஆவணப்படுத்திய கலாநிதி கந்தையா  அவர்களின்  மறைவானது நம்மிடையே  பாரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது.

அவர் எழுதியிருக்கும் நூல்கள்:

Tamils in Australia - A brief Survey (1998)

மழலை அமுதம் (சிறுவர் பாடல் தொகுப்பு,  ( 1995)

தமிழ் நூல் பட்டியல் (மாநில நூலகம்)

Tamil Literature - A brief survey

Tamils in Australia - An updated survey

ஆஸ்திரேலியாவில் தமிழ் மொழி கற்பித்தல்

Teaching Tamil in Australia

Tamil without a Teacher - Book I

Tamil without Teacher - Book II

Quest for Tamil Identity

கங்காரு தாவித் தாவி ஓடுவதேன்? (சிறுவர் இலக்கியம், 1999)

வால் நீண்டது எப்படி? (சிறுவர் இலக்கியம், 1999)

Mistic Love in the Thevaram

கங்காரு நாட்டில் கன்னித் தமிழ் (2000)

A Selected Glossary for Australian Tamils

Gleanings from Tirukkural for a Multicultural Society

Tirukkural, Selected couplets

Murukan, God of Tamils

மார்கழி மங்கையர் (1995)

இலங்கைத் தமிழ் அகதிகள் - கைந்நூல் (1998)

Tamil Community in Australia

ஆஸ்திரேலியாவில் இந்துக் கோயில்கள்

கங்காரு நாட்டில் தமிழரும் தமிழும் (2004)

Hindu Temples in Australia

பரதநாட்டிய முத்திரைகள் (1990)

தமிழ்நூல் பட்டியல் (1996)

தமிழ் இலக்கியம் - Tamil Literature (1996)

ஆஸ்திரேலியாவில் ஆடற்கலையும் பாடற்கலையும் (2005)

                      ( அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் கடந்த 20-02-2021 ஆம் திகதி நடத்திய இணையவழி காணொளி அரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை )

 

No comments: