சந்தர்ப்பங்கள் மனிதர்களை உருவாக்கும் . மனித வாழ்வையும் சந்தர்ப்பங்கள் திசை திருப்பிவிடும். என்று இந்தத் தொடரில், கடந்த 28 ஆம் அங்கத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
இலக்கியத்திலும் ஊடகத்துறையிலும் எனக்கு கிட்டிய சந்தர்ப்பங்களைப்போலவே அரசியலிலும் சில எதிர்பாராத சந்தர்ப்பங்கள் குறுக்கிட்டஎனது வாழ்க்கையில் திருப்பங்களை சந்திக்கநேர்ந்தது.
1970 இல் ஶ்ரீமாவோ தலைமையில் கூட்டரசாங்கம் அமைந்தபின்னர், எங்கள் ஊரில் அவரது ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இளைஞர் அணியினால் அவரது மகன் அநுரா பண்டாரநாயக்காவுக்கு மாபெரும் வரவேற்பு வழங்கப்பட்டது.
அநுரா இரண்டு பிரதமர்களின் மகன் என்ற வாரிசு அந்தஸ்தை மாத்திரம் மூலதனமாக வைத்துக்கொண்டு அரசியல் பிரவேசம் செய்தவர். அவருக்கு அச்சமயம் 23 வயது. எங்கள் ஊரின் நகர மத்தியிலிருந்து கடற்கரைக்கு சமீபமாகவிருக்கும் முற்றவெளிவரையில் அநுரா ஊர்வலமாக அழைத்துவரப்பட்டார்.
அந்தச்செய்தியை எழுதுவதற்காக முற்றவெளிக்குச்சென்று அங்கே அமைக்கப்பட்டிருந்த மேடையில் நிருபர்கள் வரிசையில் அமர்ந்தேன்.
எனது பாடசாலையில் ஓவியப்பாடம் கற்பித்த ரஸாக் மாஸ்டர் தமது வீட்டில் டொலர் ஸ்ரூடியோ நடத்திக்கொண்டு, ஒளிப்படம் எடுப்பதையும் பகுதி நேரத்தொழிலாக மேற்கொண்டிருந்தார்.
ஊர்வலத்தில் வந்த அநுராவை அவர் மாலைகள் சகிதம் படம் எடுத்துக்கொண்டு தாமதிக்காமல் வீட்டுக்குச்சென்று, அதன் நெகடிவ்வை கழுவி, பெரிதாக பிரிண்ட் எடுத்துக்கொண்டு, முற்றவெளி மேடைக்கு வந்தார்.
அநுராவிடத்தில் அந்தப்படத்தில் கையொப்பம் வாங்குவதுதான் அவரது நோக்கம். மேடையைச்சுற்றி அநுராவின் ஆதரவாளர்கள் மொய்த்துக்கொண்டு நின்றனர்.
அந்தப்படத்தை வாங்கி, அநுராவிடம் நீட்டியபோது, அவர் ரஸாக் மாஸ்டரை அருகில் அழைத்து, தனக்கும் ஒரு பிரதிவேண்டும் என்றார்.
அந்தப்படத்தில் அநுரா அழகிய தோற்றத்திலிருந்தார். அரசியலுக்கு புதியவரான அவரது பேச்சில் அனுபவம் தொனிக்கவில்லை. .
அவரது தாயாருடன் அரசில் இணைந்திருந்த இரண்டு
இடதுசாரிக்கட்சிகளையும் அன்றைய வெற்றி மமதையில், மறைமுகமாகத் தாக்கினார். மேடையிலிருந்த நீர்கொழும்பைச்சேர்ந்த சில இடது சாரிகளுக்கு அந்தப்பேச்சு உவப்பாக இல்லை.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மகளிர் பிரிவுத்தலைவி நந்தா டீ சில்வாவின் கணவர், சில்வாவின் காதுக்குள் கிசுகிசுத்தனர்.
அந்தத் தம்பதியரை ஏற்கனவே கொழும்பு பொரளை கொட்டா வீதியில் அமைந்துள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் சந்தித்திருக்கின்றேன்.
அங்கிருந்துதான் புதுயுகம், தேசாபிமானி பத்திரிகைகளும் அத்த ( உண்மை ) சிங்கள நாளேடும் வெளிவந்தன. அக்காலப்பகுதியில்தான் எனது மூன்றாவது சிறுகதை தரையும் தாரகையும் புதுயுகத்தில் வெளிவந்தது. அதன் ஆசிரியர் குழுவில் பிரேம்ஜி ஞானசுந்தரன், மு. கனகராஜன், பி. இராமநாதன் ஆகியோர் அங்கம் வகித்தனர்.
அநுரா பேசிய எங்கள் ஊர்மேடையிலிருந்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி இளைஞர் அணியைச்சேர்ந்தவர்கள் தமது அதிருப்தியை தோழர் சில்வாவிடம் இரகசியமாக சொன்னார்கள்.
“ இது பொது மேடை. இங்கே எதுவும் பேசவேண்டாம். நாம் நிதானமாக
இருக்கவேண்டும். நாளை எனது வீட்டுக்கு வாருங்கள். அங்கே பேசிக்கொள்வோம் “ என்று சொன்ன தோழர் சில்வா, என்னையும் வருமாறு அழைத்தார்.
நானும் செய்திவேட்டையை கவனத்தில்கொண்டு, மறுநாள் அங்கே சென்றேன். அவரது வீடு கட்டுநாயக்காவில் கொழும்பு வீதியில் அமைந்திருந்தது. அவரது வீட்டருகில்தான் கம்யூனிஸ்ட் கட்சியின் சிங்கள நாளேடு அத்த ( உண்மை ) பத்திரிகையில் பணியாற்றிய தோழர் அபயகுணசேகரா வசித்தார். அவரும் அவரது தம்பியும் இடதுசாரிச்சிந்தனை கொண்டவர்கள்.
கே. எம். பி. இராஜரட்ணா, ஆர். ஜீ. சேனாநாயக்கா போன்ற சிங்கள கடும்போக்காளர்களுக்கு எதிராகவெல்லாம் என்னுடன் பேசுவார்கள்.
இவ்வாறு இடதுசாரிகளுடன் ஏற்பட்ட தொடர்பு, பின்னாளில் எனது வாழ்க்கையையும் திசைதிரும்பியது.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசிய சபை
உறுப்பினராகி, அதன் எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகத்தில் முழுநேர ஊழியராகி, இறுதியில் சங்கத்தின் கொழும்புக்கிளையின் செயலாளராகி, 1987 இல் புலம்பெயரும் வரையில் இந்த அமைப்புகளுடன் நெருக்கமாகவே இருந்தேன்.
கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் தோழர்- மருத்துவர் எஸ். ஏ. விக்கிரமசிங்காவுக்கு 70 வயது வந்தபோது, தார்ஸ்டன் கல்லூரி மண்டபத்தில் கட்சி பெருவிழாவை நடத்தியது.
அவரது இல்லமும், கட்சித்தலைமையகத்திற்கு அருகில்தான் அமைந்திருந்தது. கலாநிதி என். எம். பெரேரா, பேராசிரியர் சிவத்தம்பி ஆகியோரின் வீடுகளும், அதே கொட்டா வீதியில் அருகருகே அமைந்திருந்தன.
இங்கெல்லாம் செல்லநேர்ந்திருக்கிறது. தோழர் எஸ். ஏ. விக்கிரமசிங்காவை சந்தித்து நேர்காணல் எழுதித்தருமாறு மல்லிகை ஆசிரியர் கேட்டவாறு, அவரை ஒரு நாள் சந்தித்துப்பேசி எழுதினேன்.
கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழுவிலிருந்த ஸி. குமாரசாமியின் தம்பி மாணிக்கவாசகர் கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றினார். அவரும், அதிபர் மகேசன், துணை அதிபர் நடராஜா, ஆசிரியர் சிவராஜா ஆகியோரும் கம்யூனிஸ்ட் கட்சியைச்சேர்ந்தவர்கள். இவர்கள் கொழும்பு மத்தியிலிருந்து தெரிவாகும் தோழர் பீட்டர் கெனமனின் தீவிர ஆதரவாளர்கள்.
இடையில், இக்கட்சிக்குள்ளும் ஒரு மகாநாட்டின்போது பிளவு தோன்றியது. தீவிரவாதப்போக்குள்ளவர்கள் எஸ். ஏ. விக்கிரமசிங்கா அணியிலும், மிதவாதபோக்கு கொண்டவர்கள் பீட்டர் கெனமன் அணியிலும் இணைந்தனர்.
இதனால், எமது எழுத்தாள நண்பர்களுக்கிடையிலும் முரண்பாடுகள் தோன்றின.
பிரேம்ஜி, அகஸ்தியர், பி. இராமநாதன் முதலானோர் மிதவாத அணிக்கும், டொமினிக்ஜீவா, வி. பொன்னம்பலம், அ. வயித்திலிங்கம், குமாரசாமி, விஜயானந்தன், முதலான பலர் விக்கிரமசிங்கா அணிக்கும் வந்துவிட்டனர்.
எமது ஊரில் தமிழ் இளைஞர்களையும் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைக்கும் நோக்கத்துடன், தோழர்கள் இந்திகா குணவர்தனாவும் சிங்கநாயகமும் எமது வீட்டுக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்திகா, தற்போதைய வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனாவின் சகோதரன்.
( இந்திகாவின் மனைவி எங்கள் ஊர் பொதுமருத்துமனையில் டாக்டராக பணியாற்றினார். பிலிப்குணவர்தனாவின் மக்கள்தான் இந்திக்காவும் – தினேஷும். )
அது மக்கள் கித்துல் கருப்பட்டியுடன் தேநீர் அருந்திய காலம். அவர்கள் இருவரும் மட்டுமல்ல, பல அரசியல் தலைவர்களும் அவ்வாறு அருந்தியதை நேரில் பார்த்திருக்கின்றேன்.
மக்களை மரவள்ளிக்கிழங்கு பயிரிடுமாறு சொல்லப்பட்ட காலம்.
கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு தோன்றியபோது, எனது எழுத்தாள
நண்பர்கள் மத்தியில் கருத்து ரீதியிலான நிழல் யுத்தம்தான் நடந்துகொண்டிருந்தது.
ஆசிரியர் மாணிக்கவாசகர், என்னை இந்தக்குழப்பங்களுக்குள் சிக்காமல் சங்கத்தின் பணிகளை கவனிக்கச்சொன்னார்.
பொரளை தலைமையகத்தை விக்கிரமசிங்கா அணி கைப்பற்றியது. பீட்டர் அணி, வேறு ஒரு இடத்தில் காரியாலயம் திறக்கநேர்ந்தது. அந்தப்பிளவு நீடித்திருக்கவில்லை.
பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்காவின் வெறுப்பூட்டும் பேச்சுக்களினால், நிதி அமைச்சர் - இரட்டைக் கலாநிதி என். எம். பெரேரா, தனது பொக்கட்டுக்குள் அரசை விட்டு வெளியேறுவதாக எழுதப்பட்ட கடிதத்தை சில மாதங்கள் கொண்டு திரிந்தார்.
நாடாளுமன்றில் பீலிக்ஸை, அவர் சைத்தான் என்றும் வர்ணித்தார்.
இந்த அமளிகளுக்கு மத்தியில் எனக்கு வருமானம் தேடித்தரவேண்டும் என்ற நோக்கத்தில் ஆசிரியர் மாணிக்கவாசகர், தான் அங்கம் வகித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வெளியீடான ஆசிரியர் குரல் பத்திரிகையில் சேர்த்துவிட்டார்.
அந்தப்பத்திரிகை சிங்களத்தில் குருஹண்ட என்ற பெயரிலும் ஆங்கிலத்தில் Teachers Voice என்ற பெயரிலும் வெளியானது. அச்சங்கத்தின் தலைவர் எச். என். பெர்னாண்டா, செயலாளர் சித்ரால். எனக்கு மாதம் 150 ரூபா வேதனம் தந்தார்கள்.
இந்தத் தொழிற்சங்கம் மலேவீதியில் கல்வி அமைச்சிற்கு சமீபமாகவிருந்தது. அதற்கு முன்னால் பரீட்சைத்திணைக்களம் இயங்கியது.
குறிப்பிட்ட மலே வீதியில் தோழர் சண்முகதாசனின் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கம் உட்பட பல சங்கங்கள் இயங்கின. அவற்றுக்கு வசதியாக ஒரு சிங்கள அன்பர் நடத்திய அச்சகமும் அவ்விடத்திலிருந்தமையால், அனைத்து இடதுசாரிகளையும் அங்கே காணமுடியும். அவர்கள் தமது கட்சி பிரசுரங்களை அச்சிட அங்கே வருவார்கள். அங்குதான் பிரின்ஸ் குணசேகரா, தினேஷ் குணவர்தனா, இந்திகா குணவர்தனா, குமாரி ஜயவர்தனா, சண்முகதாசன், வாசுதேவ நாணயக்கார, வஜிர பெல்பிட்ட, ஆகியோரையும் சந்திக்கமுடிந்தது.
தமிழ்ப்பிரசுரங்கள் அச்சிடும்போது, அவற்றை ஒப்புநோக்கி கொடுப்பேன். 1971 ஏப்ரில் கிளர்ச்சியில் ஈடுபட்டு சிறை சென்றவர்களை விடுவிக்கக்கோரும் இயக்கத்திலும் இணைந்திருந்தபோது நான் பல சுவரொட்டிகளை தமிழில் எழுதிக்கொடுத்தேன்.
ஒருநாள் எழுதிக்கொண்டிருந்தபோது எனது கண்ணில் சிவப்பு மைத்துளி விழுந்து அவஸ்தைப்பட்டபோது ஒரு சிங்கள சகோதரி எனக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார்.
அந்தச்சம்பவம் பற்றி கண்ணுக்குள் சகோதரி என்ற கட்டுரையை பின்னாளில் ( அவுஸ்திரேலியா வந்த பின்னர் ) எழுதியிருக்கின்றேன். அதனை தமிழ்நாடு யுகமாயினி இதழில் படித்திருக்கும் தமிழ்நாடு திராவிட இயக்கப்பேரவையைச்சேர்ந்த பேராசிரியர் சுப. வீரபாண்டியன் கலைஞர் தொலைக்காட்சியில் சிலாகித்துப்பேசியிருந்தார்.
புனைவு சாராத இந்த இலக்கியமும் இடம்பெற்றநூல்தான் எனது சொல்லமறந்த கதைகள் தொகுதி.
இலங்கை ஆசிரியர்சங்கமும் இடது சாரி சிந்தனையுடன் தீவிர நிலைப்பாட்டை எடுத்தது. இச்சங்கம் அன்றைய அரசிலிருந்த இரண்டு பிரதான இடது சாரிக்கட்சிகளையும் விமர்சித்தது.
ஆசிரியர்களின் பொது வேலைநிறுத்தப்போராட்டம் தொடங்கியது. அச்சங்கத்தின் யாழ். கிளையிலிருந்த எனது எழுத்தாள நண்பர்கள் சட்டநாதன், என். கே. ரகுநாதன் மற்றும் கொழும்பில் சிவராசா, ஷம்ஸ் ஆகியோருட்பட பலர் வேலை இழந்தார்கள்.
தோழர் எம். ஏ. காதர் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பணிமனைக்கு அடிக்கடி வருவார். அவரிடம்தான் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை பற்றி நான் தெரிந்துகொண்டேன். அவர் ஆசிரியர் சங்கத்தில் அவ்வப்போது சுயநிர்ணய உரிமை பற்றி உரையாற்றுவார். பின்னாளில் ஜே.ஆரின் ஆட்சிக்காலத்தில் இவரும் சிறையில் தடுத்துவைக்கப்பட்டார். தற்போது காதர் லண்டனில் வசிக்கிறார்.
ஆசிரியர் சங்கத்தின் மகாநாடு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் 1977 தொடக்கத்தில் நடந்தபோது, அந்தத் தேர்தலில், இடதுசாரி ஐக்கிய முன்னணி என்ற கூட்டமைப்பில் இணைந்திருந்த இரண்டு பிரதான இடதுசாரிக் கட்சிகளையும் ஆதரிப்பதில்லை என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த மகாநாட்டுக்கும் ஆசிரியர் சங்கத்தோழர்களுடன் சென்றிருந்தேன். அவர்களின் அந்தத் தீர்மானம் என்னை கட்டுப்படுத்தவில்லை. நான் அச்சங்கத்தில் அங்கம்வகிக்காமல் ஊழியனாகத்தான் பணியேற்றிருந்தேன்.
தென்னிலங்கையில் இடதுசாரி ஐக்கிய முன்னணிக்கு ஆதரவாக மேடைகளில் பேசினேன். இதுபற்றியும் எனது சொல்லமறந்த கதைகள் நூலில் விரிவாக எழுதியிருக்கின்றேன்.
யூ.என். பி. வந்தாலும், ஶ்ரீலங்கா வந்தாலும் ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே… என்று அந்த மேடைகளில் பாடினேன். அதன் மொழிபெயர்ப்பை மேடையிலிருந்த சிங்களத் தோழர்களுக்கும் சொல்லநேர்ந்தது. அந்தப்பாடலுக்கான மெட்டு துலாபாரம் திரைப் படத்திலிருக்கிறது.
அந்தத்தேர்தலில் அனைத்து இடதுசாரிகளும் படுதோல்வியடைந்தனர். எங்கள் ஊர் யூ. என்.பி. ஆதரவாளர்கள் எனது வீட்டுக்கு அருகில் வெடிகொளுத்தி குத்தாட்டம் போட்டனர்.
எங்கள் வீட்டில், “ என்ன… உனது இடதுசாரிகள்… சரிந்துவிட்டனர் “ என்று என்னை கேலி செய்தனர்.
அவர்கள் தர்மிஸ்டரின் கட்சியை ஆதரித்து வாக்களித்தவர்கள்.
“ பொறுத்திருங்கள்… தர்மிஸ்டரின் தார்மீக ஆட்சியை பொறுத்திருந்து பாருங்கள் “ என்றேன். அதனை நானும் அவர்களும் அதே ஆண்டு – ( 1977 ) கலவரத்தின்போது பார்த்தோம்.
ஜே.ஆர், குற்றவியல் நீதி ஆணைக்குழுவை இரத்துச்செய்தார். அதனைச்செய்வதற்கு அவரிடம் நிறைவேற்று அதிகாரம் இருந்தது.
சிறையிலிருந்த மக்கள் விடுதலை முன்னணி தோழர்கள் அனைவரும் விடுதலையானார்கள்.
நாம் ஆரம்பித்திருந்த அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கை பற்றி, முன்னைய அங்கம் ஒன்றில் எழுதியிருந்தேன்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தில்தான் மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகர்கள் தோழர்கள் ரோகண விஜேவீரா, லயனல் போப்பகே ஆகியோரைச்சந்தித்தேன். அவர்களின் இயக்கம் ஃபீனிக்ஸ் பறவையைப்போன்று எழுச்சிகண்டது.
பின்னாளில் ரோகணவிஜேவீரா, ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எச். என். பெர்ணான்டோவின் தங்கை ஶ்ரீமதி சித்ராங்கனியை திருமணம் செய்தார்.
மீண்டும் அந்த இயக்கம் கிராமமட்டத்திலும் நகர மட்டத்திலும் இயங்கியது. விஜேவீரா நாடெங்கும் சென்று பிரசாரம் செய்தார்.
அவரது பேச்சைக்கேட்க மக்கள் அலையகத்திரண்டார்கள். ஒரு சொட்டுத்தண்ணீரும் பருகாமல் தொடர்ச்சியாக இரண்டு மணித்தியாலத்திற்கு மேலும் பேசும் ஆற்றல் மிக்கவர்.
ஒருநாள் வீரகேசரி வாயிலிலிருந்த பாதுகாவலர் அறையிலிருந்து, யாரோ என்னைப்பார்க்க வந்திருப்பதாக தகவல் வந்தது.
சென்று பார்த்தால் தோழர் லயனல்போப்பகே.
அவரிடம் பாதுகாவலர் பெயரைக்கேட்டதும், அவர் தமது உண்மைப்பெயரை சொல்லவில்லை. அவரது பெயர் வீரகேசரியில் குற்றவியல் ஆணைக்குழுவின் விசாரணைக்காலத்தில் அடிக்கடி எழுதப்பட்ட பெயர். நன்கு பிரபலமான பெயர். அந்தச்செய்திகளை அளுகர்தீன் என்ற நிருபர்தான் எழுதிவந்தார்.
தங்கள் மக்கள் விடுதலை முன்னணி இலங்கை ஆசிரியர் சங்கம்போன்று மும்மொழியிலும் பத்திரிகை நடத்தவிருப்பதாகவும் அவற்றுக்கு இயக்கத்தின் மத்திய குழு பெயர்களை சூட்டியிருப்பதாகவும் தனியே அழைத்துச்சென்று மெதுவாகச்சொன்னார்.
ரது பலய – Red power - செஞ்சக்தி
தமிழ் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் நானும் இணையவேண்டும் என்றார்.
சமசமாஜக்கட்சியும் வாசுதேவா – விக்கிரமபாகுவால் பிளவு கண்டிருந்தது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் விரிசல் தோன்றியது. வி. பொன்னம்பலம் தலைமையில் செந்தமிழர் இயக்கம் தொடங்கியிருந்தது.
மல்லிகை ஜீவா அச்சமயம் வி. பொன்னம்பலத்தை விமர்சித்தார். தமிழகத்திலிருந்து கொழும்புக்கு வருகை தந்திருந்த கம்யூனிஸ்ட், கட்சித்தலைவரும் ஜனசக்தி ஆசிரியருமான தோழர் எம். கல்யாணசுந்தரத்தை , தோழர் வி. பொன்னம்பலம் சந்திப்பதை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மறைமுகமாக தடுத்திருந்தது.
கல்யாணசுந்தரம் கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் உரையாற்றினார். அச்சமயம்தான் இலங்கை – இந்திய கூட்டுத்தயாரிப்பான சிவாஜி – மாலினி பொன்சேக்கா – நடித்த பைலட் பிரேம்நாத் படப்பிடிப்புகள் கொழும்பில் நடந்தன.
அதில் தங்களுக்கும் நடிப்பதற்கு சந்தர்ப்பம் கிட்டவில்லை என்று கொழும்பு வாழ் மேடை நாடக நடிகர்கள் பத்திரிகைகளில் புலம்பத்தொடங்கியிருந்தனர்.
தோழர் கல்யாணசுந்தரம் அதனையெல்லாம் படித்துவிட்டு, “ அது கூட்டுத்தயாரிப்பு அல்ல, கூட்டுக்கொள்ளை “ என்று வீரகேசரிக்கு பேட்டி கொடுத்தார்.
தோழர் லயனல்போப்பகே சிறந்த எழுத்தாளர். கவிஞர் – பாடகர். சிறையிலிருந்தகாலத்தில் அவர் எழுதிய பாடல்கள் சிலவற்றை தமிழில் மொழிபெயர்த்துக்கொடுத்தேன். அவர் தோழி சித்ராவை காதலித்து மணமுடித்தார். சித்ராவும் சிறந்த பாடகி. இவர்களின் பதிவுத்திருமணம் மிகவும் எளிமையாக நடந்தது. ரோகண விஜேவீரா சாட்சிக்கையொப்பம் வைத்தார். அந்தத் திருமணத்திலும் கலந்துகொண்டேன்.
இலங்கை எங்கும் மக்கள் விடுதலை முன்னணியின் விடுதலைக்கீதம் இசை நிகழ்ச்சி பல்லாயிரம் மக்கள் மத்தியில் தொடர்ந்து மேடையேறியது.
அவற்றில் குறிப்பிடத்தகுந்த பாடல்கள், வேலுப்பிள்ளை அண்ணா என்னை மன்னிப்பாய் – மனம்பேரி தோழியே – மனம்பேரி கதிர்காமத்தில் அழகுராணியாகத் தெரிவானவர். 1971 ஏப்ரிலில் அவரும் கைதாகி மானபங்கப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார்.
தோழி மனம்பேரி பற்றி பல கட்டுரைகளும் கங்கை மகள் என்ற சிறுகதையும் எழுதியிருக்கின்றேன்.
இவ்வாறு படிப்படியாக நான் பழைய இடதுசாரிகளிடமிருந்து விடுபட்டு, மக்கள் விடுதலை முன்னணி தோழர்களுடன் நெருக்கமானேன்.
எனினும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மாஸ்கோ அணி – பீக்கிங் அணிகளிலும், காலப்போக்கில் பீக்கிங் அணியிலிருந்து பிரிந்த புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியிலும் அதிலிருந்து பிரிந்த மாக்சிஸ – லெனினிஸ கட்சியிலிருந்த இலக்கியவாதிகள் , கவிஞர்களுடனும் எனது நட்புறவை தொடர்ந்தும் பேணி வந்தேன்.
“ இதயம் இருப்பவன் இடதுசாரி “ என்று கவிஞர் பல்கலைவேந்தன் சில்லையூர் செல்வராசன் அடிக்கடி சொல்வார்.
இதயமும் இடப்புறம்தான் இருக்கிறது !
( தொடரும் )
No comments:
Post a Comment