யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் விவாகரத்துக்கள்..!

- எங்கே செல்கின்றோம் நாம்..?

'கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்', 'ஆயிரம் பொய் சொல்லியாவது கல்யாணம் செய்', 'திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது' இவையெல்லாம் திருமணம் பற்றி நம்மவர்களிடையே உலாவிவரும் பழமொழிகளாகும்.

இவ்வாறான சிறப்புக்கள் திருமணத்திற்கு இருந்தாலும் தற்போதைய காலகட்டத்தில் இலங்கையில் மட்டுமல்லாது உலகளாவிய ரீதியிலும் விவாகரத்துக்கள் அதிகரித்துச் செல்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இலங்கையில் தமிழர்கள் அதிகம் செறிந்து வாழுகின்ற வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் தமிழர்களுக்கு என்று பாரம்பரிய, பண்பாட்டு விடயங்கள் பெரிதும் கடைப்பிடிக்கப்படுகின்றன. அந்தவகையில் திருமணங்களுக்கு என்றும் ஒரு முக்கிய இடம் வழங்கப்படுகின்றது.

ஆனாலும், அத்தகைய பாரம்பரிய விடயங்களுக்கு மதிப்பளிக்காமல் சிறு சிறு விடயங்களுக்குக் கூட விவாகரத்துக் கோரி நீதிமன்றங்களை நாடும் தன்மை அதிகரித்துக் காணப்படுகிறது.

இலங்கையில் திருமணங்களைச் சட்ட ரீதியாகப் பதிவு செய்ய திருமணப் பதிவுக் கட்டளைச் சட்டம் காணப்படுகின்றது. அந்நியதிச் சட்டத்தின் கீழ் பதிவுத் திருமணம் செய்தால் அதேநியதிச் சட்டத்தின் கீழ் விவாகரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு என்னென்ன காரணங்கள் இருக்கின்றதோ அக் காரணங்களின் அடிப்படையில் நீதிமன்றத்திற்கு விண்ணப்பித்து, நீதிமன்றத்தின் ஊடாக விவாகரத்தை பெற முடியும்.

உரிய வயது வந்த (வயது 18) ஒரு பெண்ணும் ஆணும் தாம் விரும்பியவாறு திருமணத்தில் இணையலாம். அதற்கு நீதிமன்றத்தின் அனுமதி தேவையில்லை. ஆனால், பதிவு செய்த திருமணத்தைக் முடிவுக்குக் கொண்டு வருவதாக இருந்தால் கணவன், மனைவி இருவரும் தமக்குள் எந்த உடன்படிக்கை மூலமும் பிரிந்து செல்ல முடியாது. அதற்கு அதிகாரமுள்ள மாவட்ட நீதிமன்றத்திலேயே விவாகரத்துக் கோர முடியும்.

தற்காலத்தில் யாழ்ப்பாணத்தில் விவாகரத்துக்கள் அதிகரித்துச் செல்வதனை அறிய முடிகின்றது. இங்கு 'யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான விவாகரத்துக்கள் யாழ்ப்பாணத்திலுள்ள மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்திலே தாக்கல் செய்யப்படுகின்றன எனவும் கடந்த இரு வருடங்களில் (2018, 2019) பல்வேறு காரணங்களின் அடிப்படையில் மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தில் பெருமளவு விவாகரத்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன' எனவும் மல்லாகம் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணி றெஜினோல்ட் றோய் டிலக்சன் தெரிவித்தார்.

இலங்கைத் திருமணப் பதிவுக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒரு விவாகரத்தைக் பெற்றுக் கொள்வதற்கு முக்கிய மூன்று காரணங்கள் காணப்படுகின்றன. 'வன்ம உறவறுப்பு' அதாவது கணவனும் மனைவியும் திருமணப் பதிவு செய்தபின், யாராவது ஒருவர் அத் திருமணத்தை முடிவுக்குக் கொண்டுவரும் எண்ணத்துடன் செயற்பட்டால் மற்றவருக்கு இச் செயற்பாட்டைச் செய்பவர் தன்னை வன்மமாக உறவறுக்கிறார் என்றகாரணம் எழும்.

அதன் நிமித்தம் விவாகரத்துப் பெற்றுக்கொள்ளமுடியும். 2018ஆம் ஆண்டு வன்ம உறவறுப்பு வழக்கின் கீழ் மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தில் 179 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. அதேபோல், 2019ஆம் ஆண்டு 160 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.

வன்ம உறவறுப்பிற்குப் பல காரணங்கள் உண்டு. கணவரிற்கு மனைவியைப் பிடிக்கவில்லை என்றால் அவரை விவாகரத்துச் செய்வதற்காக ஒரு போலிக் குற்றச்சாட்டை முன்வைப்பதன் மூலம் அல்லது 'விலகிப் போனால் போதும்' என்ற நிலைமைக்கு ஆளாக்குவதற்காக கொடுமைகளைச் செய்தல் என்பன வன்ம உறவறுப்பின் கீழ் அடங்கும்.

மேலும், தாம்பத்திய உறவை கணவன், மனைவி எவரேனும் நியாயமில்லாமல் மறுக்கும்போது அதுவும் வன்ம உறவறுப்பாகக் கருதப்படும். இவ்வாறான செயற்பாடுகளை யார் செய்கிறாரோ அவரிடமிருந்து குற்றமற்ற தரப்பு வன்ம உறவறுப்பு செய்தார் என வழக்கைத் தாக்கல் செய்தால் நீதிமன்றம் குற்றமற்றவருக்கு விவாகரத்தைக் கொடுக்கும்.

அடுத்ததாக 'சோர வாழ்க்கை' என்பதன் ஊடாகவும் விவாகரத்தைப் பெற அதிகம் முயற்சிக்கப்படுகின்றது. ஒரு திருமணம் நிகழ்ந்த பின் கணவனோ மனைவியோ திருமணத்திற்கு அப்பால் வேறு யாருடனும் உடலுறவு வைத்துக் கொள்ளுதல் சோர வாழ்க்கை ஆகும்.

யார் சோரத்தில் ஈடுபட்டாரோ அவர் மீது சோரமில்லாத குற்றமற்றவர் விவாகரத்தைப் பெறுவதற்குத் தகுதி உள்ளவராகிறார். 2018ஆம் ஆண்டில் 11 சோர வாழ்க்கை வகையின் கீழ் மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. அதேபோல், 2019ஆம் ஆண்டில் 08 வழக்குகள் இவ்வகையின் கீழ் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.

'இயலாமை' என்ற வகைக்குள்ளும் விவாகரத்தைப் பெற சட்டத்தில் வழியுண்டாகின்றது. இதனுள் ஆண்மைக் குறைபாடு, தாய்மையடைய முடியாத நிலை என்பன உள்ளடங்கும். திருமணத்தில் உடலுறவு கொள்ள முடியாத நிலை கணவன், மனைவி இருவரில் ஒருவருக்கேனும் இருந்தால் அது இயலாமையாகக் கருதப்படும். 2018, 2019ஆம் ஆண்டுகளில் இவ் வகையின் கீழ் இரண்டு வழக்குகள் மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.

இப் பிரதான மூன்று வகைக் காரணங்களைத் தவிர 'குடியியல் நடைமுறைச் சட்டக்கோவை 608(2) (டி)' என்ற வகையின் கீழும் விவாகரத்து வழக்குத் தாக்கல் செய்யப்படுகின்றன. அதாவது 07 வருடங்களுக்குக் குறையாமல் கணவனும் மனைவியும் உணவு, உறக்கம் எதுவும் இல்லாமல் பிரிந்து இருந்தால் வழக்குத் தாக்கல் செய்து விவாகரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.

2018ஆம் ஆண்டில் இவ் வகையின் கீழ் ஆறு வழக்குகளும், 2019ஆம் ஆண்டில் இரண்டு வழக்குகளும் மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. ஒட்டுமொத்தமாக 2018ஆம் ஆண்டில் 198 விவாகரத்து வழக்குகளும், 2019ஆம் ஆண்டில் 172 விவாகரத்து வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.

'கணவன் மனைவிக்கு இடையே சரியான புரிந்துணர்வு இன்மை,கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதால் இருவரும் ஒன்றாகச் செலவிடும் நேரம் குறைதல், போதிய தொடர்பாடல் இன்மை மற்றும் கணவன் மனைவிக்கு இடையில் சமூக ஊடகங்களின் செல்வாக்கால் ஏற்படும் குடும்பப் பிணக்குகள் என்பனவே அதிகரித்து வரும் விவாகரத்துக்கான காரணம்' என்கிறார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறைத் தலைவரும் உளவியலாளருமான அபிராமி ராஜ்குமார்.

30 தொடக்கம் 40 வயதுக்கு இடைப்பட்டவர்களே அதிகமாக விவாகரத்தை கோருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார். முன்பு மக்கள் சமூகத்தோடு ஒன்றித்து இருந்தனர். ஆகவே, கணவன் மனைவிக்கிடையே புரிந்துணர்வு காணப்பட்டது. அவ்வாறான நிலைமை இன்றில்லாமையாலும் விவாகரத்துக்கள் அதிகரித்துள்ளன எனலாம். அதுமட்டுமல்லாமல்,விருப்பத்திற்கு மாறான கட்டாயத் திருமணங்களும் ஒரு காரணம் எனலாம்.

மேலும், தற்காலத்தில் சமூக ஊடகங்களின் தாக்கமும்,மேலைத்தேய கலாசாரத்தின் தாக்கமும் அதிகரித்து வரும் விவாகரத்திற்கான ஒரு காரணமாக நோக்கப்படுகின்றது.

'குடும்ப வாழ்க்கையில் முன்பு எவ்வளவுதான் ஒற்றுமையாக இருந்தாலும் விவாகரத்துப் பெற்ற பின்னர் கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் எதிரிகளாகவே பார்க்கப்படுகின்றனர். இதன் மூலம் தங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி அவர்கள் பெரிதும் சிந்திப்பதில்லை என்றே கூறலாம்.

விவாகரத்து ஆகும்போது பதினெட்டு வயதிற்குக் கீழ்ப்பட்ட பிள்ளைகள் இருக்கும்போது அப் பிள்ளைகள் யாரிடம் வளர வேண்டுமென்பதை நீதிமன்றம் தான் தீர்மானிக்கும். பொதுவில் பெண் பிள்ளைகளுக்குப் பதினெட்டு வயதைக் கடந்த பின்னர் அது பிள்ளையினுடைய விருப்பமாகக் காணப்படும்.

பிள்ளை யாருடன் வாழ விரும்புகிறதோ அவர்களுடன் செல்வதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்குகிறது. மேலும் பிள்ளைகளுக்குப் பதினெட்டு வயது வரும் வரை கணவரால் பராமரிப்புச் செலவு என ஒரு தொகைப் பணம் மாதந்தோறும் மனைவிக்கு வழங்கப்பட வேண்டும். இது நீதிமன்றத்தின் உத்தரவு ஆகும்.

மேலும் விவாகரத்துப் பெற்றவர்களின் பிள்ளைகள் சமூகத்தால் கேலி கிண்டல் செய்யப்படும் தன்மையும், சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத தன்மையும் காணப்படுகின்றன. 'எனவும் மல்லாகம் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணி றெஜினோல்ட் றோய் டிலக்சன் தெரிவித்தார்.

ஆனால், மேலைத்தேய நாடுகளில் விவாகரத்திற்குப் பின்னரும் தங்களுடைய பிள்ளைகளின் நலன்களிலும் அவர்களின் விடயங்கள் தொடர்பிலும் பெற்றோர் கலந்தாலோசிக்கின்றமையை அவதானிக்கலாம். எது எவ்வாறிருந்தாலும், தமிழ்ப் பண்பாட்டின் விளைநிலம் எனப் போற்றப்படும் மண்ணில் விவாகரத்து அதிகரிப்பது ஆரோக்கியமானதா என்ற கேள்வி பலமாகவே எழுகின்றது.

அ.ரோகினி,
இரண்டாம் வருடம்,
ஊடகக் கற்கைகள்துறை,

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 

நன்றி தினகரன் 

No comments: