புகலிடத்தில் தமிழ்க்கல்வி - சாதனைகளும் சவால்களும் முருகபூபதி


 “ புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தமது இனத்தின் அடையாளம் பேண – தமது பிள்ளைகளுக்கு தமிழைப்பேசவும் பயிலவும் கற்பிக்கவேண்டும்  “ 
என்று நான் வதியும் அவுஸ்திரேலியாவில் சிட்னியில் இருக்கும் மூத்த கவிஞரும் இலங்கையில் முன்னர் ஆசிரியராக பணியாற்றியவருமான  அம்பி – என்ற அம்பிகைபாகர் சொல்லிவருகிறார்.

அவருக்கே இப்போது 90 வயதும் கடந்துவிட்டது.  அவரே மற்றும்


ஒரு சந்தர்ப்பத்தில்,   “ஓடிடும் தமிழா நில் நீ… ஒரு கணம் மனதைத்தட்டு, வீடு நின் னூருன் சொந்தம் விளைநிலம் நாடு விட்டாய், தேடிய தெல்லாம் விட்டுத் திசை பல செல்லும் வேளை, பாடிய தமிழை மட்டும் பாதையில் விட்டிடாதே…!  “  எனவும் கவிதை பாடிவைத்துள்ளார்.

 “தமிழர் இல்லாத தேசமும் இல்லை, தமிழருக்கென்று ஒரு தேசமும் இல்லை “ என்பார்கள்  தமிழ்த்தேசிய நேசர்கள் !

எனினும்,  தமிழர் புகலிடம்பெற்று வாழும் ஐரோப்பிய நாடுகளிலும் கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்திலும், சிங்கப்பூர், மலேசியாவிலும்  தமிழ் வாழ்ந்துகொண்டிருக்கிறது.

தமிழ்ப்பாடசாலைகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன.  பல்கலைக்கழக பிரவேசப்பரீட்சையில் தமிழையும் ஒரு பாடமாக கற்கும் வகையில் கற்கை நெறிகள் – பாடத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

சுமார் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் நான் வசிக்கும் அவுஸ்திரேலியாவில்  குடியேறிய ஈழத்தமிழர்களின் குழந்தைகளின் நாவில் தமிழும் தவழவேண்டும் என்பதற்காக பெரும் பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டதை அவதானிக்க முடிந்தது.


உதாரணமாக:  APPA அப்பா,  அப்பா என்றால் DADA, -  AMMA அம்மா என்றால் MAMMY , - POONAI -  பூணை என்றால் CAT என்ற பாங்கில் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கப்பட்டது.

பின்னர்,  அவர்களை நாவன்மை போட்டிகளுக்கு தயார்ப்படுத்தும்போது,  ஆங்கிலத்திலேயே VANAKKAM என்று தொடங்கி, தொடரும் உரையையும்  தமிழை   நேரடி ஆங்கிலத்திற்கு மாற்றி சொல்லிக்கொடுத்தார்கள்.  குழந்தைகள் தேவாரம், திருவாசகத்தையும் அவ்வாறே ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்டி பாடினார்கள். 

இது ஒரு காலம். ஆனால், இன்று நிலைமை முற்றாக மாறியிருப்பதுடன்,  எமது குழந்தைகள் நேரடியாக தமிழில் பேசவும் பயிலவும் தக்க முன்னேற்றங்கள் தோன்றிவிட்டன.

எமது தமிழ்க்குழந்தைகள்,  தாம் செல்லும் பாடசாலைகளில்  ஆங்கில மொழியையே பிரதானமூலமாகக்கொண்டு பாடங்களை கற்பதனாலும், ஆங்கிலச்சூழலில் வளர்வதனாலும், தாய்மொழி தமிழ் அவர்களுக்கு அந்நியமாகிவிடுவது இயல்பு.  இந்த நிலைமைதான் அய்ரோப்பிய நாடுகளில் வதியும் தமிழ்க்குழந்தைகளுக்கும் நேர்ந்துள்ளது.

புகலிடத்தில் வேர் பதித்து, வேண்டியன தேடும் போராட்டத்துடன்,   “இன அடையாளத்தை பேணவும்   “ விழிப்போடும் வேகத்துடனும் விவேகத்துடனும் இயங்கும் புலம்பெயர்ந்த தமிழ்மக்களின் குழந்தைகள் தமிழ் பேச – பயில வழிவதைகளை தேடும் அக்கறை மிக்கவர்களின் கடினமான அயராத  உழைப்பினால் பல ஆக்கபூர்வமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

புகலிட நாடுகளில் இயங்கும் தமிழ் அமைப்புகளின் தமிழ் விழாக்கள், தமிழ்ப்பாடசாலைகளின் மட்டத்தில் நடத்தப்படும் தமிழ் ஊக்குவிப்பு போட்டிகள், மற்றும் நாவன்மைப்போட்டிகளினாலும்  அந்தப்பணிகள் சாத்தியமாகிவருகின்றன.

2001 ஆம் ஆண்டில் இலங்கை, தமிழ்நாடு உட்பட பல தமிழர் புகலிட தேசத்து தமிழ் அறிஞர்களின் கூட்டு முயற்சியினால் தமிழ்வழி என்ற பெயரில்  கேட்டல் – பேசுதல் – வாசித்தல் முதலான படிமுறையில்  வளர்நிலை தகுதி அடிப்படையில் பாடத்திட்ட நூல்களும் பாடப்புத்தகங்களும் இறுவட்டுக்களும் வெளியாகி எமது தமிழ்க்குழந்தைகளின் தேவையை ஓரளவு பூர்த்திசெய்தன.

இப்பொழுதும் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பிள்ளைகள்,

Twinkle Twinkle little star.
How I wonder what you are.
Up above the world so high.
Like a diamond in the sky.

எனவும்,     Jack and Gill
                     Went up the hill
              To fetch a pail of water  எனவும் பாடிக்கொண்டிருக்கையில், புகலிடத் தமிழ்ச்சிறார்கள்,  “வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி  “ யும்,  ஓடிவிளையாடு பாப்பாவும், அச்சமில்லை, அச்சமில்லையும்  “ பாடிக்கொண்டிருக்கிறார்கள்.

மகாகவி பாரதியின் கனவு மெய்ப்படல்வேண்டும் என்பதற்காகவோ, ஈழத்தமிழர்களால்தான் உலகநாடுகளில்  “ தமிழ்க்கொடி பட்டொளி வீசிப்பறக்கும் என்பதற்காகவோ மாத்திரம் இச்சிறார்கள் தமிழை உச்சரிக்கவில்லை!

தாய்மொழிதான் ஒருவரின் இன அடையாளத்தை பேணும் என்பதனை இவர்கள் உணர்ந்துகொண்டார்கள். ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளை அறிவோம்.

ஒரே குடும்பத்தைச்சேர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்துவிற்கும் புலம்பெயர்ந்திருப்பின் – என்றாவது ஒரு நாள் இவர்களின் பிள்ளைகள் தாயகமாம் இலங்கையில் சந்திக்கநேரும்போது, எந்த மொழியில் பரஸ்பரம் பேசிக்கொள்வார்கள்…? என்ற கேள்வி எழுகிறது!

எனவே – இலகுவாக பேசிக்கொள்வதற்கு சிறந்த ஊடகமாக  தாய்மொழி தமிழே இவர்களுக்கு உதவும். இல்லையேல் உடலுறுப்புகளை அசைத்து உடல்மொழியால்தான் பேசநேரிடும்.

இதுபோன்ற பிரச்சினைகளை புகலிடத் தமிழர்கள் துல்லியமாக உணர்ந்தமையால், தமது சந்ததியினருக்கு தமிழை கற்பிப்பதில் தீவிர கவனம் செலுத்திவருகின்றனர். நான் வதியும் அவுஸ்திரேலியாவில் அனைத்து மாநிலங்களிலும் வாராந்தம் தமிழ்ப்பாடசாலைகள் கடந்த மூன்று தசாப்த காலமாக இயங்குகின்றன.

மெல்பனில் இயங்கும் பாரதி பள்ளி இம்மாநிலத்தில் பல பிரதேசங்களில்  வளாகங்கள் அமைத்து தமிழ்மொழியை கற்பித்து வருகின்றது.

பாப்பா பாரதி என்ற குழந்தைகளுக்கான  காணொளி  இறுவட்டையும் குழந்தைகளின் பங்குபற்றலுடன் மூன்று பாகங்களில் வெளியிட்டுள்ளது.  பாரதி பள்ளியின் ஸ்தாபகரும் நிருவாக இயக்குநருமான  கலைஞர் மாவை நித்தியானந்தன்,  சிறுவர் நாடகங்களை எழுதுவதிலும் இயக்குவதிலும் தேர்ச்சி பெற்றவர்.

தமிழ்க்குழந்தைகளின் உளவியலை புரிந்துகொண்டு அதற்கேற்ப சிறுவர் நாடக நூல்களும் எழுதியுள்ளார்.

இவ்வாறு தமிழர் புகலிட தேசங்கள் தோறும் பலரும்   எமது குழந்தைகளின் நாவில் தமிழும் தவழவேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்துவருகின்றனர்.

சுமார் கால் நூற்றாண்டுக்கு முன்னர் குழந்தையாக தமிழ்ப்பாடசாலைக்குச்சென்ற மாணவர்கள்,  தற்போது அதே தமிழ்ப்பாடசாலைகளில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களாகவும் மாறியிருக்கும்  ஆச்சரியமும்  நிகழ்ந்திருக்கிறது.

அவுஸ்திரேலியாவில் பல்கலைக்கழக பிரவேசப்பரீட்சையில் தமிழையும் இரண்டாம்மொழிப்பாடமாக கற்றுத்   தோற்றுவதற்கு முடியும்.  ஏனைய புகலிட நாடுகளிலும் இத்தகைய முன்னேற்றங்கள் நடந்திருக்கின்றன.

இலங்கையில்  பல சர்வதேசப்பாடசாலைகளில் பயிலும் தமிழ் பிள்ளைகள்  எதிர்காலத்தில் தமிழை மறந்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் வீட்டில்  பிரத்தியேகமாக தமிழ் ஆசிரியரை வரவழைத்து பெற்றோர் தமிழ் கற்பிக்கின்ற கோலம் உருவாகியிருக்கும் பின்னணியில்,  ஆங்கிலம்,  பிரெஞ்சு, டொச், நோர்வேஜியன், இத்தாலி மொழிகளை பிரதானமாக பேசும் நாடுகளில் வளரும் தமிழ்க்குழந்தைகள் தமிழை பயின்றுவருவதும் சாதனைதான்.

( நன்றி:  தமிழருவி – இலங்கை இதழ் )

No comments: