நெஞ்சார இறைவேண்டி வாழ்த்திடுவோம் வாரீர் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா

அம்பியின் பாட்டு அமுதான பாட்டு
 தம்பிக்கும் தங்கைக்கும் நம்பிக்கைப் பாட்டு
பண்போடு தமிழ்மணக்கப் பரிமளிக்கும் பாட்டு
பக்குவமாய் பலவற்றை பகிர்ந்தளிக்கும்  பாட்டு !

மழலைக்குப் பாட்டெழுதும் மாகவிஞர் அம்பி
அவர்பாடும் அழகாலே அகமகிழ்வார் சிறுவர்
அம்பிபாட்டு அவர்களுக்கு ஆனந்தம் அளிக்கும்
அனவருமே அம்பிவாழ வாழ்த்திடுவோம் வாரீர் ! 

தொட்டவுடன் தமிழ்மணக்கும் சுந்தரமாம் பாட்டு
கட்டழகுச் சொற்களுடன் கலகலக்கும் பாட்டு
இட்டமுடன் படிப்பதற்கு ஏற்றதமிழ்ப் பாட்டு
இன்பமுடன் என்னாளும் அம்பிவாழ்க என்போம்  !

ஆங்கிலமும் அருந்தமிழும் அகமிருத்தும் அம்பி
அனைவருக்கும் பிடித்தமுடன் பலபடைக்கும் அம்பி
பாங்காக எழுத்ததனை கையாளும் அம்பி
பார்மீது பலநலனும் பெற்றுமே  வாழ்க ! 

விஞ்ஞான ஆசானாய் மிளிர்ந்திட்டார் அம்பி
மேதினியில் பலநாடு கண்டாரே அம்பி
எஞ்ஞான்றும் இன்தமிழை உளங்கொண்டார் அம்பி
இவ்வுலகில் அம்பிவாழ வாழ்த்திடுவோம் நாளும் ! 

ஆங்கிலத்தில் கவிபுனையும் ஆற்றல்மிகு அம்பி

ஆனந்தம் அகமகிழ்வு பெறவேண்டும் வாழ்வில்
நீள்புவியில் நீண்டசுகம் பெறவேண்டும் என்று
நெஞ்சார இறைவேண்டி வாழ்த்திடுவோம் வாரீர்  !

No comments: