கொழும்பு சாகிறாக்கல்லூரியின் அதிபராகவும் செனட் சபை உறுப்பினராகவும் இருந்தவரான அறிஞர் ஏ. எம். ஏ. அஸீஸ் அவர்கள் தினகரன் முன்னாள் ஆசிரியர் இ. சிவகுருநாதன், பேராசிரியர் கா. சிவத்தம்பி, எழுத்தாளர் எச்.எம்.பி. மொகிதீன் ஆகியோரின் பேராசானுமாவார்.
அஸீஸ் அவர்கள் மறைந்தவுடன் நடந்த இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட எச். எம்.பி. மொகிதீனிடம், எமது ஆசான் பற்றிய நினைவுகளை தினகரனில் தொடர்ந்து எழுதித்தருமாறு சிவகுருநாதன் கேட்டதற்கு இணங்க ஒரு தொடர் கட்டுரையை
மொகிதீன் எழுதினார்.
பலராலும் விரும்பிப்படிக்கப்பட்ட அந்தத் தொடர் பின்னர் நூலாக வெளிவந்தது, அந்த நூலுக்கு எதிர்வினையாக மூன்றுபேர் இணைந்து ஒரு விமர்சன நூலை எழுதியிருந்தனர். அதனை எழுதியவர்கள் மூன்று முஸ்லிம் எழுத்தாளர்கள்.
ஏ. இக்பால், எம். எஸ். எம். இக்பால், எம். எச். எம். ஷம்ஸ் ஆகிய அம்மூன்று எழுத்தாளர்களும் இலக்கிய விமர்சனங்களிலும் ஈடுபடுபவர்கள்.
அந்த எதிர்வினை நூலின் முன்னுரை மாத்திரம் சுமார் 60 பக்கங்கள். அதில் பல எழுத்தாளர்களையும் கைலாசபதி, மற்றும் நூலகர் கமால்தீன் முதலான இலக்கிய விமர்சகர்களையும் கர்ணகடூர வார்த்தைப்பிரயோகங்களில் அம்மூவரும் சாடியுமிருந்தனர். எழுத்தாளர்களில் பிரேம்ஜி, இளங்கீரன், இளம்பிறை ரஹ்மான் , டொமினிக்ஜீவா மற்றும் எஸ்.பொ. ஆகியோர் கடும் விமர்சனத்திற்குள்ளாகியிருந்தனர்.
அதனைவாசித்திருக்கும் எஸ்.பொ.வைத்தவிர ஏனையோர்
மௌனமாகவே அமைதிகாத்தனர். ஆனால், எஸ்.பொ. சும்மாவிடுவாரா..? அந்த விமர்சன நூலுக்கு எதிர்வினையாக ஒரே இரவில் இஸ்லாமும் தமிழும் என்ற நூலை எழுதி வெளியிட்டு இலக்கிய உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டார்.
ஏ. இக்பால் தர்கா நகரிலும், ஷம்ஸ் திக்குவல்லையிலும் ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள். ஆனால், எம். எஸ்.எம். இக்பால், கொழும்பில் இளம்பிறை அச்சகம் அமைந்திருந்த ஆட்டுப்பட்டித் தெருவுக்கு சமீபமாக மத்தியமகா வித்தியாலயம் வீதியில் மணிக்கூட்டு கோபுரத்துக்கு சமீபமாக ஒரு தோட்டக்குடியிருப்பில் வாழ்ந்தவர்.
எஸ்.பொ. , தமது இஸ்லாமும் தமிழும் நூலில் அந்த மூவரையும் “ இக்குவால்ஷ் “ என்று அடைமொழியிட்டு கேலியாக வர்ணித்து அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சித்து எழுதிவிட்டார்.
அதனால், வெகுண்டெழுந்த எம். எஸ். இக்பால், எஸ்.பொ.வை தாக்குவதற்கும் தயாரானார் என்று செய்திகள் உலாவின.
எனினும் அந்த இக்பால், தொடர்ந்தும் இலக்கிய மேடைகளில் குறிப்பிட்ட பேராசிரியரையும் நூலகரையும் மற்றும் அந்த எழுத்தாளர்களையும் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.
ஒரு சமயம் , கொள்ளுப்பிட்டி தேயிலை பிரசார சபை
மண்டபத்தில் , மறைந்த எழுத்தாளர் அ.ந. கந்தசாமியின் நினைவேந்தல் கூட்டம் கலைஞர் லடீஸ்வீரமணியின் தலைமையில் நடந்தபோது, பேராசிரியர் கைலாசபதியை முன்வரிசையில் வைத்துக்கொண்டே எம். எஸ். எம்.இக்பால், கடுமையாக உரத்த குரலில் பேசினார். கைலாஸ், சில நிமிடங்களில் மெதுவாக எழுந்து பின்வழியால் நழுவிச்சென்றுவிட்டார். கைலாஸின் இயல்பு அத்தகையது !
நான் இலக்கியப்பிரவேசம் செய்த காலப்பகுதியில், எம். எஸ்.எம். இக்பாலுடன் நெருங்கிப்பழகவும் அஞ்சுவேன். அவர் கடுமையாக விமர்சித்தவர்கள் அனைவரும் எனதும் நண்பர்கள்.
அவரது வீட்டுக்கும் சென்றிருக்கின்றேன். அவரது வீட்டில் புத்தகங்கள் – இதழ்கள் சிறு குன்றுபோன்று குவிந்திருக்கும். பலரும் உசாத்துணைக்காக அவரிடம் புத்தகங்கள் வாங்கிச் செல்வார்கள்.
இரவல் கொடுத்த புத்தகங்களையும் மீண்டும் வாங்கிவிடுவதிலும் அவர் மிகவும் கறாரானவர்.
என்னைக்காணும் சந்தர்ப்பங்களில் அவர் டொமினிக்ஜீவாவையும் கடுமையாக விமர்சிப்பார். அறிஞர் கமால்தீனை கலாசார கழுகு என்று வர்ணிப்பார்.
அவ்வாறு சிலருக்கு இலக்கியப் பகைவனாக விளங்கிய அவர் ஒரு நாள் திடீரென மாரைடப்பு வந்து இறந்துவிட்டார்.
அன்று நான் வீரகேசரியில் இரவுக்கடமையிலிருந்தேன். டொமினிக்ஜீவாவும் கொழும்பு வந்து ஶ்ரீகதிரேசன் வீதியில் தங்கியிருந்தார்.
அன்று இரவு, ஜீவாவுடன் சேர்ந்து இரவு உணவுண்பதற்காக
ஜீவா தங்கியிருந்த இடத்திற்கு வந்தேன். அப்பொழுது எம். எஸ். எம். இக்பால் திடீரென இறந்துவிட்ட செய்தியை அவரிடம் சொன்னேன்.
“ பூபதி…. அவரது வீடு தெரியுமா…? “ என்று ஜீவா கேட்டார்.
“ வரும்வழியில்தான் இருக்கிறது “ என்றேன்.
“ சரி வாரும். சாப்பாட்டை பற்றி பிறகு யோசிப்போம். முதலில் அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு செல்வோம் “ என்று சொல்லிக்கொண்டே புறப்பட்டார்.
என்றைக்குமே எம். எஸ்.எம். இக்பால் வீட்டுக்குச்சென்றிருக்காத ஜீவா, அன்று சொன்ன வார்த்தைகள் இவை: “ சக எழுத்தாளன் – அவர் என்னைப்பற்றி மாறுபட்ட கருத்தும், கடும் விமர்சனமும் கொண்டிருந்தாலும், அன்னார் மறைந்துவிட்டார் எனத் தெரிந்தால், பழையதையெல்லாம் நினைத்துப்பார்க்கலாகாது, அவரது ஆத்மா சாந்தியடையவேண்டும். வாரும் செல்வோம். “
நாமிருவரும் எம்.எஸ்.எம். இக்பால் வீட்டுக்குச்சென்றோம்.
என்னை அங்கிருந்தவர்கள் அறிவார்கள். வெள்ளை நேஷனலும் வேட்டியுமாக ஒரு பிரமுகர் வந்திருக்கிறாரே… இவர் யார் என்று அங்கிருந்த சிலர் கேட்டதும், நான் “ இவர்தான் மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவா. யாழ்ப்பாணத்திலிருந்து வந்துள்ளார் “ என்றேன்.
அவர்கள் ஜீவாவை விநோதமாகப்பார்த்தார்கள்.
அதன்பிறகு ஜீவா என்னை அழைத்துக்கொண்டு அந்த இரவுவேளையில் ஆமர்வீதிக்கு வந்து என்னுடன் அம்பாள் கபேயில் உணவருந்திவிட்டு, கிராண்ட் பாஸ் வீதியில் வீரகேசரி வரையிலும் நடந்துவந்து என்னை விட்டுவிட்டு திரும்பி நடந்தே தனது இருப்பிடம் சென்றார்.
வெற்றிலையும் புகையிலையும் !!
ஜீவாவின் ஆழ்ந்த நேசத்திற்குரிய நண்பரும், உரும்பராய் அச்செழுவைச்சேர்ந்தவரும் எழுத்தாளரும், கொழும்பில் ஓரியண்டல் சிகையலங்கார நிலையம் நடத்தியவரும், பின்னாளில் ஜீவாவின் சம்பந்தியாகியவருமான எஸ்.வி.
தம்பையா அண்ணர், உலகப்பிரசித்திபெற்ற குருமகராஜின் தீவிர பக்தர்.
ஜீவா நீண்டகாலமாக வெற்றிலை சப்பும் பழக்கமுள்ளவர். தம்பையா அண்ணர் புகையிலை சப்புவார்.
ஒருசமயம் குருமகராஜ் கொழும்பு வந்திருந்தார். அவரைச்சந்திக்கச்சென்ற தம்பையா அண்ணர், அவரது அறிவுரையைக்கேட்டு, புகையிலை சப்பும் பழக்கத்தை கைவிட்டார்.
அவரைச்சந்தித்து அவரது அருளுரையை ஜீவாவும் கேட்டால், ஜீவாவும் வெற்றிலை சப்பும் பழக்கத்தை கைவிட்டுவிடுவார் என்று நம்பிக்கொண்டு, ஒருநாள் ஜீவாவை, குருமகராஜிடம் அழைத்துச்செல்லத்தீர்மானித்தார்.
ஜீவா கொழும்பு வந்தவேளையில் தம்பையா அண்ணர் ஜீவாவை குருமகராஜை தரிசிக்கவருமாறும் அவரிடம் அருளுரை பெற்றால், நீங்களும் இந்த வெற்றிலை சப்பும் பழக்கத்தை கைவிட்டுவிடுவீர்கள் என்று சொல்லி வருமாறு கட்டாயப்படுத்தினார்.
உடனே ஜீவா, “ நீங்கள் குருமகராஜை தரிசித்தமையால்தான்
புகையிலை சப்பும் நீண்ட கால பழக்கத்தை நிறுத்திவிட்டதாகச்சொல்கிறீர்கள். இதோ பாரும் இப்பொழுதே நான் எவரையும் சந்தித்து அருளுரையோ ஆசியோ கேளாமல், உடனடியாக வெற்றிலைபோடுவதை நிறுத்துகிறேன். என்ன பந்தயம் ..? “ எனக்கேட்டார்.
“ ஜீவா அண்ணர்…. அது உங்களால் முடியாத காரியம். வாருங்கள் குருமகராஜிடம் செல்வோம். அவரது அருளுரை கேட்போம். நீங்களும் என்னைப்போன்று இந்தப்பழக்கத்தை விட்டுவிடுவீர்கள் “ எனச்சொல்லி வருந்தி அழைத்தார்.
இதுபோன்ற நம்பிக்கைகள் அற்று, தன்னம்பிக்கையையே மூலதனமாகக்கொண்டு வாழ்ந்தவரான ஜீவா, வாயிலிருந்த வெற்றிலையை துப்பிவிட்டு வாயை தண்ணீரால் சுத்தம் செய்துகொண்டு, அந்தக்கணமே வெற்றிலை போடுவதை நிறுத்திக்கொண்டார். அதன்பிறகு அவர் மறையும் வரையில் பல வருடங்கள் வெற்றிலையை தொடவே இல்லை.
ஆனால், தம்பையா அண்ணர் சில மாதங்களில் மீண்டும்
புகையிலை சப்பினார்.
இன்று இருவரும் இல்லை. ஜீவாவுக்கு முன்னர் 09 – 01- 2002 ஆம் திகதி தம்பையா அண்ணர் மறைந்துவிட்டார்.
ஜீவா பின்னாளில் தனது அறையில் தம்பையா அண்ணரின் உருவப்படத்திற்கு தினமும் பூச்சொரிந்து வணங்கினார் என்பதும் நம்பகமான செய்தி !
சுஜாதாவின் இன்ஸ்பெக்டர் இராஜேந்திரன்….!!!
ஜீவா அடிக்கடி சென்னைக்கு இலக்கிய சுற்றுலா செல்வது வழக்கம். ஒரு தடவை அவர் சென்னையில் எங்கோ செல்வதற்கு டாக்சியில் பயணித்தார்.
இறங்கும் இடம்வந்ததும், அந்த டாக்சி சாரதி மீற்றருக்கு மேல் பணம் கேட்டார். ஜீவா மேலதிகமாக தரமுடியாது என்று மறுத்தார். சாரதியும் விடுவதாயில்லை. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஜீவாவுக்கு சடுதியாக எழுத்தாளர் சுஜாதாவின் மர்மக்கதைகளில் பாத்திரமாக வரும் இன்ஸ்பெக்டர் இராஜேந்திரன் நினைவுக்கு வந்தார்
“ ஐஸே… அதிகம் கரைச்சல் கொடுத்தால், இன்ஸ்பெக்டர் இராஜேந்திரனிடம் சொல்வேன் “ எனச்சொல்லிக்கொண்டு அந்த டாக்சியின் இலக்கத்தகடை பார்த்து காகிதத்தில் எழுதினார்.
“ வேணாம் சார். இந்த சிலோன்காரங்களே இப்படித்தான் “ எனச்சொல்லிக்கொணடு டாக்சியை செலுத்திச்சென்றார்.
இந்தச் சம்பவம் பற்றி ஜீவா என்னிடம் ஒரு தடவை சொல்லியிருந்தார்.
சுஜாதாவின் கற்பனைப்பாத்திரம் அன்று அவரை அந்த சாரதியிடமிருந்து மீட்டுள்ளது.
1990 ஆம் ஆண்டு சென்னைக்கு ஜீவாவையும் வரச்சொல்லிவிட்டு, நானும் அவுஸ்திரேலியாவிலிருந்து சென்றிருந்தேன். நானும் அவரும் சென்னையில் பல இடங்களுக்கும் பயணித்தோம்.
ஒருநாள் இருவரும் டாக்சியில் சென்றபோது அந்த டாக்சி சாரதி மீற்றருக்கு மேல் பணம் கேட்டார்.
நானும் அந்தச் சாரதியுடன் வாதிட்டேன். எனக்கு பழைய ஞாபகம் வந்தது.
“ என்ன ஜீவா…., இன்ஸ்பெக்டர் இராஜேந்திரனுக்கு சொல்வோமா..? “என்றேன்.
“ யார் சார் இன்ஸ்பெக்டர் இராஜேந்திரன்..? “ என்று கேட்டார் அந்தச் சாரதி. நான் ஜீவாவைப்பார்த்து கண்ணை சிமிட்டினேன்.
ஜீவா சிரிப்பை அடக்கிக்கொண்டு, “ பூபதி… சரி… சரி….கேட்பதைக்கொடும் “ என்றார்.
நானும் மீற்றருக்கு மேல் கேட்டதை கொடுத்தேன்.
அந்த டாக்சி சென்றதும், “ என்ன ஜீவா… ? இப்படிச்சொல்லிவிட்டீர்களே…? “ என்றேன்.
“ அது ஐஸே… அன்று நான் இலங்கையிலிருந்து வந்தமையால் அவ்வாறு சொன்னேன். நீர் அவுஸ்திரேலியாவிலிருந்து அல்லவா வந்திருக்கிறீர்… அதுதான் அப்படிச் சொன்னேன். ரூபாவுக்கும் டொலருக்கும் வித்தியாசம் இருக்கிறது ஐஸே…. “ என்றாரே பார்க்கலாம் !
( தொடரும் )
No comments:
Post a Comment